எ வாக் டு ரிமெம்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ வாக் டு ரிமெம்பர்
இயக்கம்ஆடம் சாங்மன்
தயாரிப்புடெனிஸ் டி நோவி
ஹன்ட் லோவ்ரி
கதைநிகோலஸ் ஸ்பார்க்ஸ் (நாவல்)
கரென் ஜன்சென் (திரைக்கதை)
இசைமெர்வின் வாரன்
நடிப்புசேன் வெஸ்ட்
மேன்டி மூர்
ஒளிப்பதிவுஜூலியோ மகட்
படத்தொகுப்புஎம்மா இ.ஹிக்காக்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுசனவரி 23, 2002 (2002-01-23)
ஓட்டம்102 mins
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$11,800,000
மொத்த வருவாய்$47,494,916

எ வாக் டு ரிமெம்பர் என்பது 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு காதல் திரைப்படமாகும், இது 1999 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய, காதலை மையமாகக் கொண்ட நாவலைத் தழுவி, அதே பெயரில் உருவாக்கப்பட்டத் திரைப்படம். இத்திரைப்படத்தில் பாப் பாடகர் மாண்டி மூர் மற்றும் ஷேன் வெஸ்ட் ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படத்தை ஆடம் ஷாங்க்மென் இயக்கியுள்ளார், டெனிஸ் டினோவி மற்றும் ஹன்ட் லோரி ஆகியோர் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர், ஸ்பார்க்ஸ் இக்கதையை எழுதியுள்ளார், நாவலில் 1950 ஆம் ஆண்டுகளில் கதை நடப்பது போல் அமைக்கப்பட்டிருந்த போதும், திரைப்படத்தில் 1990 ஆம் ஆண்டுகளின் இறுதியில்/2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கதை நகர்வது போல் எடுக்கப்பட்டது.

கதைச் சுருக்கம்[தொகு]

உயர்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் செய்த விளையாட்டு விபரீதமாகி விட, இதற்கு காரணமான அப்பள்ளியின் பிரபலமான முரட்டு மாணவன் லாண்டன் ரோலின்ஸ் கார்டர் (ஷேன் வெஸ்ட்) மாட்டிக் கொள்கிறான். அவனுக்கு தண்டனையாக, பள்ளி முடிந்ததும் வசதியற்ற குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், பள்ளி சார்பாக நடக்கவிருக்கும் இசை நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது. இசை நாடகத்தில் நடிப்பது கடினமான காரியம் என்பதால், எப்போதும் அமைதியாக காட்சியளிக்கும் ஜெமீ எலிசபத் சுல்லீவன் (மாண்டி மூர்) உதவியை நாட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். அந்த இசை நாடகத்தில் நடிக்கும் தேவாலய பாதிரியாரின் மகளான ஜேமீ, லாண்டனுக்கு பல ஆண்டுகள் பரிச்சயமானவள். ஆனால் இருவரும் பழகியதோ, பேசிக் கொண்டதோ கிடையாது. இருவரும் சந்தித்துக் கொண்டாலும், வெவ்வேறு சமூக அந்தஸ்தில் இருப்பதால் பழகும் வாய்ப்பே இல்லாமல் போனது.

நாடகத்தில் பாடி நடிப்பதற்காக தனக்கு கொடுக்கப்பட்ட பாடல் வரிகளில் சில சந்தேகங்கள் தோன்ற, ஜேமீயின் உதவியை நாடுகிறான். லாண்டனுக்கு உதவ ஒப்புக்கொள்ளும் ஜேமீ, தன்னைக் காதலிக்கக் கூடாது என்று அவனிடம் உறுதிமொழி கேட்கிறாள். இதைக்கேட்டு சிரிக்கும் லாண்டன், ஜேமீயிடம் எப்போதும் தான் காதல் கொள்ளப்போவதில்லை என்று உறுதியாக நம்புகிறான். அந்த நகரத்தில் பிரபலமாக இருக்கும் நவநாகரீக அழகுப் பெண்களுடன் பழகுவதால், பழைய நாகரிக உடைகளை அணியும் ஜேமீ, தன் காதலியாக முடியாது என்ற எண்ணம் அவன் மனதில் மேலோங்கியிருக்கிறது.

லாண்டனும், ஜேமீயும் பள்ளி முடிந்ததும் அவளது வீட்டில் ஒத்திகை செய்கின்றனர். அப்போது இருவரும் நட்பை வளர்த்துக் கொள்கின்றனர். ஜேமீக்கு உடலில் ஓவியம் வரைந்து கொள்வது, ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் தோன்றுவது உள்பட பல ஆசைகளைத் தன் வாழ்நாளில் சாத்தியமாக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதை லாண்டன் அறிந்து கொள்கிறான். ஒரு நாள், லாண்டன் தன் நண்பர்களுடன் பொழுதைக் கழிக்கும் இடத்துக்கு ஜேமீ போகிறாள். ஒத்திகை முடியும் வரை அவன் நண்பர்கள் அங்கு தான் இருப்பார்களா என்று லாண்டனிடம் கேட்கிறாள். அதற்கு லாண்டன் "உன் கனவில் இருப்பார்கள்" என்று கூறி யாருக்கும் தெரியாமல் அவள் மறைத்திருந்த ஆசைகளை நண்பர்கள் மத்தியில் கிண்டலாகக் கூறி சிரிக்கிறான். லாண்டனின் நண்பர்கள் அதைக் கேட்டு சிரிக்க, தனது ரகசிய ஆசைகளை போட்டு உடைத்த லாண்டன் மீது கோபமும் அவமானமும் அதிகரிக்க, அங்கிருந்து வேகமாகச் சென்று விடுகிறாள் ஜேமீ. அன்று மதியம் ஒத்திகைக்காக ஜேமீயின் வீட்டுக்குச் செல்கிறான். ஜேமீ தன் மீது கோபப்பட்டாலும், தனக்கு உதவ ஒப்புக்கொண்டு விடுவாள் என நம்புகிறான். மூடியிருந்த கதவை பலமுறை தட்டியும், திறக்க மறுத்து விடுகிறாள் ஜேமீ. தாம் இருவரும் "ரகசிய நண்பர்கள்" என்பதையும் மீறி, அனைவரிடமும் தன்னைப் பற்றிய ரகசியங்களை லாண்டன் பகிர்ந்து கொள்வதாக குற்றம் சாட்டுகிறாள். இதை லாண்டன் ஒப்புக் கொண்டவுடன், கோபம் அதிகமாகி கதவை அவன் முகத்தில் அறைவது போல மூடுகிறாள். லாண்டன் தனியாகவே ஒத்திகையில் ஈடுபடுகிறான்.

நாடகம் அரங்கேறுகிறது. ஒரு காட்சியில் ஜேமீ தனது அழகாலும், வசீகரக் குரலாலும் தன்னுடன் நடிக்கும் லாண்டன் உள்பட அரங்கத்தின் அனைவரையும் வசீகரிக்கிறாள். அவளது திறமை மற்றும் அழகில் மயங்கும் லாண்டன், நாடகத்தின் இறுதிக் காட்சியில் யாரும் எதிர்பாராத விதமாக அவளை முத்தமிடுகிறான். இப்படி ஒரு காட்சி நாடகத்தின் கதையமைப்பில் இல்லாததால் சலசலப்பு எழுகிறது. அதன் பின் ஜேமீயுடன் நெருங்கிப் பழக லாண்டன் பலமுறை முயற்சிக்கிறான். ஆனால் ஜேமீ அவனை நிராகரித்து விடுகிறாள். ஜேமீ தன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவதாக தனது நண்பர்கள் கூறியதற்கு பிறகு தான், அவளுடன் பழக முயற்சித்திருக்கிறான். ஆனால் தனது நண்பர்கள் தன்னிடம் விளையாடியுள்ளனர் என்பதை அறிந்து அவர்கள் மீது ஆத்திரம் கொள்கிறான் லாண்டன். உடனே டீன் மற்றும் ஷன்ஸ் பெலிண்டா (லாண்டனிடம் பொய் சொல்லி விளையாடிய நண்பர்கள்) ஆகியோரை அடித்து, ஜேமீயின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளிடம் விளக்குகிறான்.

அவர்கள் இருவரும் மீண்டும் தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். தன்னுடன் வெளியே இரவு உணவு உண்ண வருமாறு ஜெமீயை அழைக்கிறான் லாண்டன். ஆனால் தனக்கு அனுமதி கிடைக்காது என்று மறுத்து விடுகிறாள். ஆனால் அவளை இரவு உணவுக்காக வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கும் லாண்டன், தேவாலயத்துக்குச் சென்று அவளது தந்தையைச் சந்தித்து அனுமதி கேட்கிறான். ஆனால் அவர் தந்தை அனுமதியளிக்க மறுத்து விடுகிறார். தன்னை நம்பி வெளியில் அனுப்புமாறு கெஞ்சுகிறான் லாண்டன். ஆனாலும் அவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார். லாண்டன் பிடிவாதமாக அவளை இரவு உணவுக்கும், நடனமாடவும் அழைத்துச் செல்கிறான். யாருக்காகவும் இதுவரை அவன் இப்படிச் செய்ததில்லை. ஜேமீயின் ஆசைகளில் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்ள உதவி செய்வதென்று முடிவெடுக்கிறான். ஒருநாள் ஜெமீயை அழைத்துக் கொண்டு இருநகரங்களுக்கும் இடையில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதிக்கு செல்கிறான். அவளை எல்லைக் கோட்டின் இரு பக்கங்களிலும் கால்களை அகட்டி வைக்குமாறு கேட்கிறான். அவன் சொன்னதைச் செய்த ஜேமீ, குழப்பத்துடன் லாண்டனைப் பார்க்க, "இப்போது நீ ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கிறாய்." என்கிறான். நடக்கவே நடக்காது என்று நினைத்த தனது ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, லாண்டன் அவ்வாறு செய்தான் என்பதை உணரும் ஜேமீயின் முகம் மகிழ்ச்சியில் பிரகாசிக்கிறது. ஒருநாள் மாலை தனக்காக தொலைநோக்கி மூலம் விண்ணில் ஒரு நட்சத்திரத்தை தேடித் தருமாறு ஜேமீயிடம் லாண்டன் கேட்கிறான். ஏன் நட்சத்திரத்தைத் தேடித் தர வேண்டும்." எனக் கேட்கிறாள் அவள். அத்துடன் நில்லாமல், அவனிடம் முதல் முறையாக வெட்கத்துடன் "நான் உன்னை காதலிக்கிறேன்" எனக் கூறுகிறாள்.

ஒருநாள் மாலைப் பொழுதில், தனக்கு கொடிய புற்றுநோய் இருப்பதாக, லாண்டனிடம் கூறுகிறாள் ஜேமீ. சிகிச்சையை நிறுத்தி விட்டதாகவும் அவனிடம் தெரிவிக்கிறாள். லாண்டன் முதல் முறையாக உடைந்து போகிறான். தன் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதால், இந்த உண்மையைக் கூறாமல் லாண்டனை வெறுத்ததாகவும், ஆனால் இதயத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காதலில் விழுந்து விட்டதாகவும் அவனிடம் கூறுகிறாள். அதற்கு மேல் தாங்க முடியாமல் அழத் தொடங்கும் ஜேமீ, "கடவுளிடம் நான் கோபம் கொள்வதற்கு இதை விட காரணம் தேவையில்லை," எனக் கூறி அங்கிருந்து ஓடி மறைகிறாள்.

உடனே லாண்டன் இதய நோய் சிகிச்சை நிபுணரான தனது தந்தையிடம் சென்று, ஜேமீக்கு உதவுமாறு வேண்டுகிறான். புற்றுநோய் சிகிச்சையில் அவர் நிபுணர் இல்லை என்பதால் முதலில் தயங்கிய அவர், பிறகு ஜேமீயை பரிசோதித்து விட்டு அவளது மருத்துவ தகவல்களை முழுதாக ஆய்வு செய்த பிறகு தான், நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஆர்வமில்லாமல் கூறிவிடுகிறார். லாண்டன் கடுப்புடன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

அடுத்த நாள் ஜேமீயைச் சந்திக்கும் லாண்டன், அவளைக் கட்டியணைத்து தான் எப்போதும் அவளுடன் துணை நிற்பதாக உறுதியளிக்கிறான். அடுத்த சில நாட்களில், ஜேமீக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. ஜேமீயை முன்பு கேலி செய்த லாண்டனின் நண்பன் எரிக், உண்மையை அறிந்து லாண்டனிடம் மன்னிப்பு கேட்பதோடு, சோகத்தைப் பகிர்ந்து கொள்கிறான். அதன் பின் டீன் மற்றும் பெலிண்டா ஆகியோரும் லாண்டனிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.

ஜேமீயின் புற்றுநோய் தீவிரமாகிறது. படுத்த படுக்கையாகும் ஜேமீ, தன் தந்தையின் கைகளில் மயங்கி விழுகிறாள். அவளை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்கிறார். அங்கு அவரை லாண்டன் சந்திக்கிறான். ஜேமீயின் அருகிலேயே இருக்கும் லாண்டனை, அவர் வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார். பிறகு ஜேமீயின் அருகில் அமர்ந்து, "நீண்ட நாட்கள் நீ வாழ வேண்டும் என்பதற்காகவே, உன்னை வேறு பாதைக்கு செல்ல விடாமல் என்னருகிலேயே வைத்துக் கொண்டிருந்தேன்" என்கிறார். ஜேமீ சன்னமான குரலில் தான் அவனை உயிருக்குயிராக காதலிப்பதாக கூறுகிறாள், இதைக் கேட்டு அவள் தந்தை கண்ணீர் வடிக்கிறார்.

அடுத்த நாள் மருத்துவமனைக்கு வரும் லாண்டன், சக்கர நாற்காலியில் ஜேமீ வெளியே வருவதைப் பார்க்கிறான். எதற்காக படுக்கையிலிருந்து வெளியே வருகிறாய் என்று ஜேமீயிடம் லாண்டன் கேட்கிறான். இதற்காக உன் தந்தைக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று ஜேமீ கூற, குழப்பமாகிறான் லாண்டன். ஜேமீ என்ன சொல்ல வருகிறாள் என்பதை அவள் தந்தையிடம் கேட்கிறான். ஜேமீக்கு வீட்டிலிருந்து உயர்பராமரிப்பு அளிப்பதற்கு லாண்டனின் தந்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதற்கான செலவு முழுவதையும் அவரே ஏற்றுக் கொண்டதையும் லாண்டனிடம் தெரிவிக்கிறார். இதைக்கேட்டு உறைந்துபோன லாண்டன், அன்று இரவு தன் தந்தையின் அறைக் கதவைத் தட்டுகிறான். கதவைத் திறந்து அவனைப் பரிவுடன் பார்க்கிறார். தழுதழுக்கும் குரலுடன் "நன்றி" எனக் கூறும் மகனை ஆரத் தழுவிக் கொள்கிறார் அவர். தந்தையின் அரவணைப்பில் விரக்தியின் அளவு அதிகரிக்க, அவன் சிந்தும் கண்ணீர் அவரது கைகளில் தெறிக்கிறது.

அதன் பின் அவள் தெரிவித்த ஆசைகளின் பட்டியலில் ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறான். முதலில், விண்மீனைப் பார்க்க வேண்டும் என்ற அவள் ஆசையை நிறைவேற்ற, தொலைநோக்கியை அமைத்துத் தருகிறான். முதலில் அவனை ஏற்க மறுத்த அவளது தந்தை, இப்போது அவனுடன் சேர்ந்து தொலைநோக்கியை அமைக்க உதவுகிறார். அந்த தொலைநோக்கி வழியாக ஜேமீ விண்மீனைப் பார்த்ததும், தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ஜேமீயிடம் கேட்கிறான் லாண்டன். இதற்கு அவள் ஒப்புக் கொள்கிறாள். திருமணம் செய்ய முடிவெடுத்தது முதல், இருவரும் காதலின் ஆழத்தையும், தூய்மையான அன்பையும் உணர்கின்றனர். ஜேமீயின் மரணத்துடன் படம் நிறைவடைகிறது. ஆனால் நோய்வாய்ப்பட்ட தனது தாயின் வாழ்வு முடிந்த அதே தேவாலயத்தில், லாண்டனைத் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் ஜேமீ இறக்கிறாள். இந்த நிகழ்வே அவளது ஆசைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஜேமியின் நினைவுகளைச் சுமந்து கொண்டு, அவளின் ஆசைப்படி வாழ்வில் தனது குறிக்கோளை எட்டி நல்ல நிலையை அடைகிறான் லாண்டன்.

நான்கு ஆண்டுகள் கழித்து, ஜேமீயின் தந்தையைச் சந்திக்கிறான் லாண்டன். ஜேமீயின் ஆசைப்படி கல்லூரிப் படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் சேர்கிறான். அவளைச் சந்திப்பதற்கு முன், பள்ளிப் படிப்பைத் தாண்டுவோமா என்பதிலேயே உறுதியில்லாமல் சுற்றித் திரிந்த அவன், இப்போதைய நிலையை அடைவதற்கு முழுக் காரணம் ஜேமீ தான் என்பதை நினைவு கூறுகிறான். அவள் தந்தையிடம் பேசும் போது, இறப்பதற்குள் ஏதாவது ஒரு "அதிசயத்தை" நிகழ்த்த வேண்டும் என்ற ஜேமீயின் ஆசைகளுள் ஒன்றை, அவளால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை என்று வருந்துகிறான். இதற்கு சன்னமான குரலில் பதிலளிக்கும் ஜேமீயின் தந்தை, "அவள் அதிசயத்தை நிகழ்த்தி விட்டாள். அந்த அதிசயம் நீ தான்." என்கிறார்.

படத்தின் பின்னணி மற்றும் தயாரிப்பு[தொகு]

நெகிழ வைக்க்கும் எ வாக் டு ரிமெம்பர் கதை உருவாகக் காரணமாக இருந்தவர், நிக்கோலஸ் ஸ்பார்க்ஸின் சகோதரி டேனியல் ஸ்பார்க்ஸ் லிவிஸ். இவர் 2000 ஆம் ஆண்டு புற்றுநோயால் இறந்தார். டேனியல் பெர்லினில் இறந்த பிறகு, கதையின் ஆசிரியர் நிக்கோலஸ் அளித்த பேட்டியில், "பல வழிகளில், ஜேம்ஸ் சுல்லீவன் எனது தங்கையாகவே இருந்திருக்கிறாள்" என்றார். இக்கதையின் கரு, டேனியலின் வாழ்க்கையிலிருந்து உருவாகியிருக்கிறது; டேனியலைச் சந்தித்த ஒருவர், அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார், "டேனியலின் உடல் நிலை பற்றி தெரிந்தும், நீண்ட நாட்கள் வாழமாட்டார் என்பதை அறிந்தும், அவர் மணக்க விரும்பினார்" என்கிறார் ஸ்பார்க்ஸ்.[1] புத்தகம் மற்றும் திரைப்படம் இரண்டும் டேனியல் ஸ்பார்க்ஸ் லீவிஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வில்மிங்டம், வடக்கு கரோலினா பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது, இதே நேரம் இப்பகுதியில் டிவைன் சீக்ரெட்ஸ் ஆப் த யா-யா சிஸ்டர்ஹுட் (2002) என்ற திரைப்படமும், டாஸன்ஸ் கிரீக் என்ற தொலைக்காட்சி தொடரும் படமாக்கபட்டன. இத்திரைப்படத்திற்கான பல அரங்குகள், குறிப்பாக பள்ளி, மருத்துவமனை மற்றும் லாண்டனின் வீடு ஆகியவை டாஸன்ஸ் கிரீக் (1998) தொலைக்காட்சித் தொடரில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளன.[2] இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வெறும் ௩நாட்களில் நடந்து முடிந்துள்ளது. மாண்டி மூர் மைனர் என்பதால் நாளொன்றுக்கு 10 மணிநேரம் மட்டுமே நடிக்க முடிந்த போதிலும், படப்பிடிப்பை விரைவாக முடித்துள்ளனர்.[2] டேரில் ஹன்னா வேறு படத்துக்காக தலைமுடிக்கு பிங்க் நிறம் பூசியிருந்ததால், ஷென் வெஸ்ட் தலை முடிக்கு பொருத்தமாக பழுப்பு நிற விக் அணிந்து நடித்தார். ஹன்னாவுக்கு தசைநார் சிக்கல் இருந்ததால், அவரது உதடுகள் வீங்கியிருந்தன. படம் முடியும் தருணத்தில், இந்த சிக்கலின் வீரியம் குறைந்தது.[3]

நடிப்பு[தொகு]

  • லாண்டன் ரோலின்ஸ் கார்டர் - ஷேன் வெஸ்ட்
  • ஜேமீ எலிசபத் சுல்லீவன் - மாண்டி மூர்
  • அருட்தந்தை சுல்லீவன் - பீட்டர் கோயோட்
  • சிந்தியா கார்டர் - டாரில் ஹன்னா
  • பெலிண்டா - லாரன் ஜெர்மன்
  • பள்ளி முதல்வர் - கிளேன் கிராஃபோர்டு
  • ட்ரேசீபாஸ் டா லா ஹியூர்டா
  • எரிக் - அல் தாம்சன்
  • வாக்கர் - ஜொனாதன் பார்க்ஸ் ஜோர்டான்
  • டாக்டர். கார்டர் - டேவிட் லீ ஸ்மித்
  • க்ளே கெபார்டிட் - மேட் லட்ஸ்

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படம் விமர்சகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஒரு பொழுதுபோக்கு வாரப் பத்திரிகை இத்திரைப்படத்துக்கு "எ வாக் டு ஃபர்கெட்"[4] என்று பெயரிட்டு விமர்சித்தது. 92 நிபுணர்களின் விமர்சனங்களை ஒருங்கிணைத்து, ராட்டன் டொமேட்டோஸ் என்ற பெயரில் 10க்கு 4.1 என்ற மதிப்பெண் அளிக்கப்பட்டது.[5] ஆயினும், அ வாக் டு ரிமெம்பர் திரைப்படம் நன்னெறிகளை உணர்த்தியதால் கிறித்துவ சமூகத்திடம் இத்திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது; ஒரு விமர்சகர் இப்படத்தைப் பற்றி குறிப்பிடும்போது, "கிறித்துவராக காண்பிக்கப்பட்டுள்ள முக்கியக் கதாபாத்திரத்தை மனநிலை தவறியவராகவோ அல்லது புனிதத்தை கெடுப்பவராகவோ காண்பிக்கப்படவில்லை" என்றார்.[6] மாண்டி மூர் மற்றும் ஷேன் வெஸ்ட் ஆகியோர் "இயல்பான" நடிப்பை வெளிப்படுத்தியதாக, ரோஜர் எபெர்ட் பாராட்டினார்.[7] மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், திருப்திகரமான பாக்ஸ்-ஆபிஸ் வெற்றியைப் பெற்றது, அமெரிக்காவில் மட்டும் $41,281,092 வசூல் செய்தது,[8] ஆசியாவில் மிகச் சாதாரண வெற்றியைப் பெற்றது. மொத்தமாக இத்திரைப்படம் உலகம் முழுவதும் $47,494,916வசூல் செய்தது.

ஆண்டு விருது பிரிவு வெற்றி
(2002) MTV திரைப்பட விருதுகள் மிகச் சிறப்பான நடிகை வென்றது மாண்டி மூர்
(2002) டீன் சாய்ஸ் விருதுகள் திரைப்படம் — சாய்ஸ் தலைசிறந்த நடிப்பு, நடிகை வென்றது மாண்டி மூர்
(2002) டீன் சாய்ஸ் விருதுகள் திரைப்படம் — சாய்ஸ் சிறந்த ஜோடி (மூர்/வெஸ்ட்) வெற்றி
(2002) டீன் சாய்ஸ் விருதுகள் திரைப்படம் — சாய்ஸ் நடிகை, டிராமா/ஆக்ஷன் சாகசம் போட்டியிட்டது மாண்டி மூர் (நடாலி போர்ட்மேன் வென்றார்)

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், கிராஸ்ரோட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்ததால் விருதுக்காக போட்டியிட்டார், இவரை பின்னுக்குத் தள்ளி இரண்டு டீன்சாய்ஸ் விருதுகளை மூர் வென்றார். "திரைப்படம் — சாய்ஸ் நடிகை, டிராமா/ஆக்ஷன் சாகசம்" என்ற பிரிவிலும் மூர் போட்டியிட்டார், ஆனால் நடாலி போர்ட்மேன் இந்த விருதை ஸ்டார் வார்ஸ் II: அட்டாக் ஆஃப் த க்ளோன்ஸ் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தட்டிச் சென்றார்.

MTV திரைப்பட விருதுகளில் "மிகச் சிறப்பான நடிகை" பிரிவில் மூர் வென்றார்

இசை[தொகு]

இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன, அவற்றுள் மாண்டி மூர் மற்றும் ஸ்விட்ச்ஃபுட், ரேச்சல் லாம்பா மற்றும் பலர் பங்களித்துள்ளனர்.

முக்கியமான பாடலான "க்ரை", மூரின் மாண்டி மூர் என்ற ஆல்பத்திலிருந்து வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தின் பாடல்களில், ஸ்விட்ச்ஃபுட்டின் பாடலான "ஒன்லி ஹோப்" பயன்படுத்தப்பட்டுள்ளது, இதில் மூர் பாடும் சோகப் பாடலும் அடங்கும்.

மாண்டி மூரின் மேலாளர் ஜோன் லெஷாய், எ வாக் டு ரிமெம்பர் திரைப்படத்தின் இசை மேற்பார்வையாளராகப் பணியாற்றினார், ஸ்விட்ச்ஃபுட்டின் "இன்ஸ்டன்ட்லி வான்டட்" இசை இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக அமைந்ததற்கு இவரும் காரணம். இவர் பின்னாளில் ஸ்விட்ச்ஃபுட்டின் மேலாளரானார்.[9] இந்தத் திரைப்படத்தின் இசைக்காக மூரைத் தொடர்பு கொண்டபோது, அந்த இசைக் குழு, அவருக்கு பரிச்சயமில்லாமல் இருந்தனர் (பல பாப் பாடல்களை மூர் பாடியிருந்த போதும்). அவர்கள் எ வாக் டு ரிமெம்பர் திரைப்படத்தில் பங்கேற்பதற்கு முன், ஸ்விட்ச்ஃபுட் குழுவினர் தங்களது சொந்தப் பகுதியான சான் டீகோவிலும், நவீன கிறித்துவ இசை வட்டாரத்திலும் மட்டுமே பிரபலமாக இருந்தனர். ஆனால், த பியூட்டிஃபுல் லெட்டவுன் என்ற மிகப் பெரிய இரட்டை பிளாட்டினம் ஆல்பத்தால், குறிப்பாக அதில் இடம் பெற்ற மீன்ட் டு லிவ் மற்றும் டேர் யூ டு மூவ் ஆகிய பாடல்களால் புகழ் பெற்றனர்.

பாடல்களின் பட்டியல்:

  1. "டேர் யூ டு மூவ்" - ஸ்விட்ச்ஃபுட்
  2. "க்ரை" - மாண்டி மூர்
  3. "சம்டே வி வில் நோ" - மாண்டி மூர், ஜோன் ஃபோர்மன்
  4. "டான்சிங் இன் த மூன்லைட்" - 2001 ரீமிக்ஸ் டாப்லோடர்
  5. "லெர்னிங் டு பிரீத்" - ஸ்விட்ச்ஃபுட்
  6. "ஒன்லி ஹோப்" - மாண்டி மூர்
  7. "இட்ஸ் கோன பி லவ்" - மாண்டி மூர்
  8. "யூ" - ஸ்விட்ச்ஃபுட்
  9. "இஃப் யூ பிலீவ்" - ரேச்சல் லாம்பா
  10. "நோ ஒன்" - கோல்ட்
  11. "சோ வாட் டஸ் இட் ஆல் மீன்?" - வெஸ்ட் கவுல்ட் & பிட்ஸ்ஜெரால்ட்
  12. "மதர், வி ஜஸ்ட் கான்ட் கெட் எனஃப்" - நியூ ரேடிகல்ஸ்
  13. "கேனான்பால்" - த பிரீடர்ஸ்
  14. "ஃபிரைடே ஆன் மை மைண்ட்" - நூகீ
  15. "எம்ப்டீ ஸ்பேசஸ்" - பியூயல்
  16. "ஒன்லி ஹோப்" - ஸ்விட்ச்ஃபுட்

திரைப்பட்டத்தின் முழுமையான இசைப் பட்டியல்[10]

  1. கேனான்பால் — எழுதியவர் கிம் டீல், பாடியவர் த பிரீடர்ஸ்
  2. சோ வாட் டஸ் இட் ஆல் மீன்? - எழுதியவர் ஷேன் வெஸ்ட், பாடியவர்கள் கவுல்ட் மற்றும் பிட்ஸ்ஜெரால்ட்
  3. எம்ப்டி ஸ்பேசஸ் — எழுதியவர் கார்ல் வில்லியம் பெல், பாடியவர் பியூயல்
  4. லைட்ஹவுஸ் — எழுதியவர்கள் ஜெரெல் வின்ஸ் கிரே மற்றும் பெர்சி இ. கிரே ஜூனியர், பாடியவர் மாண்டி மூர்
  5. ஃபிரைடே ஆன் மை மைண்ட் — எழுதியவர்கள் ஹாரி வாண்டா மற்றும் ஜார்ஜ் யங், பாடியவர் நூகீ
  6. எனிதிங் யூ வான்ட் — எழுதியவர்கள் ஜெஃப்ரி கார்டோனி மற்றும் பாட்ரிக் ஹவ்லிஹான், பாடியவர் ஸ்கைகாப்டர் 9
  7. நம்ப் இன் போத் லிப்ஸ் — எழுதியவர்கள் ஆஸ்டின் ரெனால்ட்ஸ், ஜிம் சம்மர் மற்றும் டேவ் ரே, பாடியவர் சோல் ஹூலிகன்
  8. டேப்வாட்டர் — எழுதியவர்கள் ராப் பேசில், பிரெட் கேன், லெவான் சுல்தானியன், ஜெசன் ராட்ஃபோர்டு மற்றும் கிறிஸ்டியன் ஹெர்னாண்டஸ், பாடியவர் ஒன்சைட்ஜீரோ
  9. இஃப் யூ பிலீவ் — எழுதியவர்கள் கை ரோச்சி மற்றும் ஷெல்லி பெய்கென், பாடியவர் ரேச்சல் லாம்பா
  10. நோ மெர்சி — எழுதியவர்கள் டேவிட் ஃபோஸ்டர், பிரையன் ஜே. கிரில்லோ, மைக்கேல் ஹேட்லே மற்றும் டெரிக் ஓ'பிரைன், பாடியவர் எக்ஸ்ட்ரா ஃபேன்சி
  11. நோ ஒன் — எழுதியவர்கள் டெர்ரி பி. பைசாமோ, ஸ்டீபன் டி. ஹேஸ், ஜெரெமி டி. மார்ஷல், சாமுவேல் ஆலன் மெக்காண்டல்ஸ் மற்றும் ரொனால்ட் வார்ட் ஜூனியர், பாடியவர் கோல்ட்
  12. எனஃப் — எழுதி பாடியவர் மேத்யூ ஹேகர்
  13. மதர் வி ஜஸ்ட் கான்ட் எனஃப் — எழுதியவர் கிரேக் அலெக்ஸாண்டர், பாடியவர் நியூ ரேடிகல்ஸ்
  14. ஒன்லி ஹோப் — எழுதியவர் ஜொனாதன் மார்க் ஃபோர்மன், பாடியவர் மாண்டி மூர்
  15. கெட் யுவர் ஃபிரீக் ஆன் — எழுதியவர்கள் மிஸ்ஸி எலியாட் மற்றும் டிம் மோஸ்லி, பாடியவர் மிஸ்ஸி எலியாட்
  16. ஃபிளட் — எழுதியவர்கள் டேனியல் பால் ஹசல்டின், சார்லஸ் டேனியல் லோவெல், ஸ்டீபன் டேனியல் மேசன் மற்றும் மேத்யூ தாமஸ் ஓட்மார்க், பாடியவர் ஜார்ஸ் ஆஃப் கிளே
  17. டான்சிங் இன் த மூன்லைட் — எழுதியவர் ஷெர்மன் கெல்லி, பாடியவர் டாப்லோடர்
  18. சம்டே வி வில் நோ — எழுதியவர்கள் கிரேக் அலெக்ஸாண்டர், டேனியல் ஏ. பிரிஸ்போய்ஸ் மற்றும் டெப்ரா ஹோலண்ட், பாடியவர்கள் மாண்டி மூர் மற்றும் ஜொனாதன் ஃபோர்மன்
  19. லெர்னிங் டு பிரீத் — எழுதியவர் ஜொனாதன் மார்க் ஃபோர்மன், பாடியவர் ஸ்விட்ச்ஃபுட்
  20. ஆல் மிகஸட் அப் — எழுதியவர்கள் நிக்கோலஸ் லாஃப்டன் ஹெக்சம் மற்றும் வின்சென்ட் மார்டினெஸ், பாடியவர் 311
  21. டேர் யூ டு மூவ் — எழுதியவர் ஜொனாதன் மார்க் ஃபோர்மன், பாடியவர் ஸ்விட்ச்ஃபுட்
  22. யூ — எழுதியவர் ஜொனாதன் மார்க் ஃபோர்மன், பாடியவர் ஸ்விட்ஃபுட்
  23. இட்ஸ் கோன பி லவ் — எழுதியவர்கள் ஆண்டனி மைக்கேல் புரூனோ மற்றும் தாமஸ் வி.பைர்னெஸ், பாடியவர் மாண்டி மூர்
  24. ஒன்லி ஹோப் — எழுதியவர் மார்க் ஃபோர்மன், பாடியவர் ஸ்விட்ச்ஃபுட்
  25. க்ரை — எழுதியவர் ஜே. ரெனால்ட், பாடியவர் மாண்டி மூர்

நாவலுடன் ஒப்பீடு[தொகு]

நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் எழுதிய நாவலுடன் பல ஒற்றுமைகள் இருந்தாலும், படத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ஸ்பார்க்ஸ் தனது தனிப்பட்ட வலைத்தளத்தில், வேற்றுமைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவரிக்கிறார். எடுத்துக்காட்டாக, 1950 ஆம் ஆண்டுகளில் இருக்க வேண்டிய கதையமைப்பை 1990 ஆம் ஆண்டுகளுக்கு அவரும், தயாரிப்பாளரும் மாற்றியிருக்கின்றனர், 50 ஆம் ஆண்டுகளில் கதையமைப்பு இருந்தால் இளம் வயதினரை ஈர்க்காமல் போய்விடுமோ என்ற கவலை தான் இந்த மாற்றத்துக்கு காரணம். "இளம் வயதினரை மனதில் வைத்து, கதையை நவீனப்பட்டுத்தினோம்" என்று அவர் எழுதியிருக்கிறார். கதையின் நம்பகத்தன்மையை அதிகரிக்க, லாண்டனின் குறும்புகளையும் குணாதிசயத்தையும், நாவலில் இருப்பதைக் காட்டிலும் மோசமாக இருக்கும்படி மாற்றியமைத்திருக்கின்றனர்; இதுகுறித்து ஸ்பார்க்ஸ் கூறும் போது, "1950 ஆம் ஆண்டுகளின் விடலைப் பருவத்தினர் குறைந்த அளவில்தான் 'முரட்டுத்தனமாக' இருப்பார்கள். 1990 ஆம் ஆண்டுகளில் மாணவர்களின் 'முரட்டுத்தனத்தை' அதிகரித்துக் காட்டலாம்'" என்கிறார்.

லாண்டன் மற்றும் ஜேமீ பங்கேற்கும் நாடகத்தையும், தயாரிப்பாளருடன் சேர்ந்து ஸ்பார்க்ஸ் மாற்றியிருக்கிறார். நாவலில், கிறிஸ்துமஸ் நாடகத்தை எழுதும் ஹெக்பெர்ட், தந்தையாக தனது போராட்டத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. நேரப்பற்றாக்குறை காரணமாக, அவர் தனது போராட்டங்களில் இருந்து எப்படி வெளிவருகிறார் என்பதை விளக்கும் துணைகதைச் சுருக்கக் காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. "நாவலைப் படிக்காதவர்கள், ஹெக்பெர்ட் நல்ல தந்தை தானா என்பது குறித்து கேள்வி எழுப்புவார்கள்" என தன் கவலையை வெளிப்படுத்திய ஸ்பார்க்ஸ், "அவர் நல்ல தந்தை தான் என்பதால், பார்ப்பவர்களுக்கு அந்த சந்தேகம் எழக்கூடாது என்பதற்காக படத்தில் இடம் பெறும் நாடகத்தை மாற்றினோம்" என விளக்கியுள்ளார்.[11]

நாவலுக்கும் திரைப்படத்துக்கும் இடையில் குறிப்பிட வேண்டிய வேறுபாடு என்னவெனில், நாவலில் கதை நடப்பதாகக் கூறப்படும் 1950 ஆம் ஆண்டுகளில், புற்றுநோய் என்றால் மரணம் என அனைவரும் நம்பிய சூழலில், ஜேமீயின் மரணத்தை தெளிவாக குறிப்பிடவில்லை. திரைப்படத்தில் தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளனர். தன் தங்கை இறந்துவிடுவாள் என்பது தெரிந்த பின்னர் தான் நாவலை எழுதத் தொடங்கியதாகவும், "காதலிப்பதற்காக ஜெமீ சுல்லீவன் இன்னும் வாழ்வாள்" என எழுதியது போலவே, என் தங்கையும் நிச்சயம் வாழ்வாள் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன்," என ஸ்பார்க்ஸ் தெரிவித்துள்ளார்."[12] நாவலில், லாண்டனின் தந்தை ஒரு அரசியல்வாதியாக சித்தரிக்கப்பட்டிருந்தார். திரைப்படத்தில் அவர் ஜேமீயின் உடல்நலத்தில் அக்கறை கொள்ளும் இதயநோய் நிபுணராக சித்தரிக்கப்பட்டிருந்தார். அவர் தொழிலில் நல்ல வருவாய் கிடைத்ததால் தான், ஜேமீயை வீட்டில் வைத்து பராமரிக்கும் செலவை அவரால் ஏற்க முடிந்ததாக திரையில் காண்பிக்கப்பட்டது.

மேலும் சில வேறுபாடுகளும் உள்ளன. திரைப்படத்தில் லாண்டனிடம் தன் தாயின் புத்தகத்தை அளிக்கும் ஜேமீ, "கவலைப்படாதே, இது பைபிள் இல்லை" என்கிறாள். ஆனால் நாவலில் லாண்டனிடம் ஜேமீ விவிலியத்தில் தனக்கு பிடித்த வரிகளை அடிக்கோட்டு, அவனிடம் அளிப்பதாக எழுதப்பட்டிருந்தது. நாவலில், ஜேமீ கேட்டுக் கொண்டதால் பள்ளி நாடகத்தில் லாண்டன் நடிப்பதாக இருந்தது; ஆனால் திரைப்படத்தில், கட்டாயத்தின் பேரில் பள்ளி நாடகத்தில் லாண்டன் பங்கேற்பதாக மாற்றியமைக்கப்பட்டது.

பரிந்துரைகள்[தொகு]

  1. Sparks, Nicholas (2000). "Background information on A Walk to Remember (from a speech given in Berlin, Germany for Heyne Verlag)". Archived from the original on 2009-09-03. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  2. 2.0 2.1 Adam Shankman.(2002)."A Walk to Remember" DVD Commentary.
  3. Shankman, Adam. "Interview with Adam Shankman, Director of "A Walk to Remember" by Rebecca Murray and Fred Topel". Archived from the original on 2009-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-08-27.
  4. Kepnes, Caroline (2002-07-12). "Reviews — A Walk to Remember". Archived from the original on 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  5. "Rotten Tomatoes — A Walk to Remember". பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  6. Overstreet, Jeffrey (January 23, 2002), A Walk to Remember, Christianity Today, archived from the original on மே 3, 2008, பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 14, 2009
  7. Ebert, Roger (2002-01-25). "A Walk to Remember". Archived from the original on 2012-10-07. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  8. "A Walk to Remember at Hollywood.com". Archived from the original on 2012-12-09. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  9. "Switchfoot Featured in A Walk To Remember". 2002-01-21. Archived from the original on 2008-04-12. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  10. குழுவிவர முடிவு, எ வாக் டு ரிமெம்பர், 2002
  11. Sparks, Nicholas. "Nicholas Sparks on the Movie Adaptation of A Walk to Remember". Archived from the original on 2008-09-14. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.
  12. Sparks, Nicholas. "FAQ on A Walk to Remember - Did Jamie Die?". Archived from the original on 2008-04-16. பார்க்கப்பட்ட நாள் 2007-07-12.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எ_வாக்_டு_ரிமெம்பர்&oldid=3730975" இலிருந்து மீள்விக்கப்பட்டது