பேச்சு:இழுநாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Sled dog என்பதற்கு இணையாக இழுநாய் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளேன். வேறு பொருத்தமான மாற்றுச்சொல் இருப்பின் பரிந்துரைக்கவும். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 16:56, 26 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

அருமையாக எழுதியிருக்கின்றீர்கள் சிவா! இழுநாய் என்பது முற்றிலும் பொருந்துவது! தலைப்பையே இழுநாய் என்று மாற்ற பரிந்துரைக்கிறேன்.மேலும் வண்டி என்னும் சொல்லை ஆண்டுள்ளீர்கள், பொதுவாக வளைந்த என்னும் பொருள் தரும் சக்கரம் (ஆழி, சறுக்கரம், சில்லு) இருந்தால்தான் வண்டி என்னும் சொல் சரியானதாக இருக்கும். ஓரிடத்தில் இருந்து வேறு ஓரிடத்திற்கு நகர்ந்து செல்லக்கூடிய, ஆனால் சக்கரம் (ஆழி) இல்லாத ஒன்றை வண்டி என்று சொல்லாமா என்று தெரியவில்லை (பொருள் நீட்சியாகக் கொண்டாலன்றி). ஊர்தி என்னும் சொல் பொதுவானது. கப்பலை, வானூர்தியை வண்டி என்று சொல்வது பொருந்தாது. வானூர்திகளை வானோட்டிகள் (மீகாமன்) ஓடுபாதைக்கு இழுத்துச் செல்லும்பொழுதோ, நகர்த்திச் செல்லும் பொழுதோ ஆழியால் நகர்ந்து போவது உண்மை. ஆனால் அவற்றை வண்டி என்று சொல்வது பொருந்தாது. பெருங்கப்பல்களும் கூட அவற்றை நிலத்தில் கட்டப்பட்டபின், ஏதேனும் ஒரு வகையில் நகர்த்தி நீரோட விட வேண்டும். ஆனால் அவை வண்டிகள் அல்ல, ஊர்திகள். வானூர்தி, நீரூர்தி, இங்கே பனியூர்தி எனலாம். எனவே இந்த இழுநாய்கள் பனியூர்திகளை நெடுந்தொலைவு விரைந்து இழுத்துச்செல்ல வல்லன. நல்ல கட்டுரை சிவா!--செல்வா 17:56, 26 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
நன்றி செல்வா! வண்டி என்னும் சொல் வளைதல் கருத்துப் பற்றி அமைந்தது என்று இப்போதுதான் அறிகிறேன். வண்டு என்பதும் அப்பூச்சி வளைந்திருப்பதனால் தானா? மற்றோர் ஐயம், ஊர்தல் என்னும் பொருள் பற்றி. வானத்தில் பறந்து செல்வதை நாம் வானூர்தி என்ற சொல்ல இயலாதல்லவா? மற்ற பயனர்களுக்கு மறுப்பு ஏதும் இல்லையெனில் தலைப்பை இழுநாய் என மாற்றி விடுகிறேன்.--சிவக்குமார் \பேச்சு 15:38, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
தமிழில் வள்->வண்-> வட் என்றாகும். அதாவது ளகரம், ணகரமாகவும், டகரமாகவும் மாறும் (உள் உண் உட்). (1) வள்-> வளைதல், வளைவு. வளி என்பது காற்றுக்கு வளைவது பற்றி, வளைந்து, நெளிந்து சுழிந்து, வீசுவது பற்றி ஏற்பட்ட பெயர். சூறாவளி. (2) வண் என்பது வணைதல் = வளைதல், வணங்கல், மடிதல் என்றும், வணைத்தல் = வளைத்தல், உட்படுதல். (3) வட்டம் முதலான சொற்களைப் பற்றிக் கூறத்தேவை இல்லை, நிறையவே உண்டு. வண்டு என்பது பல பொருள்களுடன் பொருந்துமாறு ஏற்பட்ட சொல். வளைந்த முதுகு இருப்பதாலும், வண்மையான வன் சிறகு (elytra) வளைந்து இருப்பது மட்டுமல்லாமல், பறக்கப்பயன்படும் பின்னிறகுகள் உள்ளே மடித்து வைத்திருப்பதாலும் (வணைத்தல் என்றால் மடித்து உட்படுத்தல் என்னும் பொருள் உடையது), வண்டு என்பது பொருள் செறிந்த சொல். ஊர்ந்து செல்லுதல் என்பது நகர்ந்து செல்லுதல் என்னும் பொருளே முதற்பொருள். ஆனால் காற்றைப் பற்றி (முன்னிருந்து பின் தள்ளி) வானூர்தி பறப்பதாகவும் கொள்லலாம். குளுவை என்னும் ஒரு பறவைக்குப் பேரே ஊரல் என்பதாகும். ஊர்தல் என்பதற்குக் கழகத் தமிழ் அகராதி தரும் பொருட்களில் சில: ஊருதல், தவழுதல், செல்லுதல், பரவுதல், ஏறிச் செல்லுதல், தினவுறுதல், மேற்கொள்ளுதல், வடிதல், மிகுதல் (இவை தவிர வேறு சில பொருட்களும் உள்ளன). இவற்றுள் செல்லுதல், ஏறிச்செல்லுதல் என்னும் இரு பொருட்களும் இங்கு பொருந்தும். ஊர்தி = vehicle. என்று பொதுவாகக் கொள்ளலாம். எனவே விண்ணூர்தி (space craft) என்றும் சொல்லலாம். நாம் உந்திச் செல்வது என்னும் பொருளிலும் சொல்லலாம். எதிர்வினையால் (பீய்ச்சு எந்திரம்; பின்னே பீய்ச்ச முன்னே ஏகும்) செல்லும் (ஏதொன்றையும் ஏற்றிக் கொண்டு செல்லும்) ஒன்றையும் ஊர்தி என்று கூறலாம். --செல்வா 16:29, 27 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]
இங்கு இன்னொரு கருத்தையும் பதிவு செய்தல் வேண்டும். இசும்பு, இசும்புநிலம் என்றால் வழுக்குநிலம். சென்னைத் தமிழிலே இசுத்துகினு போறான் என்பதில் உள்ள இசு என்பது தூய நல்ல தமிழ்ச்சொல். இழு, இசு ஆகிய இரண்டுமே நல்ல தமிழ்ச்சொற்கள். இசு என்பது கொச்சை அல்ல. வேறு ஒரு சொல் அவ்வளவுதான். இசும்பு என்றால் ஆங்கிலத்தில் percolation என்பார்களே அப்பொருளும் சில இடங்களில் ஏற்கும். ஏனெனில் ஒழுகி, கசிந்து நகர்தலுக்கும் இசும்பு என்று பெயர். வழுக்கி நகர்வதற்கு இசங்குதல் என்று பெயர். நாங்கள் சிறுவர்களாக இருந்தபொழுது தட்டுக்குச்சி (சோளத்தட்டுக்குச்சி)களை ஒரு கற்றையாக இரு கைகளிலும் பிடித்து தரையில் அக்கற்றையைக் குத்த வைத்து (குச்சிகள் நேரே மேலும் கீழுமாக இருக்குமாறு பிடித்துக்கொண்டு) பின் கைப்பிடியை விட்டால், குச்சிகள் தாறுமாறாக ஒன்றல் மேல் ஒன்றாக பலவாறு கிடக்கும். எக்குச்சியும் ஆடாமால் இருக்குமாற்கு ஒவ்வொரு குச்சியாக எடுக்க வேண்டும். குச்சிகிகள் அசைந்தால், ஆட்டம் இழப்பர், பின்னர் அடுத்தவர் மீதம் இருக்கும் குச்சிகளை அடுக்கி அதேல் போல் கீழே விடுவர். இவ் விளையாட்டில் குச்சிகள் ஆடுவதை, அசைவதை, அசங்கிடிச்சு என்போம். இதனை இசங்கிடிச்சு என்றும் சொல்வார்கள் உண்டு. அதே போல நீர்க்கோலம் இடும் பொழுதோ, ஓவியம் தீட்டும் பொழுதோ, தீட்டும் நிறச்சாந்தோ, நீர்மமோ தவறுதலாக வேறு திசையில் இழிந்து விட்டால், அதனை ஈசிடிச்சி அல்லது இசுங்கிடிச்சி என்போம். எனவே இசு, இசுத்தல், இசும்பு என்பன இணைத்து நினைக்க வேண்டிய சொற்கள். தட்டுக்குச்சி ஆட்டத்தில் அசங்கிடிச்சு என்று சொல்லும் சொல் அசங்குதல் அல்லது அசும்புதல் என்னும் சொல்லில் இருந்தும் வந்திருக்கலாம். இந்த அசும்புதல் என்னும் சொல் பொதுவாக கசிதல், ஒழுகுதல் என்னும் பொருள் கொண்டது, ஆனால் ஒன்றோடு ஒன்று மோதி பரவுதல் அல்லது பிரிந்து பரவுதல் என்னும் பொருள் கொண்டது. இது ஆங்கிலத்தில் diffusion, percolation, scattering ஆகிய சொற்பொருள்களோடு தொடர்பு கொண்டது. அசும்பு > அசங்கு ஆகியிருக்கலாம். Percolation = கசிவு, ஊடுருவல்,. Diffusion = அசும்பல், விரவல், பரவல். scattering = தெறிப்பு, சிதறல். --செல்வா 18:41, 26 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

அசங்கிடிச்சு என்னும் சொல்லாட்சி, அசைந்து விட்டது --> அசைஞ்சு விட்டது , அசஞ்சி, அசங்கி விட்டது என்று ஆகியிருக்கலாம். எங்கள் பயன்பாட்டில், அசைந்து விட்டது என்பது நழுவி விட்டது, வழுக்கி விட்டது என்னும் பொருள் சேர்ந்தே இருந்தது. வழுக்குதல் என்பதும் வழு = தவறு, தவறுதல் என்னும் பொருள் இருப்பதும் அருமை. கைக்கு மை தீட்டும் பெண்கள் ஈசிவிட்டது என்று சொல்வதையும் குறிக்க மறந்து விட்டேன். --செல்வா 20:05, 26 நவம்பர் 2008 (UTC)[பதிலளி]

மேலே சொன்ன தட்டுக்குச்சி விளையாட்டில், குச்சிகள் அசைந்து விட்டால் அசங்கிடிச்சு என்று கூறுவதுபோலவே, அலுங்கிடிச்சு என்றும் கூறுவோம். இச்சொல்லாட்சிகளை வேறு யாரும் கேட்டோ பயன்படுத்தியோ இருந்தால் கூறவும். இச்சொல்லாட்சிகள் 1958-1965 காலப்பகுதியிலே, கரூர், மோகனூர், நாமக்கல் பகுதிகளில் பயன்பாட்டில் இருந்ததை அறிவேன். கார்த்திக் பாலா கேட்டிருப்பாரா என்று தெரியவில்லை. --செல்வா 22:31, 1 டிசம்பர் 2008 (UTC)
ஆம் செல்வா, நானே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். என் சிறுவயதில் நாங்களும் இதுபோன்ற ஒரு விளையாட்டை விளையாடுவோம். தட்டுக்குச்சிகளுக்குப் பதில் நாங்கள் ஈர்க்கு மாரினால் செய்த கால் அடி நீளமுள்ள குச்சிகளைக் கொண்டு விளையாடுவோம். எங்கள் ஊர்ப்பக்கம் நாங்கள் அலுங்கிடுச்சு என்றே வழங்கி வருகிறோம். நான்றிந்த வரையில் இச்சொல் எங்கள் பகுதியில் இன்றளவும் புழக்கத்தில் உள்ளது. அதே போல் அச்சாங்கல் என்னும் விளையாட்டிலும் கற்களை அலுங்காமல் ஒவ்வொன்றாக எடுக்க வேண்டும். அசங்கிடுச்சு என்று சொல்லி நான் கேட்டதில்லை. மை தீட்டுதலின் போது நாங்கள் இழுக்கிக் கொண்டுவிட்டது எனக் கூறுவோம்.--சிவக்குமார் \பேச்சு 17:40, 2 டிசம்பர் 2008 (UTC)
சிவா, உங்கள் தகவலுக்கு நன்றி. நானும் ஈர்க்குமார் குச்சிகளைக் கொண்டு ஆடுவதையும் அறிவேன், ஆனால் இந்த தட்டுக்குச்சிகள், பல தடிமன்களில் (தடிப்பங்களில்), 1 மிமீ முதல் 5-6 மிமீ வரையும் பொதுவாக இருக்கும். மேற்புறம் மழமழப்பாக, பல்வேறு இளம் மஞ்சள் நிறங்களில், பார்ப்பதற்கே அழகாக இருக்கும் :) எடையும் மிகவும் குறைவாக, இலேசாக, தக்கைபோல், இருக்கும். சென்னை பல்கலைக்கழக அகராதியில் அலுங்கு, அலுங்குதல், அலுங்கல் என்னும் சொற்கள் இல்லை. கழகத் தமிழ் அகராதியிலும் இல்லை. ஆனால் கழகத்தமிழ் அகராதியில் அலுக்குதல் என்று ஒரு சொல் இருக்கின்றது. இதன் பொருள், "பிலிக்குப் பண்ணுதல், சிறிது அசைத்தல்" என்று கொடுத்துள்ளார்கள். சென்னை ப.க.அகராதியிலும், கழகத்தமிழ் அகராதியிலும் அலங்கு என்னும் சொல் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை ப.க அகராதியில் அலங்கு என்பதற்கு "move, shake, swing, அலை; 2. shine, flash. ஒளிசெய்" என்று பொருள் கொடுத்துள்ளார்கள். மேலும் அலக்கு என்னும் சொல்லை அலங்கு என்பதன் செயப்படுபொருள் குன்றாவினை(transitive verb)யாகவும் கொடுத்துள்ளார்கள். துறட்டுக்கோலை (மரத்தில் உயரத்தில் இருக்கும், பூ, பழங்களை ஆட்டி, அசைத்து, உலுக்கி உதிர்விக்கப் பயன்படும் கோல்) அலக்கு என்றும் கூறுவர். அலக்கு என்பதற்கு இதே பொருளை கழகத் தமிழ் அகராதியும் கொடுத்துள்ளது. கழகத்தமிழ் அகராதி அலங்கு, அலங்கென்னேவல், அலங்குதல் (= அசைதல், தத்தளித்தல்) முதலான சொற்களும் பொருள்களும் கொடுத்துள்ளது. அலங்கோலம் என்பது அசைந்தோ, நகர்ந்தோ நிகழும் ஒழுங்கின்மை, சீர்கேடு. பேச்சு வழக்கில் இருப்பதும், அகராதியில் குறித்துள்ளதுமாகிய அலட்டுதல் என்னும் சொல்லும் இந்த "பிலுக்குதல்", "அலைதல்" என்னும் பொருள் உடையதே. அலங்குதல், அலுங்குதல் ஆகிய இரண்டும் தொடர்புடையதென்றாலும், தனித்தனிச்சொற்கள். அலுவல், அலுப்பு என்னும் சொற்களும் ஒரே பொருள் வேரில் இருந்து விரிந்து பிறபொருட்கள் கொண்டவையே (அலை, அசை, நகர் -> வேலை, களைப்பு, சலிப்பு). சலிப்பு என்பது அசைவைத் துல்லியமாய் உணர்த்துவது. --செல்வா 21:58, 2 டிசம்பர் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இழுநாய்&oldid=1088154" இலிருந்து மீள்விக்கப்பட்டது