பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்தித்துறை பெரிய பிள்ளையார் கோவில் அல்லது பருத்தித்துறை கொட்டடி சித்தி விநாயகர் கோவில் என்பது இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்தில், பருத்தித்துறை நகரில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயிலாகும். பெரிய வீதிகளைக் கொண்டமைந்தமையால் "பெரிய பிள்ளையார் கோவில்" எனவும் இக்கோயில் அழைக்கப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

இது 350 வருடம் பழமை வாய்ந்த கோவிலாகும். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திற்கு முன்பே இக்கோயில் இருந்ததாகவும், கோயில் வளாகத்தில் ஒரு சிறிய கேணி இருந்ததாகவும் கூறப்படுகிறது. பருத்தித்துறை துறைமுகத்திற்கு அருகில் அமைந்த காரணத்தால் பருத்தித்துறை துறைமுகம் செல்பவர்கள் இந்தக் கோவில் கேணியில் குளித்து, வழிபட்டு தமது பயணத்தைத் தொடரந்ததாக வரலாறு கூறுகின்றது. [2]

ஒல்லாந்தர் காலத்தில் ஏனைய கோயில்கள் அழிக்கப்பட்டது போன்றே இக்கோயிலும் அழிக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் இடையில் நேரடி வணிகத் தொடர்புகள் இருந்தன. பருத்தித்துறை ஊடாகவே உணவுப் பொருட்கள் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அதேநேரம் இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினம், தமிழ்நாட்டிலுள்ள சென்னை, தூத்துக்குடி போன்ற துறைமுகங்களில் இருந்து சொரி நெல் பருத்தித்துறைக்கு இறக்குமதி செய்யப்பட்டது. அந்த சொரி நெல் பொதி ஒன்றில் மறைத்து விநாயகர் சிலை ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த விநாயகர் சிலையை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பனங்கட்டிக் கொட்டில் ஒன்றினுள் வைத்து பக்தர்கள் வணங்கி வந்தனர். அதனால் "கொட்டடிப் பிள்ளையார்" எனும் சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. பக்தர்கள் மறைவாக இந்த கோவில் சார்பாக விக்கிரகம் ஒன்றை வைத்து வழிபட்டுள்ளனர். மீளவும் ஆலய கொடிக்கம்பம் 1870இலும் பின்னர் 1925இல் இராஜகோபுரமும் கட்டி முடிக்கப்பட்டது. இத்தகவல்களை 1925ம் ஆண்டு இந்து வாலிபர் சங்க சிறப்பு மலர் தருகிறது.

அண்மையத் தகவல்கள்[தொகு]

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இப்பிரதேசம் இருந்த வேளையில் இக்கோயிலுக்கு பக்தர்கள் செல்வதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. ஆனால் 1996இல் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து யாழ் குடாநாட்டை இலங்கை இராணுவம் மீளவும் கைப்பற்றிய பொழுது இந்தக் கோவில் இருந்த பகுதி உட்பட உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்ட பின்னர் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படவில்லை. 2009இல் ஈழப்போர் ஓய்ந்த பின்னர் மெல்ல மெல்லமாகச் சுருக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களின் காரணமாக, மீண்டும் இந்தக் கோவில் இருக்கும் பிரதேசம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தம் காரணமாக சோபையிழந்து 14 ஆண்டுகள் செயல்பாடு இழந்து இருந்தது. இந்நிலையில் பருத்தித்துறை இந்து வாலிபர் சங்கம் இந்தக் கோவிலை சிரமதானப் பணிமூலம் சுத்தப்படுத்தி மீளவும் திருவிழா நடத்த வழி ஏற்படுத்தினர். 2011ம் ஆண்டு மீள கோவில் திருவிழா செவ்வனே நடத்தப்பட்டது.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்பு[தொகு]