முத்தையா முதலியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். முத்தையா முதலியார்
சென்னை மாகாணத்தின் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சர்
பதவியில்
மார்ச் 16, 1928 – அக்டோபர் 27, 1930
பிரதமர்பி. சுப்பராயன்
ஆளுநர்ஜார்ஜ் கோஷன்,
சர் நார்மன் மர்ஜோரிபாங்க்ஸ் (தற்காலிகம்)
முன்னையவர்எ. ரங்கநாத முதலியார்
பின்னவர்எஸ். குமாரசாமி ரெட்டியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1883
கும்பகோணம், சென்னை மாகாணம்
இறப்புஜுலை 15, 1953
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிநீதிக்கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் (சுயாட்சிக் கட்சி)
துணைவர்இராஜம்
முன்னாள் கல்லூரிஅரசு கலைக் கல்லூரி, கும்பகோணம் ,
சட்டக்கல்லூரி, சென்னை
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்வழக்கறிஞர்

எஸ். முத்தையா முதலியார் (பி. 1883 – இ. ஜூலை 15, 1953) ஒரு இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், மாகாண அரசில் கல்வி மற்றும் சுங்கவரித்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் சிலகாலம் சுயாட்சிக் கட்சியிலும் பின்னர் நீதிக்கட்சியிலும் உறுப்பினராக இருந்தார். இவர் வகுப்புவாரி இட ஒதுக்கீடு அரசாணை நடைமுறைப்படுத்தப்பட முக்கியக் காரணமாயிருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

முத்தையா 1883ல் கும்பகோணத்தில் தொண்டைமண்டல முதலியார் குடும்பத்தில் பிறந்தார்.[1][2] இவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பும் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டமும் படித்தார்.[3][4] நீதிக்கட்சியில் சேர்வதற்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.[1][4] ஜூலை 15, 1953ல் இவர் மரணமடைந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1923ல் இவர் நீதிக்கட்சியை விட்டு விலகி சுயாட்சிக்கட்சியில் சேர்ந்தார். 1923ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று சென்னை சட்டமன்ற உறுப்பினரானார்.[5] 1926ல் மீண்டும் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இரட்டை ஆட்சிமுறைக்கு எதிரான சுயாட்சிக்கட்சியின் கொள்கையினால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.[6] இவரது கட்சியின் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் ப. சுப்பராயன் அரசை ரகசியமாய் ஆதரித்தது இவருக்குப் பிடிக்கவில்லை.[6] இரட்டை ஆட்சிமுறையின்கீழ் அமைந்த அரசை ஆதரிப்பது இரட்டை ஆட்சிமுறையையே ஆதரிப்பதற்குச் சமமெனக் கருதினார்.[6] பம்பாயில் நடந்த அனைத்திந்திய காங்கிரசுக் கமிட்டியின் கூட்டத்தில் இவர் கலந்து கொண்டபோது இந்தப் பிரச்சனை குறித்து விசாரிக்க ஒரு ஆணயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.[6] ஆணயம் நியமிக்கப்பட்டு அடுத்தநாளே கட்சியின் கொள்கைகளுக்கெதிராகச் சட்டமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு தவறும் செய்துவிடவில்லை என்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.[7] ஆயத்தின் இந்த முடிவை ஒப்புக்கொள்ள மறுத்து இவர் சுயாட்சிக்கட்சியை விட்டு விலகினார்.[7]

1928ல் சுப்பராயன் ஆட்சியில் ஆர். என். ஆரோக்கியசாமி முதலியார், எ. ரங்கநாத முதலியார் ஆகிய இரு அமைச்சர்கள் பதவியிலிருந்து விலகினர்.[7] ரங்கநாத முதலியாரின் கீழிருந்த கல்வி மற்றும் சுங்க வரித்துறைக்கு அமைச்சராகப் பதவி ஏற்கும்படி சுப்பாராயன் கேட்டுக் கொண்டதால் இவர் சுயேட்சை அமைச்சராக பொறுப்பேற்று 1928லிருந்து 1930 வரை பணிபுரிந்தார்.[7][8] 1920 களின் கடைசியில் மீண்டும் நீதிக்கட்சிக்குத் திரும்பினார். 1938ல் சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் பெரியாரின் நெருங்கிய நண்பராகவும் நல்ல தோழராகவும் இருந்தார்.

வகுப்புவாரியான இடஒதுக்கீடு சம்பந்தமாக 1921ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தும் அரசாணை எண் 1021 இவரது முயற்சியால் வெளியானது.[9][10] இதன்படி இடஒதுக்கீட்டில் தலித்துகளுக்கும் பங்களிக்கப்பட்டு இந்திய கிருத்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடஒதுக்கீட்டு அளவு அதிகரிக்கப்பட்டது.[11] ஆனால் பிராமணர்களுக்கு 22%லிருந்து 16%ஆகவும் பிராமணர் அல்லாதோருக்கு 48%லிருந்து 42%மாகவும் ஒதுக்கீட்டு அளவு குறைக்கப்பட்டது.[11] இந்த அரசாணைப்படி இடஒதுக்கீடு முதன்முதல் பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.[12]

வகுப்புவாத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய பின்னர், பிராமணர்களுக்கு மூன்று இடம் ஒதுக்குவதற்குப் பதில் பதினாலு இடம் ஒதுக்கிவிட்டார் என்று புறங்கூறப்பட்டு நீதிக்கட்சியின் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவரால் அடுத்த பொதுத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.[13]

சென்னை மாகாணத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த இவர் பெரும் முயற்சி மேற்கொண்டார். மதுவிலக்குக் கொள்கையைப் பரப்புவதற்காக மட்டுமே 4 லட்சம் ரூபாய் நிதி அறிக்கையில் ஒதுக்கினார்.[14] பல கழகங்களை மாவட்ட அளவிலும் மாகாண அளவிலும் உருவாக்கி மது அருந்துவதைத் தடைசெய்யப் பாடுபட்டார்.[12] சுப்பாராயன் ஆட்சிகாலம் வரை நீடித்த மதுவிலக்கு அதற்குப்பின் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி காலத்தில் கைவிடப்பட்டது.[15] மதுவிலக்குச் சங்கத்தின் செயலாளரான அருள்திரு ஹெர்பெர்ட் நாடர்சன் மதுவிலக்கிற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளை லண்டனிலுள்ள இம்பீரியல் கழகத்தில் பாராட்டியுள்ளார்.[15]

நினைவு[தொகு]

இவருடன் பணிபுரிந்தவர்களும் இவரைப் பின்பற்றியவர்களும் எளிமை, யதார்த்தம், ஆர்வம் மற்றும் சுறுசுறுப்பை இவரது சிறப்பியல்புகளாகக் குறிப்பிடுகின்றனர்.[3] இவர் கடைசிவரை ஒரே வீட்டில்தான் வசித்தார்.[16] பெண்களின் நலனுக்காக இவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான முத்துலெட்சுமி ரெட்டி, சட்டமன்றத்தில் பாராட்டிப் பேசியுள்ளார். பொதுச் சுகாதாரத்துறைக்கு ஒரு பெண் இயக்குனரை நியமித்ததும், தாய், சேய் நல அலுவலர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்ததும் பெண்களின் மேம்பாட்டுக்காக இவர் செய்த முயற்சிகளாகும்.[15] மேலும் இவர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சுகாதாரப் பள்ளிக்கு மானியம் கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.[15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 South Indian Celebrities, Pg 83
  2. South Indian Celebrities, Pg 84
  3. 3.0 3.1 South Indian Celebrities, Pg 85
  4. 4.0 4.1 Indian Who's who. Yeshanand & Co.. 1937. https://archive.org/details/in.ernet.dli.2015.523178. 
  5. South Indian Celebrities, Pg 87
  6. 6.0 6.1 6.2 6.3 South Indian Celebrities, Pg 88
  7. 7.0 7.1 7.2 7.3 South Indian Celebrities, Pg 89
  8. South Indian Celebrities, Pg 82
  9. Murugan, N. (October 9, 2006). "RESERVATION (Part-2)". National. http://indiainteracts.com/columnist/2006/10/09/RESERVATION-Part2/. பார்த்த நாள்: 2009-01-05. 
  10. South Indian Celebrities, Pg 107
  11. 11.0 11.1 Jaffrelot, Christophe (2003). India's silent revolution: Rise of lower castes in North India. C. Hurst & Co. Publishers. பக். 175. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1850656703, ISBN 9781850656708. 
  12. 12.0 12.1 South Indian Celebrities, Pg 92
  13. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1 ;பக்கம் 407-408
  14. South Indian Celebrities, Pg 94
  15. 15.0 15.1 15.2 15.3 South Indian Celebrities, Pg 95
  16. South Indian Celebrities, Pg 91

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்தையா_முதலியார்&oldid=3581953" இலிருந்து மீள்விக்கப்பட்டது