பாய்மம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நறுக்கு விசை பாய்மத்தின் மீது செலுத்தப்படும் பொழுது ஏற்படும் மாற்றத்தினை மேலேயுள்ள படத்தில் காணலாம். காலத்தின்கண் பாய்மம் நறுக்கு விசை செலுத்துகின்ற வரையில் உருமாறிக்கொண்டே இருக்கும். இதே நறுக்கு விசை திண்மப் பொருள் மீது செலுத்தப்படும் பொழுது அப்பொருள் ஒரு அளவிற்கு உருமாறி அத்துடன் நின்றுவிடும். இதனையும் மேலே உள்ள படத்தினில் காணலாம். படத்தில் அம்புக் குறிகள் நறுக்கு விசை செலுத்தப்படுவதைக் குறிக்கின்றன.
இப்படத்தில் இரு வெவ்வேறு இயக்கவியல் பிசுக்குமையினை கொண்ட பாய்மங்களின் ஓட்டம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதனை காணலாம். இடப்பக்கம் உள்ள பாய்மத்திற்கு இயக்கவியல் பிசுக்குமை வலப்பக்கம் உள்ள பாய்மத்தை விட கூடுதல் ஆகும்.

ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

பாய்ம பண்புகள்[தொகு]

அடர்த்தி, பிசுக்குமை ஆகிய இவை இரண்டும் ஒரு பாய்மம் பாயும் விதத்தை நிர்ணயிக்கும் பண்புகள் ஆகும்.

இவ்விரு பண்புகளை உள்ளடக்கி இயக்கவியல் பிசுக்குமையை சான்றோர்கள் வரையறுத்துள்ளனர். பிசுக்குமையை அடர்த்தியினை கொண்டு வகுத்தால் கிடைப்பது இயக்கவியல் பிசுக்குமை ஆகும். ஒரு பாய்ம ஓட்டத்தினை நிர்ணயிப்பதில் இயக்கவியல் பிசுக்குமை பெரும் பங்காற்றும். ஓரிடத்தில் ஓரே விசைக்கொண்டு ஓடும் இருவேறு பாய்ம ஓட்டத்திற்கு வேற்றுமையை தருவது இப்பண்பே ஆகும்.

ஒரு குழாயில் இருந்து வெளிப்படுகின்ற இருவெவ்வேறு இயக்கவியல் பிசுக்குமையினை கொண்ட பாய்ம ஓட்டத்தினை அருகில் உள்ள படத்தில் காணலாம். இயக்கியவியல் பிசுக்குமை கூடுதலாக உள்ள பாய்மம் சீராக வெளிப்பட்டு ஓடுவதையும், பிசுக்குமை குறைந்த பாய்மம் சீரற்று ஓடுவதையும் படத்தில் காணலாம். இப்படிப்பட்ட ஓட்டங்களை நாம் அன்றாட வாழ்விலும் காண முடியும். தேங்காய் எண்ணெயை (இயக்கவியல் பிசுக்குமை = 30 x 10 −6 மீ 2நொ−1) குழாயிலிருந்து வெளிப்படுவதை நாம் எண்ணெய் வாங்கும் கடையில் பார்த்திருக்க கூடும். அந்த ஓட்டம் படத்தில் பச்சை நிற பாய்மம் வெளிப்படுவதைப் போல சீராக இருக்கும். அதே இடத்தில் இயக்கவியல் பிசுக்குமை குறைந்த பாய்மம் (எடுத்து காட்டாக நீரினை எடுத்துக் கொள்ளலாம், நீரின் இயக்கவியல் பிசுக்குமை = 0.55 x 10 −6 மீ 2நொ−1) படத்தில் வலப்பக்கம் உள்ள வெண்ணிற பாய்மத்தைப் போல் சீரற்று ஓடியிருக்கும்.

பாய்ம ஓட்டமும் பயன்பாடும்[தொகு]

பாய்ம ஓட்டத்தினை நாம் உயிர்வாழ எடுக்கும் மூச்சிலிருந்து உடலில் ஓடும் செந்நீர், பித்தநீர், சிறுநீர் ஆகியவற்றிலும், இந்த புவியில் உயிர்கள் வாழ காரணமாயிருக்கும் நீரோட்டத்திலும், அது ஓட துணை புரியும் கார்மேகங்களின் ஓட்டத்திலும், கார்மேகம் புடைசூழ கிளம்பும் கடல், ஆறு, ஏரி, ஆகிய நீர்நிலைகளில் இருக்கும் ஓட்டத்திலும், தானூர்ந்து, வானூர்தி, கப்பல், ஏவுகணை, விண்கல‌ ஏவூர்தி ஆகியவற்றின் இயக்கிகளிலும், மின் எடுக்கும் அனல்மின் நிலையம், அணுமின் நிலையம், நீர் தேக்க மின் நிலையம், காற்றோட்ட மின் நிலையம் ஆகியவற்றிலும் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்மம்&oldid=2741983" இலிருந்து மீள்விக்கப்பட்டது