விக்கிப்பீடியா பேச்சு:அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கலந்துரையாடல் மேலும் விரிவுபடுத்தப்பட்டு ஒரு இணக்க முடிவு எடுக்கப்பட்ட பின்னர் அம்முடிவுகள் கொள்கைப் பக்கத்தில் தொகுக்கப்பட வேண்டும்.

பேச்சு:ஓரிடத்தான் பக்கத்தில் தொடங்கிய உரையாடல்.


ஓரிடத்தான் என்பது 'isomer' என்று நான் கண்டுகொண்டது சரியா என்று சொல்லவும். சரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னுடைய ஒரு வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவும். கூடவே ஆங்கிலச் சொல்லைக் கொடுக்காவிட்டால், ஒரு நாலைந்து தமிழ்க்கலைச் சொற்கள் வந்து கலக்கியவுடனே 'போதும், தமிழில் படித்தது' என்று தோன்றிவிடும் அளவிற்கு ஒரு சலிப்பு ஏற்பட்டுவிடும். என்னுடைய கணிதக் கட்டுரைகளில் எழுதப்படும் கலைச் சொற்களுக்கும் இதே கதி ஏற்பட்டுவிடும் என்றுதான் நான் கணிதக் கலைச் சொற்களை ஒரு கட்டுரையாகவே தொகுத்து தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னொரு 40, 50 ஆண்டுகளுக்காவது இக்கலைச் சொற்களுக்குக் கூடவே ஆங்கிலச்சொற்களை அடைப்பான்களிலோ அல்லது த.வி. யில் அகராதியாகவோ கொடுத்து வந்தாகவேண்டும். நரசிம்மவர்மன் நல்ல கட்டுரைகள் எழுதினாலும் அதே இயல் சிறிதளவு தெரிந்தபோதிலும், தமிழ் வளர்ச்சியில் ஆர்வமிருந்தபோதிலும், எனக்கு அவருடைய (அருமையான) தமிழ்க் கலைச்சொற்கள் வேக உடைப்பான்களாக உள்ளன. ஒவ்வொரு முறை ஒரு புதுப்பயனர் த.வியில் உள்ளே நுழையும்போது இக்கலைச்சொற்கள் அவருக்குத் தெரியாதென்றே நாம் வைத்துக்கொண்டு எழுதவேண்டும். --Profvk 18:26, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

மிகவும் உண்மை. நான் உங்கள் கருத்துக்களை முற்றிலும் ஒப்புக்கொள்கிறேன். நரசிம்மவர்மன் கலைச்சொற்கள் எனக்கு அவ்வாறு வேகத் தடையன்களாக தோன்றவில்லை, ஆனால் பலரும் எப்படி உணர்கிறார்கள் என்பதுதான் முக்கியம். ஓரிருவர் கருத்து வேறாக இருக்கலாம். Isomer என்பது கணிதத்தில் வேறு பொருளிலும், வேதியியலில் வேறு பொருளிலும் ஆளப்படுகின்றது. Isotope என்பது தனிம அட்டவணையில் ஓரிடத்தில் உள்ள ஒரு தனிமத்தின் அளவே எதிர்மின்னி (எலெக்ட்ரான்), நேர்மின்னி (புரோட்டான்) கொண்ட (அதாவது ஒரே அணுவெண் கொண்ட) மாற்று அணுவெடை கொண்ட பொருட்களுக்கு ஓரிடத்தான் (isotope) என்று பெயர். இங்கே tope என்பது இடம் தான். ஒரு தனிமம் தன் அணுவெண் எண்ணிக்கையால் தனிம அட்டவணையில் தனியுரிமை கொண்ட இடம். ஆனால் அதே இடத்திற்குப் பொருந்தும் (தனியுரிமை??!!) வேறு எடை கொண்ட பொருளால் அதனை ஓரிடத்தான் அல்லது ஓரிடமி (ஓரிடன் என்பது சரியாக இருக்கும்மா என்று எண்ணிப்பார்க்கவேண்டும்). எனலாம். எப்படி Isomer என்னும் ஒரே சொல் துறைதோறும் வேறு பொருள் தருகின்றதோ, அப்படி தமிழிலும் நிகழ்வது தவறு இல்லை. தமிழில் கரி என்றால் கரிம கரித்த்துண்டையும் குறிக்கும், கருப்பு நிறம் உள்ள யானையையும் குறிக்கும். அது semantic tradition (பொருள்கோண்மை மரபைப்) பொருத்தது, அல்லவா?--செல்வா 18:42, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
நன்றி பேராசிரியர் வி.கே மற்றும் செல்வா. நான் இலங்கைப் பாடசாலையில் தமிழ் மொழிமூலமாகக் கற்றவன். இலங்கையில் வேதியியலில் (இலங்கைத் தமிழ்: இரசாயனவியல் - Chemistry) isomer = சமதானி என்கின்ற கலைச்சொல்லைக் கையாழுகின்றார்கள். பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்களுக்கு நிகரான ஆங்கிலச் சொற்கள் தெரியாமல் ஏகப்பட்ட சிரமத்தை எதிர்கொண்டேன் எனது எதிர்காலசந்ததியினருக்கும் இக்கதி ஏற்படாதிருக்க கலைச்சொற்களில் ஆங்கிலத்தில் அடைப்புக்குறிக்குள் தருவது நீண்ட நோக்கில் பயன்தரவல்லது என்று உறுதியாக நம்புகின்றேன். அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் தருவது ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை. --Umapathy (உமாபதி) 18:45, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஓரிடத்தான் தமிழக வழக்கா? --கோபி 19:02, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

வேகத்தடை ஏற்படாமல் வாசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உடன்படுகிறேன். ஆனால், வழிமுறையில் கொஞ்சம் மாறுபடுகிறேன். கட்டுரைகளில் உள்ள கலைச்சொற்கள் மட்டுமல்ல, வழிமாற்று, வார்ப்புரு போன்று விக்கிபீடியா தள செய்திகளைப் படித்துப் புரிந்து கொள்ளக்கூட சிரமப்பட்டு அவற்றுக்கும் அடைப்புக்குறியில் ஆங்கில விளக்கம் கேட்பவர்களையும் பார்த்திருக்கிறேன். பிற ஊடகங்கள், கல்வி நிறுவனங்கள் எளிய சொற்களுக்குக் கூட பெரிதும் ஆங்கில வழிச்சிந்தனையைத் தமிழரிடம் வளர்த்து விட்டிருப்பதால் தான் இந்த நிலை. அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தருவதால் தமிழ்க் கலைச்சொற்கள் மனதில் பதியாமல் கடைசி வரை ஆங்கிலச் சொல் மூலமாகவே புரிதலும் மனதில் பதிதலும் நிகழுமோ என்பது என் கவலை. எடுத்துக்காட்டு, வழிமாற்றுப் பக்கம் (redirect page) என்று எழுதுவோமானால், "ஓ redirect pageஆ" என்று புரிந்து கொண்டுப் போய் விடுவார்கள். தவிர, வழிமாற்றுப் பக்கம் என்றாலே புரிபவர்களுக்கு தேவையில்லாமல் அடைப்புக்குறிக்குள் வரும் ஆங்கில விளக்கம் தடையாக இருக்கும். அதுவே, வழிமாற்றுப் பக்கம் என்று எழுதினால், முதன் முறை அதைப் பார்க்கையில் சற்று வேகம் குறைந்தாலும், கொஞ்சம் யோசித்து புரிந்து கொண்டு அடுத்தடுத்த முறைகளில் தடையின்றிப் படிக்கலாம். அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் என்று ஆரம்பித்தால் அது வரிக்கு வரி பல அடைப்புக்குறிகள் என்று காலத்துக்கும் அடைப்புக்குறிகளுக்குள் கட்டுரையை முடக்கி விடலாம். அதுவே இன்னொரு வேகத்தடையாகி விடும். கொள்கை அளவில், ஒரு ஆங்கிலச்சொல்லின் உதவி கொண்டு தான் தமிழ்ச்சொல்லைப் புரிந்து கொள்ள செய்ய வேண்டுமா என்றும் கேள்வி எழுகிறது. அப்புறம், தமிழில் கலைச்சொல் கொண்டு எழுதுவதற்கே பொருள் இல்லாமல் போய்விடும். ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகளிலும் எனக்குப் புரியாத எத்தனையோ கலைச்சொற்களைக் கவனிக்கிறேன். ஆனால், அவை எல்லாவற்றுக்கும் அடைப்புக்குறி விளக்கத்தை எதிர்ப்பார்ப்பதில்லையே? ஒன்று அந்தக் கலைச்சொல் குறித்த தனிக்கட்டுரை பார்க்கிறோம். அல்லது, அகரமுதலியில் பார்க்கிறோம். அதை போல் தமிழிலும் செய்யலாமே? புரியாத கலைச்சொற்களுக்கு அது குறித்த தனிக்கட்டுரைகள் உருவாக்கப்பட்டு இணைப்பு தருவோம். தனிக்கட்டுரை தேவைப்படாத சொல் என்றால் விக்சனரியில் பொருள் சேர்த்து இணைப்பு தருவோம். அல்லது, கட்டுரை முடிவில் அருஞ்சொற்பொருள் பட்டியல் கொண்டு தமிழில் விளக்கமும் நிகரான ஆங்கிலச்சொல்லும் தரலாம். தொலைநோக்கில் தமிழைக் கொண்டு மட்டுமே கட்டுரைகளைப் புரிந்து கொள்ள இந்த அணுகுமுறை உதவும் என நம்புகிறேன். அடைப்புக்குறி என்று ஆரம்பித்துவிட்டால், அது ஆண்டாண்டு காலத்துக்கும் அப்படியே தொடரும் அபாயம் உண்டு.--Ravishankar 19:11, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரவி, ஓரிடத்தான் தமிழக வழக்கா? --கோபி 19:18, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
ஒரு கட்டுரையை முழுக்க முழுக்க தமிழ்க் கலைச்சொற்களால் மூழ்கடிக்காமல் இருப்பது முக்கியம். தமிழ்க் கலைச்சொற்கள் கொண்டு ஒரு வேகத்தில் எழுதிய சில கட்டுரைகள் பின்னர் எனக்கே முழுமையாக இலகுவில் புரிவதில்லை :-( எனினும், ரவியின் கருத்தோடும் அனேகமாக ஒத்துப்போகின்றேன். ஒரு கட்டுரையின் தலைப்பின் ஆங்கிலப் பதத்தை தமிழில் தருவது நன்று. பிற கலைச்சொற்களை ரவி சுட்டியபடி கையாழலாம். நன்றி. --Natkeeran 19:28, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
உமாபதி, எம்மொழியில் சொன்னாலும், விளங்கும் வண்ணம் சொல்வது இன்றியமையாதது. ஆங்கிலக் கலைச்சொல் தெரிந்தால், மேற்கொண்டு ஆங்கிலம் அறிந்தவர் அது பற்றி அறிந்து கொள்ள உதவலாம். தொடர்பு படுத்தவும் பயன் படலாம். ellipse என்று கலைச்சொல் இருந்தால் மட்டும் அதன் கருத்து, மற்றும் அது பற்றிய உண்மைகள் அதிகமாகத் தெரியப்போவதில்லை. விளக்குபவர்கள், அறிவூறுமாறு விளக்கி எழுதினால் எதுவும் தெளிவாகும், அறிவும் வளரும். Quark என்பது எப்படித்தோன்றியது என்று ஆங்கில விக்கியில் கூறுவதைப் பாருங்கள்: //The word was originally coined by Murray Gell-Mann as a nonsense word rhyming with "pork".[1] Later, he found the same word in James Joyce's book Finnegans Wake, where seabirds give "three quarks", akin to three cheers (probably onomatopoeically imitating a seabird call, like "quack" for ducks, as well as making a pun on the relationship between Munster and its provincial capital, Cork) in the passage "Three quarks for Muster Mark!/Sure he has not got much of a bark/And sure any he has it's all beside the mark." Further explanation for the use of the word "quark" may be derived from the fact that, at the time, there were only three known quarks in existence. //ஆங்கிலத்தில் பலரும் எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். அடிப்படைக் கருத்துக்களைக் கூடப் பல கோணங்களில் படித்து எழுதுகிறார்கள். அப்படி அறிவியல் கருத்துக்களை நாம் தமிழில் எழுதி, படித்து, கருத்தாடி, திறனாய்ந்து பார்ப்பது குறைவு. இதுதான் தடை. ஆங்கிலத்திலேயே படித்த தமிழர்கள்கூட, அறிவியல் போன்ற கருத்துக்களைத் தமிழில் படிப்பதால் இன்னும் ஆழமாகவும் கூர்மையாகவும், தெளிவாகவும் சிந்திக்கின்றார்கள் என்பது பலமுறை பலரும் கண்ட உண்மை. Ellipse என்பதைவிட நீள்வட்டம் என்று சொல்வதால் இடர்ப்பாடு ஏதும் வந்துவிடப்போவது இல்லை, ஆனால், அதனை மேற்கொண்டு விளக்குவதும், விரித்து, பலகோணங்களில் அலசுவதும் தமிழில் இருத்தல் வேண்டும் (திறம்பட ஆக்கிய படைப்புகள்வழி). தமிழில் புரிந்து கொள்வதற்கும், அதன்வழி சிந்திப்பதற்கும் ஏறத்தாழ 1/2 அல்லது 1/3 அளவே ஆற்றல் தேவைப்படும் (1/10 என்றுகூட சொல்வேன்!). அடைப்புக் குறிகளுக்கிடையே ஆங்கிலச் சொல் தருவது பல இடங்களிலும் மிகவும் நல்லதே. அப்படியே செய்வோம்.--செல்வா 19:39, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

கோபி ஓரிடத்தான் என்பது தமிழக வழக்கா என அறியேன். தமிழகத்தில் ஐசோடோப் என்றுகூடப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இது பற்றி படிக்கிறார்களா எனவும் தெரியவில்லை. அறிந்தவர்கள் செய்தி தந்து உதவுங்கள். --செல்வா 19:42, 22 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நீங்கள் சொல்வது சரிதான் செல்வா. நான் படித்த போது ஐசோடோப்பு என்றே படித்தேன். தற்போது எப்படியோ தெரியவில்லை.--Sivakumar \பேச்சு 06:52, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஓரகத் தனிமம் என்பதே தமிழக இயற்பியல் அறிஞரும் வேதியியல் அறிஞரும் 1965 முதலே பயன்படுத்துகின்றனர். ஆறுமுகி (பேச்சு) 04:03, 28 சூலை 2019 (UTC)[பதிலளி]

கோபி, நான் தமிழ் வழியத்தில் படிக்கவில்லை. அதனால் தமிழ்நாட்டுப் பாடநூற்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், தமிழ் இணையப் பல்கலையில், ஓரகத் தனிமம், ஓரிட மூலகம் போன்ற சொற்கள் தரப்பட்டுள்ளன. இவை பாடநூல்களிலும் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம். ஓரிடத் தனிமம் போன்ற ஏற்கனவே உள்ள சொற்களுக்கு முன்னுரிமை கொடுத்து நாமும் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

மயூரனாதன் சொன்னது போல், கட்டுரைத் தலைப்பில் உள்ள சொல்லுக்கு மட்டும் முதற்பத்தியில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல் தருவதை மட்டுமே வரவேற்கிறேன். கட்டுரை நெடுக ஆங்கில அடைப்புக்குறிச் சொற்கள் தருவதில் உடன்பாடில்லை. முழுக்கத் தமிழ்க் கலைச்சொற்களை மட்டும் கொண்டு எழுதப்பட்டுள்ள கட்டுரைகளைப் புரிந்து கொள்வதில் எனக்கு கூட வேகத் தடை உண்டு தான். ஆனால், அதற்கு நிரந்தரத் தீர்வு ஆங்கில அடைப்புக்குறிச்சொற்கள் தருவதாக இருக்க முடியாது. இந்த நிலைக்கு காரணம், தற்போது தமிழ் விக்கியில் பங்களிப்போர் பெரும்பான்மையானோர் ஆங்கில வழி மேல்படிப்பு, ஆங்கில வழி அறிவியல் சிந்தனை பெற்றிருப்பதால் இது நம் வசதிக்காக செய்து கொள்ள நினைப்பது போலத் தான் இருக்கிறது. முழு பிரச்சினையையுமே ஆங்கிலம் நன்கு அறிந்த தமிழரின் நோக்கிலேயே அணுகிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஆங்கில விளக்கச்சொல் தருவதால் ஆங்கிலம் மூலம் பயின்ற நமக்கு புரியலாம். ஆனால், தமிழ் வழியில் பயின்று வந்து தமிழ்க் கலைச்சொல்லே புரியாமல் இருப்பவருக்கு இந்த ஆங்கில கலைச்சொல் எந்த அளவு உதவும்? முழுக்கத் தமிழ் வழி அறிவியல் கல்வி பயின்றவர்களுக்கு இந்த அடைப்புக்குறிகள் தேவையற்றவை. வேகத் தடையாக இருக்கக்கூடியவை. இப்படி முழுக்கத் தமிழ் வழி கற்பவர்கள், கற்றவர்கள் எண்ணிக்கை ஆங்கில வழி கற்பவர்கள் எண்ணிக்கையைக் காட்டுலும் கூடுதல் ஆகும். நாம் பிறப்பால் தமிழராய் இருந்தாலும் சிந்தனையால் ஆங்கிலேயராக இருக்கிறோமா?. விக்கிக்காக அகரமுதலிகளைப் பார்த்து தமிழ்க் கட்டுரைகள் எழுதினாலும் எழுதிய கையோடு அந்தச் சொற்களை மறந்து விடுகிறோமோ என்று தோன்றுகிறது. தான் எழுதிய கட்டுரைகள் தனக்கே நிறைவளிக்கவில்லை என்று மயூரனாதன் கூறியதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். கட்டுரை எழுதுபவர்களும் (என்னையும் சேர்த்து தான்) தங்கள் சிந்தனைகளை முழுக்கத் தமிழ் வழியாக்கிக் கொள்ள முயல வேண்டும். புதிய சொற்களைப் புரிந்து கொண்டு நினைவில் இருத்த வேண்டும். தகுந்த இடங்களில் அது குறித்த துணைக்கட்டுரைகள், விக்சனரி விளக்கக் குறிப்புகள் தந்து அடுத்து வரும் பயனருக்கு உதவ வேண்டும்.

ஒரு தமிழ்க் கலைச்சொல் வாசிப்பவருக்குப் புரியவில்லை என்றால், 1. அது அவர்கள் பயின்ற கலைச்சொல்லில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். இந்தச் சூழலில் அவர்கள் பயின்ற கலைச்சொல், நாம் பயன்படுத்தும் கலைச்சொல் இரண்டையும் தமிழ் விக்கி கொள்கைக்கு ஏற்ப நிறுத்துப் பார்த்து நல்ல சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 2. அந்தச் சொல் தமிழ் பாடநூல் கழகங்களில் அறிமுகமாகியிராத முற்றிலும் புதிய துறை குறித்த புதிய கலைச்சொல்லாக இருக்கலாம். அப்படியாயின், அதற்கு வெறுமனே ஆங்கிலக் கலைச்சொல்லை அடைப்புக்குறிக்குள் தருவதால் அந்த மாணவரின் புரிதல் எந்த அளவு மேம்படும் என்று எனக்குத் தெளிவில்லை. மேற்கொண்டு விவரம் தேவை என்றால் ஆங்கிலம் அறிந்து கொள் என்று வாசிப்பருவருக்குச் சொல்வது போல் இருக்கிறது. நாம் எழுதும் ஒரு தமிழ் அறிவியல் கட்டுரையைப் புரிந்து கொள்ள அவருக்கு ஆங்கிலத்தின் துணை தேவை என்றால் பிறகு எதற்கு அவர் தமிழ் விக்கிக்கு வர வேண்டும்? நேரடியாக ஆங்கில விக்கிக்கே போய் விடலாமே?

கொள்கை அளவில், அறிவியல் தமிழ் ஆங்கிலத்தைச் சார்ந்தே இருப்பது போல் ஒரு தோற்றத்தையும் இது தருவதையும் கவனிக்கலாம். இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி, மலையாளம் போன்ற பிற வழியங்களில் பயிலக் கூடிய தமிழ் மாணவர்கள், பிற நாடுகளில் ஜெர்மன், டச்சு, பிரெஞ்சு, இத்தாலிய மொழி, மலாய் வழி பயிலக்கூடிய மாணவர்களுக்கு இந்த ஆங்கிலச் சொற்கள் எந்த அளவு உதவும்? ஆங்கிலச் சொல்லை மட்டும் தந்து பொறுப்பைத் தட்டிக் கழித்துப் போவதை விட, இது போன்ற கலைச்சொற்களுக்கு விக்சனரி இணைப்பு தந்து அங்கு எல்லா மொழிகளிலும் இணைச் சொற்களைத் தந்தால் எந்நாட்டுத் தமிழ் மாணவருக்கும் உதவுமே? அறிவியல் தமிழ் ஆங்கிலம் சார்ந்தது என்று தோற்றத்தையும் நீக்கலாம்.

ஜெர்மனில் பிறந்து படித்த பத்து தமிழ் மாணவர்கள் தமிழ் விக்கியில் பங்களிக்கும்போது தங்கள் வசதிக்காக ஜெர்மன் அறிவியல் கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் தந்தால் அபத்தமாக இருக்காதா? ஆங்கிலம் அறிந்தோர் அதிகம் இருக்கிறோம் என்ற காரணத்துக்காக ஆங்கிலச் சொற்களைத் தருவதும் அது போன்றே எனக்கு அபத்தமாகத் தோன்றுகிறது. ஜெர்மன், டச்சு மொழிகளில் அமைந்துள்ள அறிவியல் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளைப் பார்த்து இருக்கிறேன். அவை ஒன்றிலும் இப்படி அடைப்புக்குறி ஆங்கிலச் சொற்களைப் பார்த்தது இல்லை. அவர்களால் முடியும் என்றால் நம்மால் ஏன் முடியாது? தமிழ் விக்கி போன்ற களம் ஒன்றின் மூலம் தான் தற்போது தமிழில் அறிவியலை அலசும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது துவக்கம் என்பதால் நமக்கு கொஞ்சம் வேகத்தடை இருக்கலாம். ஆனால், போகப்போகத் தானாக சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நடைமுறைக் காரணங்களைக் கொண்டு பார்த்தால், இப்படி அடைப்புக்குறி விளக்கங்களை எத்தனை ஆண்டுகளுக்கு விட்டு வைப்பது? ஏதோ ஒரு கட்டத்தில் எல்லா தமிழ்க் கலைச்சொற்களுக்கும் வாசிப்பவர்களுக்குப் புரிகிறது என்று வைத்துக் கொள்வோம்..அதற்குப் பிறகும், இந்த அடைப்புக்குறி விளக்கங்களை விட்டு வைப்பது தேவை அற்றதாக இருக்கும். பல ஆயிரக்கணக்கான கட்டுரைகளில் குவிந்து இருக்கக்கூடிய அடைப்புகுறிகளை எப்படி நீக்கி உரை திருத்துவது?

தீர்வாக நான் கருதுவன:

1. கட்டுரை எழுதுவோர், வாசிப்போர் இருவரும் தமிழ் வழிச் சிந்தனையை வளர்க்க முனைய வேண்டும். புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்ளவும் நினைவில் இருத்தவும் முயல வேண்டும். 2. கலைச்சொற்களுக்குப் பொருத்தமான துணைக் கட்டுரைகள், பன்மொழி விக்சனரி விளக்கங்களைத் தந்து முதன்மைக்கட்டுரையில் இணைக்க வேண்டும். கட்டுரையின் இறுதியில் அருஞ்சொற் பொருள் பட்டியலும் தரலாம். இந்த அருஞ்சொற்பொருள் விளக்கம் வெறும் ஆங்கில இணைச்சொல்லைத் தராமல், தமிழிலேயே அச்சொற்களை விளக்க முற்படுவதாக இருக்க வேண்டும். 3. ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் கலைச்சொற்களுடன் நாம் பயன்படுத்தும் சொற்களை நிறுத்துப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே இருக்கும் கலைச்சொல் குறித்த சரியான நிலைப்பாடு இல்லாமல் புதிதாக கலைச்சொற்களை உருவாக்கிக் கொண்டு இருக்கக் கூடாது. 4. இவ்வளவும் செய்தும் நம் கட்டுரைகளை வாசிக்கக் கடினமாக இருக்கிறது என்றால் நம் கட்டுரை நடையின் காரணமாக இருக்கலாம். இயன்ற அளவு இலகுவான, இறுக்கம் குறைந்த கட்டுரை நடையை நாம் பயன்படுத்த வேண்டும்.

--Ravishankar 11:45, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரவியின் கருத்து மிகவும் ஆரோக்கியமானது. அவர் தந்த தீர்வுகளை ஆமோதிக்கிறேன்.--Kanags 12:27, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
:) ஆங்கிலத்திலேயே இங்கு முன்னர் உரையாடிய நம் ரவியா இப்படித் தமிழ்வழி சிந்தித்து அழகுடன் தன் கருத்துக்களை முன்வைக்கிறார் என்று எண்ணி வியப்படைகிறேன் :) ரவி கூறும் கருத்துக்களுடன் ஒப்புகிறேன், வர்வேற்கிறேன், ஆனால் உலக மொழிகள் அத்தனையும், அறிவியல், மற்றும் பல துறைகளில், கருத்துக்களுக்கு மிகப்பெரும்பான்மையும் ஆங்கிலத்தைச் சார்ந்தே உள்ளன என்பது உண்மை, அது வெறும் தோற்றம் இல்லை. இது கடந்த 50-70 ஆண்டுகள் வரலாறு. அதற்கு முன்னர், உருசியர், செருமானியர், பிரெஞ்ச்சுக்காரர்கள் என்று பலரும் மிகப்பெரும்பாலும் தங்கள் மொழிகள்வழியே பலவும் அறிந்து, ஆய்ந்து, வளர்த்து வந்தனர். நான் 50-70 ஆண்டுகள் என்பது மிகு முடுக்கத்துடன் நிகழ்ந்ததைக் கூறுகிறேன். முதலில் மெதுவாகத் தொடங்கி, பின்னர் விரிந்த அளவில் ஈடற்ற அளவில் பல்வகை-கலை இலக்கிய சொத்துகளை ஆங்கிலத்தில் சேர்ந்தது கடந்த 100-150 ஆண்டுகளாக எனலாம். இதற்கு பெரும் கரணியம் ஐக்கிய அமெரிக்காவின் வளர்ச்சி (பொருளியல் செழிப்பு மக்கள் தொகை, பன்னாட்டு அறிஞர்களை தன்னாட்டவர் ஆக்குதல், வலிய பெரும் படைத்துறைகள் முதலானவை). ஐக்கிய அமெரிக்கா இல்லாவிடில் இன்று பிரெஞ்ச்சு, இத்தாலிய மொழிகள் இருக்கும் நிலையிலேயே ஆங்கிலம் இருந்திருக்கும். நாளை முன்னணி நிலையை சீன மொழி பற்றலாம், எசுப்பானியம் பெறலாம், மீண்டும் உருசியம் முன்னணி பெறலாம், ஆனால் நாளையும் ஆங்கிலம் முன்னணியில் இருக்கும். 70-75 மில்லியன் தமிழர்களாகிய நாம், நம் ஒன்றுபட்ட கூட்டுவலுவை, நம் தொன்வரலாற்றை, நம் பல்கலை செழுமைகளை, நம் மொழியின் செந்திறத்தை ஒருசிறிதும் உணரவில்லை. கலைச்சொல் படித்தவுடன் ஆங்கிலத்தில் ஒருசிறிதாவது புரியவில்லை என்றால், அது பற்றி மேலும் துருவி கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு தமிழில் படிக்கும் பொழுதும் இருக்கவேண்டும், வளர்க்க வேண்டும். துருவிப் பார்த்தால் கிடைக்கும் அளவுக்காவது செய்திகள் பரவலாக கிடக்க தமிழில் வழி செய்தல் வேண்டும். --செல்வா 13:07, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

நன்றி, kanags. செல்வா. இந்த முழு உரையாடலுமே Profvக்கான மறுமொழியாக வைக்கவில்லை. ஆனால், ஒரு முக்கியமான போக்கு குறித்த உரையாடலுக்கு அவரது கருத்து தூண்டி விட்டிருக்கிறது. தமிழ் வெகுமக்கள் ஊடகங்களில் ஒரு கவலைக்குரிய போக்கைக் காண முடிகிறது. அதாவது, ஒரு கருத்தைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதை அப்படியே ஆங்கில எழுத்துக்களில் எழுதுவது, அல்லது தமிழ் எழுத்துக்களில் ஆங்கிலச் சொல்லை எழுதுவது, அல்லது குத்துமதிப்பாக ஒரு தமிழ்ச்சொல்லைப் போட்டு விட்டு அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச் சொல்லைத் தருவது, அல்லது இன்னும் கொடுமையாக வழக்கமாக தமிழ்ச் சொல்லைப் புரிந்து கொள்ள உதவுகிறேன் பேர்வழி என்று அடைப்புக்குறிக்குள் ஆங்கிலச்சொல்லைத் தருவது. எடுத்துக்காட்டுக்கு, இங்கு உள்ள குழந்தைகளுக்கான நீதிக்கதையின் முடிவு வரிகளைப் பாருங்கள்.

//நீதி: யாரையும் தப்புக் கணக்கு (under estimate) பண்ணக்கூடாது சரியானபடி திட்டமிட்டு (planning) ஒரு வேலையைச் செய்தால் நிச்சயம் வெற்றிதான்.//

இந்தக் கதையின் ஆசிரியருக்கு under estimate என்று தான் ஆங்கிலத்தில் சிந்தித்ததைத் தமிழில் துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை. அல்லது, ஆங்கிலத்தில் சொன்னால் தான் குழந்தைகள் துல்லியமாகப் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்திருக்கிறார். திட்டமிட்டு போன்ற எளிமையான சொற்களுக்குக் கூட தேவை இல்லாமல் ஆங்கிலத்தின் துணையை நாடுவதைப் பார்க்கலாம். elephant. cat, school என்பதெல்லாம் கூட தமிழ் தான் என்று புரிந்து கொண்டிருக்கும் ஒரு கவலைக்குரிய ஆங்கில வழிச்சிந்தனை தலைமுறை உருவாகி வருகிறது. இன்று கலைச்சொற்களுக்காக ஆங்கில வழி புரிதலை ஊக்குவிப்போமானால், நாளை வரும் தலைமுறை எளிய சொற்களுக்கு கூட இப்படி ஆங்கில வழி புரிதலின் துணையை நாடி நிற்கும். எனவே தான் புரிதலை எளிமைப்படுத்துகிறோம் என்று ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தாமல் தமிழிலேயே இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

Profvk புரிதல் குறைவதால் வேகம் தடைபடுகிறது என்று சொன்னது குறித்தே என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி, உமாபதி சொன்னது போல் தமிழ் வழி பயின்றவர்கள் பல்கலைக்கு வரும்போது ஆங்கிலக் கலைச்சொற்கள் தெரியாமல் தடுமாறுவதையும் நன்கு உணர்ந்திருக்கிறேன். தமிழர் ஆங்கில அறிவியல் கலைச்சொற்களையும் அறிந்து கொள்ளவதற்கான தேவையை முழுதும் ஏற்றுக் கொள்கிறேன். அதே வேளை ஆங்கிலச் சார்பில்லாமல் தமிழ் வழி அறிவியல் சிந்தனையையும் கைக்கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் அடைவதற்குத் தொலைநோக்கான அணுகுமுறைகளை நாம் ஆராய வேண்டும்.

கலைச்சொற்களுக்கு அடுத்து அடைப்புக்குறி விளக்கங்கள் தருவது நடைமுறை காரணங்களுக்காக கூட ஒத்து வராது. தனிமம், மாழை போன்ற சொற்கள் கூட ஆங்கில வழி பயின்றோருக்கு புரியாத கலைச்சொற்கள் தான். இது போன்ற கலைச்சொற்கள் 1000க்கணக்கான கட்டுரைகளில் இடம்பெறும். ஒவ்வொரு இடத்திலும் புரிதலை மேம்படுத்த அடைப்புக்குறி விளக்கங்கள் தர இயலாது. ஒரே ஒரு அறிவியல்கட்டுரை வெளியிடும் வெகுமக்கள் ஊடகங்களில் இந்த அணுகுமுறை ஒத்து வரலாம். ஆனால், ஆங்கில அறிவியல் நூல்களில் கூட glossary என்று ஒட்டு மொத்தமாக நூலின் இறுதியில் தான் பொருள் விளக்கம் தருவதைப் பார்க்கலாம். அங்கு பொருள் தெரியாவிட்டால், கடைசிப்பக்கத்தைப் புரட்டிப் பார்த்து தான் ஆக வேண்டும். அது போல் நாமும் பொருள் தெரியாவிட்டால் விக்சனரியையோ துணைக்கட்டுரையையோ பார்க்கத் தூண்டலாம். கலைச்சொற்களைக் கொண்டு எழுதுவோர் உடனுக்குடன் விக்சனரிகளில் அச்சொற்களைச் சேர்த்து விளக்கம் தந்து அதற்கு இங்குள்ள கட்டுரைகளில் இருந்து இணைப்பு தரலாம். விக்சனரி பக்கங்களில் தான் ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழியிலும் விளக்கங்கள் தரலாமே? தவிர, ஒவ்வொரு தமிழ் விக்கி கட்டுரைத் தலைப்புக்கு இணையான ஆங்கிலச் சொல்லையும் முதற்பத்தியிலும் விக்கியிடை இணைப்புகளிலும் காண இயலுமே? இதன் மூலமும் இணையான ஆங்கிலச் சொற்களை அறிந்து கொள்ளலாம்.

பொதுவாக, அறிவியிலில் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து நன்கு அறிவேன். இங்கு ducth, german மொழிகளில் முனைவர் பட்ட ஆய்வறிக்கையே எழுதுகிறார்கள் என்றாலும் உலக அளவில் தங்கள் ஆய்வுகளை முன்வைக்கும்போது ஆங்கிலம் வழியே வைக்கிறார்கள். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் தங்கள் கருத்தை பிற மொழியினருக்கு வெளிப்படுத்தவே ஆங்கிலத்தின் துணையை நாடுகிறார்கள். மற்றபடி அவர்கள் சிந்தனை, தத்தம் மொழியினருடனான உரையாடல் யாவும் தத்தம் மொழி வாயிலாகவே முழுக்க இருக்கிறது. தத்தம் மொழி நூல்கள், அறிக்கைகளில் ஆங்கிலத்தைக் கலந்து அடிப்பதில்லை. இரு மொழி வழி சிந்தனைகளையும் தனித்தனியாகவே கற்றுக் கொள்கிறார்கள். என்னுடைய டச்சு நாட்டுப் பேராசிரியருக்கு குறிப்பிட்ட கருத்துக்கான ஆங்கிலச் சொல் தெரியாவிட்டால் அதைக் குறித்து அவர் எந்த விதக் கவலையும் அவமானமும் கொள்வதில்லை. எவ்வளவு பெரிய கருத்தரங்கானாலும, சிறிதும் தயக்கமின்றி, அதைத் தனக்கு ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை என்று சொல்லித் தெரிந்தவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறார். நாமோ ஆங்கிலத்தில் ஒன்றைச் சொல்லத் தெரியாவிட்டால் தலையே போனது போல் அவமானமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கும் அளவுக்கு ஆங்கிலச் சார்பு இருக்கிறது. பிற நாட்டவருக்கு ஆங்கிலத்தின் துணையின்றி பிற மொழியினருக்கு மட்டுமே தங்கள் கருத்தை வெளிப்படுத்தத் தெரியாது. ஆனால், நமக்கோ ஆங்கிலத்தின் துணையின்றி சிந்திக்கவே இயலாது என்று நிலையில் இருக்கிறோம். அறிவியலுக்கு ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழி அல்லது பொது மொழி என்று சொல்வதற்கும் ஆங்கிலமே முதல் மொழி என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தற்போது தமிழகத்தில் அறிவியல் சிந்தனைகளுக்கு ஆங்கிலம் இன்றி இயலாது என்ற அளவுக்கு ஆங்கிலத்தை அறிவியலுக்கான முதல் மொழியாக வைத்திருக்கிறோம. இதன் விளைவே தமிழ்க் கலைச்சொற்கள் நிறைந்த கட்டுரைகளைப் புரிந்து கொள்ள முடியாத நிலை.

ஆங்கில விக்கிபீடியாவில் நான் படிக்கும் பல அறிவியல் கட்டுரைகளிலும் உள்ள கலைச்சொற்களைக் கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை தான். ஆனால், அவ்வேளை அது தொடர்பாக துணைக்கட்டுரைகளைப் படித்துப் புரிந்து கொள்கிறேன். அல்லது, அகரமுதலிகளைப் புரட்டிப் பார்க்கிறேன். ஆனால், தமிழ்க்கலைச்சொற்களைப் புரிந்து கொள்ள மட்டும் இதே அணுகுமுறையைக் கைக்கொள்ளாமல் பக்கத்தில் ஆங்கிலம் இருந்தால் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கத் தூண்டுவது ஆங்கிலத்தின் மீதான அதீத தேவையற்ற சார்பு தான்.

ஆங்கில விக்கிபீடியா எப்படி ஆங்கிலம் வழி புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான ஆக்கமோ அது போல் தமிழ் விக்கிபீடியா என்பது தமிழ் வழி புரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கான ஆக்கம். புதிய ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ள நாம் முன்வருவது போல் புதிய தமிழ்ச் சொற்களைக் கற்றுக் கொள்ளத் தான் வேண்டும். முழுக்கத் தமிழ் வழி பயின்ற வாசகருக்கே நம் கலைச்சொற்கள் புரியாவிட்டால், தகுந்த உதவிக் கட்டுரைகளைத் தமிழில் ஆக்குவோம். இல்லை, புரிகிற மாதிரி கலைச்சொல்லை மாற்றுவோம். கூடவே, ஆங்கிலத்திலும் தந்தால் புரிந்து கொள்ள வசதியாக இருக்குமே என்ற மனப்பாங்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன் நம்முடைய இலக்காக இருக்கும் வாசகர்கள் யார் என்பது குறித்த தெளிவு முக்கியம். பில்லியன் கணக்கில் சீனர்கள் இருப்பதால் அவர்கள் புரிந்து கொள்ள வசதியாக ஆங்கில விக்கிபீடியாவில் அடைப்புக்குறிகளில் சீனச் சொற்களைத் தருவதில்லை. அது போலவே, ஆங்கிலம் அறிந்த பல தமிழர்கள் இருக்கிறார்கள் என்று அவர்கள் வசதிக்காக அடைப்புக்குறிகளில் ஆங்கிலம் தேவை இல்லை. --Ravishankar 14:05, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ரவியின் கருத்து மிகவும் ஆரோக்கியமானது. அவர் தந்த தீர்வுகளை ஆமோதிக்கிறேன். --Natkeeran 14:27, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]
இவ்வளவு உரையாடலுக்குப்பிறகு கருத்துக்கள் தெளிவாயின. எல்லோருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றியும்.--Profvk 14:45, 23 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]