பேச்சு:அல்லைப்பிட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்லைப்பிட்டியின் கதை - ஷோபாசக்தி[தொகு]

" வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்! " -அல் குர் ஆன்

என்னைப் புதியவர்கள் சந்திக்கும் போது சிலர் "ஊரில எவ்விடம்?" எனக் கேட்பதுண்டு. நான் "அல்லைப்பிட்டி" என்பேன். அநேகமாக அவர்களில் பெரும்பாலானோருக்கு அல்லைப்பிட்டியைத் தெரிந்திருக்காது. அந்தச் சின்னஞ் சிறிய மணற் கிராமத்தின் பெயரைக் கடந்த சில தினங்களாகச் சர்வதேச ஊடகங்கள் விடாமல் உச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இணையத்தளங்களின் முகப்பில் என் கிராமத்தின் இரத்தம் வடிந்துகொண்டேயிருக்கிறது.

யாழ் நிலப்பரப்பையும் லைடன் தீவையும் பண்ணைத் தாம்போதி இணைக்கிறது. பரவைக் கடலுக்குள்ளால் போடப்பட்ட இப் பாதை அண்ணளவாக மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளமுடையது. இத் தாம்போதியின் அந்தலையில் அல்லைப்பிட்டிக் கிராமம் ஆரம்பிக்கிறது. அல்லைப்பிட்டி வரண்ட பூமி. நன்னீர் சில குறிச்சிகளில் மட்டுமே கிடைக்கும். கிராமத்தின் பெரும் பகுதி மணற் திட்டிகளைக் கொண்டது. அல்லைப்பிட்டியின் மேற்குத் திசையில் மண்கும்பான் கிராமம் இருக்க, கிராமத்தின் மற்றைய மூன்று திசைகளையும் கடல் சூழ்ந்திருக்கும்.

யுத்தத்திற்கு முன்பாக அல்லைப்பிட்டியில் 220 குடும்பங்கள் வரையில் வாழ்ந்தார்கள்.1977 பொதுத்தேர்தலின் போது கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தொகை 940 ஆக இருந்தது. கிராமத்தில் சரி பாதித் தொகையினர் தலித்துக்கள். பதினைந்து குடும்பங்கள் முக்குவ சாதியினர். இரு முசுலீம் குடும்பங்கள் புலிகளால் துரத்தப்படும் வரை கிராமத்தின் ஓரமாக வயல் வெளிகளுக்குள் வசித்தார்கள். கிராமத்தின் மிகுதிப் பேர் வெள்ளாளர்கள்.

வெள்ளாளக் குடியிருப்பையும் தலித்துக்களின் குடியிருப்புப் பகுதியையும் கிராமத்தின் ஒரேயொரு தார்ச்சாலை நிரந்தரமாகப் பிரித்து வைத்திருந்தது. தலித்துக்களின் குடியிருப்பில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் அய்ந்தாம் வகுப்புவரை நடந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூடப்பட்டு விட்டது. வெள்ளாளக் குடியிருப்பில் "பராசக்தி வித்தியாலயம்" என்றொரு பாடசாலையுள்ளது. அங்கே பத்தாம் வகுப்புக்கள் வரை நடைபெறுகின்றன. அதற்கு மேல் படிக்கவேண்டுமெனில் வேலணைக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ தான் போகவேண்டும்.

கிராமத்தின் 90 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். தலித் மக்களின் தொழிலாகக் கள்ளிறக்குதலும் மீன்பிடியும் இருந்தன. வெள்ளாளர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகளாகவோ மண் அள்ளும் கூலிகளாகவோ இருந்தார்கள். ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ தன்னும் தந்திராத சபிக்கப்பட்ட கிராமமது.

அல்லைப்பிட்டிக்குள் 1978ல் தான் பேருந்து வந்தது (350 வழித்தடம்). 1981 ல் தான் அல்லைப்பிட்டிக்கு மின்சாரம் வந்தது. வறுமையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்த மக்களிடையே 1984ல் முதலாவது வெடி விழுந்தது. மீனவரான அருமைநாயகம் கடற்கரையில் நின்றிருந்த போது சிறிலங்காப் படையினர் உலங்கு வானுர்தியிலிருந்து சுட்டனர். அருமைநாயகம் அவ்விடத்திலேயே மரணமானார். 1986ல் அல்லைப்பிட்டியில் சிறிலங்கா விமானம் குண்டு வீசியதில் ஞானமலர் அந்தோனி என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். இவை இரண்டும் வான்வழித் தாக்குதல்கள். சிறிலங்காப் படையினரின் கொலைப் பாதங்கள் 1990வரை அல்லைப்பிட்டி மண்ணிற் படவில்லை. முதன்முதலாகப் படையினரின் பாதங்கள் அங்கே பட்டபோது அவை என் கிராமத்து மனிதர்களின் உதிரச்சகதியில் நடந்தே வந்தன.

1990 யூன் மாதம் யாழ் கோட்டையிலிருந்த பெருந்தொகையான இராணுவத்தினரும் பொலிஸாரும் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டனர்.இக் கடுமையான முற்றுகை மாதக் கணக்கில் நீடித்தது. கோட்டைக்குள் சிக்கியிருந்த படையினருக்கு உணவோ, மருந்துகளோ, ஆயுதங்களோ வழங்க முடியாமல் சிறிலங்கா அரசு தவித்துக்கொண்டிருந்தது. கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் உக்கிரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். எக்கணத்திலும் கோட்டை புலிகளின் கைகளில் வீழ்ந்து விடலாம் என்ற நிலையில், ஓகஸ்ட் மாதம் 21ம் நாள் சிறிலங்கா அரசு பெருமளவு மீட்புப்படையினரை ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் லைடன் தீவில் தரையிறக்கம் செய்தது.

லைடன் தீவின் ஊறாத்துறையில் தரையிறக்கப்பட்ட மீட்புப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அல்லைப்பிட்டியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, லைடன் தீவில் நிலைகொண்டிருந்த புலிகள் பின்வாங்கிக் கொண்டிரு ந்தார்கள். மீட்புப் படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிவிட்டால் பின் அவர்களுக்கும் கோட்டைக்கும் இடையில் மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளம் மட்டுமேயுள்ள -புலிகளின் ஆதிக்கமற்ற- ஆழங்குறைந்த பரவைக் கடற்பரப்பு மட்டுமேயிருக்கும். ..... .... .. ஷோபாசக்தி 22.05.2006

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்[தொகு]

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 00:49, 14 மே 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அல்லைப்பிட்டி&oldid=140211" இலிருந்து மீள்விக்கப்பட்டது