மனிதத் தகவல் கொண்ட விலங்குகள் (ஆய்வுத்திட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித தகவலைக் கொண்ட விலங்குகள் (Animals Containing Human Material) (ஆய்வுத்திட்டம்) என்பது மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில், மனிதனின் தகவல்கள் மனிதனற்ற விலங்குகளில் இணைக்கப்படுவது அல்லது பயன்படுத்தப்படுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுத் திட்டமாகும். இத்திட்டம் Sciencewise Export Resource Centre (Sciencewise-ERC)[1] இன் நிதியுதவியுடன்[2] ஐக்கிய இராச்சியத்தின் மருத்துவ அறிவியல் கழகத்தினரால் நிருவகிக்கப்படுகிறது[3][4]. 'மனித தகவல்களை விலங்குகளில் பயன்படுத்தல்' என்னும்போது மனிதனின் மரபியல் தகவல்களைக் கொண்ட டி.என்.ஏ அல்லது உயிரணு, அல்லது இழையம் போன்றனவற்றை, புதிய உயிரித் தொழினுட்பம் மூலம், மனிதனற்ற விலங்குகளில் பயன்படுத்தலைக் குறிக்கும். அப்படிப் பயன்படுத்தும்போது அந்த விலங்குகள் மனிதரின் கூறுகளைக் கொண்டிருப்பதனால் அவற்றை மனித தகவல் கொண்ட விலங்குகள் (ACHM - Animal Containing Human Material) எனலாம். இவ் வகையான அறிவியல் ஆய்வுகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும் இவை ஆபத்தானவையாக இருக்கக் கூடும் என்றும், எதிர்காலத்தில் இவ்வகையான ஆய்வுகள் இயற்கை சமநிலையில் குழப்பங்களை ஏற்படுத்தி, மனிதருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும் என்றும் கருத்துக்கள் நிலவி வருவதனால், இவ்வகையான ஆய்வுகள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் அறிந்து, இது தொடர்பில் தகுந்த ஒரு நடைமுறையைப் பரிந்துரை செய்வதே இந்தத் திட்டமாகும்.
இத்திட்ட ஆய்வறிக்கையானது பேராசிரியர் மார்ட்டின் பொப்ரோவை (Martin Bobrow) தலைவராகக் கொண்ட ஒரு ஆய்வுக்குழுவினால் தயாரிக்கப்பட்டு, ஜூலை 2011 இல் வெளியிடப்பட்டது[4]

திட்டத்தின் நோக்கம்[தொகு]

மனிதரில் இருக்கும் மரபியல் தகவல்களைக் கொண்ட கூறுகள் மனிதனல்லாத விலங்குகளில் பயன்படுத்தும்போது, அது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதா, அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உள்ளதா, அப்படி ஏற்றுக் கொள்ளலாம் எனில் அதற்குரிய எல்லை அல்லது வரையறை என்ன போன்ற விடயங்களை ஆராய்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்[5].

மனிதரில் இருக்கும் தகவல்கள் கொண்ட பொருட்களை, வேறு விலங்குகளில் பயன்படுத்தும்போது, அது தொடர்பில் பொதுமக்களின் கருத்தும் பெறப்பட வேண்டும் என்பது இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்களுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்தி, அதன் மூலம் தற்போதும், எதிர் காலத்திலும் இவ்வகையான ஆய்வுகள் செய்வதில் அவர்களில் பெரும்பாலோரின் கருத்துக்களை அறிவதும், அது தொடர்பில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, அல்லது கவலைக்கு மதிப்பளித்தலும், இது தொடர்பில் கருத்திணக்கம், கருத்து வேறுபாடுகள், மற்றும் நிச்சயமற்றதன்மை நிலவும் இடங்களை கண்டுகொள்ளலும், இறுதியில் இது தொடர்பில் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய, சட்டரீதியாக சரியாக இருக்கக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்[3].

திட்டக்குழு[தொகு]

வெவ்வேறு ஆய்வுப் துறைகளிலும் இருந்து ஆய்வாளர்கள் இக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். மரபியல், நரம்பியல், கால்நடை மருத்துவம், உயிரியல்சார் அறவியல் (bioethics), சட்டம் போன்ற பல துறை வல்லுநர்கள் இத்திட்ட ஆய்வில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்கள் அறிவியல், சமூகம், அறவியல், பாதுகாப்பு, சட்டம், ஒழுங்குபடுத்தல் என்பவற்றை கருத்தில்கொண்டு தமது ஆய்வுகளை மேற்கொண்டனர். இக்குழுவின் தலைவராக Martin Bobrow CBE FRS FMedSci என்பவர் இருந்தார். இந்த ஆய்வுத்திட்டத்திற்கான எண்ணக்கரு அறிவியல் சமூகத்திலிருந்தே ஆரம்பித்ததாகவும், அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைத்ததாக குழுத்தலைவர் தெரிவித்திருந்தார்.[6][7][8]

திட்ட வழிமுறை[தொகு]

மனிதத் தகவல் கொண்ட விலங்குகளை உருவாக்குவது தொடர்பில் பொது மக்களுடனான கலந்துரையாடல்களைச் செய்வதற்கான பயிலரங்குகள் அல்லது பட்டறைகளை நடத்தல், இது தொடர்பில் ஆர்வமுள்ளவர்கள், தொடர்புள்ளவர்களை நேர்காணல் செய்தல் போன்ற வழிமுறைகளை இவர்கள் இத்திட்டத்தில் பயன்படுத்தினர்.

'மனித தகவல் கொண்ட விலங்கு' ஆய்வுகள்[தொகு]

அறிவியல் அல்லது மருத்துவ ஆய்வுகளை இலகுவாக்கவும், செம்மைப்படுத்தவும், விலங்குகளில் மனித தகவல்கள் டி.என்.ஏ வடிவில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகையில் உருவாக்கப்படும் விலங்கு மாதிரிகள் (animal models) மனித நோய்களை சரியான முறையில் பிரதிநிதித்துவம் செய்வதனால், நோய் தொடர்பான மேலதிக அறிவைப் பெறுவதற்கும், புதிய, சிறந்த சிகிச்சை முறைகளை உருவாக்கவும் மிகவும் உதவியாக இருக்கின்றன. ஆனாலும் இந்த ஆய்வுகள் சிக்கலானதாகவும் (complex), உணர்வெழுச்சி சார்பானவையாகவும் (sensitive) இருக்கின்றன[9].

டெளன் நோய்க்கூட்டறிகுறி[10], எலும்புப்புரை, புற்றுநோய் போன்ற நோய்கள் பற்றிய அறிவிற்காக மனிதரில் இருந்து எலிகளுக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. மனிதரில் ஏற்படும் குழலியக்குருதியுறைமை என்ற ஒழுங்கின்மைக்கான தீர்வாக பயன்படுத்தப்படும் எதிர்-துரொம்பின் (anti-thrombin) எனும் புரதம் உருவாக்குவதற்கு ஆடுகளில் மனித மரபணுக்கள் மாற்றம் செய்யப்பட்டன. நடுக்குவாதம் பற்றிய தெளிவான அறிவைப் பெற, குரங்குகளில் மனிதரின் மூளை குருத்தணுக்கள் பதியம் செய்யப்பட்டது. மாறிவரும் நிலைமைகளுக்கேற்ப, ஏற்கனவே பரந்தளவில் இவ்வகையான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. மலட்டுத்தன்மை, எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி போன்ற நோய்களை எதிர்த்து புதிய சிகிச்சைகள் அல்லது மருந்துகளை உருவாக்க இவ்வகை ஆய்வுகள் உதவுகின்றன.[11]

மனித உயிரணுக்கள், பொதுவாக குருத்தணுக்கள், நேரடியாக விலங்குகளினுள் செலுத்தப்படும் தொழினுட்பம் மிக வேகமாகப் பிரபலமாகி வருகின்றது. அண்மைக் காலங்களில் இவ்வகைத் தொழில்நுட்பத்தால் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை கொண்ட எலிகள், மனிதனின் கல்லீரலின் 95% கொண்ட எலிகள் உருவாக்கப்பட்டுள்ளன[12][13][14][15]. மனிதரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான இன்சுலினைப் பெறுவதற்காக, மனிதனின் கணையத்தில் உள்ள இலங்ககான் சிறுதீவுகள் (Islets of Langanhans) சுரப்பி உயிரணுக்கள் எலிகளினுள் பதியப்பட்டது[15].

மனித மரபுத் தகவல்கள் மாற்றப்படும் விலங்கு மாதிரிகளாக எலி, ஆடு, வளர்ப்புச் செம்மறியாடு, பன்றி, குரங்கு போன்ற விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆய்வு முடிவுகள்[தொகு]

மனித தகவல்கள் ஏனைய விலங்குகளில் சேர்க்கப்படுவது தொடர்பில் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்கு இந்த ஆய்வு பல விடயங்களை விளக்கியுள்ளது. மருத்துவ முன்னேற்றத்திற்காக, மருத்துவ உயிரியல் ஆய்வுகளில் மனித தகவல்கொண்ட விலங்குகள் உருவாக்கப்படும் அணுகுமுறை அதிகரிப்பது முக்கியமானதுபோலவே, அவ்வகையான ஆய்வுகள், மக்கள்நலன் தொடர்பில் உணர்வுபூர்வமான அக்கறையை மக்கள்மத்தியில் உருவாக்கியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும் என்று இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

இது தொடர்பில் தமது கருத்தைத் தெரிவிக்கக்கூடிய வல்லுநர்களையும், சாதாரண மக்களையும் ஒன்றிணைத்து ஒரு முடிவுக்கு வரவேண்டி இருந்தது. மனிதனின் மூளை குருத்தணுக்கள் மனிதனல்லாத ஒரு முதனி விலங்கினுள் சேர்க்கப்படுமிடத்து, பல மனித நடத்தைகளையும், விழிப்புணர்வையும் கொண்ட மனிதன்-போன்ற (human-like) உயிரினங்கள் உருவாகும் சாத்தியம் ஏற்படும். மனித இனப்பெருக்க உயிரணுக்கள் கொண்ட விலங்குகள் உருவாகுமிடத்து, மனித-விலங்கு கலப்பினங்களும் (hybrid) உருவாகலாம். எனவே. இந்த ஆய்வுகள் தொடர்பில் சில நெறிமுறைகள் அவசியம் எனக் கருதப்பட்டது. இந்த ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டுமா என்பது ஆழமாக மீளாய்வு செய்யப்படவேண்டிய ஒன்று எனத் தீர்மானிக்கப்பட்டது. அரசாங்கம் இதற்காக ஒரு விசேடமான செயற்குழுவை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதப்பட்டது[15].

விலங்குகளினுள் மனித மரபணுக்கள் சேர்க்கப்படுவது பொதுவாக பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்படும் ஒன்றாக இருந்தபோதிலும், குருத்தணு மாற்றம் செய்யும் தொழினுட்பம் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை[15]. திட்டக்குழுவினால் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வு முடிவுகளும், பரிந்துரைகளும், ஆய்வுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகளும் பொது மக்களாலும், ஆய்வாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றாக இருக்குமென நம்பப்படுகின்றது.

குழுவின் பரிந்துரைகள்[தொகு]

ஆய்விற்கான எதிர்வினைகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

Lab times, News for the European Life Sciences பரணிடப்பட்டது 2011-10-20 at the வந்தவழி இயந்திரம் [15]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sciencewise-ERC Presentation[தொடர்பிழந்த இணைப்பு]
  2. InterAcademyMedicalPanel[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "Sciencewise Expert Resource Centre". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2011-10-08.
  4. 4.0 4.1 The Academy of Medical Sciences
  5. "Reuters". Archived from the original on 2012-09-07. பார்க்கப்பட்ட நாள் 2011-10-08.
  6. "Laboratorytalk". Archived from the original on 2009-12-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-09.
  7. Genomeweb
  8. "DocuBase Article:UK: Animals Containing Human Material, Docuticker.com". Archived from the original on 2011-08-23. பார்க்கப்பட்ட நாள் 2011-10-09.
  9. King's College London
  10. the guardian
  11. Understanding Animal research[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Mouse Gets Human Liver, LiveScience
  13. Bissig KD, Wieland SF, Tran P, Isogawa M, Le TT, Chisari FV, Verma IM. (March 2010). "Human liver chimeric mice provide a model for hepatitis B and C virus infection and treatment." (Free full text). The Journal of Clinical Investigation 120 (3): 924-30. doi:10.1172/JCI40094.. பன்னாட்டுத் தர தொடர் எண்:1544-9173. http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2827952/?tool=pubmed. 
  14. Chimeric Mouse Developed to Test Human Liver Disease பரணிடப்பட்டது 2011-06-24 at the வந்தவழி இயந்திரம், InsideSalk
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 Lab times, News for the European Life Sciences Humanimal. 14th September 2004. பக். 8. http://www.labtimes.org/labtimes/about/index.html Lab times, News for the European Life Sciences. பார்த்த நாள்: 2011-10-09.