கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல்
சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் பகுதி

ஆங்கிலக் கால்வாய்
நாள் ஆகஸ்ட் - நவம்பர், 1944
இடம் பிரான்சு மற்றும் பெல்ஜியம்
நேச நாட்டு வெற்றி
பிரிவினர்
 கனடா
 ஐக்கிய இராச்சியம்
 போலந்து
 பிரான்சு
செக்கஸ்லோவாக்கியா
 பெல்ஜியம்
 நெதர்லாந்து
 ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
கனடா ஹாரி செரார் நாட்சி ஜெர்மனி கஸ்டாவ்-அடால்ஃப் வான் சாங்கன்

கால்வாய்க் கடற்கரையை விடுவித்தல் (Clearing the Channel Coast) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நடந்த ஒரு போர் நடவடிக்கை. இதில் கனடியப் படைகள் பிரான்சு மற்றும் பெல்ஜியம் நாடுகளின் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை நாசி ஜெர்மனியின் பிடியில் இருந்து மீட்டன. இது சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியாகும்.

நேச நாட்டுப் படைகள் ஜூன் 1944ல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீது படையெடுத்தன. ஆங்கிலக் கால்வாயை ஒட்டியிருந்த நார்மாண்டிப் பகுதியை முதலில் கைப்பற்றின. சில மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் நார்மாண்டி பாலமுகப்பிலிருந்து (bridgehead) ஜெர்மானியப் படைநிலைகளை உடைத்து பிரான்சின் பிற பகுதிகளுக்கு முன்னேறத் தொடங்கின. அவற்றுள் ஒரு பகுதியான கனடிய 1வது ஆர்மிக்கு ஆங்கிலக் கால்வாயோரமாக இருந்த துறைமுகங்களைக் கைப்பற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இத்துறைமுகங்கள் பிரான்சில் தரையிறங்கியிருந்த நேசநாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாடங்களை இறக்குமதி செய்யத் தேவைப்பட்டன. இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய பீரங்கிக் குழுமங்கள் கால்வாயில் செல்லும் நேசநாட்டுக் கப்பல்களையும், இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்தையும் தாக்கி வந்தன. மேலும் இப்பகுதியிலிருந்த ஜெர்மானிய வி-1 எறிகணைத் தளங்கள் இங்கிலாந்து நகரங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தி வந்தன. இக்காரணங்களால் ஆங்கிலக் கால்வாய்க் கடற்கரையை ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது அவசியமானது.

ஆகஸ்ட் 23ம் தேதி, கனடிய 1வது ஆர்மிக்கு கால்வாய்க் கரையை மீட்க உத்தரவிடப்பட்டது. நார்மாண்டியில் இடையறாது நடைபெற்றிருந்த சண்டையால் ஜெர்மானியப் படைகள் பெரிதும் பலவீனப்பட்டிருந்தன. எனவே முதலில் கனடியப் படைகளின் முன்னேற்றதை அவை எதிர்க்கவில்லை. மெதுவாக பெல்ஜியத்தை நோக்கி பின்வாங்கத் தொடங்கின. ஆகஸ்ட் இறுதி வாரத்தில் ஜெர்மானிய 15வது ஆர்மியை செய்ன் ஆற்றுக்கும் ஆங்கிலக் கால்வாய்க்கும் இடையே சுற்றி வளைக்க நேசநாட்டுப் படைகள் முயன்றன. ஆனால் அப்படை சுதாரித்து ஆற்றைக் கடந்து தப்பி விட்டது. ஆகஸ்ட் 31ல் நேசநாட்டுப் படைகள் செய்ன் ஆற்றைக் கடந்து செப்டம்பர் 1ம் தேதி டியப் துறைமுகத்தை அடைந்தன. அதனை நேரடியாகத் தாக்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கின. ஆனால் டியப்பிலிருந்த ஜெர்மானியப் படைகள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் நகரைக் காலி செய்து விட்டு பின்வாங்கின. டியப் நகரம் எதிர்ப்பின்றி நேச நாடுகள் வசமானது.

ஜெர்மானியப் படைகள் பின் வாங்குவதை அறிந்த ஹிட்லர் கால்வாய்க் கரையோரமாக இருந்த துறைமுகங்கள் அனைத்தையும் “கோட்டைகள்” என அறிவித்தார். அவற்றில் உள்ள ஜெர்மானியப் படைகள் சரணடையவோ காலி செய்யவோ கூடாதென்று உத்தரவிட்டார். இதனால் கனடியப் படைகள் அடுத்து அணுகிய துறைமுகங்கள் சரணடைய மறுத்து அவைகளை எதிர்த்துப் போரிட்டன. செப்டம்பர் முதல் வாரத்தில் வி-1 எறிகணைத் தளங்களை அடைந்த நேசநாட்டுப் படைகள் அவற்றை அழித்தன. இதனால் இங்கிலாந்து நகரங்கள் மீதான எறிகணை வீச்சு குறைந்தது.

செப்டம்பர் 12ம் தேதி 48 மணி நேர சண்டைக்குப் பின்னர் லே ஆவர் துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இதே போல பொலோன் துறைமுகமும் சரணடையவில்லை. செப்டம்பர் 5ம் தேதி இதனை அடைந்த கனடியப் படைகள் துறைமுகத்தை முற்றுகையிட ஒரு பகுதி படைகளை விட்டு விட்டு தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்ந்தன. பொலோனின் அரண்நிலைகள் பலம் வாய்ந்தவை என்பதால் நிதானமாகத் திட்டமிட்டு செப்டம்பர் 17ம் தேதி அதனைக் கைப்பற்றும் தாக்குதலைக் கனடியப் படைகள் தொடங்கின. ஐந்து நாட்கள் சண்டைக்குப் பின் பொலோன் வீழ்ந்தது. அடுத்து கலே துறைமுகத்தைக் கைப்பற்றுவதற்கான சண்டை செப்டம்பர் 22ம் தேதி துவங்கியது. அக்டோபர் 1ம் தேதி கலே நேசநாட்டுப்படைகள் வசமானது. இது போல பிரான்சின் பல துறைமுகங்களைக் கைப்பற்றினாலும், நேசநாட்டுப் படைகள் டன்கிர்க் நகரை மற்றும் தாக்காமல் விட்டுவிட்டன. அதனைச் சுற்றி வளைத்து முற்றுகை மட்டும் இட்டுவிட்டன. மே 1945ல் போர் முடியும் வரை டன்கிர்க் துறைமுகம் சரணடையவில்லை.

பிரான்சின் கடற்கரைப் பகுதிகள் மீடகப்பட்டவுடன் பெல்ஜியத்தின் துறைமுகங்களை நோக்கி கனடியப் படைகள் முன்னேறின. ஓஸ்டெண்ட் நகரம் ஹிட்லரின் பாதுகாக்கப்படவேண்டிய கோட்டைகள் பட்டியலில் இடம் பெறாததால், அதிலிருந்த ஜெர்மானியப் படைகள் துறைமுக கட்டமைப்புகளை அழித்து விட்டுப் பின் வாங்கின. அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெல்ஜியத்தில் பெரும் துறைமுகமான ஆண்ட்வெர்ப் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியில் கனடியப்படைகள் ஈடுபட்டிருந்தன. நவம்பர் முதல் வாரம் கால்வாய்க் கரையை விடுவிக்கும் நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

இந்த நடவடிக்கையில் பல துறைமுகங்கள் விடுவிக்கப்பட்டாலும், அவற்றைக் கொண்டு நேசநாட்டு தளவாடத் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. லே ஆவர், பொலோன், கலே, ஓஸ்டெண்ட் ஆகிய துறைமுகங்களை ஜெர்மானியப் படைகள் சேதப்படுத்தியிருந்ததால் அவற்றை உடனடியாக சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை. நவம்பர் மாத இறுதியில் ஆண்ட்வெர்ப் துறைமுகம் திறக்கப்பட்ட பின்னரே தளவாடப் போக்குவரத்து நெருக்கடி குறைந்தது.