அதிதைராய்டியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Hyperthyroidism
Triiodothyronine (T3, pictured) and thyroxine (T4) are both forms of thyroid hormone.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E05.
ஐ.சி.டி.-9242.9
நோய்களின் தரவுத்தளம்6348
மெரிசின்பிளசு000356
ஈமெடிசின்med/1109
பேசியண்ட் ஐ.இஅதிதைராய்டியம்
ம.பா.தD006980

தைராய்டு சுரப்பியில் அதிக செயல்பாடுடன் விளங்கும் திசு அதிதைராய்டியம் அல்லது மிகை‌ தைராய்டு நிலை என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக தைராய்டு நொதிகளான தைராக்சின் (T4), டிரைஅயோடோதைரோனின்(T3) அல்லது இரண்டுமே அதிகமாக உருவாக்கப்பட்டு, சுற்றோட்டத்தில் அதிகப்படியாக இருக்கும். உடம்பில் உள்ள ஏறக்குறைய அனைத்து செல்களிலும் பாதிப்பு ஏற்படுத்துவதால் செல் அளவில் தைராய்டு நொதி மிகவும் முக்கியமானது.

வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்த ஒரு தூண்டுகோலாக தைராய்டு நொதி செயல்படுகிறது மற்றும் செல்களின் சாதாரண செயல்பாடுகளுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். கூடுதலாக, இது வளர்சிதை மாற்றத்தை அதிகப்படியாக தூண்டுகிறது மற்றும் பரிவு நரம்பு மணடல (sympathetic nervous system) தாக்கத்தை அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக, எபினெஃப்ரின் (அட்ரினலின்) அளவு அதிகமாகக் காணப்படும் அறிகுறிகளையும் மற்றும் பல்வேறு உடல் இயக்கங்களின் வேகத்தையும் அதிகரிக்கின்றது. இவற்றில் வேகமான இதயத் துடிப்பு, படபடப்பு(palpitations), நரம்பு மண்டல நடுக்கம் மற்றும் கலக்கத்தின் அறிகுறி, ஜீரண மண்டல செயலாற்றல் அதிகரித்தல் (வயிற்றுப் போக்கு) மற்றும் எடை குறைதல் ஆகியவை அடங்கும்.

மற்றொரு பக்கத்தில், செயல்பாடு அற்ற தைராய்டு திசுக்கள் இருத்தல் தைராய்டு நொதி குறைபாடை உருவாக்குகிறது. இது தாழ்தைராய்டியம் என்று அழைக்கப்படுகிறது.

குறிகள் மற்றும் அறிகுறிகள்[தொகு]

முக்கியமான மருத்துவ குறிகளில் எடை குறைதல் (அதிகப்படியாக பசி எடுத்தலோடு கூடி), கலக்கம், சூடு தாங்க முடியாத நிலை, முடி கொட்டுதல், சதை வலி, வலிமை குறைதல், சோர்வு, அதீதசெயல்பாடு, எரிச்சல், உணர்ச்சியற்ற நிலை, மனச் சோர்வு, அதிகமாக சிறுநீர் கழித்தல், அதிகமான தாகம், சித்தப்பிரமை, நடுக்கம், தோல்வறட்சி வீக்கம் மற்றும் வியர்த்தல் ஆகியவை அடங்கும். கூடுதலாக, நோயாளிகளுக்கு, படபடப்பு மற்றும் குருதி ஓட்டக் குறை (குறிப்பாக ஏட்ரியல் குறு நடுக்கம்), சுவாசக் குறைபாடு (டிஸ்பினியா), லிபிடோ குறைபாடு, வாந்தி வரும் உணர்வு, வாந்தி வருதல் மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பல அறிகுறிகளும் இருக்கும். வெகு நாட்களாக சிகிச்சை அளிக்கப்படாத அதி தைராய்டியம் எலும்புப்புரையை உருவாக்கலாம். வயதானவர்களில், இது போன்ற முக்கிய அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம்.

நரம்பு பிரச்சனைகளில் நடுக்கங்கள், தசை வலிப்பு நோய், தசை அழிவு மற்றும் சில எளிதில் பாதிப்படையக்கூடிய நபர்களுக்கு (குறிப்பாக ஆசிய மக்களில்) அவ்வப்போது வாதமும் இருக்கலாம். தைராய்டு வியாதி மற்றும் தசைக் களைப்புக்கும் உள்ள சம்மந்தம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ள தைராய்டு நோய் இயல்பாக தன்னுடல் தாங்கு திறனோடு இருக்கிறது மற்றும் தசைக்களைப்பு உள்ளவர்களில் தோராயமாக 5% மக்களுக்கு அதிதைராய்டியமும் உள்ளது. தசைக்களைப்பு தைராய்டு சிகிச்சைக்குப் பிறகு மிக அரிதாக சீராகிறது. மேலும், இவ்விரண்டிற்கும் உண்டான உறவு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. பெருமூளை மாற்று கட்டி, அமியோடிராஃபி சார்ந்த வெளிப்புற விழிவெண்படலம் மற்றும் கில்லியன் பேரே போன்ற நோய்க்குறித்தொகுப்பு ஆகியவை தைர நச்சியத்தோடு தொடர்புடைய மிக அரிதான சில நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஆகும்.

கண் இமைகள் விலகுதல் (“முறைத்தல்”), அதிகப்படியான விழி சதை சோர்வடைதல் மற்றும் இமை இயக்க வேகக் குறை ஆகியவை எந்த வகை அதிதைராய்டியத்துடனும் காணப்படும் விழியின் சிறிய பிரச்சனைகள். அதிதைராய்டினால் ஏற்படும் முறைத்தல் (டால்ரிம்பிள் குறியீடு) என்பதில், கண் இமைகள் சாதாரணமானதை விட மேற்புறமாக சற்று அதிகமாக விரிவடையும்.(என்பது மேற்புறத்தில் உள்ள “கருவிழியின் மேல் விளிம்பின் அருகில் வெண்படலம் தொடங்கும் இடமான கார்னியோ ஸ்கிலீரல் லிம்பஸில் இருப்பது தான் சாதாரண நிலை). அதிகமான விழித்திரை தசை பலவீனம் இரட்டை பார்வையை உருவாக்கலாம். இமை வேகக் குறையில், (வான் க்ரேஃப்ஸ் குறி), நோயாளி ஒரு பொருளை தங்கள் கண்களால் கீழ் நோக்கித் தொடரும் போது கண் இமை கீழ் நோக்கிச் செல்லும் விழித்திரையை தொடராமல் போய் விடும். இமை விரிவடைதலில் காணப்படும் மேற்பொருள் வெளிப்பாடு தற்காலிகமாக ஏற்படும். அதிடைராய்டியத்திற்கு சிகிச்சை அளிக்கும் போது இந்த குறியீடுகளும் மறைந்து விடும்.

க்ரேவ்ஸ் நோயினால் ஏற்படும் அதிதைராய்டியத்தில் குறிப்பாகவும், தனித்தன்மையுடனும் ஏற்படும் விழித்துருத்தத்தோடு (கண் விழி புடைத்தல்) இந்த விழிக் குறியீடுகளைக் குழப்பிக் கொள்ளக்கூடாது (அனைத்து விழித்துருத்தங்களும் க்ரேவ்ஸ் நோயினால் உருவாகுபவை அல்ல, ஆனால் அதிதைராய்டியத்தில் காணப்படும் போது அது கிரேவ்ஸ் நோயினால் ஏற்படுவதாக நினைக்கப்படுகிறது). இந்த விழி பிதுக்கம் என்பது கண்குழி கொழுப்பில் (கண் குழி) தடுப்பாற்றல் நடுநிலை வீக்கம் ஏற்படுவதனால் உண்டாகிறது. விழிதுருத்தங்கள் இருப்பின், அது அதிதைராய்டிய விழி வேகக் குறை மற்றும் முறைத்தலை அதிகரிக்கலாம்.[1]

தைரநச்சிய அபாயம் என்பது (அல்லது தைராய்டு புயல்) மிக அரிதான ஆனால் அதிதைராய்டியத்தின் மிகத் தீவிரமான பிரச்சனை. இது தைர நச்சிய நோயாளி மிகவும் நோய்வாய்ப்பட்டு அல்லது உடல் ரீதியான அழுத்தத்திற்கு ஆளாகும் போது ஏற்படுகிறது. இதன் அறிகுறிகளில் அடங்குபவை: 40 டிகிரி செல்சியஸ் வரை உடல் வெப்பம் அதிகரித்தல், (104 டிகிரி ஃபேரன்ஹீட்), இதயத் துடிப்பு அதிகரித்தல், குருதிஊட்டக் குறை, வாந்தி எடுத்தல், வயிற்றுப் போக்கு, நீர் வற்றிப் போதல், உணர்வற்ற நிலை மற்றும் மரணம்.

காரணங்கள்[தொகு]

பல மருத்துவ நிலைகளில் செயல்படக் கூடிய தைராய்டு திசு அதிக தைராய்டு நொதியை வெளியிடுவது காண முடிகிறது.

மனிதர்களில் முக்கியமான காரணிகளாவன:

  • க்ரேவ்ஸ் நோய் (70-80% வரையிலான பொதுவான காரணம்)
  • நச்சுத்தன்மை உடைய தைராய்டு சீதக் கட்டி
  • நச்சுத் தன்மை உடைய பல கணு சுரப்பிக் கட்டி

தைராய்டு நொதிகளின் அதிக இரத்த அளவு (ஹைபர்-தைராக்சினீமியா என்று மிகத் துல்லியமாக பெயரிடப்பட்டது). மேலும் பல காரணங்களினால் உருவாகலாம்:

  • தைராய்டு வீக்கம் தைராய்டழற்சி எனப்படுகிறது. பல வகையான தைராய்டழற்சிகள் உண்டு. ஹாசிமோட்டோ தைராய்டழற்சி (தடுப்பாற்றல் நடுநிலை கொண்டது), மற்றும் தாழ்தீவிர தைராய்டழற்சி (டிக்யூர்வைன்ஸ்). இவை தொடக்கத்தில் அதிகமான தைராய்டு நொதிகள் சுரக்கப்படுவதோடு தொடர்பு படுத்தப்பட்டாலும், பொதுவாக இவை சுரப்பி செயல்பாடு குறைதலாக வளர்ச்சி அடைந்து பின்னர் நொதி குறைபாடு மற்றும் தைராய்டு சுரப்பிக் குறை ஆகியவற்றையும் உருவாக்கலாம்.
  • அதிகமான தைராய்டு நொதி மாத்திரைகளை வாய்வழி உட்கொள்ளுதல் சாத்தியம். இதே போல தைராய்டு திசு மாசு உடைய மாட்டிறைச்சியினால் கூட தைராய்டு நொதி அதிகரிக்கும் (இது ஹாம்பர்கர் அதிதைராய்டியம் என்றழைக்கப்படுவது).
  • அமியோடரோன் என்ற குருதி ஊட்டக் குறை எதிர் மருந்து தைராக்சின் போலவே வடிவம் கொண்டது. இது தைராய்டு செயல்பாட்டை அதிகமாக்கவோ குறைக்கவோ செய்யலாம்.
  • குழந்தை பிறந்த பின்னர் 7% பெண்களுக்கு பேற்றிக்குப் பின் ஏற்படும் தைராய்டழற்சி (PPT) ஏற்படுகிறது. PPTக்கு பல கட்டங்கள் உண்டு, இதில் முதலானது அதி தைராய்டியம். இது போன்ற அதிதைராய்டியம் சிகிச்சையின்றியே சில வாரங்கள் அல்லது மாதங்களில் குணமடைந்து விடும்.

நோயறிதல்[தொகு]

வரலாறு மற்றும் உடல் பரிசோதனையை வைத்துக் கொண்டு ஒரு நோயறிதல் முடிவுக்கு வரலாம். ஆனால் இது இரத்தப் பரிசோதனையினால் உறுதி செய்யப்படுகிறது.

இரத்தத்தில் உள்ள தைராய்டு உருவாக்கும் நொதிகளின் (TSH)அளவை அளவிடுவது மட்டுமே தேவைப்படுகிறது. குறைந்த TSH அளவு இருப்பது கபச்சுரப்பி இரத்தத்தில் அதிக T4 மற்றும் T3 அளவு இருப்பதைக் காட்டுகிறது மற்றும் இது அதிதைராய்டியம் இருப்பதைக் காட்டும் மிக நம்பகமான குறியீடாகும். TSH அளவு குறைவாக இருப்பது மிக அரிதாக மற்ற நோய்களினால் (நற்தைராய்டு உடல்நலக்குறைவு நோய்க்குறித்தொகுப்பு) கபச்சுரப்பி செயல்படாமல் போவது அல்லது கபச்சுரப்பியில் தடுப்பு ஆகியவை ஏற்பட்டிருப்பதைக் குறிக்கிறது. ஆகையால் T4 மற்றும் T3 சோதனை செய்வது மருத்துவ ரீதியாக உபயோகமானது.

தைராய்டு சுரப்பிக்குறை என்பதற்கான பொதுவான காரணியாக விளங்கும், க்ரேவ்ஸ் நோயில் TSH-பெறுதல் எதிர் எதிர்பொருட்கள் அல்லது ஹாஷிமோட்டோ தைராய்டழற்சியில் தைராய்டு பெராக்சிடோஸ் எதிரி போன்ற குறிப்பிட்ட எதிர்பொருட்களை அளவிடுதல் ஆகியவையும் நோயறிதலுக்கு உதவலாம்.

தைராய்டு சிண்டிக்ராஃபி என்பது அதிதைராய்டியத்தின் காரணிகள் மற்றும் தைராய்டழற்சியில் இந்த பங்கு ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்டும் மிக உபயோகமான சோதனையாகும்.

TSH அளவுகளுக்குக் கூடுதலாக, பல மருத்துவர்கள் T3, புரதம்-சாரா T3, T4 மற்றும்/அல்லது புரதம்-சாரா T4 ஆகியவற்றையும் மேலும் விவரமான முடிவுகளுக்காக சோதனை செய்வர்.

குறைந்த தைராய்டு தூண்டும் இயக்குநீர் அளவு மற்றும் அதிகமான T4 மற்றும் T3 அளவுகள் ஆகியவற்றைக் காட்டும் இரத்தப் பரிசோதனை மூலம் அதிதைராய்டிய நோயறிதலை உறுதி செய்கிறது. TSH என்பது கபச்சுரப்பியால் மூளையில் உருவாக்கப்படும் இயக்குநீர் ஆகும். இதுவே எந்த அளவு இயக்குநீர்களை உருவாக்க வேண்டும் என்று தைராய்டு சுரப்பிக்குக் கூறுகிறது. அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் இருப்பின் TSH குறைவாக இருக்கும். ஒரு கதிரியக்க அயோடீன் படம் (தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை கண்டறிய ஊசி மூலம் செலுத்தப்படும் கதிரியக்க அயோடீன் உபயோகிக்கும் ஒரு சோதனை)அதிகப்படியாக செயல்படும் தைராய்டு சுரப்பி பெரியதாகி இருப்பதைக் காட்டும்.

சிகிச்சைமுறை[தொகு]

அதிகமாக மற்றும் பொதுவாக ஒத்துக்கொள்ளப்படும் மனிதர்களுக்கான அதிதைராய்டிய சிகிச்சை முறைகளில், முதலில் தற்காலிகமாக தைரோஸ்டேடிக்ஸ் குறைக்கும் மருந்துகள் உபயோகிப்பது மற்றும் அதன் பின்னர் நிரந்தர அறுவை அல்லது கதிரியக்க சிகிச்சை ஆகியவை அடங்கும். அனைத்து முறைகளும் குறைவான செயல்பாடுடைய தைராய்டு செயல்பாட்டை (தாழ்தைராய்டியம்) உருவாக்கும். இதை லெவோதைராக்சின் கூட்டு மருந்து கொண்டு சுலபமாக கையாள முடியும்.

தற்காலிக மருத்துவ சிகிச்சை[தொகு]

தைரோஸ்டேடிக்ஸ்[தொகு]

தைரோஸ்டேடிக்ஸ் என்பது தைராய்டு நொதிகளின் உருவாக்கத்தை குறைக்கும் மருந்துகள். கார்பிமசோல் (ஐக்கிய இராச்சியத்தில் உபயோகிக்கப்படுவது) மற்றும் மெதிமசோல் (அமெரிக்க ஒன்றியத்தில் உபயோகிக்கப்படுவது), மற்றும் ப்ரோபில்தையோரசில்) போன்றவையாகும். தைரோபெரோக்சிடேஸ் மூலம் தைரோகுளோபினில் அயோடின் கூடுவதை தைரோஸ்டேடிக்ஸ் தடுக்கிறது என நம்பப்படுகிறது. இதன் மூலம் டெட்ரா-அயோடோதைரோனின் (T4) உருவாவதையும் தடுக்கிறது. தைராய்டு சுரப்பிக்கு வெளியே செயல்பட்டு (பெரும்பாலும் செயல்பாடற்று இருக்கும்) T4 செயல்பாடுடைய T3 ஆக மாற்றப்படுவதை ப்ரோபைல்தையோரோசில் தடுக்கிறது. தைராய்டு திசுவில் பொதுவாக கணிசமான தைராய்டு வள்ரூக்கு இருப்பு இருப்பதனால், தைரோஸ்டேடிக்ஸ் செயல்திறனோடு இருக்க பல வாரங்கள் ஆகலாம். ஆகையால் பல மாதங்களுக்கு மருந்தளவுகள் எச்சரிக்கையோடு அளிக்கப்பட வேண்டும்.

சிகிச்சையின் தொடக்கத்தில் மிக அதிக மருந்தளவு பொதுவாகத் தேவைப்படுகிறது ஆனால் தொடர்ந்து அதிக மருந்தளவு கொடுக்கப்பட்டால் தைராய்டு சுரப்பிக் குறையின் அறிகுறிகள் ஏற்படலாம்.

பீட்டா-தடுப்பிகள்[தொகு]

அதிதைராய்டியத்தின் பொதுவான அறிகுறிகளான படபடப்பு, நடுக்கம் மற்றும் கலக்கம் போன்றவற்றின் சிகிச்சைக்காக செல் பகுதிகளில் அட்ரினெர்ஜிக் ஏற்பிகள் அதிகரிக்கப்படுகின்றன. இந்த தாக்கங்களை பீட்டா-தடுப்பிகள் குறைத்து, படபடப்புகளோடு கூடிய வேகமான நாடித்துடிப்பை குறைத்து, நடுக்கம் மற்றும் கலக்கத்தை குறைக்கிறது. புரோப்ரனோலோலின் பல விதமான மாற்றுகளைப் பொறுத்து அதிதைராய்டியத்தின் சிகிச்சையில் அதற்கு இரண்டு பங்குகள் உண்டு. L-புரோப்ரனோலோல் பீட்டா-தடுப்புகளை உருவாக்கி அதன் மூலம் அதிதைராய்டியத்தின் அறிகுறிகளான நடுக்கம், படபடப்புகள், கலக்கம் மற்றும் சூடு தாங்குதல் போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கிறது. D-ப்ரோப்ரனோலால் தைராக்சின் அயோடீனாக்கப்படுவதைத் தடுத்து T4, T3 ஆக மாற்றப்படுவதை தடுத்து, சில வலிமையான சிகிச்சை தாக்கத்தை உருவாக்குகிறது. மற்ற பீட்டா-தடுப்பிகள் அதிதைராய்டியத்துடன் தொடர்புடைய அறிகுறிகளை மட்டும் சிகிச்சை அளிக்க உதவுகிறது.[2] அதிதைராய்ட் நோயாளிகளின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் ப்ரோப்ரனோலால் மற்றும் இங்கிலாந்தில் மெட்ரோப்ரோலால் ஆகியவை அதிகப்படியாக உபயோகிக்கப்படுகிறது.[3]

நிரந்தர சிகிச்சைகள்[தொகு]

கதிரியக்க சிகிச்சைக்கு முன்னராக அறுவை சிகிச்சை ஒரு முறையாக உபயோகிக்கப்பட்டது. தற்போதும் தைராய்டு சுரப்பிகள் பெரியதாகி கழுத்துப் பகுதி சுருங்கிய நிலையில் அல்லது அதிதைராய்டியத்தின் காரணிகளில் புற்று நோயின் அறிகுறிகள் இருந்தால் அறுவை சிகிச்சை ஒரு சிகிச்சை முறையாக உபயோகிக்கப்படலாம்.

அறுவை சிகிச்சை[தொகு]

அதிதைராய்டியத்தின் பல பொதுவான முறைகள் கதிரியக்க அயோடீன் முறைகள் மூலம் சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுவதனால் அறுவை சிகிச்சை (தைராய்டு மொத்தமாக அல்லது சில பாகங்களை மட்டும் அகற்றுதல்) முறைகள் அதிகமாக உபயோகிக்கப்படுவதில்லை. மேலும் துணைதைராய்டு சுரப்பிகளை அகற்றும் அபாயமும், குரல்வளை நரம்பு வெட்டுப்பட்டு விழுங்குவதில் பிரச்சனை ஏற்படும் அபாயமும் இருப்பதால் அறுவை சிகிச்சை அதிகமாக உபயோகப்படுவதில்லை. ஆயினும், சில காரணங்களுக்காக மருந்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத சில க்ரேவ்ஸ் நோயாளிகள், அயோடீனுக்கு ஒவ்வாமை இருக்கும் நோயாளிகள் அல்லது கதிரியக்க முறைகளை ஒத்துக்கொள்ளாத நோயாளிகள் ஆகியவர்கள் அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுப்பார்கள். மேலும், மிகப் பெரியதான சுரப்பி இருக்கும் நோயாளிகள் அல்லது கண்குழியில் இருந்து விழி பிதுக்கம் ஏற்பட்டுள்ளவர்கள் ஆகியோருக்கு கதிரியக்க சிகிச்சை பாதுகாப்பானதாக இருக்காது என சில அறுவை சிகிச்சை நிபுணர்கள் கருதுகின்றனர். அவர்கள் அதிகப்படியான அயோடீன் அளவு நோயாளிகளின் அறிகுறிகளை அதிகமாக்குகிறது என கருதுகின்றனர்.

கதிரயோடீன்[தொகு]

அயோடீன் – 131 (கதிரயோடீன்) கதிரியக்க ஐசோடோப்பு சிகிச்சையில், அதிக செயல்பாடுடைய சுரப்பிகளின் செயல்பாட்டை அழிப்பதற்காக ஒரே ஒரு முறை கதிரியக்க அயோடீன்-131 வாய்வழியாக (மாத்திரையாகவோ அல்லது திரவமாகவோ) அளிக்கப்படுகிறது. முதல் விழுங்களவுக்கு சரியான பதிலளிப்பு அளிக்காத நோயாளிகளுக்கு கூடுதலாக கதிரியக்க அயோடீன் அதிக விழுங்களவுகளில் சில சமயங்களில் அளிக்கப்படுகிறது. நீக்குவதற்கான சிகிச்சையில் அளிக்கப்படும் அயோடீன் கதிர்படத்திற்கு அளிக்கப்படும் அயோடீனை விட வித்தியாசமானது. வழக்கமான அயோடீன் கதிர்படத்திற்குப் பின்னர் கதிரியக்க அயோடீன் அளிக்கப்படுகிறது மற்றும் அதிதைராய்டியத்தை உறுதி செய்ய அயோடீன் உட்கொள்ளும் அளவு கண்டறியப்படுகிறது. தைராய்டில் உள்ள செயல்படுகின்ற செல்கள் கதிரியக்க அயோடீனை ஏற்றுக்கொண்டு அவை அழிக்கப்படுகிறது. அயோடீன் தைராய்டு செல்களினால் (அதிக செயல்பாடுள்ள தைராய்டு செல்களினால் அதிக சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது) மட்டும் ஏற்கப்படுவதனால், அழிக்கப்படுவது அதில் மட்டுமே ஏற்படுகிறது, ஆகையால் இந்த சிகிச்சைக்கான அதிகப்படியான பக்க விளைவுகள் ஏற்படாது. கதிரியக்க அயோடீன் உபயோகித்து நீக்கப்படும் முறை பாதுகாப்பாக சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பகாலம் மற்றும் தாய்பால் அளிக்கப்படும் காலம் ஆகிய நேரங்களில் மட்டுமே இவை உபயோகிக்கப்படாது.

கதிரியக்க அயோடீனைத் தொடரும் பொதுவான வெளிப்பாடு சிகிச்சை அளிக்கக் கூடிய தாழ்தைராய்டியமாக மாறுதல். க்ரேவ்ஸ் தைரநச்சுக்கு சிசிச்சை பெறுபவர்களில் 78% பேருக்கும், பல கணு நச்சு அயோடீன் குறை நோய் மற்றும் தனியான நச்சுடைய சீதக்கட்டி உடைய 40% பேருக்கும் இந்த மாறுதல்கள் ஏற்படுகிறது.[4] அதிகப்படியான கதிரியக்க அயோடீன் உபயோகிப்பு சிகிச்சை பயனற்றுப் போகும் நிகழ்வை குறைக்கிறது. அதிக அளவிலான தைராய்டு பற்றாக்குறை உள்ளவர்களில் இந்த சிகிச்சை பதிலளிப்பு அதிகமாக இருக்கிறது.[5] மிகவும் சாதாரண ஸ்கான்களின் (நார்மோ-எக்கோஜீனிக்) தெரியும் 37 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, செவியுணரா ஒலி (அல்டிராசவுண்டு ஸ்கான்) ஸ்கான்களில் கதிரயோடீன் சிகிச்சைக்கு உணர்திறன் அதிகமாக உள்ளது. இது மிகவும் சீராகவும் (ஹைப்போ-எக்கோஜீனிக்) காணப்படுகிறது. இது அடர்த்தியான பெரிய செல்களினால் ஏற்படுகிறது. இது பிற்காலத்தில் 81 சதவீதம் தாழ்தைராய்டாக மாறலாம்.[6]

தைராய்டு புயல்[தொகு]

தைராய்டு புயல் அதிதைராய்டியத்தின் தீவிர அறிகுறிகளோடு காணப்படும். இதய இயக்க மீட்போடு மேலே உள்ள முறைகளுடன் கூடிய தீவிரமான சிகிச்சை மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது: நரம்பு வழி செலுத்தப்படும் ப்ரோப்ரானோலோல் போன்ற பீட்டா-தடுப்பிகள் மற்றும் அதனைத் தொடர்ந்து அயோடீன் சேர்க்கப்பட்ட கதிரியக்க பொருட்களான மெதிமாசோல் போன்ற தயோனமைட் அல்லது கதிரியக்க பொருள் இல்லையெனில் ஒரு அயோடீன் திரவம் மற்றும் ஹைட்ரோகோர்டிசோன் போன்ற நரம்பு வழி ஸ்டீராய்டு.[7]

விலங்குகளுக்கான மருந்து[தொகு]

பூனைகள்[தொகு]

விலங்குகளுக்கான மருத்துவத்தில், வயதான வீட்டுப் பூனைகளில் அதிதைராய்டியம் என்பது பொதுவான உட்சுரப்பு நிலையாகும். 10 வயதுக்கு மேற்பட்ட 2% பூனைகளில் இது நடக்கிறது என சில விலங்கியல் மருத்துவர்கள் கருதுகின்றனர்.[8] 1970களில் அறிவிக்கப்பட்ட முதல் பூனைகளில் அதிதைராய்டியத்துக்குப் பின்னர் இந்த நோய் குறிப்பிடத்தக்க அளவில் பொதுவாகிவிட்டது. பூனைகளில், வலியில்லாத கட்டி என்பது அதிதைராய்டியத்தின் ஒரு முக்கிய காரணமாகும். ஆனால், பூனைகளில் இந்த கட்டி ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ஆயினும், அமெரிக்க வேதியியல் குழுவின் வெளியீடான சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட தற்போதைய ஆராய்ச்சியின் படி, பூனைகளில் ஏற்படும் அதிதைராய்டியத்தில் பல, பாலிப்ரோமினேடட் டைஃபினைல் ஈதர்கள் (PBDEகள்) என்ற சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படுகிறது எனக் குறிப்பிடப்படுகிறது. இது பல வீடுகளில் உள்ள தீச்சுணக்கிகளில் குறிப்பாக அறைக்கலண்கள் மற்றும் சில மின்னணு ஆகியவற்றில் காணப்படுகிறது.

இந்த அறிக்கைக்கு ஆதாரமாக அமைந்த ஆய்வு, EPA தேசிய ஆரோக்கிய மற்றும் சுற்றுச்சூழல் தாக்க சோதனைக் கூடம் மற்றும் இந்தியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களினால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், ஈடுபடுத்தப்பட்ட பூனை அதிதைராய்டியம் உள்ள 23 பூனைகளின் PDBE இரத்த அளவுகள் வயது குறைந்த அதிதைராய்டியம் இல்லாத பூனைகளில் காணப்படும் அளவுகளை விட மூன்று மடங்கு அதிகமாகக் காணப்பட்டது. சிறப்பாக, ஆரோக்கியத்தைப் பாதிக்கும் PDBE மற்றும் அது தொடர்பான உட்சுரப்பி தடுப்பிகள் எந்த விலங்குகள் அல்லது மனிதர்களின் இரத்தத்திலும் காணப்படாது.

தற்போது, தைராய்டு தூண்டும் இயக்குநீர் ஏற்புகளில் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவையே தைராய்டு சுரப்பி செல்களின் ஒட்டுமொத்த செயல்படுத்துதலை ஏற்படுத்துகிறது. இந்த நோயின் தோன்றும் முறையில், கோய்ட்ரோஜென்ஸ் (கெனிஸ்டைன், டைட்சின் மற்றும் குவெர்செர்டின் போன்ற ஐசோஃப்லேவேன்கள்) மற்றும் அயோடீன் மற்றும் உணவுகளில் உள்ள செலினியம் அளவு போன்றவையும் பங்கு வகிக்கலாம்.

அதிகப்படியாகக் காணப்படும் பொதுவான அறிகுறிகளாவன: வேகமான எடை குறைதல், டகைகார்டியா (வேகமான இதயத் துடிப்பு), வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு, அதிகப்படியான திரவங்கள் மற்றும் உணவு உட்கொள்ளுதல் (பாலிடிப்ஸீயா) மற்றும் அதிகப்படியான சிறுநீர் உருவாகுதல் (பாலியூரியா) ஆகியவையாகும். மற்ற அறிகுறிகளில், அதிகப்படியான செயல்பாடு, அதிக தன்முனைப்பு நடத்தை, அசாதாரண இதயத் துடிப்பொலி, சீரற்ற இதய ஒலி, ஒரு பராமரிப்பற்ற தோற்றம், மற்றும் பெரிய அடர்த்தியான நகங்களாகும். பாதிக்கப்பட்ட பூனைகளில் சுமார் 70% பூனைகளில் பெரியதான தைராய்டு சுரப்பிகள் (சுரப்பிக்கட்டி) காணப்படுகின்றன.

மனிதர்களுக்கென விவரிக்கப்பட்ட அதே மூன்று சிகிச்சை முறைகளும் பூனைகளின் அதிதைராய்டியத்திற்கும் உபயோகப்படுத்தப்படலாம் (அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மற்றும் தைராய்டு எதிர் மருந்துகள்). பூனைகளின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். இதுவே மிகக் குறைந்த செலவுள்ள ஒன்று, குறிப்பாக மிக வயதான பூனைகளுக்கு கொடுக்கப்படவேண்டும். கதிரியக்க சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பொதுவாக அதிதைராய்டியத்தை குணப்படுத்தும். சில விலங்கியல் மருத்துவர்கள், மயக்க மருந்துகளின் அபாயங்கள் காரணமாக அறுவை சிகிச்சைக்குப் பதிலாக கதிரியக்க மருந்துகளையே விரும்புகின்றனர். ஆனால், பூனைகளில் அனைத்து இடங்களுக்கும் கதிரியக்க சிகிச்சை கிடைக்கப்பெறுவதாக இல்லை. இந்த சிகிச்சைக்கு அணு கதிரியக்க நிபுணத்துவம் மற்றும் வசதிகள் தேவைப்படுவது தான் இதற்குக் காரணம். விலங்கின் சிறுநீர், வியர்வை, எச்சில் மற்றும் மலம் ஆகியவற்றில் சிகிச்சைக்குப் பின் பல நாட்களுக்கு கதிரியக்கம் காணப்படுவதனால், பொதுவாக 3 வாரங்களுக்கு சிறப்பு உள் நோயாளி சிகிச்சை தேவைப்படும் (முதல் வாரம் மொத்தமாகத் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் இரண்டு வாரங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன).[9] கதிர் அளவுகளுக்கான வழிமுறைகள் மாநிலத்திற்கேற்றவாறு மாறும்; மாசசூஸட்ஸ் நகரில் இரண்டு நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் இருக்க வேண்டியதிருக்கும், அதன் பின்னர் பராமரிப்பு வழிமுறைகளோடு விலங்கு வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடும். ஒரே ஒரு தைராய்டு சுரப்பி பாதிப்படைந்திருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது (ஒரு பக்க நோய்). ஆனால், அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மற்ற சுரப்பியும் அதிக செயல்பாடு உடையதாகிவிடும். மனிதர்களைப் போலவே தைராய்டு சுரப்பிக் குறைதல் அறுவை சிகிசையின் அபாயமாக உள்ளது.

நாய்கள்[தொகு]

அதிதைராய்டியம் என்பது நாய்களில் மிக அரிதாக காணப்படுகிறது (1 அல்லது 2% குறைவான நாய்களில் தான் காணப்படுகிறது). ஆனால் இதற்கு எதிரான தைராய்டு சுரப்பிக் குறை காணப்படுகிறது. தைராய்டு சுரப்பிக் குறைக்கான சிகிச்சையின் போது அதிகமான தைராய்டு நொதிகள் அளிக்கப்படும் காரணத்தினால் மட்டுமே அதிதைராய்டியம் ஏற்படுகிறது. விழுங்களவு மாற்றப்படும் போது அறிகுறிகள் பொதுவாக மறைந்துவிடுகின்றது.

எப்போதாவது, நாய்களுக்கு தைராய்டில் செயல்படுகின்ற புற்று நோய் காணப்படலாம்; பல நேரங்களில் (90% நேரத்தில்) இது அதிக செயல்பாடுடைய ஊடுருவக்கூடிய அல்லது சுலபமாகப் பெருகி மற்ற திசுக்களுக்குச் (குறிப்பாக நுரையீரல்கள்) செல்லக் கூடிய கட்டியாக இது காணப்படுகிறது. இதனால் நோய் குணமாகுதல் மிகவும் கடினமாகிறது. ஆனால், தமனிகள், உணவுக் குழாய் மற்றும் சுவாசக் குழாய் உள்ளிட்ட சுற்றுப் புறத்தில் உள்ள திசுக்களில் கட்டியின் ஊடுருவுதல் அதிகமாக இருப்பதால், அறுவை சிகிச்சை சாத்தியமாக இருந்தாலும் அது கடினமானதாகிறது. கட்டியின் அளவை குறைப்பது சாத்தியமாக இருக்கலாம். இதன் மூலம் அறிகுறிகளில் இருந்து விடுபட்டு மற்ற சிகிச்சைகள் வேலை செய்ய அனுமதிக்கலாம்.

நாய்க்கு வலியற்ற செயல்படுகின்ற புற்று நோய் இருப்பின் சிகிச்சை மற்றும் நோய் குணமடைதல் பூனைகளைப் போன்றதாகவே இருக்கும் (10% நாய்களில் காணப்படுவது). கழுத்துப் பகுதியில் சிறிய வீக்கம் போன்று பெரியதான தைராய்டு சுரப்பி இருப்பதைத் தவிர நாய்களுக்கு எந்த அறிகுறியும் இருக்காது என்பதே ஒரே ஒரு முக்கிய வேறுபாடாகும்.

படங்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

  • கார்பிமசோல்
  • தைராய்டு சுரப்புக் குறை
  • கோய்ட்ரோஜன்
  • க்ரேவ்ஸ் கண் நோய்
  • க்ரேவ்ஸ் நோய்
  • தாழ்தீவிர நிணநீர்கலங்கள் தைராய்டழற்சி

குறிப்புதவிகள்[தொகு]

  1. Faculty of Medicine & Dentistry (2006). "Course-Based Physical Examination - Endocrinology -- Endocrinology Objectives (Thyroid Exam)". Undergraduate Medical Education. University of Alberta. Archived from the original on 19 ஜனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 28 January 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. ஈபர், ஓ, புசிங்கர் டபிள்யூ மற்றும் மற்றவர்கள். அதிதைராய்டிய சிகிச்சையில் D மற்றும் L-ப்ரோப்ரனாலோலின் தாக்கத்திற்கான ஒப்பீடு. கிளின் எண்டோக்ரினால் 1990;32:363-72.
  3. Geffner DL, Hershman JM (July 1992). "β-Adrenergic blockade for the treatment of hyperthyroidism". The American Journal of Medicine 93 (1): 61–8. doi:10.1016/0002-9343(92)90681-Z. பப்மெட்:1352658. https://archive.org/details/sim_american-journal-of-medicine_1992-07_93_1/page/61. 
  4. Berglund J, Christensen SB, Dymling JF, Hallengren B (May 1991). "The incidence of recurrence and hypothyroidism following treatment with antithyroid drugs, surgery or radioiodine in all patients with thyrotoxicosis in Malmö during the period 1970-1974". Journal of Internal Medicine 229 (5): 435–42. doi:10.1111/j.1365-2796.1991.tb00371.x. பப்மெட்:1710255. https://archive.org/details/sim_journal-of-internal-medicine_1991-05_229_5/page/435. 
  5. Esfahani AF, Kakhki VR, Fallahi B, et al. (2005). "Comparative evaluation of two fixed doses of 185 and 370 MBq 131I, for the treatment of Graves' disease resistant to antithyroid drugs". Hellenic Journal of Nuclear Medicine 8 (3): 158–61. பப்மெட்:16390021. 
  6. Markovic V, Eterovic D (September 2007). "Thyroid echogenicity predicts outcome of radioiodine therapy in patients with Graves' disease". The Journal of Clinical Endocrinology and Metabolism 92 (9): 3547–52. doi:10.1210/jc.2007-0879. பப்மெட்:17609305. 
  7. Tintinalli, Judith (2004). Emergency Medicine: A Comprehensive Study Guide, Sixth edition. McGraw-Hill Professional. பக். 1312. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0071388753. 
  8. Shomon, Mary (2004). "Feline Hyperthyroidism: Frequently Asked Questions, Information About Overactive Thyroid Conditions in Cats". Archived from the original on 31 ஆகஸ்ட் 2009. பார்க்கப்பட்ட நாள் 24 June 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)[self-published source?]
  9. Little, Susan (2006). "Feline Hyperthyroidism" (PDF). Winn Feline Foundation. Archived from the original (PDF) on 9 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2009. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

கூடுதல் வாசிப்பு[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

மனிதர்களுக்காக
பூனைகளுக்காக

வார்ப்புரு:Endocrine pathology

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிதைராய்டியம்&oldid=3704379" இலிருந்து மீள்விக்கப்பட்டது