ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
பொதுநலவாயத்தின் தலைவர்
1959 இல் எலிசபெத் மகாராணி
ஐக்கிய இராச்சியத்தினதும்
ஏனைய பொதுநலவாயங்களினதும் மகாராணி
ஆட்சிக்காலம்6 பெப்ரவரி 1952 – 8 செப்டம்பர் 2022
முடிசூடல்2 சூன் 1953
முன்னையவர்ஆறாம் சியார்ச்
பின்னையவர்மூன்றாம் சார்லசு
பிறப்புஎலிசபெத், யோர்க் இளவரசி
(1926-04-21)21 ஏப்ரல் 1926
மாஃபெயார், இலண்டன், இங்கிலாந்து
இறப்பு8 செப்டம்பர் 2022(2022-09-08) (அகவை 96)
பல்மோரல் கோட்டை, அபர்டீன்சயர், இசுக்கொட்லாந்து
புதைத்த இடம்19 செப்டம்பர் 2022
செயிண்ட் சியார்ச் தேவாலயம், வின்ட்சர் கோட்டை
துணைவர்இளவரசர் பிலிப்பு (20 நவம்பர் 1947 – 9 ஏப்ரல் 2021)
குழந்தைகளின்
#வாரிசுகள்
பெயர்கள்
எலிசபெத் அலெக்சாண்ட்ரா மேரி
மரபுவின்சர்
தந்தைஆறாம் சியார்ச்
தாய்எலிசபெத் போவ்சு-லயோன்
மதம்சீர்திருத்தத் திருச்சபை[a]
கையொப்பம்ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்'s signature

இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; 21 ஏப்ரல் 1926 – 8 செப்டம்பர் 2022) என்பவர் 1952 பெப்ரவரி 6 முதல் 2022 இல் இறக்கும் வரை ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக இருந்தார்.[b] இவரது 70 ஆண்டுகள், 214 நாட்கள் என்ற மொத்த ஆட்சிக்காலம் எந்த ஒரு பிரித்தானிய மன்னரிலும் மிக நீண்டதாகும், அத்துடன் இறையாண்மை கொண்ட எந்த மன்னரினதும் இரண்டாவது மிக நீண்ட ஆட்சியும் ஆகும். எலிசபெத் இறக்கும் போது, ஐக்கிய இராச்சியம் தவிர 14 பொதுநலவாய நாடுகளின் ராணியாகவும் இருந்தார்.[c]

எலிசபெத் இலண்டன், மேஃபெயார் என்ற இடத்தில் யோர்க் கோமகன் ஆல்பர்ட்டிற்கும் (பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் மன்னர்), எலிசபெத்திற்கும் முதல் குழந்தையாக 1926 ஏப்ரல் 21 இல் பிறந்தார்.[2] தனது கொள்ளுப்பாட்டி அலெக்சாந்திரா, பாட்டி மேரி, தாய் எலிசபெத் ஆகியோரின் பெயர்களைச் சேர்த்து எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்று பெயர் சூட்டப்பட்டார்.[3] தனது நெருங்கிய குடும்பத்தினரால் 'லில்லிபெத்' என்று அழைக்கப்பட்டார்.[4] 1936 இல் எட்டாம் எட்வர்டு மன்னர் முடிதுறந்ததை அடுத்து அவரின் இளைய சகோதரரும் எலிசபெத்தின் தந்தையுமான ஆல்பர்ட் ஆறாம் ஜோர்ஜ் என்ற பெயரில் மன்னராக முடிசூடினார். இதன் மூலம் எலிசபெத் முடிக்குரிய வாரிசாக அறிவிக்கப்பட்டார்.[5] எலிசபெத் வீட்டில் தனிப்பட்ட முறையில் கல்வி பயின்றார்,[6] இரண்டாம் உலகப் போரின் போது துணைப் பிராந்திய சேவையில் பணியாற்றினார்.[7] நவம்பர் 1947 இல், இவர் கிரேக்கம் மற்றும் டென்மார்க்கின் முன்னாள் இளவரசர் பிலிப் மவுண்ட்பேட்டனை (பின்னாளில் எடின்பரோ கோமகன் இளவரசர் பிலிப்பு) மணந்தார்.[8] இவர்களது திருமணம் ஏப்ரல் 2021 இல் பிலிப்பு இறக்கும் வரை 73 ஆண்டுகள் நீடித்தது. இவர்களுக்கு மூன்றாம் சார்லசு; இளவரசி ஆன், யோர்க் கோமகன் இளவரசர் ஆண்ட்ரூ, வெசெக்சு கோமகன் இளவரசர் எட்வர்ட் என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

1952 பெப்ரவரியில் இவரது தந்தை இறந்தபோது, அகவை 25 ஆக இருந்த எலிசபெத் ஐக்கிய இராச்சியம், கனடா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாக்கித்தான், இலங்கை ஆகிய ஏழு விடுதலை பெற்ற பொதுநலவாய நாடுகளின் ராணியானார். அத்துடன் பொதுநலவாயத்தின் தலைவரும் ஆவார். எலிசபெத் வடக்கு அயர்லாந்துப் பிரச்சனைகள், ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு, ஆப்பிரிக்காவின் குடியேற்றங்களை நீக்கல், ஈராக் போர் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றம் போன்ற முக்கிய அரசியல் மாற்றங்களின் மூலம் அரசியல்சட்ட முடியாட்சி முலம் ஆட்சி செய்தார். இவரது ஆளுகைக்கு உட்பட்ட பல நாடுகள் விடுதலை பெற்றும், சில குடியரசுகளாக மாறியதாலும் காலப்போக்கில் இவரது பகுதிகளின் எண்ணிக்கை குறைவடைந்தது. இவரின் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க வருகைகளிலும் சந்திப்புகளிலும், 1986 இல் சீனாவிற்கும், 1994 இல் உருசியாவிற்கும், 2011 இல் அயர்லாந்து குடியரசிற்கும், ஐந்து திருத்தந்தைகளுடனான சந்திப்புகளும் முதன்மையானவை.

தனிப்பட்ட வாழ்க்கையில் பிள்ளைகளின் பிறப்பும் திருமணமும், பேரக்குழந்தைகளின் பிறப்பு, வேல்சு இளவரசரின் முடிசூடல் மற்றும் ஆட்சியின் மைல்கற்களாக அமைந்த வெள்ளி (1977), தங்க (2002), வைர (2012), பவள (2022) விழாக் கொண்டாட்டங்கள் முதன்மையான நிகழ்ச்சிகளாகும். அவரது தந்தையின் மறைவு, இளவரசர் பிலிப்பின் மாமா மவுண்ட்பேட்டன் பிரபுவின் கொலை, 1992இல் பிள்ளைகளின் மணமுறிவுகள், 1997இல் அவரது மகனின் முன்னாள் மனைவி டயானாவின் மறைவு, தாய் எலிசபெத்தின் மறைவு மற்றும் தங்கை இளவரசி மார்கரெட்டின் மறைவு ஆகியன அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட வருத்தமாக அமைந்தன. எலிசபெத் மிக நீண்ட காலம் வாழ்ந்த மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரித்தானிய ஆட்சியாளராக இருந்தார், அத்துடன் உலக வரலாற்றில் பிரான்சின் பதினான்காம் லூயிக்குப் பின்னர் இரண்டாவது மிக நீண்ட காலம் ஆட்சி புரிந்தவர். இவர் அவ்வப்போது குடியரசுவாத உணர்வு மற்றும் ஊடக விமர்சனங்களை எதிர்கொண்டார், எனினும், ஐக்கிய இராச்சியத்தில் முடியாட்சிக்கான ஆதரவும், எலிசபெத்தின் தனிப்பட்ட புகழும் தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே இருந்தன.

இரண்டாம் எலிசபெத் 2022 செப்டம்பர் 8 இல் தனது 96-ஆவது அகவையில் அபர்டீன்சயர், பால்மோரல் அரண்மனையில் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மூத்த மகன் மூன்றாம் சார்லசு மன்னரானார்.[9]

தொடக்க வாழ்க்கை[தொகு]

1933 இல் பிலிப்பு டி லாசுலோவினால் வரையப்பட்ட எலிசபெத்தின் படம்

எலிசபெத் 1926 ஏப்ரல் 21 02:40 (கிரீனிச் நேரம்),[10] அவரது தந்த-வழிப் பாட்டனார் ஐந்தாம் சியார்ச்சின் ஆட்சிக் காலத்தில் பிறந்தார். தந்தை இளவரசர் ஆல்பர்ட், யோர்க் கோமகன் (பின்னர் ஆறாம் சியார்ச்), மன்னரின் இரண்டாவது மகன் ஆவார். தாயார், எலிசபெத், யோர்க் கோமாட்டி (பின்னர் எலிசபெத் போவ்சு-லயோன்), இசுக்காட்லாந்தைச் சேர்ந்த பிரபு கிளௌட் போவ்சு-லியோன். எலிசபெத் இலண்டனில் மேஃபெயார் என்ற இடத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் அறுவைசிகிச்சை மகப்பேறு மூலம் பிறந்தார்.[2] இவர் ஆங்கிலிக்க யோர்க் ஆயர் கோசுமோ கோர்டன் லாங் என்பவரால் பக்கிங்காம் அரண்மனையில் உள்ள ஒரு தனிப்பட்ட தேவாலயம் ஒன்றில் மே 29 இல் திருமுழுக்கு செய்யப்பட்டு,[11][d] தாயார் வழியே எலிசபெத் என்றும்; தந்தை-வழி பூட்டி வழியே அலெக்சாந்திரா என்றும்; தந்தை-வழிப் பாட்டி வழியே மேரி என்றும் பெயரிடப்பட்டார்.[3] அவர் தன்னை குழந்தையாக இருக்கையில் அழைத்ததன் அடிப்படையில்,[13] அவரது நெருங்கிய குடும்பத்தினரால் "லிலிபெட்" என்று அழைக்கப்பட்டார்.[4] எலிசபெத் தனது தாத்தா ஐந்தாம் சியார்சால் போற்றப்பட்டார், அவரை எலிசபெத் "தாத்தா இங்கிலாந்து" என்று அன்புடன் அழைத்தார்.[14]

எலிசபெத்துடன் கூடப் பிறந்த ஒரேயொருவர் இளவரசி மார்கரெட் 1930 இல் பிறந்தார். இரண்டு இளவரசிகளும் தங்கள் தாயினதும் ஆசிரியை மரியன் கிராஃபோர்டினதும் மேற்பார்வையின் கீழ்,[6] வரலாறு, இலக்கியம், மொழி, இசை ஆகியவற்றை வீட்டில் இருந்தே கற்றனர்.[15] கிராபோர்ட் இரு இளவரசிகளினதும் சிறுவயது ஆண்டுகளின் வாழ்க்கை வரலாற்றை தி லிட்டில் பிரின்சஸ் என்ற தலைப்பில் 1950 இல் வெளியிட்டார், இது அரச குடும்பத்தை திகைக்க வைத்தது.[16] எலிசபெத்தின் குதிரைகள், நாய்கள் மீதான காதல், அவரது ஒழுங்குமுறை மற்றும் பொறுப்புணர்வின் அணுகுமுறை ஆகியவற்றை புத்தகம் விவரிக்கிறது.[17]

மரபுரிமை வாரிசு[தொகு]

எலிசபெத்தின் தாத்தாவின் ஆட்சியின் போது, ​​அவர் தனது மாமா எட்வர்ட், மற்றும் அவரது தந்தைக்கு பின்னால், பிரித்தானிய முடிக்கு வாரிசு வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்தார். அவரது பிறப்பு பொது ஆர்வத்தை ஏற்படுத்திய போதிலும், எட்வர்டு இன்னும் இளமையாக இருந்ததாலும், எட்வர்டு திருமணம் செய்து குழந்தைகளைப் பெற வாய்ப்பிருந்ததாலும், எலிசபெத் இராணியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை.[18] அவரது தாத்தா 1936 இல் இறந்தபோது, அவரது மாமா எட்வர்ட், எட்டாம் எட்வர்டு என்ற பெயரில் முடிசூடினார். இதனால் எலிசபெத் தனது தந்தைக்குப் பிறகு அரியணைக்கு இரண்டாவது வரிசையில் இருந்தார். 1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எட்வர்ட், விவாகரத்துப் பெற்ற சமூகவாதியும் அமெரிக்கருமான வாலிசு சிம்ப்சனுடனான தனது முன்மொழியப்பட்ட திருமணம் அரசியலமைப்பு நெருக்கடியைத் தூண்டியதை அடுத்து, பதவி விலகினார்.[19] இதன் விளைவாக, எலிசபெத்தின் தந்தை முடிசூடி ஆறாம் ஜார்ஜ் என்ற ஆட்சிப் பெயரைப் பெற்றார். எலிசபெத்துக்கு சகோதரர்கள் இல்லாததால், அவர் பட்டத்து இளவரசி ஆனார். அவரது பெற்றோர்கள் பின்னர் ஒரு மகனைப் பெற்றிருந்தால், ஆண் தலைவாரிசு முறை அக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டதால், அவர் வாரிசு வரிசையில் எலிசபெத்திற்கு மேலே இருந்திருப்பார்[5]

திருமணம்[தொகு]

எலிசபெத்தும் கணவர் பிலிப்பும் அவர்களது திருமணத்தின் பின்பு எடுத்த படம், 1947

எலிசபெத் தனது வருங்காலக் கணவரான பிலிப்பை முதன் முதலாக 1934 இலும், பின்னர் 1937 இலும் சந்தித்தார்.[20] இருவரும் டென்மார்க்கின் ஒன்பதாம் கிறித்தியான் மூலம் இரண்டாம் முறையான உறவினர்களும், விக்டோரியா மகாராணி மூலம் மூன்றாவது முறையான உறவினர்களும் ஆவர். `939 சூலையில் டார்ட்மவுத்தில் உள்ள அரச கடற்படைக் கல்லூரியில் மூன்றாவது முறையாக சந்தித்த பிறகு, 13 அகவை கொண்ட எலிசபெத் தான் பிலிப்பை காதலிப்பதாகக் கூறினார், அவர்கள் இருவரும் கடிதங்களைப் பரிமாறிக் கொள்ளத் தொடங்கினர்.[21] அவர்களது திருமண உறுதி 1947 சூலை 9 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோது அவருக்கு அகவை 21 ஆகும்.[22]

திருமண உறுதியிலும் சர்ச்சைகள் கிளம்பின. பிலிப்புக்கு நிதி நிலை எதுவும் இல்லை, இரண்டாம் உலகப் போர் முழுவதும் அரச கடற்படையில் பணியாற்றிய பிரித்தானியக் குடிமகன் என்றபோதும், வெளிநாட்டில் பிறந்தவர், நாட்சிகளுடன் தொடர்பு கொண்ட செருமனியப் பிரபுக்களை மணந்த சகோதரிகள் இருந்தனர்.[23][24]

திருமணத்திற்கு முன்பு, பிலிப் தனது கிரேக்க, தென்மார்க்குப் பட்டங்களைத் துறந்தார், அதிகாரப்பூர்வமாக கிரேக்க மரபுவழியிலிருந்து ஆங்கிலிகனிசத்திற்கு மாறினார், அத்துடன் லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டன் என்ற மரபை ஏற்றுக்கொண்டார், அவரது தாயின் பிரித்தானியக் குடும்பத்தின் குடும்பப் பெயரைப் பெற்றார்.[25] எடின்பரோ கோமகன் என்ற பட்டப் பெயரையும் திருமணத்திற்கு முன்னர் பெற்றார்.[26] எலிசபெத்தும் பிலிப்பும் 1947 நவம்பர் 20 இல் வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் திருமணம் செய்துகொண்டனர். உலகம் முழுவதிலும் இருந்து 2,500 திருமணப் பரிசுகளைப் பெற்றனர்.[8] பிரித்தானியா போரின் அழிவில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால், எலிசபெத் தனது திருமணத்திற்கான ஆடைகளுக்கான பொருட்களை வாங்குவதற்கு பங்கீட்டு அட்டைகள் தேவைப்பட்டது. ஆடை நார்மன் ஹார்ட்னெல் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.[27] போருக்குப் பிந்தைய பிரித்தானியாவில், பிலிப்பின் செருமானிய உறவுகள், அதில் எஞ்சியிருக்கும் அவரது மூன்று சகோதரிகள், திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை.[28] அத்துடன் முன்னாள் எட்டாம் எட்வர்டு மன்னராக இருந்த வின்ட்சர் பிரபுவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.[29]

எலிசபெத் தனது முதல் குழந்தையான இளவரசர் சார்லசை 1948 நவம்பர் 14 இல் பெற்றெடுத்தார். சார்லசு பிறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், அரச இளவரசர் அல்லது இளவரசியின் மரபையும் பட்டத்தையும் எலிசபெத்தின் குழந்தைகளுக்குப் பயன்படுத்த அனுமதித்து, அரசர் ஆறாம் ஜோர்ஜ் காப்புரிமைக் கடிதங்களை வழங்கினார்.[30] இரண்டாவது குழந்தை, இளவரசி ஆன் 1950 ஆகத்து 15 இல் பிறந்தார்.[31]

ஆட்சி[தொகு]

அரியணை ஏறலும் முடிசூடலும்[தொகு]

கணவர் பிலிப்புடன் முடிசூடல் படம், 1953

1951 ஆம் ஆண்டில் மன்னர் ஆறாம் ஜோர்ஜின் உடல்நிலை மோசமடைந்தது, பொது நிகழ்ச்சிகளில் எலிசபெத் அவருக்காக அடிக்கடி நிற்க வேண்டி வந்தது. அக்டோபர் 1951 இல் எலிசபெத் கனடாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, வாசிங்டன், டி. சி.யில் அமெரிக்கத் தலைவர் ஹாரி டுரூமனைச் சந்தித்தார். இப்பயணத்தின்போது, எலிசபெத்தின் தனிப்பட்ட செயலாளரான மார்ட்டின் சார்ட்டெரிஸ், சுற்றுப்பயணத்தின்போது மன்னரின் இறப்பு ஏற்பட்டால், எலிசபெத் அரியணை ஏறும் அறிவிப்பையும் அவருடன் எடுத்துச் சென்றார்.[32] 1952 ஆம் ஆண்டின் முற்பகுதியில், எலிசபெத், பிலிப் ஆகியோர் கென்யா வழியாக ஆத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டனர். 1952 பிப்ரவரி 6 அன்று, கென்ய இல்லமான சாகனா விடுதிக்குத் திரும்பியபோது, ஆறாம் ஜோர்ஜின் இறப்பும், எலிசபெத்தின் அரியணை ஏறலும் உடனடியாக அமலுக்கு வந்தது பற்றிய செய்தி வந்தது. பிலிப் புதிய ராணிக்கு செய்தியைத் தெரிவித்தார்.[33] எலிசபெத் என்பதைத் தனது ஆட்சிப் பெயராகத் தக்கவைத்துக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்தார்;[34] இதனால் அவர் இரண்டாம் எலிசபெத் என்று அழைக்கப்பட்டார்.[35] அவர் தனது பகுதிகள் முழுவதும் ராணியாக அறிவிக்கப்பட்டார். எலிசபெத்தும் பிலிப்பும் அவசரமாக இங்கிலாந்து திரும்பினர்.[36] இருவரும் பக்கிங்காம் அரண்மனைக்குக் குடிபெயர்ந்தனர்.[37]

எலிசபெத் அரியணை ஏறியவுடன், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளும்போது தனது கணவரின் குடும்பப்பெயரை எடுத்துக் கொள்ளும் வழக்கத்திற்கு ஏற்ப, அரச குடும்பம் எடின்பரோ பிரபுவின் பெயரைத் தாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மவுண்ட்பேட்டன் பிரபு மவுண்ட்பேட்டன் மாளிகை என்ற பெயரை பரிந்துரைத்தார். பிலிப் தனது இரட்டைப் பட்டத்திற்குப் பிறகு எடின்பரோ மாளிகை என்ற பெயரைப் பரிந்துரைத்தார்.[38] எனினும் பிரித்தானியப் பிரதமர் வின்சுடன் சர்ச்சிலும், எலிசபெத்தின் பாட்டி மேரி ஆகியோர் வின்சர் மாளிகை என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பினர், எனவே எலிசபெத் 1952 ஏப்ரல் 9 அன்று வின்சர் அரச குடும்பத்தின் பெயராக தொடரும் என்று அறிவித்தார். இது குறித்து பிலிப் கருத்துத் தெரிவிக்கையில், "அவரது சொந்தக் குழந்தைகளுக்கு தனது பெயரை வைக்க அனுமதிக்கப்படாத ஒரே மனிதர் நான் தான்." என்று கூறினார்.[39] 1960 ஆம் ஆண்டில், பிலிப், எலிசபெத்தின் அரச குடும்பத்தைச் சுமக்காத ஆண்-வரிசை சந்ததியினருக்கு மவுண்ட்பேட்டன்-வின்சர் என்ற குடும்பப்பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[40]

1953 மார்ச் 24 இல் ராணி மேரி (ஐந்தாம் ஜோர்ஜின் மனைவி) இறந்த போதிலும், மேரி இறப்பதற்கு முன் அவர் கோரியபடி, சூன் 2 அன்று திட்டமிட்டபடி எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடைபெற்றது.[41] வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் நடந்த முடிசூட்டு விழா, முதல் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.[42] எலிசபெத்தின் அறிவுறுத்தலின் பேரில், அவரது முடிசூட்டு ஆடை பொதுநலவாய நாடுகளின் மலர்ச் சின்னங்களுடன் வடிவமைக்கப்பட்டது.[43]

பிள்ளைகள்[தொகு]

பெயர் பிறப்பு திருமணம் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்
மூன்றாம் சார்லசு 14 நவம்பர் 1948 29 சூலை 1981
(மணமுறிவு 28 ஆகத்து 1996)
டயானா இசுபென்சர் கோமகள்
  • ஆர்க்கி மவுண்ட்பேட்டன் - வின்சர்
  • லில்லிபெட் மவுண்ட்பேட்டன் - வின்சர்
9 ஏப்ரல் 2005 கேமில்லா ஷேண்ட்
இளவரசி ஆன் 15 ஆகத்து 1950 14 நவம்பர் 1973
மணமுறிவு 28 ஏப்ரல் 1992
மார்க் பிலிப்சு பீட்டர் பிலிப்சு சாவன்னா பிலிப்சு
இசுலா பிலிப்சு
சாரா பிலிப்சு
12 திசம்பர் 1992 டிமோத்தி லாரன்சு
இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகன் 19 பெப்ரவரி 1960 23 சூலை 1986
மணமுறிவு 30 மே 1996
சாரா பெர்குசன் யார்க் இளவரசி பீட்ரைசு
யார்க் இளவரசி யூஜெனி
இளவரசர் எட்வர்டு, வெசக்சு பிரபு 10 மார்ச்சு 1964 19 சூன் 1999 சோபி ரைசு-ஜோன்சு லூயி வின்ட்சர் சீமாட்டி
ஜேம்சு, செவர்ன் கோமகன்

குறிப்புகள்[தொகு]

  1. ஆட்சியாளராக, இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து திருச்சபையின் உச்ச ஆளுநராகவும் இசுக்காட்லாந்து திருச்சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.
  2. அரசியல்சட்ட முடியாட்சியின்படி, அரசி நாட்டின் தலைவர் ஆவார், எனினும் அவரது நிருவாக அதிகாரங்கள் அரசியலமைப்பு மரபுகளால் வரையறுக்கப்பட்டன.[1]
  3. பொதுநலவாய நாடுகளின் எண்ணிக்கை இவரது ஆட்சி முழுவதும் வேறுபட்டது; எலிசபெத் இறக்கும் போது இருந்த பதினான்கு நாடுகள்: அன்டிகுவாவும் பர்பியுடாவும், ஆத்திரேலியா, பகாமாசு, பெலீசு, கனடா, கிரெனடா, ஜமேக்கா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி, செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள், சொலமன் தீவுகள், துவாலு.
  4. எலிசபெத்தின் ஞானஸ்நானப் பெற்றோர்: ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரும் மேரியும்; இசுட்ராத்மோர் பிரபு; இளவரசர் ஆர்தர் (தந்தைவழிக் கொள்ளுப் பேரன்); இளவரசி மேரி (தந்தை-வழி மாமி); லேடி மேரி எல்பின்சுடன் (தாய்-வழி மாமி).[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Alden, Chris (16 May 2002), "Britain's monarchy", The Guardian
  2. 2.0 2.1 Bradford (2012), p. 22; Brandreth, p. 103; Marr, p. 76; Pimlott, pp. 2–3; Lacey, pp. 75–76; Roberts, p. 74
  3. 3.0 3.1 Brandreth, p. 103
  4. 4.0 4.1 Pimlott, p. 12
  5. 5.0 5.1 Marr, pp. 78, 85; Pimlott, pp. 71–73
  6. 6.0 6.1 Crawford, p. 26; Pimlott, p. 20; Shawcross, p. 21
  7. "No. 36973", இலண்டன் கசெட் (Supplement), 6 March 1945, p. 1315
  8. 8.0 8.1 60 Diamond Wedding anniversary facts, Royal Household, 18 November 2007, archived from the original on 3 December 2010, பார்க்கப்பட்ட நாள் 20 June 2010
  9. "Britain's new monarch to be known as King Charles III". ராய்ட்டர்ஸ். September 8, 2022 இம் மூலத்தில் இருந்து 8 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220908201050/https://www.reuters.com/world/uk/britains-new-monarch-be-known-king-charles-iii-2022-09-08/. 
  10. "No. 33153". இலண்டன் கசெட். 21 April 1926. p. 1.
  11. Hoey, p. 40
  12. Brandreth, p. 103; Hoey, p. 40
  13. Williamson, p. 205
  14. Pimlott, p. 15
  15. Brandreth, p. 124; Lacey, pp. 62–63; Pimlott, pp. 24, 69
  16. Brandreth, pp. 108–110; Lacey, pp. 159–161; Pimlott, pp. 20, 163
  17. Brandreth, pp. 108–110
  18. Bond, p. 8; Lacey, p. 76; Pimlott, p. 3
  19. Lacey, pp. 97–98
  20. Brandreth, pp. 132–139; Lacey, pp. 124–125; Pimlott, p. 86
  21. Bond, p. 10; Brandreth, pp. 132–136, 166–169; Lacey, pp. 119, 126, 135
  22. Heald, p. 77
  23. Edwards, Phil (31 October 2000), The Real Prince Philip, சேனல் 4, archived from the original on 9 February 2010, பார்க்கப்பட்ட நாள் 23 September 2009
  24. Davies, Caroline (20 April 2006), "Philip, the one constant through her life", த டெயிலி டெலிகிராப், London, archived from the original on 9 January 2022, பார்க்கப்பட்ட நாள் 23 September 2009
  25. Hoey, pp. 55–56; Pimlott, pp. 101, 137
  26. "No. 38128", இலண்டன் கசெட், 21 November 1947, p. 5495
  27. Hoey, p. 58; Pimlott, pp. 133–134
  28. Hoey, p. 59; Petropoulos, p. 363
  29. Bradford (2012), p. 61
  30. Letters Patent, 22 October 1948; Hoey, pp. 69–70; Pimlott, pp. 155–156
  31. Pimlott, p. 163
  32. Brandreth, pp. 240–241; Lacey, p. 166; Pimlott, pp. 169–172
  33. Brandreth, pp. 245–247; Lacey, p. 166; Pimlott, pp. 173–176; Shawcross, p. 16
  34. Bousfield and Toffoli, p. 72; Bradford (2002), p. 166; Pimlott, p. 179; Shawcross, p. 17
  35. Mitchell, James (2003), "Scotland: Cultural Base and Economic Catalysts", in Hollowell, Jonathan (ed.), Britain Since 1945, Wiley-Blackwell, p. 113, doi:10.1002/9780470758328.ch5, ISBN 978-0-631-20967-6
  36. Pimlott, pp. 178–179
  37. Pimlott, pp. 186–187
  38. Soames, Emma (1 June 2012), "Emma Soames: As Churchills we're proud to do our duty", The Daily Telegraph, London, archived from the original on 2 June 2012, பார்க்கப்பட்ட நாள் 12 March 2019
  39. Bradford (2012), p. 80; Brandreth, pp. 253–254; Lacey, pp. 172–173; Pimlott, pp. 183–185
  40. "No. 41948", இலண்டன் கசெட் (Supplement), 5 February 1960, p. 1003
  41. Bradford (2012), p. 82
  42. 50 facts about The Queen's Coronation, Royal Household, 25 May 2003, archived from the original on 7 February 2021, பார்க்கப்பட்ட நாள் 18 April 2016
  43. Lacey, p. 190; Pimlott, pp. 247–248

உசாத்துணைகள்[தொகு]

  • Bradford, Sarah (2012). Queen Elizabeth II: Her Life in Our Times. London: Penguin. ISBN 978-0-670-91911-6
  • Brandreth, Gyles (2004). Philip and Elizabeth: Portrait of a Marriage. London: Century. ISBN 0-7126-6103-4
  • Pimlott, Ben (2001). The Queen: Elizabeth II and the Monarchy. London: HarperCollins. ISBN 0-00-255494-1
  • Marr, Andrew (2011). The Diamond Queen: Elizabeth II and Her People. London: Macmillan. ISBN 978-0-230-74852-1
  • Crawford, Marion (1950). The Little Princesses. London: Cassell & Co.
  • Roberts, Andrew; Edited by Antonia Fraser (2000). The House of Windsor. London: Cassell & Co. ISBN 0-304-35406-6
  • Shawcross, William (2002). Queen and Country. Toronto: McClelland & Stewart. ISBN 0-7710-8056-5
  • Lacey, Robert (2002). Royal: Her Majesty Queen Elizabeth II. London: Little, Brown. ISBN 0-316-85940-0

வெளி இணைப்புகள்[தொகு]

ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
பிறப்பு: 21 ஏப்ரல் 1926 இறப்பு: 8 செப்டம்பர் 2022
அரச பட்டங்கள்
முன்னர்
ஆறாம் ஜோர்ஜ்
ஐக்கிய இராச்சியத்தின் அரசி
6 பெப்ரவரி 1952 – 8 செப்டம்பர் 2022
பின்னர்
மூன்றாம் சார்லசு