ஜம்பைக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி

ஜம்பைக் கல்வெட்டு என்பது, தமிழ்நாட்டில் ஜம்பை என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். ஜம்பை விழுப்புரம் மாவட்டத்தில், தென் பெண்ணை ஆற்றங் கரையில், திருக்கோயிலூர் நகரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஊர். இவ்வூரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிலேயே இக் கல்வெட்டு அமைந்துள்ளது. குகையின் உட்பகுதியில் அமைந்துள்ளமையால் மழை, வெயில், காற்று போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படாமல் இன்னும் தெளிவாகவே உள்ளது. கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டுள்ள இக் கல்வெட்டு தமிழ்நாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு கல்வெட்டாகக் கருதப்படுகின்றது.

கண்டுபிடிப்பு[தொகு]

1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல்துறை ஆய்வு மாணவர் ஒருவரால் இக் கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு தொல்லியல்துறை இயக்குனராக இருந்த ஆர். நாகசாமி இதனை ஆய்வு செய்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரையாக வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு அண்மைக்காலக் கல்வெட்டுக் கண்டு பிடிப்புக்களுள் முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தும் பல அறிஞர்கள் இதன் நம்பகத் தன்மை குறித்து ஐயுறவு கொண்டிருந்தனர்.

கல்வெட்டின் உள்ளடக்கம்[தொகு]

சங்ககாலத் தமிழ் இலக்கியமான புறநானூற்றில் பேசப்படுபவனும், தகடூர்த் தலைவனுமாகிய அதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது.

கல்வெட்டின் செய்தி: ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)[1]

சங்ககால அரசன் ஒருவனின் பெயர் கொண்ட கல்வெட்டுச் சான்று ஒன்று கிடைத்தது இக் கல்வெட்டின் ஒரு சிறப்பு. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் "சதிய புத்தோ" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில், சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜம்பை கல்வெட்டு". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜம்பைக்_கல்வெட்டு&oldid=3783954" இலிருந்து மீள்விக்கப்பட்டது