தீப்சின் புனித இணையர் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீப்சின் புனித இணையர் படை
Sacred Band of Thebes
Ἱερός Λόχος
செயற் காலம்கிமு 4 ஆம் நூற்றாண்டு
நாடுதீப்சு
பற்றிணைப்புதீபன்
கிளைதரைப்படை
வகைபடைத்திரள்
அளவு300 வீரர்கள்

தீப்சின் புனித இணையர் படை (Sacred Band of Thebes, பண்டைய கிரேக்கம் : Ἱερός Λόχος , Hierós Lókhos ) என்பது 150 இணை வீரர்களைக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு துருப்பு ஆகும். இது கிமு நான்காம் நூற்றாண்டில் தீபன் இராணுவத்தின் உயரடுக்கு படையாக இருந்தது. இது எசுபார்த்தாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. கிமு 371 இல் லியூக்ட்ரா சமரில் இது முக்கிய பங்குவகித்து அதிலிருந்து சிறந்த படையாக தன் ஆதிக்கத்தைத் தொடங்கியது. இது கிமு 338 இல் செரோனியா சமரில் மக்கெடோனின் இரண்டாம் பிலிப்பால் இப்படை அழிக்கப்பட்டது.

உருவாக்கம்[தொகு]

324 கி.மு. இல் ஏதெனியன் கிரேக்க உரைநடை வரலாற்று ஆசிரியரான டினார்கஸ் எழுதிய அகெய்ன்ஸ்ட் டெமோஸ்தீனஸ் சொற்பொழிவானது, புனித இணைப்படை குறித்து எஞ்சியிருக்கும் பழைய பதிவு ஆகும். புனித இணைப்படை அதன் தளபதியான பெலோப்பிடாசால் வழிநடத்தப்பட்டதாக அவர் அதில் குறிப்பிடுகிறார். மேலும் தீப்சின் (போயோட்டியா) இராணுவத்திற்கு தலைமை தாங்கிய எபமினோண்டாசுடன் சேர்ந்து, லியூக்ட்ரா சமரில் (கிமு 371) எசுபார்த்தன்களை தோல்வியுறச் செய்தனர். [1]

காட்மியாவின் பண்டைய தீபன் கோட்டையின் இடிபாடுகள்

கிரேக்க வரலாற்றாளரான புளூட்டாக் (கி.பி. 46-120) புனித இணைப்படை குறித்து எஞ்சியிருக்கும் தரவுகளை எழுதியவராவார். காட்மியாவின் தீபன் கோட்டையை ஆக்கிரமித்திருந்த எசுபார்த்தன் துணைப்படை வெளியேற்றப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, புனித இணைப்படையானது முதலில் போயோடாரான கோர்கிடாசால் உருவாக்கப்பட்டது என்று அவர் பதிவு செய்துள்ளார். கி.பி இரண்டாம் நூற்றாண்டய மாசிடோனிய எழுத்தாளர் பாலியானஸ் தனது ஸ்ட்டாகெம்ஸ் இன் வார் நூலில் கோர்கிடாசை புனித இணைப்படையின் நிறுவனராக பதிவு செய்துள்ளார். இருப்பினும், டியோ கிரிசோஸ்டம் (கி.பி. 40-120), ரோட்சின் ஐரோனிமஸ் (கி.மு. 290-230), நௌக்ராட்டிசின் அதீனியஸ் (கி.பி. 200) ஆகியோர் இப்படையை உருவாக்கிய பெருமையை எபமினோண்டாசுக்கு அளித்துள்ளனர். [1]

புனித இணைப்படை உருவாக்கப்பட்ட காலம் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவது கிமு 379 - 378 க்கு இடையிலான காலம் என்பது ஆகும். இதற்கு முந்தைய, தீபன் படைகளில் வீரர் எண்ணிக்கை 300 ஆக இருந்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. எரோடோட்டசு (கி.மு. 484-425), துசிடிடீஸ் (கி.மு. 460-395) ஆகிய இருவரும் பாரசீகர்களுடன் கூட்டு சேர்ந்த 300 தீபன்களின் உயரடுக்கு படை குறித்து பதிவு செய்துள்ளனர். அவர்கள் பிளாட்டீயா சமரில் (கிமு 479) ஏதெனியர்களால் அழிக்கப்பட்டனர். எரோடோடஸ் அவர்களை தீபன்கள் மத்தியில் உள்ளவர்களில் "முதன்மையானவர்களும், சிறந்தவர்களும்" என்று குறிப்பிடுகிறார் ( πρῶτοι καὶ ἄριστοι ). கிரேக்க வரலாற்றாளரான டியோடரஸ் டெலியம் சமரில் (கிமு 424) ஈடுபட்ட தீப்சின் 300 தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் ( ἄνδρες ἐπίλεκτοι ) குறித்து பதிவு செய்துள்ளார். இவற்றில் எதிலுமே புனித இணைப்படை என்ற பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இவை புனித இணைப்படை அல்லது குறைந்தபட்சம் அதன் முன்னோடி படையைக் குறிப்பதாக இருக்கலாம்.

கட்டமைப்பு[தொகு]

புளூடார்ச்சின் கூற்றுப்படி, சமூக வகுப்பைப் பொருட்படுத்தாமல், திறமை, தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 300 வீரர்கள் கோர்கிதாசால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [2] இவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் அளிக்கபட்டு, துணுவு கொண்ட வீரர்களாக ஆக்கபட்டனர். இவர்கள் 150 இணைகளாக பிரிக்கபட்டனர். ஒவ்வொரு இணையும் ஒரு மூத்த வீரரையும், ஒரு இளம் வீரரையும் கொண்ட ஓரினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். கடுமையான போர்களின்போது இவர்கள் மற்ற சாதாரண தரைப்படை வீரர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில் அவர்களுக்கு முன் அணிவகுத்துச் செல்வர். போரில் இணையர் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் ஒன்றாகவே போரிவர். கடும் போர்களில் மட்டுமே இந்த வீரர்கள் களமிறக்கப்படுவர். நாக்ராட்டிசின் அதீனியஸ் புனித இணைப் படையினரை "காதலர்கள் மற்றும் அவர்களுக்குப் பிடித்தவர்கள்" என்று பதிவு செய்கிறார். இவர்கள் குறித்து பாலியானஸ் விவரிக்கும்போது புனித இணைப்படையில் உள்ளவர்கள் "அன்பின் பரஸ்பர கடமைகளால் ஒருவருக்கொருவர் அர்ப்பணிக்கப்பட்ட" வீரர்கள் என்கிறார்.

இணைப் படையானது காட்மியாவில் ஒரு நிலைப் படையாக நிறுத்தப்பட்டது. இது எதிர்காலத்தில் கோட்டையை கைப்பற்ற முனையும் வெளிநாட்டுப் படைகளக்கு எதிராக தற்காப்பாக இருக்கலாம். [3] போயோட்டியன் பொலிசின் செலவில் அவர்களுக்கான இராணுவப் பயிற்சி மற்றும் வீடுகள் வழங்கப்பட்டதால், இது சிலவசமயம் "சிட்டி பேண்ட்" (ἐκ πόλεως λόχος) என்று குறிப்பிடப்படுகிறது. இவர்களின் வழக்கமான பயிற்சியில் மற்போர், நடனம் ஆகியவை அடங்கும். கோர்கிதாஸ் முன்பு ஒரு ஹிப்பார்ச்சாகப் (குதிரைப்படை அதிகாரி) பணியாற்றியதால், குதிரையேற்றப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் ஜி. டெவோடோ குறிப்பிடுகிறார். [2] படைப்பிரிவு உறுப்பினர்களின் சரியான வயதுகள் பண்டைய தரவுகளில் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும், அவர்களை எசுபார்த்தன் மேல்தட்டு வீரர்களான இப்பிசு ( ἱππεῖς ) [note 1] மற்றும் ஏதெனியன் எபிபோய் (ἔφηβοι) ஆட்சேர்ப்புவுடன் ஒப்பிடு செய்து, டிவோட்டோ மதிப்பீட்டின்படி, பயிற்சி பெற்றவர்கள் இப்படையில் 20 முதல் 21 வயது வரையில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருக்கலாம். [2] இவர்கள் 30 வயதில் தங்கள் பணிச் சேவையை முடித்திருக்கலாம் எனப்படுகிறது. [2]

குறிப்புகள்[தொகு]

  1. Hippeis, literally meaning "cavalry", is also the generic name for Greek elite units between 300 to 1000 men. Although they initially fought as horsemen, during the 4th century BC they primarily fought as hoplite heavy infantry. Compare with knights. (DeVoto, 1992)

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 G. S. Shrimpton (1971). "The Theban Supremacy in Fourth-Century Literature". Phoenix (Classical Association of Canada) 25 (4): 310–318. doi:10.2307/1088061. 
  2. 2.0 2.1 2.2 2.3 James G. DeVoto (1992). "The Theban Sacred Band". The Ancient World 23 (2): 3–19. http://www.arespublishers.com/ANCW.html. 
  3. .