கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழ் இலக்கியங்களிலும், தத்துவங்களிலும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவதற்கும், சாசனங்கள் (record) பதிவு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும்.

கா. சிவத்தம்பி என்பவர் கட்டுரை (ஒலிப்பு) "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். (க.சொக்கலிங்கம்) என்பவர் "ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது.

கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் "கட்டுரை கோவை" என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் "தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராகக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்" (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும்.

கட்டுரை வகைகள்[தொகு]

கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

  • தர்க்கக் கட்டுரை (Argumentative Essay)
  • செய்திக் கட்டுரை (Article)
  • விவரணக் கட்டுரை (Descriptive Essay)
  • பகுத்தாய்வுக் கட்டுரை (Analytical Essay)
  • செயல்முறை விளக்கக் கட்டுரை (Process Analysis Essay)
  • ஒத்தன்மை விளக்கக் கட்டுரை (Analogy Based Essay)
  • எடுத்துரைத்தல் கட்டுரை (Narrative Essay)
  • வகைப்படுத்தல் கட்டுரை (Classification Essay)
  • ஒப்பீட்டு கட்டுரை (Comparison and Contrast Essay)
  • புனைவுக் கட்டுரை (fictional essay)

ஆயினும், "ஆங்கிலத்தில் "essay, article, feature writing" என நுண்ணியதாக வேறுபடுத்துவனவற்றைத் தமிழில் இன்னும் வேறுபடுத்திச் சுட்டுவதில்லை" என்று கா. சிவத்தம்பி சுட்டிகாட்டுகின்றார்.

பொதுவாக தர்க்க கட்டுரைகளே தமிழில் முக்கியம் பெறுகின்றன. தர்க்க கட்டுரைகள் தனது வாதங்களை (premises) முன் வைத்து, வாதங்களால் நிலைநிறுத்தப்படும் முடிவுகளுக்கு (conclusions) இட்டு செல்லும். ஒரு செய்திக் கட்டுரை (article) செய்தி பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளான 'என்ன? எங்கே? எப்பொழுது? ஏன்? யார்?' என்பவற்றிற்கு உடனடியாக பதில் தர முயலும். விஞ்ஞான விடயங்களை பகிர முனையும் ஆய்வு கட்டுரைகள் விபரண, தர்க்க, செயல்முறை நடைகளை தகுந்தவாறு பயன்படுத்தி விடயங்களை முன்நிறுத்தும்.

கட்டுரையின் நடை[தொகு]

கா. சிவத்தம்பி "நடை" பின்வரும் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறார்.

  1. சொல் தெரிவு
  2. சொல்லும் திறன், உத்தி
  3. அணிகள் (சொல் அணிகள்)
  4. வாக்கியங்கள் அளவு, அமைவு முறைமை

மேலும், "நடை என்பது கவிதையோ, உரையோ கையாளப்படும் முறைமை பற்றியதாகும்", அது "எழுதுபவர்களின் ஆளுமையோடு தொடர்புடையது" என்கிறார்.

பேச்சு தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை[தொகு]

பேச்சு தமிழுக்கும் உரைநடை (கட்டுரை) தமிழுக்கும் வேறுபாடு உண்டு. பேச்சு தமிழ் பாமரர் தன்மை ("low status") உடையதாகவும், கட்டுரை தமிழ் பண்டித தன்மை ("high status") உடையதாகவும், கருதுவோரும் உளர். கட்டுரைக்கு என்றும் கருத்துச் செறிவு, தெளிவு முக்கியம். வாசகரின் நேரத்தை வீணாக்காமல் இருக்க சீரமைக்கப்பட்ட (edited), ஒழுங்கமைக்கப்பட்ட (organized), கட்டமைப்பு (structure) கட்டுரைக்கு அவசியம். ஆகையால், பேச்சு தமிழ் போல எழுத வேண்டும் என்ற கருத்து நடைமுறையில் இல்லை. இருப்பினும், பேச்சு தமிழில் உள்ள எளிய சொற்களை உபயோகப்படுத்தல் மூலம் அதன் எளிமையையும், பேச்சு தமிழில் உள்ள வேகத்தையும் கட்டுரைப் பெற்றுக் கொள்ளும்.

நாட்டுப்புற தமிழ் நடை எதிர் கட்டுரைத் தமிழ் நடை[தொகு]

தமிழ் ஒலி சார்ந்த மொழி. அதுவே அதற்குப் பலமும், பலவீனமும். ஒவ்வொரு பிரதேசத் தமிழர்களினதும் உச்சரிப்பு, நடை சற்று வேறுபடும். ஆகையால், பிரதேச மொழி நடையில் எழுதும் பொழுது, ஒரு சொல் பல வடிவங்களைப் (spelling) பெறுகின்றது. அது பரிச்சியம் அற்ற வாசகர்களைக் குழப்பி விடுகின்றது. இலக்கிய நயத்திற்காகக் கதைகளிலோ, கவிதைகளிலோ பிரதேச தமிழ் நடையைப் பயன்படுத்தினாலும், தகவல்களைத் தரும் கட்டுரைகளில் சீரிய கட்டுரைத் தமிழ் நடையைப் பயன்படுத்துவதே பன்முகத் தமிழரும் புரிந்து கொள்ள உதவும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இலக்கிய வடிவங்கள் தொகு
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டுரை&oldid=3892981" இலிருந்து மீள்விக்கப்பட்டது