துன் பாத்திமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாக்கா பண்பாட்டு அருங்காட்சியகம்

துன் பாத்திமா (மலாய் மொழி: Tun Fatimah; ஆங்கிலம்: Tun Fatimah); என்பவர் 16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலாக்கா வரலாற்றில் புகழ் பெற்ற ஒரு பெண்மணி. மலாக்கா சுல்தானகத்தின் 7-ஆவது பெண்டகாரா துன் முத்தாகிர் என்பவரின் மகள்; மலாக்காவின் 8-ஆவது அரசர் சுல்தான் மகமுட் ஷாவின் மனைவி; அதே வேளையில் மலாக்கா சுல்தானகத்தின் இராணுவத்தைப் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக வழிநடத்தியவர்.[1]

பெண்டகாரா துன் முத்தாகிர் என்பவர், பெண்டகாரா துன் அலி மற்றும் துன் குடு (Tun Kudu) ஆகியோரின் மகன் ஆவார். துன் பாத்திமாவின் தந்தையாரும் சகோதரர்களும் மலாக்காவின் 8-ஆவது அரசர் சுல்தான் மகமுட் ஷா என்பவரால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதன் பின்னர் துன் பாத்திமா; வற்புறுத்தலின் பேரில் சுல்தான் மகமுட் ஷாவை மணந்தார்.

பொது[தொகு]

1568-ஆம் ஆண்டில் மலாக்கா

செஜாரா மெலாயுவின் கூற்றுப்படி, துன் முத்தாகிர் வம்சாவழியைச் சேர்ந்த துன் பாத்திமாவின் பாட்டி துன் குடுவும் மற்றும் தாத்தா துன் அலியும்; மலாக்காவின் 5-ஆவது சுல்தானான சுல்தான் முசபர் ஷாவின் காலத்தில் மலாக்காவில் முக்கிய நபர்களாக விளங்கியவர்கள்.

துன் அலி எனும் பெயரில் இருவர் இருந்தனர். ஒருவர் மலாக்காவின் பெண்டகாரா. இன்னொருவர் துன் பாத்திமாவின் முதல் கணவர். இருவருக்கும் ஒரே பெயர் என்றாலும் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள்.

துன் குடு[தொகு]

துன் அலி தன்னுடைய பெண்டகாரா பதவியில் இருந்து விலகி, துன் குடுவின் சகோதரரான துன் பேராக் (Tun Perak) என்பவருக்கு வழிவிட வேண்டும் என்று சுல்தான் முசபர் ஷா விரும்பினார். அந்தச் சமயத்தில் துன் குடு, சுல்தான் முசபர் ஷாவின் மனைவியாக இருந்தார்.

பெண்டகாரா துன் அலியை துன் குடு மணந்தால் தான், துன் அலி பெண்டகாரா பதவியில் இருந்து விலகுவார் என்பதால் துன் குடுவை சுல்தான் முசபர் ஷா விவாகரத்து செய்தார். துன் பேராக், மலாக்காவின் பெண்டகாரா பதவிக்கு வருவதற்காக அந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

துன் பாத்திமா மீது சுல்தான் மகமுட் ஷாவிற்கு நாட்டம்[தொகு]

துன் முத்தாகிர் தனக்கு ஓர் அழகான மகள் இருப்பதை சுல்தான் மகமுட் ஷாவிடம் சொல்லாமல் மறைத்து வைத்து இருந்தார். இருப்பினும் துன் பாத்திமா பற்றி கேள்விப்பட்டு, துன் பாத்திமா மீது சுல்தான் மகமுட் ஷா நாட்டம் கொண்டார். அப்போது துன் பாத்திமா வேறு ஒருவரின் மனைவியாக இருந்தார்.[2]

துன் பாத்திமா பற்றி துன் முத்தாகிர் தன்னிடம் தெரிவிக்காதது; தனக்குத் தெரியாமல் வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது; இவற்றால் சுல்தான் மகமுட் ஷா, துன் முத்தாகிர் மீது கோபமாக இருந்தார்.

குற்றச்சாட்டுகள்[தொகு]

இந்தக் கட்டத்தில் சுல்தானின் அரசவையில் இருந்தவர்களில் பலருக்கு, துன் முத்தாகிரைப் பிடிக்கவில்லை. அவர் தன் இந்திய முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் மலாக்கா அரசாங்கத்தின் முக்கியமான பதவிகளுக்குத் தேர்ந்தெடுத்தார் எனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.[3]

துன் முத்தாகிரைப் பிடிக்காத ஒருவர்களில் ராஜா முதலியார் என்பவரும் ஒருவர். அப்போது ராஜா முதலியார் மலாக்காவின் துறைமுகத் தலைவர் (மலாய் மொழி: Syahbandar; ஆங்கிலம்: Chief of Port) பதவியில் சேவை செய்தவர். துன் முத்தாகிர் அரியணையைக் கைப்பற்ற சதி செய்கிறார் என்று, தன் நண்பரான தளபதி கோயா அசான் (Laksamana Khoja Hassan) என்பவருடன் ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டார்.[4]

பழிவாங்கும் எண்ணம்[தொகு]

துன் முத்தாகிர் தன் மகள் துன் பாத்திமாவை, சுல்தான் மகமுட் ஷாவிற்குத் திருமணம் செய்து கொடுக்க இணக்கம் தெரிவிக்காததால், துன் முத்தாகிரின் மீது பழிவாங்கும் எண்ணம் சுல்தான் மகமுட் ஷாவிற்கு ஏற்கனவே இருந்தது.[5]

துன் பாத்திமா தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு, சுல்தான் மகமுட் ஷாவைத் திருமணம் செய்து கொள்ளுமாறு சுல்தானின் அரசவை வற்புறுத்திய போதும் துன் பாத்திமா தன் கணவரை விவாகரத்து செய்ய மறுத்து விட்டார்.

திருப்புமுனை[தொகு]

துன் பாத்திமாவின் அந்த முடிவுதான் மலாக்காவின் வரலாற்றில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. துன் முத்தாகிர் மற்றும் அவரின் கணவர் துன் அலி உட்பட அவரின் குடும்பத்தில் உள்ள ஆண் உறவினர்கள் அனைவரும் தூக்கிலிடப் படுவதற்கும் வழிவகுத்தது.[3]

இரண்டாவது திருமணம்[தொகு]

வேறுவழி இல்லாமல், துன் பாத்திமா தன் விருப்பத்திற்கு மாறாக, சுல்தான் மகமுட் ஷாவை மணந்து கொள்ள இணங்கினார். அந்த வகையில் சுல்தான் மகமுட் ஷாவின் ஐந்தாவது மனைவியானார்.[4]

அரசரின் மனைவியாக இருந்த காலத்தில், துன் பாத்திமா ஒருபோதும் தன் முகத்தில் புன்னகையைக் காட்டியது இல்லை என்றும்; அவரின் குடும்பத்திற்கு எதிராக சுல்தான் மகமுட் ஷா செய்த அநீதிகளுக்குப் பழிவாங்கும் ஓர் அமைதியான வழியாகவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

துன் பாத்திமாவிற்குப் பிறக்கும் மகன் மலாக்காவின் ஆட்சியாளராக வருவார் என்று சுல்தான் மகமுட் ஷா உத்தரவாதம் அளித்த பின்னர்தான் துன் பாத்திமா குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தொடங்கினார்.

இரண்டு இளவரசர்கள்[தொகு]

துன் பாத்திமா இறுதியில் சுல்தானுக்கு இரண்டு இளவரசர்களையும் இரண்டு இளவரசிகளையும் பெற்றெடுத்துக் கொடுத்தார்.

இருப்பினும் சுல்தான் மகமுட் ஷாவின் முதல் மனைவி துன் தேஜாவுக்குப் பிறந்த மூத்த மகன் சுல்தான் அகமட் ஷா என்பவர்தான், சுல்தான் மகமுட் ஷாவிற்குப் பிறகு மலாக்காவின் 9-ஆவது சுல்தான் ஆனார். அப்போது துன் பாத்திமாவின் மகன்கள் சிறுவர்களாக இருந்தனர். அதனால் சுல்தான் பதவி வழங்கப்படவில்லை.

துன் பாத்திமாவின் பிள்ளைகள்[தொகு]

துன் பாத்திமாவுக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். ஒருவர் முதல் கணவர் துன் அலிக்குப் பிறந்தவர். மற்ற நான்கு பிள்ளைகளும் சுல்தான் மகமுட் ஷாவிற்குப் பிறந்தவர்கள்.

  1. துன் திராங் பின் துன் அலி - Tun Trang Bin Tun Ali - (முதல் கணவர் துன் அலிக்குப் பிறந்தவர்)
  2. ராஜா அலாவுதீன் இப்னி சுல்தான் மகமுட் ஷா - Raja Ala'uddin Sultan Mahmud Shah
  3. ராஜா ராடன் அலி இப்னி சுல்தான் மகமுட் ஷா - Raja Raden Ali ibni Sultan Mahmud Shah
  4. ராஜா பூத்தே பிந்தி சுல்தான் மகமுட் ஷா - Raja Puteh binti Sultan Mahmud Shah
  5. ராஜா கதீஜா பிந்தி சுல்தான் மகமுட் ஷா - Raja Khadijah binti Sultan Mahmud Shah

மலாக்காவின் ராணி பதவி[தொகு]

துன் பாத்திமா மலாக்காவின் ராணியாக வந்ததும், முதல் வேலையாகத் தன் தந்தையார் மீதும் மற்றும் தன் குடும்பத்தின் ஆண் உறவினர்கள் மீதும் வீணாகப் பழி சுமத்தியவர்கள் தூக்கிலிடப் படுவதற்கு கட்டளைகள் போட்டார்.

அதன்பிறகு அவர் தன் மக்களை கவரும் வகையில் இறையாண்மை கொண்ட ராணியாக மலாக்கா சுல்தானகத்தை வழிநடத்தினார். அந்த வகையில் போர்த்துகீசியர்கள், சுல்தான் மகமுட் ஷாவைக் காட்டிலும் ராணி துன் பாத்திமாவுக்குத் தான் அதிகமாகப் பயந்ததாகவும் சொல்லப் படுகிறது.

மலாக்கா போர் 1511[தொகு]

16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலாக்காவின் மீது படையெடுத்த போர்த்துகீசியப் படைகளுக்கு எதிரான போராட்டத்தில் மலாக்கா சுல்தானக இராணுவத்தை வழிநடத்த உதவியதாகவும் அறியப் படுகிறார். துரதிர்ஷ்டவசமாக, அந்த மலாக்கா போரில் மலாக்கா சுல்தானக இராணுவம் போர்த்துகீசிய இராணுவத்திடம் தோல்வி கண்டது.

மலாக்காவின் வீழ்ச்சிக்கு சுல்தான் மகமுட் ஷாவின் கொடுமையான செயல்களும்; மற்றும் அந்த நேரத்தில் மலாக்கா மக்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையும் காரணங்களாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது.

மலாக்கா வீழ்ச்சிக்குப் பின்[தொகு]

சுல்தான் மகமுட் ஷாவின் மூத்த மகன் சுல்தான் அகமட் ஷா திறமையற்றவராகக் கருதப்பட்டார். 1513-இல் மலாக்காவைப் போர்த்துகீசியர்களிடம் இருந்து மீட்கும் முயற்சியில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தன் தந்தை சுல்தான் மகமுட் ஷாவினால் கொல்லப் பட்டார்.[6]

மலாக்கா சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், துன் பாத்திமாவின் மூத்த மகன், முசபர் ஷா I (Muzaffar Shah I) என்பவர், பின்னர் காலத்தில் பேராக் சுல்தானகத்தை உருவாக்கினார்.

துன் பாத்திமாவின் பணிகள்[தொகு]

துன் பாத்திமாவின் இரண்டாவது மகன் ராஜா ராடன் அலி (Raja Raden Ali) எனும் அலாவுதீன் ரியாட் ஷா II (Sultan Alauddin Riayat Shah) என்பவர் சுல்தானகத்தின் முதலாவது ஆட்சியாளராக 36 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[7]

1511-இல் மலாக்கா போர்ச்சுகலிடம் வீழ்ந்த பிறகு, துன் பாத்திமாவின் பணிகள் சிறப்புக்குரியவை. புதிதாக உருவான சுல்தானகத்தை ஜொகூர், ரியாவ் தீவுகளில் இருந்து சுமத்திரா, போர்னியோ பகுதிகள் வரைக்கும் விரிவுபடுத்தினார்.

துன் பாத்திமாவின் கல்லறை[தொகு]

தன் குழந்தைகளை ஆச்சே, மினாங்கபாவ் மற்றும் போர்னியோவின் அரச குடும்பங்களில் திருமணம் செய்து வைத்தார். அதன் மூலம் அண்டை நாடுகளுடன் நல்ல ஒரு கூட்டணியை உருவாக்கிக் கொண்டார்.

துன் பாத்திமா எவ்வளவு காலம் வாழ்ந்தார்; எப்போது, ​​எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இருப்பினும், அவரின் கல்லறை இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் உள்ள கம்பார், ரியாவு தீவில் உள்ளது என்று வரலாற்றாசிரியர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

மலேசியாவில் துன் பாத்திமா நினைவிடங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Buyong bin Adil (Haji.) (1957). The Story of Tun Fatimah. Geliga. பக். 33. https://books.google.com/books?id=ngLVAAAAMAAJ. 
  2. Keat Gin Ooi (2004). Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor. ABC-CLIO. பக். 821. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-770-2. https://books.google.com/books?id=QKgraWbb7yoC&pg=PA821. 
  3. 3.0 3.1 "Tun Fatimah was married to Tun Ali, and Sultan Mahmud resented for not showing Tun Fatimah to His Majesty first. As a result of being slandered, the Bendahara Seri Maharaja, his brother, Seri Nara di-Raja, his son, Tun Hasan, and his son-in-law, Tun Ali, were killed by the Sultan. After Bendahara Seri Maharaja died, Tun Fatimah was forced by Sultan Mahmud to marry her". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  4. "Mandalia and Khodja Hassan agreed to defame the Bendahara Seri Maharaja by accusing the Bendahara of wanting to usurp the throne of Melaka. This caused the Sultan to sentence the Bendahara Seri Maharaja and all his family members except Tun Fatimah to death". பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  5. Liaw Yock Fang (2013). A History of Classical Malay Literature. Yayasan Pustaka Obor Indonesia. பக். 364. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-979-461-810-3. https://books.google.com/books?id=YAsZDAAAQBAJ&pg=PA364. 
  6. Jaime Koh; Stephanie Ho Ph.D. (22 June 2009). Culture and Customs of Singapore and Malaysia. ABC-CLIO. பக். 10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-35116-7. https://books.google.com/books?id=MWlFCQAAQBAJ&pg=PA10. 
  7. Jaime Koh; Stephanie Ho Ph.D. (22 June 2009). Culture and Customs of Singapore and Malaysia. ABC-CLIO. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-35116-7. https://books.google.com/books?id=MWlFCQAAQBAJ&pg=PA10. 

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Buyong bin Adil (Haji.) (1957). The Story of Tun Fatimah. Geliga. p. 33.
  • Keat Gin Ooi (2004). Southeast Asia: A Historical Encyclopedia, from Angkor Wat to East Timor. ABC-CLIO. p. 821. ISBN 978-1-57607-770-2.
  • Liaw Yock Fang (2013). A History of Classical Malay Literature. Yayasan Pustaka Obor Indonesia. p. 364. ISBN 978-979-461-810-3.
  • Ruzy Suliza Hashim (2003). Out of the shadows: women in Malay court narratives. Penerbit Universiti Kebangsaan Malaysia. p. 207. ISBN 978-967-942-637-3.
  • Malay Annals. Longman, Hurst, Rees, Orme, and Brown. 1821. p. 349.
  • Jaime Koh; Stephanie Ho Ph.D. (22 June 2009). Culture and Customs of Singapore and Malaysia. ABC-CLIO. p. 10. ISBN 978-0-313-35116-7.
  • R.O. Winstedt (1992). A History of Johore. The Malaysian Branch of the Royal Asiatic Society (MBRAS). hlm. 17. ISBN 9839961462.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்_பாத்திமா&oldid=3898373" இலிருந்து மீள்விக்கப்பட்டது