மீட்சி (தமிழ்நாட்டு சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மீட்சி என்பது 1980களின் துவக்கத்தில் இருந்து வெளியான ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியராக பிரம்மராஜன் இருந்தார்.[1]

மீட்சி 1983 ஆண்டில் இருந்து வெளிவந்தது. இது தமிழ்நாட்டில் இருந்து வெளியானது. மீட்சி நவீன ஓவியங்களை அட்டைப் படமாக வெளியிட்டது. இந்த இதழில் சர்வதேசக் கவிஞர்களை அறிமுகம் செய்து கட்டுரைகள் எழுதப்பட்டு, அவர்களின் கவிதைகளும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. அவற்றில் குறிப்பிடதக்கதாக ஆர்தர் கெஸ்லர் பற்றிய நினைவுகளும் வரலாறு பற்றிய சிந்தனைகளும், ஜோர்ஜ் லூயி போர்ஹே கவிதைகள் எகுதா அமிக்காய் என்ற எபிரேய மொழிக் கவிஞர், அவரது கவிதைகள்; டென்னசி வில்லியம்ஸ் கவிதைகள் போன்றவை ஆகும். டி. எஸ். எலியட்டின் தி வேஸ்ட் லேண்ட் ஐ முழுமையாக மொழிபெயர்த்து பாழ் நிலம் என மீட்சி வெளியிட்டது.

மேலும் ஜோர்ஜ் லூயி போர்கோயின் வாளின் வடிவம், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய செவ்வாய்க்கிழமை மதிய உறக்கம் கதைகளின் மொழிபெயர்ப்பும் மீட்சியில் வந்தன. வில்லியம் ஃபாக்னர் செவ்வி, ஜோசப் பிராட்ஸ்கி மீதான விசாரனை (லெனின்கிராட் நகரில் நடைபெற்றது), சர்ரியலிசத்தின் கவிதைக் கோட்பாடுகள் இத்தகைய விஷயங்களையும் மீட்சி வெளியிட்டது.

சுய படைப்பான சிறுகதைகளும் கணிசமான அளவில் மீட்சியில் வெளிவந்தன. கோணங்கி, வண்ணதாசன், விமலாதித்த மாமல்லன், சுகுமாரன் ஆகியோரின் வித்தியாசதாக கதைகள் வெளியாயின. நல்ல கவிதைகளையும் மீட்சி வெளியிட்டது.

மீட்சியில் கம்யூனிஸ்டுகளும் கலையும் என்ற தலைப்பில் ஞானி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். திரைப்படம் பற்றிய கட்டுரைகளும், வண்ணதாசன் சிறுகதைகள், சா. கந்தசாமி புதினங்களுக்கான விமர்சனக் கட்டுரைகளும் மற்றும் பல நூல்கள் பற்றிய விமர்சனங்களும் வந்திருக்கின்றன.

மீட்சியின் 10ஆம் இதழ் இசை சிறப்பிதழ்போல வெளியானது. அந்த இதழில் கர்நாடக இசை விவாதத்திற்கான சில குறிப்புகள் என்ற சிறப்புக் கட்டுரையைக் கொண்டிருந்தது. இசை— சில அடிப்படை அணுகல்கள் குறித்து பிரம்மராஜன்—சுகுமாரன் ஒரு கட்டுரை எழுதினர். செய்தி என்ற தி. ஜானகிராமனின் இசை சம்பந்தமான ஒரு கதையும், அவருடைய நெகிழ்ச்சி எனும் கட்டுரையும் வெளியாயின.

11ஆம் இதழ் ஆத்மாநாம் நினைவு இதழாக வெளியானது. 12ஆம் இதழ் (1984 அக்டோபர்—நவம்பர் ) ஓராண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளியானது. சுந்தர ராமசாமி, வண்ணதாசன், கோணங்கி கதைகள் மற்றும் கவிதைகளும் கட்டுரைகளும் இடம்பெற்றன.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.