பாசேனியஸ், அரசப் பிரதிநிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசேனியஸ்
உரோமில் உள்ள கேபிடோலின் அருங்காட்சியகங்களில் உள்ள பாசேனியஸ்சின் மார்பளவு சிலை.
எசுபார்த்தாவின் அரச பிரதிநிதி
ஆட்சிக்காலம்கிமு 479–478
முன்னையவர்Cleombrotus
பின்னையவர்Pleistarchus
இறப்புகி.மு. 477
எசுபார்த்தா
குழந்தைகளின்
பெயர்கள்
GreekΠαυσανίας
மரபுஅகியட் வம்சம்
தந்தைCleombrotus
தாய்தியானோ

பாசேனியஸ் (Pausanias ( கிரேக்கம்: Παυσανίας  ; இறப்பு c. கிமு 477) [1] என்பவர் ஒரு எசுபார்த்தன் அரசப் பிரதிநிதி மற்றும் தளபதி ஆவார். இவர் கிமு 479 இல், கிரேக்க நகர அரசுகளின் கூட்டணியின் ஒருங்கிணைந்த தரைப் படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றார். அப்போது இவரது தலைமையிலான படைகள், கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீக படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவந்த பிளாட்டீயா போரில் முக்கிய வெற்றியைப் பெற்றன. பாரசீகர்கள் மற்றும் பாரசீக கூட்டாளிகள் மீதான வெற்றிகளுக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகு, பௌசானியாஸ் பாரசீக மன்னரான செர்கசுக்கு கிரேக்கர்களைக் காட்டிக்கொடுக்க சதி செய்ததாக சந்தேகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கிமு 477 இல் எசுபார்த்தாவில் சக குடிமக்களால் தண்டிக்கப்பட்டு உணவு வழங்ககப்படாமல் பட்டினியால் இறந்தார். துசிடிடீசின் பெலோபொன்னேசியப் போரின் வரலாறு, டியோடரஸின் பிப்லியோதெகா ஹிஸ்டோரிகா மற்றும் சில பாரம்பரிய ஆதாரங்களின் படி இவரது வாழ்க்கை அறியப்படுகிறது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

அனைத்து எசுபார்டன் குடிமக்களையும் ( ஸ்பார்டியேட் ) போலவே, பாசேனியஸ் தனது ஏழு வயதில் இருந்து தீவிர (போர்) பயிற்சியில் ஈடுபட்டு முப்பது வயது வரை வழக்கமான சிப்பாயாக இருந்திருப்பார்கள். பாசேனியஸ் அஜியாட்ஸ் என்ற அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாமல் மற்ற குடிமக்களைப் போலவே இவருக்கும் பயிற்சிகளும், பணிகளும் அளிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண் எசுபார்டன் குடிமகனும் தங்கள் வாழ்வை தங்கள் கொள்கை மற்றும் அதன் சட்டங்களுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் தங்கள் குடியுரிமையைப் பெற்றனர். [2]

எசுபார்டன் பரம்பரை[தொகு]

இவர் அரசப் பிரதிநிதியான கிளியோம்ப்ரோடசின் மகனாகவும், அப்போது இறந்த மன்னர் முதலாம் லியோனிடசின் மருமகனாகவும், அஜியாட்சின் எசுபார்த்தன் அரச குடும்பத்தின் வாரிசாக இருந்தார். ஆனால் இவர் நேரடி வரிசையிலான வாரிசு இல்லை, ஏனெனில் இவர் முதலில் பிறந்த மகன் அல்ல. லியோனிடாசின் மரணத்திற்குப் பிறகு, மன்னரின் மகன் பிளீஸ்டார்கஸ் சிறுவனாக இருந்ததால், பாசேனியஸ் எசுபார்த்தாவின் அரசப் பிரதிநிதியாக பணியாற்றினார். பிற்காலத்தில் எச்பார்த்தாவின் அரசராக பொறுபேற்ற பிளீஸ்டோனாக்சின் தந்தை பாசேனியஸ் ஆவார். பாசேனியசின் மற்ற மகன்கள் கிளியோமினெஸ் மற்றும் நஸ்டீரியா ஆகியோராவர்.

போர் சேவை[தொகு]

கிமு 479 இல் பிளாட்டியா போரில் மார்தோனியசு தலைமையிலான பாரசீகர்கள் மற்றும் பாரசீக கூட்டாளிகளை வெற்றிகொள்ள கிரேக்க படைகள் பாசேனியசால் வழிநடத்தப்பட்டன.

முதலாம் லியோனிடசின் மகன் மன்னர் முதலாம் பிளீஸ்டார்கோஸ் கட்டளைகளை இடமுடியாத சிறுவனாக இருந்ததால், டோரியஸின் மகனான யூரியானாக்சுடன் இணைந்து எசுபார்த்தன் இராணுவத்தின் தலைவராக பாசேனியஸ் இருந்தார். பாரசீக படையெடுப்பை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட எலனிக் லீக்கின் உதவிக்கு 5000 எசுபார்த்தன்களை பாசேனியஸ் வழிநடத்தினார். [3] கிமு 479 இல் பிளாட்டியா போரில் மார்தோனியசு தலைமையிலான பாரசீகர்கள் மற்றும் பாரசீக கூட்டாளிகளின் படைகளை எதிர்த்த கிரேக்க நகர அரசுகளின் கூட்டணிப் படையை வெற்றிபெற வைக்க பாசேனியஸ் வழிநடத்தினார். [4] பிளாட்டியா போர் சில சமயங்களில் குழப்பமான போராக பார்க்கப்படுகிறது, [5] இந்தப் போரில் பாசேனியசின் தந்திரோபாய திறமைக்கான சான்றுகளை வரலாற்று அறிஞர்கள் காண்கிறார்கள். [6] எரோடோடசு, "கிளியோம்ப்ரோடஸின் மகனும் அனாக்ஸாண்ட்ரிடாஸின் பேரனுமான பாசேனியஸ் நாம் அறிந்தவற்றில் மிகவும் புகழ்பெற்ற வெற்றியைப் பெற்றார்". [7]

பிளாட்டியா மற்றும் மைக்கேல் போரில் பெற்ற வெற்றிகளுக்குப் பிறகு, கூட்டணிப் படையில் ஏதென்ஸ் ஆதிக்கம் செலுத்துவதால், எசுபார்டன்கள் சின்ன ஆசியாவின் கிரேக்க நகரங்களை விடுவிப்பதில் ஆர்வத்தை இழந்தனர். பின்னர் எசுபார்த்தா கிரேக்க இராணுவத்திற்கு கட்டளையிட பாசேனியசை திருப்பி அழைத்துக்கொண்டது.

பாசீகத்துடன் சந்தேகத்திற்குரிய ஒப்பந்தம்[தொகு]

பிளாட்டியா போருக்கு முன் பௌசனியாஸ் கடவுள்களுக்கு பலி கொடுக்கிறார்.

கிமு 478 இல், பாசேனியஸ் பாரசீகர்களுடன் சேர்ந்து சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு எசுபார்த்தாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டார். சைப்பிரசு மற்றும் பைசான்டியம் பாசேனியசால் கைப்பற்றப்பட்ட பின்னர், போர்க் கைதிகளாக இருந்த பாரசீக மன்னரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரை விடுவித்தார் என்பது ஒரு குற்றச்சாட்டு. கைதிகள் தப்பித்துவிட்டார்கள் என்று பாசேனியஸ் வாதிட்டார். மற்றொரு குற்றச்சாட்டு என்னவென்றால், எரிட்ரியாவின் கோங்கிலோஸ் வழியாக செர்க்சசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் இவர் செர்க்சசுக்கு உதவவும், எசுபார்த்தாவை பாரசீகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் விரும்புவதாகக் கூறினார். பதிலுக்கு, பாசேனியஸ் செர்க்சசின் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். செர்க்சசஸ் தனது திட்டங்களுக்கு ஒப்புக்கொண்ட பிறகு, பாசேனியஸ் பாரசீக பழக்கவழக்கங்களை பின்பற்றி பாரசீக உயர்குடியினரைப் போல உடை அணியத் தொடங்கினார். போதிய ஆதாரம் இல்லாததால், பாசேனியஸ் நிரபராதி என விடுவிக்கப்பட்டு, ஹெர்மியோன் நகரத்தில் இருந்து ஒரு கப்பலை எடுத்துக்கொண்டு தனது சொந்த விருப்பத்தின் பேரில் எசுபார்த்தாவை விட்டு வெளியேறினார். [8]

துசிடிடீஸ் மற்றும் புளூட்டார்க்கின் கூற்றுப்படி [9] ஏதெனியர்கள் மற்றும் பல எலனியக் கூட்டணியின் கூட்டாளிகள் பாசேனியசின் ஆணவத்தினால் அதிருப்தி அடைந்தனர்.

கிமு 477 இல், எசுபார்டான்கள் மீண்டும் திரும்பிவருமாறு பாசேனியசை அழைத்தனர். பாசேனியஸ் எசுபார்த்தாவுக்கு வந்தவுடன் எபோர்களால் சிறையில் அடைக்கப்பட்டார், ஆனால் பின்னர் பாசேனியஸ் விடுவிக்கப்பட்டார். பின்னர், பாரசீகர்களுடன் தொடர்புகொள்வதற்கு பாசேனியசால் பயன்படுத்தப்பட்ட தூதுவர்களில் ஒருவர், எசுபார்த்தன் எபோர்களுக்கு எழுத்துப்பூர்வ ஆதாரங்களை (பாசேனியசாசின் நோக்கங்களைக் குறிப்பிடும் கடிதம்) வழங்கினார். [10]

தூதர் வழங்கிய கடிதத்தை நம்புவதற்கு எபோர்கள் ஆர்வமில்லாததால், தூதுவர் தனக்கு பாசேனியசுடன் சம்பந்தம் இருப்பதை அவரை நேரில் சந்தத்து நிருபிக்க முன்வந்தார். கடிதத்தில் பாசேனியஸ் பாரசீகர்களிடம் தூதரை கொல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தார். தூதுவரும் எபோர்களும் போசிடான் (டைனாரோன்) கோயிலுக்குச் சென்றனர். எபோர்கள் சன்னதியில் ஒளிந்து இருந்தனர் மேலும் தூதுவர் பாசேனியசுக்காக காத்திருந்தார். பாசேனியசு வந்ததும், அந்த தூதர் பாசேனியசை எதிர்கொண்டார், கடிதத்தைக் கொண்டுவந்தவரைக் கொல்லுமாறு கடிதத்தில் ஏன் கூறப்பட்டுள்ளது என்று கேட்டார். வருந்துவதாகவும், தவறை மன்னிக்குமாறும் தூதரிடம் கேட்டுக் கொள்வதாகவும் பாசேனியஸ் கூறினார். பாசேனியஸ் தூதருக்கு பரிசுகளை வழங்கினார். எபோர்கள் கூடாரத்திலிருந்து இவர்களின் உரையாடலைக் கேட்டனர். [11]

இறப்பு[தொகு]

எசுபார்த்தன் எபோர்களால் தொடரப்பட்ட பாசேனியசின் மரணம்.
பாசேனியஸ், 18 ஆம் நூற்றாண்டு அச்சு

துசிடிடீஸ், டியோடோரஸ், பாலியானஸ் ஆகியோரின் கூற்றுப்படி, எபோர்களால் பின்தொடரப்பட்ட, பாசேனியஸ் அதீனா "பிரேசன் ஹவுஸ்" (Χαλκίοικος, சால்கியோய்கோஸ்) (ஸ்பார்டாவின் அக்ரோபோலிஸில் அமைந்துள்ளது) கோவிலில் தஞ்சம் புகுந்தார். பாசேனியசின் தாய் தியானோ ( பண்டைக் கிரேக்கம்Θεανὼ ) உடனடியாக கோவிலுக்குச் சென்று, வாசலில் ஒரு செங்கலை வைத்து: "ஸ்பார்டன் ஆக தகுதியற்றவன், நீ என் மகன் அல்ல", ( 1.1 இன் படி) என்றாள். தாயின் செயலைப் பின்பற்றி, ஸ்பார்டான்கள் செங்கற்களால் வாசலை அடைத்து, பாசேனியசை பட்டினியால் இறக்கும்படி செய்தனர்.

பரவலர் பண்பாட்டில்[தொகு]

ரிச்சர்ட் நார்டன் மற்றும் தாமஸ் சதர்ன் ஆகியோரால் எழுதப்பட்ட "Pausanias, the betrayer of his country a tragedy, acted at the Theatre Royal by His Majesties servants" என்ற நாடகத்தில் பாசேனியஸ் ஒரு மைய கதாபாத்திரமாக உள்ளார். [12]

குறிப்புகள[தொகு]

  1. Diodorus XI. 41
  2. "Xenophon, Constitution of the Lacedaimonians, chapter 4, section 6". www.perseus.tufts.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-20.
  3. Herodotus (1885). The Histories 9.10. https://archive.org/details/historiesherodo01herogoog. 
  4. Herodotus, Historia 9
  5. J Boardman ed., The Oxford History of the Classical World (Oxford 1991) p. 48
  6. A R Burn, Persia and the Greeks (Stanford 1984) pp. 533–39
  7. R Waterfield trans, Herodotus: The Histories (Oxford 2008) p. 567
  8. Thucydides, History of the Peloponesian War 1.128–130
  9. Plutarch, Cimon 6 and Aristeides 23
  10. Thucydides I.133 s:History of the Peloponnesian War/Book 1#Second Congress at Lacedaemon - Preparations for War and Diplomatic Skirmishes - Cylon - Pausanias - Themistocles
  11. Diodorus XI. 45
  12. "Pausanias, the betrayer of his country a tragedy, acted at the Theatre Royal by His Majesties servants"