வாசகன் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாசகன் என்பது 1970 களில் வெளியான தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், சென்னையில் இருந்து வெளிவந்தத இதழ் ஆகும்.

வரலாறு[தொகு]

வாசகன் இதழ் 1973 செப்டம்பரில் சென்னையில் துவக்கப்பட்டு வெளியானது. இது ‘மெட்ராஸ் யூத் ஃபோரம்' என்ற அமைப்பின் வெளியீடாக வெளிவந்தது. இது மாலன், அக்ரிஷ் என இருவரையும் ஆசிரியர்களாகக் கொண்டிருந்தது. இதை பத்திரிகை என்றுகூட அவர்கள் சொல்ல விரும்பவில்லை. ஒரு தமிழ் இலக்கிய வரிசை ('எ டமில் லிட்டரரி ஸிரீஸ்’) என்று அறிவித்துக் கொண்டார்கள்.

வாசகனின் முதல் இதழ் 1973 செப்டம்பரில் வெளியாயிற்று. இதன் ஏழாவது இதழ் 1976 ஆகத்தில் வெளியானது. ஒவ்வொரு இதழிலும் தரமான கவிதைகளையும், வித்தியாசமான சிறுகதைகளையும், கவிதை, கலை சம்பந்தமான சிந்தனைக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது. தமிழில் ஆங்கிலத்தைக் கலந்து எழுதுவதில் இந்த இதழ் உற்சாகம் காட்டியது. இதில் வந்த சில தலைப்புகள் ஆங்கிலத்திலேயே இருந்தன. PERVERT பாண்டியனின் A to Z (இது இலக்கிய அக்கப்போர் பகுதி); ‘SORRY FOR THE DISTURBANCE’ ( ஆசிரியர் குறிப்புகள்). சில கவிதைகள், கதைகள் ஆங்கிலத்திலேயே தலைப்பு பெற்றிருந்தன.

எழுத்தாளர்கள், கவிஞர்கள் வரைந்த புதுமை ஓவியங்களை சில இதழ்களின் அட்டைச் சித்திரமாக வாசகன் அச்சிட்டு அவர்களது முயற்சியை ஊக்குவித்தது. எடுத்துக்காட்டாக, இரண்டாவது இதழில் பாலகுமாரன் வரைந்த ஓவியம், மூன்றாவது இதழ் அட்டையில் கல்யாண்ஜி ஓவியம் வெளியானது.

இதன் ஏழாவது இதழ் தனிச்சிறப்புடன் வெளியானது. உண்மையில் அது ஒரு இதழாக அல்லாமல் ஒரு தனிப் புத்தகம் போல வெளியானது. அது பதினொரு சிறுகதைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டது. வாசகன் ஒரு தலைமுறையின் பதினொன்று சிறுகதைகள் என்றே அது பெயரிட்டிருந்தது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 189–191. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசகன்_(இதழ்)&oldid=3381548" இலிருந்து மீள்விக்கப்பட்டது