செயசிம்ம சித்தராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயசிம்மன்
சித்தராசன்
குசராத்தின் மன்னன்
ஆட்சிக்காலம்அண். 1092 – அண். 1142 CE
முன்னையவர்முதலாம் கர்ணதேவன்
பின்னையவர்குமாரபாலன்
துணைவர்லீலாவதி தேவி
குழந்தைகளின்
பெயர்கள்
காஞ்சனா தேவி
பேரரசுசோலாங்கிப் பேரரசு
தந்தைகர்ணன்
தாய்மாயாநல்லா தேவி

செயசிம்மன் (Jayasiṃha) (ஆட்சிக்காலம் 1092 – 1142 ), சித்தராசா (Siddharāja) என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட இவன் இந்தியாவின் மேற்குப் பகுதிகளை ஆண்ட சோலாங்கி வம்சத்தை ஆண்ட இந்திய மன்னனாவான்.

இவனது தலைநகரம் இன்றைய குசராத்தில் உள்ள அனாகில்லபதானில் (நவீன பதான்) அமைந்திருந்தது. குசராத்தின் பெரும் பகுதிகளைத் தவிர, ராஜஸ்தானின் சில பகுதிகளுக்கும் இவனது கட்டுப்பாடு விரிவடைந்தது: சகாம்பரியின் சகமானா அரசன் அர்னோராசாவைக் கட்டுப்படுத்தினான். மேலும், முன்னாள் நாட்டுலாவின் சகமானா ஆட்சியாளர் ஆசாராசா இவனது மேலாதிக்கத்தை ஒப்புக்கொண்டான். செயசிம்மன் பரமாரர்களை தோற்கடித்து மால்வாவின் ஒரு பகுதியையும் (இன்றைய நாளில் மத்தியப் பிரதேசம்) இணைத்துக் கொண்டான். சந்தேல மன்னன் மதனவர்மனுக்கு எதிராகவும் முடிவில்லாத போரை நடத்தினான்.

செயசிம்மனின் மகள் காஞ்சனா அர்னோராசாவை மணந்தாள். இவர்களின் மகன் சோமேசுவரன் ( பிருத்விராச் சௌகானின் தந்தை) சோலாங்கி அரசவையில் செயசிம்மனால் வளர்க்கப்பட்டான்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

செயசிம்மன் சோலங்கி மன்னன் முதலாம் கர்ணனுக்கும் அவனது இராணி மாயநல்லா தேவிக்கும் மகனாகப் பிறந்தான். நாட்டுப்புறக் கதைகளின்படி, இவன் பாலன்பூரில் பிறந்ததாகத் தெரிகிறது. ஆனால் இதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. சோலாங்கிய அரண்மனையின் வயதான பெண்களால் செயசிம்மன் ("வெற்றிச் சிங்கம்") என்று அழைக்கப்பட்டான். பின்னர் "சித்தராசா" என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டான்.[1]

12 ஆம் நூற்றாண்டின் சைன அறிஞர் ஹேமச்சந்திரன் "கர்ணன் ஒரு மகனுக்காக லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்தான் இலட்சுமி எனவும், அவன் தேவியின் கோவிலை மீட்டெடுத்து கவர்ச்சியான அரம்பையர்களயும், அச்சுறுத்தும் அரக்கர்களையும் பொருட்படுத்தாமல் நீண்ட காலம் தவம் செய்தான் எனவும். இறுதியில், இலட்சுமி தேவி அவன் முன் தோன்றி, அவனை ஆசீர்வதித்தார் எனவும். அதன் விளைவாக செயசிம்மன் பிறந்தான்" எனவும் ஒரு புராணக்கதையைக் குறிப்பிடுகிறார்.[1]

இராணுவ வாழ்க்கை[தொகு]

Map
செயசிம்ம சித்தராசனின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகளின் இடங்கள்[2]

சௌராட்டிரம்[தொகு]

பல இலக்கிய ஆதாரங்களும் கல்வெட்டுகளும் சௌராட்டிர அரசனான கங்கரன் அல்லது நவகானை செயசிம்மன் தோற்கடித்ததாக நிறுவுகின்றன. மெருதுங்காவின் கூற்றுப்படி, கங்கரன் ஒரு அபிரா பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். இது சுடாசமா வம்சத்தின் மன்னன் கங்கரனைப் பற்றிய குறிப்பு என்று கூறப்படுகிறது. செயசிம்மனின் தாகோத் கல்வெட்டு, இவன் சௌராட்டிர மன்னனை சிறையில் அடைத்ததாக பெருமை கொள்கிறது; கங்கரன் மீதான இவனது வெற்றிக்கு இது ஒரு குறிப்பாகும்.[3]

பார்டிக் புராணங்களின் படி, கங்கரன் செயசிம்மனால் விரும்பப்பட்ட ஒரு பெண்ணை மணந்தான் எனவும், இதன் காரணமாக செயசிம்மன் அவன் மீது படையெடுத்தான் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது நம்பகமானதாக இல்லை. [4] சைன வரலாற்றாசிரியர் பிரபச்சந்திரா, நவகானைத் தாக்குவதற்காக முதலில் கிருத்திபாலன் ( குமாரபாலனின் சகோதரர்) தலைமையில் ஒரு படையை சித்தராசா அனுப்பியதாக குறிப்பிடுகிறார். இந்த இராணுவம் தோல்வியுற்றபோது, உதயணன் தலைமையில் மற்றொரு படை அவருக்கு ஆதரவாக அனுப்பப்பட்டது. இந்த கூட்டு இராணுவம் நவகானை தோற்கடித்தது. ஆனால் போரில் உதயணன் கொல்லப்பட்டான். செயசிம்மன் பின்னர் கங்கரனைக் கொன்றதாக பிரபச்சந்திரா குறிப்பிடுகிறார். மெருதுங்காவின் கூற்றுப்படி, நவகான் என்பது கங்கரனின் மற்றொரு பெயர். எனவே, உதயணன் கொல்லப்பட்ட போரில் கங்கரன் முழுமையாக அடங்கிவிடவில்லை என்று தோன்றுகிறது. [4]

கங்கரன் செயசிம்மனை 11 முறை தோற்கடித்ததாக மெருதுங்கா கூறுகிறார். ஆனால் 12வது போரில் சோலாங்கி மன்னன் செயசிம்மன் வெற்றி பெற்றான். மெருதுங்காவின் கூற்றை உண்மையில் எடுத்துக்கொள்ள முடியாது: 12 என்பது சமண எழுத்தாளர்களின் விருப்பமான எண், மேலும் அவர் போரின் தீவிரத்தை வலியுறுத்த எண்ணைப் பயன்படுத்தியிருக்கலாம். கங்கரன் வர்த்தமானையும் மற்ற நகரங்களையும் கோட்டைவிட்டதாக மெருதுங்கா கூறுகிறார். அவன் ஆயுதங்களால் இறக்க விரும்பவில்லை, எனவே, எதிரிகள் கோட்டைகளை அளவிடுவதில் வெற்றி பெற்றால் தன்னை நாணயங்களால் கொல்லுமாறு தனது மருமகனிடம் கேட்டுக் கொண்டதாகவும், இதன் விளைவாக, அவன் நாணயங்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளால் அடித்துக் கொல்லப்பட்டான் எனவும் கூறுகிறார்.[4]

செயசிம்ம சூரியின் கூற்றுப்படி, கங்கரனை தோற்கடித்த பிறகு, செயசிம்மன் சஜ்ஜானா என்பவனை கிர்நார் (சௌராட்டிராவில் உள்ள ஒரு நகரம்) ஆளுநராக நியமித்தான். கிர்நாரில் கிடைத்த கிபி 1120 ஆம் கல்வெட்டு இதை உறுதிப்படுத்துகிறது. மெருதுங்காவும் இந்த கூற்றை ஆதரிக்கிறார். சௌராட்டிராவில் உள்ள கங்கரனின் அனைத்துப் பகுதிகளையும் ஜெயசிம்மனால் கைப்பற்ற முடியவில்லை என்பதை வரலாற்றுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன. செயசிம்மனின் வாரிசான குமாரபாலன் அபிராசுக்கு எதிராக ஒரு படையை அனுப்ப வேண்டியிருந்தது. பிரபச்சந்திராவின் கூற்றுப்படி, கங்கரனின் இராச்சியத்தை ஜெயசிம்மனால் இணைக்க முடியவில்லை, ஏனெனில் கங்கரனின் ஏராளமான ஆதரவாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பை வழங்கினர். [4]

மாளவத்தின் பரமாரர்கள்[தொகு]

கிபி 1130 களில், செயசிம்மன் மால்வாவின் (அல்லது அவந்தி நாடு ) பரமார அரசனை தோற்கடித்தான். மற்ற எல்லா ஆட்சியாளர்களையும் பயமுறுத்திய மால்வாவின் மன்னனை இவன் சிறையில் அடைத்ததாக வாட்நகர் பிரசச்தி கல்வெட்டில் இவனது பின்வந்தவர்கள் செதுக்கியுள்ள்னர்.[5] தாகோத் நகர கல்வெட்டு இவனது வெற்றியை உறுதிப்படுத்துகிறது. ஆனால் பரமார அரசனின் பெயரைக் குறிப்பிடவில்லை. தலவாரா கல்வெட்டு, நரவர்மனின் பெருமையை செயசிம்மன் தாழ்த்தினான் என்று கூறுகிறது. ஆனால் உஜ்ஜயினி கல்வெட்டு, நரவர்மனின் வாரிசான யசோவர்மனை செயசிம்மன் தோற்கடித்ததாக கூறுகிறது. [6] பல வெளியீடுகள் இந்த வெற்றியைக் குறிப்பிடுகின்றன. [7]

கலாச்சார நடவடிக்கைகள்[தொகு]

இலக்கியம்[தொகு]

செயசிம்மன் பல அறிஞர்களை ஆதரித்தான் மேலும் குசராத்தை கற்றல் மையமாகவும், இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க மையமாகவும் மாற்றினான்.[8]

குறிப்பாக, இவன் சைன அறிஞரான ஹேமச்சந்திரனை ஆதரித்தான். சைன வெளியீடுகளின்படி செயசிம்மன் மால்வா மீது போரிட்டு பரமார மன்னனை தோற்கடித்த போது பல சமசுகிருத நூல்களை குசராத்து கொண்டு வந்தார். இந்த கையெழுத்துப் பிரதிகளில் ஒன்று 11 ஆம் நூற்றாண்டின் பரமார மன்னன் போஜனால் எழுதப்பட்ட இலக்கணக் கட்டுரையை உள்ளடக்கியது. இந்தப் பணியால் ஈர்க்கப்பட்ட செயசிம்மன், இலக்கணத்தைப் பற்றிய எளிமையானதும் விரிவான ஆய்வுக் கட்டுரையை எழுத ஹேமச்சந்திரனை நியமித்தார். ஹேமச்சந்திரன் பல படைப்புகளை ஆலோசித்த பிறகு புதிய கட்டுரையை முடித்தார். மேலும் புதிய படைப்பிற்கு சித்த ஹேம சப்தானுசாசனம் என மன்னனின் பெயரிட்டார்.[9][10] செயசிம்மன் இந்தியா முழுவதும் இந்த கட்டுரையை விநியோகித்தான். [9] ஹேமச்சந்திரன் திவ்யாச்சர்ய காவ்யம் போன்ற பிற படைப்புகளையும் இயற்றினார். அவை செயசிம்மனின் மரணத்திற்குப் பிறகு முடிக்கப்பட்டன.[8]

நாணயங்கள்[தொகு]

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிக்கு அருகில் உள்ள பாண்ட்வாகாவில் சித்தராசாவின் தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தங்க நாணயங்கள் வட்டமான வடிவத்தில் சித்தராசாவின் உருவத்தைக் கொண்டுள்ளது. வடக்கு குசராத்தில் உள்ள வந்தலி, ஜூனாகத், பில்வாய் ஆகிய இடங்களில் இவனது வெள்ளி நாணயங்களும் கிடைத்துள்ளன. இந்த வெள்ளி நாணயங்களின் முகப்பில், நாகரி எழுத்துக்களில் மூன்று வரியில் "சிறீ செயசிம்மன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நாணயங்களில் "பிரியா" என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. இதன் பின்புறம் யானை உருவம் உள்ளது. இந்த யானை இலட்சுமியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது அல்லது அவந்தியுடன் நடந்த போரில் வெற்றி பெற்றதை நினைவுகூர்கிறது. இந்தப் போரில் இவனது அன்பான யானை யசகபதாலா கொல்லப்பட்டது. அவை 20 தானியங்கள் (1.715 கிராம்) எடையும் 0.3" அளவும் கொண்டதாக உள்ளது. சில சிறிய செப்பு நாணயங்களும் பதிவாகியுள்ளன. [11]

கட்டுமானங்கள்[தொகு]

செயசிம்மன் சைவ சமயத்தைப் பின்பற்றியவனாக இருந்தாலும், இவன் மற்ற மதங்களின் பேரிலும் சகிப்புத்தன்மையைக் கொண்டிருந்தான். [12] இவனது தலைநகரில் 98 வெவ்வேறு நம்பிக்கைகளும், சமயங்களையும் சேர்ந்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. [13]

மன்னனின் மத குருவாக பாவ பிருகசுபதி என்பவர் இருந்துள்ளார். அவர் முதலில் மால்வாவில் வசித்து வந்தார். பின்னர் அவர் பரமாரர்களுக்கு எதிரான செயசிம்மனின் வெற்றிக்குப் பிறகு குசராத்திற்கு கொண்டு வரப்பட்டார். [3] செயசிம்மன் சித்தப்புரத்தில் (நவீன சித்தபூர்) உருத்ர மகாலய கோயிலைப் புதுப்பித்தான் அல்லது மீண்டும் கட்டினான். [14] இது இவனது காலத்தின் மிகப் பெரிய கோவிலாகும். அதில் சில தூண்களும், சன்னதிகளும், வளைவுகளும் மட்டுமே இன்று எஞ்சியிருக்கின்றன. இது கிபி 1142இல் முடிக்கப்பட்டது. [15] பதானில் தனது மூதாதையரான துர்லபாவால் கட்டப்பட்ட ஒரு ஏரியைப் புதுப்பித்து, அதற்கு சகசரலிங்கம் ("1000 இலிங்கங்கள் ") என்று பெயரிட்டான். ஏரி 1008 சிறிய கோவில்களால் சூழப்பட்டிருந்தது. ஒவ்வொன்றிலும் ஒரு இலிங்கம் (சிவனின் சின்னங்கள்) இருந்தது. [3] செயசிம்மன் முழு சரசுவதி ஆற்றின் நீரோட்டத்தையும் ஏரிக்குள் திருப்பினான். பல செயற்கை தீவுகள் உருவாக்கப்பட்டன. அதில் பல கோயில்கள், அரண்மனைகள், தோட்டங்கள் போன்றவை கட்டப்பட்டன. இந்த ஏரியின் கரையில் ஆயிரக்கணக்கான சிவன் கோவில்கள் இருந்தன. இவை தவிர, மாணவர்களுக்காக கல்விச் சாலைகள், வேள்விச்சாலை, தேவிக்கு 108 கோவில்கள் ஆகியன இருந்தன. சகசரலிங்க ஏரியை புதுப்பிக்கும் சமயத்தில் வாரணாசியிலிருந்து 1001 பிராமணர்களை செயசிம்மன் அழைத்து வந்தான். அவர்களின் வாரிசுகள் ஆதுச்சிய பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். [16] [15] சைன ஆதாரங்களின்படி, இவன் சித்தபூரில் சித்தவிகாரையையும் கட்டினான். தண்டல்பூரில் உள்ள படிக்கட்டுக் கிணறும் இவனது கணக்கில் உள்ளது. இவனது தாயார் மாயாநல்லாதேவி, விராம்கம், தோல்காவில் ஏரிகளைக் கட்டிய பெருமைக்குரியவர். சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள பலேஜ் கிராமத்தில் பொ.ச.1095இல் கட்டப்பட்ட மினல் படிக்கட்டுக் கிணறு அவருக்குச் சொந்தமானது. ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள வீர்பூரில் உள்ள நாடியாத்தில் உள்ள ஒரு படிக்கட்டுக் கிணறும், மினல்தேவி கிணறும் அவருக்குச் சான்றளிக்கப்பட்டவை. மேலும் சோலாங்கி கட்டமைப்புக்குக் நவீனமான பிணைப்பைக் கொண்டிருக்கிறது. [17] நன்கு செதுக்கப்பட்ட வாயில்களுக்கு எதிரிலுள்ள ஐந்து குளங்களும் அவர் காலத்தில் கட்டப்பட்டவை.. [15]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செயசிம்ம_சித்தராசன்&oldid=3320869" இலிருந்து மீள்விக்கப்பட்டது