தமிழ்நூல் காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நூல் காப்பகம் என்பது திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) மணிமுத்தாற்றங்கரையில் அரை ஏக்கர் அளவு நிலத்தில் எட்டாயிரம் சதுர அடியில் உள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இந்த நூலகத்தை ஆக்கிப் பாதுகாப்பவர் பல்லடம் மாணிக்கம் ஆவார். சற்றொப்ப ஒரு இலட்சம் நூல்கள்,இதழ்கள்,ஆய்வேடுகள் இங்குத் தொகுத்துவைக்கப்பட்டுள்ளன. முனைவர் பட்ட ஆய்வேடுகள் பலவும் உண்டு.

நூல் வகைகள்[தொகு]

கம்பராமாயணத்தில் பத்துக்கும் மேற்பட்ட பதிப்புத் தொகுப்புகள் உள்ளன. திருக்குறள் சார்ந்த மொழிபொயர்ப்புகள், பதிப்புகள், ஆய்வுகள் 1500 மேல் உள்ளன. சங்க இலக்கியத்தின் பல முதல் பதிப்புகள் உள்ளன. இராமாயணம், நான்கு வேதங்கள், உபநிடதங்கள்,பன்னிரு திருமுறைகள்,சாத்திர நூல்கள்,அவை குறித்த ஆய்வுகள் நூல்களாக உள்ளன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்களும் உள்ளன. மகாபாரதம், காந்திய நூல்கள், மார்க்சிய நூல்கள், அம்பேத்காரிய நூல்கள் உள்ளன.

தமிழில் வெளிவந்த அரிய பெப்ரிசியசு அகராதி(1786) வேறு எங்கும் கிடைத்தற்கு அரியது. அது பாதுகாப்பாகப் பார்வையிடும்படி உள்ளது. இலக்கிய இதழ்கள்,நாளிதழ்களின் இணைப்பு மலர்கள்,கிழமை இதழ்கள்,மாத இதழ்கள் பல பாதுக்காக்கப்படுகின்றன. புதினம், சிறுகதை எனத் தமிழின் அனைத்து வடிவ நூல்களும் உள்ளன. மறைமலையடிகள்,தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளை, மு. வரதராசன், பாவாணர், ந. சி. கந்தையா உள்ளிட்டவர்களின் முழுத்தொகுப்புகளும் உள்ளன.

ஆயிரக்கணக்கான கர்நாடக, இந்துத்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றின் இசைப்பேழைகள், குறுந்தகடுகள் உள்ளன. மேலும் விருதுபெற்ற உலகத் திரைப்படங்களின் குறுந்தகடுகளும் உள்ளன. இலக்கியச் சந்திப்புகள் நிகழ்த்த வாய்ப்பான அரங்கும் அனைத்து வசதிகளுடன் முதல் தளத்தில் உள்ளது.தமிழுக்கும் தமிழ் நூல்களுக்கும் அறிஞர் பல்லடம் மாணிக்கம் அவர்கள் பெருந்தொகை செலவிட்டு இப்படி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நூல்_காப்பகம்&oldid=2147708" இலிருந்து மீள்விக்கப்பட்டது