இந்துமதி சீமன்லால் சேத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்துமதி சிமன்லால் சேத்
பிறப்பு1906 (1906)
அகமதாபாது, பிரித்தானிய இந்தியா (தற்போது குசராத்துஇந்தியா)
இறப்பு1985 (அகவை 78–79)
பணிசமூக சேவகர், சுதந்திர ஆர்வலர், அரசியல்வாதி, கல்வியாளர்
விருதுகள்பத்மசிறீ (1970)

இந்துமதி சிமன்லால் சேத் (Indumati Chimanlal Sheth) என்பவர் குசராத்தினைச் சேர்ந்த இந்திய சுதந்திர ஆர்வலரும், அரசியல்வாதியும், சமூக சேவகரும், கல்வியாளரும் ஆவார். அகமதாபாத்தில் பிறந்து, மகாத்மா காந்தியின் தாக்கத்தால், இவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். பின்னர் பம்பாய் மாநிலத்தின் துணை கல்வி அமைச்சராகவும், குசராத்தின் கல்வி அமைச்சராகவும் பணியாற்றினார். இவரது சமூகச் சேவைக்காக இந்திய அரசு இவருக்கு 1970ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கியது.

சுயசரிதை[தொகு]

இந்துமதி 1906ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் மானெக்பா, சிமன்லால் நகிந்தாஸ் சேத் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார். 1908இல் இறந்த இவரது தந்தையின் விருப்பப்படி தந்தையின் செல்வத்தை கல்விப் பணிக்காக பயன்படுத்த இவரது தாயார் விடுதியுடன் கூடிய ஒரு பள்ளி ஒன்றை நிறுவினார். அம்பாலால் சாரபாய் இவரது தந்தையின் உறவினர். இந்துமதி, அகமதாபாத்தில் உள்ள அரசுப் பள்ளியிலிருந்து தனது தொடக்கக் கல்வியை முடித்தார். பம்பாய் மாகாணத்தில் முதலிடம் பிடித்த இவருக்கு 1921ஆம் ஆண்டில் சாட்ஃபீல்ட் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1926இல் குசராத் வித்யாபீடத்தில் பட்டம் பெற்றார். இங்கு மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டார்.[1]

இந்திய விடுதலை இயக்கம்[தொகு]

இந்துமதி சிலகாலம், குசராத் வித்யாபீடத்தில் விரிவுரையாளராக பணியாற்றினார். பின்னர், தனது தாயால் நிறுவப்பட்ட நிறுவனங்களிலிருந்து உருவாக்கப்பட்ட சேத் சிமன்லால் நகிந்தாஸ் வித்யாலயாவிலும் சேர்ந்து கற்பிக்கலானார்.[1][2] 1920களில் ஒத்துழையாமை இயக்கத்திலும், 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்றார். இதற்காக இவர் பிரித்தானிய அதிகாரிகளால் சிறையில் அடைக்கப்பட்டார்.[1][3] 1942இல் அகமதாபாத்தில் நடந்த கலவரத்தின்போது இவர் அமைதி ஏற்படுவதற்காக பணியாற்றினார்.[1][4]

பெண்கள் முன்னேற்றம்[தொகு]

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் பெண்களை மேம்படுத்துவதற்காக சம்முன்னாட்டி அறக்கட்டளையையும், மஹிலா முத்ரானாலயா என்பதையும் நிறுவினார்.[1] அகமதாபாத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான அடித்தளமான ஜோதிசங்கின் உறுப்பினராகவும் இருந்தார்.[4] இவர் சுதேசி பொருட்களை (உள்ளூர் விளைபொருட்களை) ஊக்குவித்து, காதி ஆடைகளை மேம்படுத்துவதற்காக அகமதாபாத்தில் காதி நிலையத்தினை நிறுவினார்.[1] குசராத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் சாத்தியக்கூறு ஆய்வுக்கான குழுவில் இவர் பணியாற்றினார்.[5][1][4]

பணிகள்[தொகு]

இவர் இந்திய தேசிய காங்கிரசுடன் தொடர்பிலிருந்தார். இவர் 1937இல் அகமதாபாத் நகரவை பள்ளி வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946இல், போட்டியின்றி பம்பாய் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் 1952 முதல் 1960 வரை பம்பாய் மாநிலத்தின் துணை கல்வி அமைச்சராக பணியாற்றினார். 1961ஆம் ஆண்டில், இயற்பியல் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக வயம் வித்யாபவன் என்பதையும், புதிதாக நிறுவப்பட்ட குசராத் மாநிலத்தின் முதல் நுண்கலைக் கல்லூரி ஆகியவற்றை நிறுவினார். எல்லிஸ் பிரிட்ஜ் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் குசராத்தின் கல்வி, சமூக நலன், தடை மற்றும் கலால் மற்றும் மறுவாழ்வு அமைச்சராக 1962 முதல் 1967 வரை பணியாற்றினார். இவர் 1969இல் பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் .

இவரது சமூகப் பணிகளுக்காக இந்திய அரசு 1970இல் பத்மசிறீ விருதினை வழங்கியது. இவர் 1985இல் இறந்தார். குசராத்து எழுத்தாளர் சினேராஷ்மி இவரது வாழ்க்கை வரலாற்றை குஜராத்தி, சன்கர்மூர்த்தி இந்தூபென் (1987) என எழுதியிருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துமதி_சீமன்லால்_சேத்&oldid=3579841" இலிருந்து மீள்விக்கப்பட்டது