சுவாமி ஓம்காரநந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுவாமி ஓம்காரநந்தர்
பிறப்பு(1956-01-17)17 சனவரி 1956
பேரூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு இந்தியா
இறப்பு10 மே 2021(2021-05-10) (அகவை 65)
மதுரை, தமிழ்நாடு
பெற்றோர்வைத்தியநாத கணபதி
அலமேலு அம்மாள்

சுவாமி ஓம்காரநந்தர் (Swami Omkarananda; இறப்பு: மே 10, 2021, அகவை 64) தேனி வேதபுரீ சித்பவானந்த ஆஸ்ரமத்தின் பீடாதிபதியும், சுவாமி தயானந்தர் நிறுவிய தர்ம ரட்சணா சமிதி இயக்க மாநிலத் தலைவரும், புதுக்கோட்டை புவனேஸ்வரி பீடாதிபதியுமான ஓங்காரநந்த சுவாமிகள் கொரானாத் தொற்று காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மதுரையில் மகாசமாதி அடைந்தார்.[1][2][3][4]இந்துதர்மத்தை உபதேசித்து அதற்கு சிறு பாதிப்பு ஏற்படும் என்றாலும் ஒரு கணமும் பொறுக்காது எதிர்க்குரல் எழுப்பியவர் ஓங்காராநந்தா சுவாமிகள்.[5]

இளமை, துறவு மற்றும் மறைவு[தொகு]

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் நகரத்தில் மனோகரன் எனும் இயற்பெயருடன் வைத்தியநாத கணபதி, அலமேலு அம்மாள் ஆகியோருக்குப் பிறந்த ஓம்காரநந்தர், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், சுவாமி சித்பவானந்தர் திருப்பராய்த்துறையில் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனத்தில் பகவத் கீதை, திருவாசகம் மற்றும் திருக்குறள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் சித்பவானந்தரால் துறவறத்திற்கான மந்திர தீட்சை பெற்றார். பின்னர் சுவாமி தயானந்தரின் சீடரான சுவாமி பரமார்த்தானந்தரிடம் சீடராகி உபநிடதம், பிரம்ம சூத்திரம் போன்ற உயர் வேதாந்தக் கல்வியைக் கற்றார். இவருடன் கல்வி கற்ற சீடர்களில் ஒருவர் சுவாமி குருபரானந்தர் ஆவார்.

பின்னர் 27 ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டம், அரண்மனைபுதூர் ஊராட்சி பகுதியில் வேதபுரி சித்பவானந்த ஆஸ்ரமத்தை நிறுவினார். இவரை மக்கள் ஓங்காரநந்த சுவாமிகள் என அழைத்தனர். சனாதன தர்மத்திற்காக மிகப்பெரும் பங்காற்றியவர். திருக்குறளும் கீதையும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் புகழ் பெற்றவை. சுவாமி தயானந்தர் கட்டுப்பாட்டில் இயங்கிய தர்ம ரஷண சமிதியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று, எண்ணற்ற பணிகள், குறிப்பாக ஏராளமானோரை தாய் மதத்திற்கு திரும்ப வைத்த பெரும்பங்கு இவருக்கு உண்டு.

ஓங்காரநந்த சுவாமிகளுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட சீடர்கள் தமிழகத்திலும், வெளிநாடுகளிலும் உள்ளனர். இந்து சமயத்தின் பாரம்பரியத்திற்கும், ஆன்மிக சிந்தனைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் பணியை மேற்கொண்ட இவர், பகவத் கீதை, உபநிடதங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமாவனர், பாரதியார் பாடல்களின் பொருட்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி தனது சொற்பொழிவுகளால் விளக்கினார். திருக்குறளின் சிறப்பை அடிக்கடி குறிப்பிடுவார்.

மாரடைப்பு காரணமாக அவதியுற்றவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மே 10, 2021 அன்று மாலை 6:15 மணிக்கு தனது 64-வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமி_ஓம்காரநந்தர்&oldid=3671354" இலிருந்து மீள்விக்கப்பட்டது