கோலா டிப்பாங்

ஆள்கூறுகள்: 4°23′N 101°10′E / 4.383°N 101.167°E / 4.383; 101.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலா டிப்பாங்
Kuala Dipang
瓜拉丁邦
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
உருவாக்கம்1800
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdkampar.gov.my/

கோலா டிப்பாங் அல்லது கோலா தீபாங் (Kuala Dipang) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கம்பார் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராம நகரம். கம்பார் நகரத்தில் இருந்து 10 கி.மீ.; ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. கோலா டிப்பாங் கிராம நகரத்திற்கு மிக அருகில் கோப்பேங் எனும் மற்றும் ஒரு சிறுநகரம் உள்ளது.

இந்தக் கிராம நகரைக் கோலா தீபாங் என்றும் சிலர் அழைப்பது உணடு. அந்தச் சொல் இந்தோனேசிய மொழி வழக்குச் சொல்லாகும். மலாய் மொழி உச்சரிப்பில் கோலா டிப்பாங் என்பதே சரியான சொல் ஆகும்.

வரலாறு[தொகு]

கோலா டிப்பாங் நகரத்தின் தொடக்கக்கால குடியேற்றம் 1800-களின் முற்பகுதியில் தொடங்கி உள்ளது. கிராமவாசிகளின் அசல் குடியேற்றத்தின் இடம் கோலா டிப்பாங்கிற்கு அருகில் குனோங் பெண்டியாட் (Gunung Pendiat) எனும் மலைப் பகுதியில் உள்ளது.

குனோங் பெண்டியாட் மலையின் அருகில் உள்ள சமவெளிகளில் முதல் குடியேற்றம் நடைபெற்று உள்ளது. அப்படிக் குடியேறியவர்கள் பெரும்பாலும் பேராக் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தவிர சுமத்திரா தீவில் இருக்கும் கம்பார் லுவார் (Kampar Luar) எனும் இடத்தில் இருந்து குடியேறியவர்களாகவும் நம்பப் படுகிறது.

1926-ஆம் ஆண்டு பெரிய வெள்ளம்[தொகு]

கோலா டிப்பாங் தொடக்கக் காலக் குடியேற்றம் டிப்பாங் ஆற்றின் அருகில்தான் நிறுவப்பட்டது. அதன் அருகில் மற்றொரு நதி ஓடுகிறது. கம்பார் நதி. அங்கு வரையில் தொடக்கக் காலக் குடியேற்றம் வளர்ச்சி கண்டது. 1926-ஆம் ஆண்டில் ஒரு பெரிய வெள்ளம். கம்பார் ஆற்றின் அருகே அமைந்து இருந்த கிராமம் அப்படியே மூழ்கிப் போனது. [1]

இனிவரும் காலங்களில் அந்தக் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப் படாத வகையில் ஆற்றை அகலப் படுத்தும் திட்டம் செயல்படுத்தப் பட்டது. அதன் பின்னர் இந்தக் கிராமத்திற்குக் கம்போங் கோலா டிப்பாங் என்றும் பெயர் வைக்கப்பட்டது

ஜப்பானியர் படையெடுப்பு[தொகு]

இரண்டாம் உலகப்போரின் போது கோலா டிப்பாங் ஒரு முக்கியமான கேந்திர இடமாகக் கருதப் படுகிறது. ஈப்போவைக் கைப்பற்றிய ஜப்பானியர்கள், கம்பார் நகரைக் கைப்பற்ற படைகளை நடத்தி வந்த போது இந்த இடத்தில் தான் இந்திய இராணுவப் படையின் 12-வது காலாட்படையின் ஒரு பகுதியினர் நிறுத்தி வைக்கப் பட்டனர்.

ஜப்பானியப் படைகளுக்குப் பலத்த எதிர்ப்பு. இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள். 12-வது காலாட்படையினர் ஜப்பானியப் படைகளுக்கு எதிர்த் தாக்குதல் தொடுத்தவாறு கம்பார் நகரம் வரையில் பின்வாங்கினர். கம்பாரில் ஒரு பயங்கரமான போர். அதற்கு கம்பார் போர் என்று பெயர். ஆக கோலா டிப்பாங் கிராமத்தைத் தாண்டித்தான் கம்பார் நகருக்குச் செல்ல முடியும். அந்த வகையில் இரன்டாம் உலகப் போரில் கோலா டிப்பாங் ஒரு முக்கிய இடமாகக் கருதப் படுகிறது.

கம்பார் போர்[தொகு]

1941 ஆம் ஆண்டிலிருந்து 1945 ஆம் ஆண்டு வரையிலான ஜப்பானியர்கள் ஆட்சியின் வரலாற்று ஏடுகளில் கோலா டிப்பாங் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இங்குதான் மலாயா வரலாற்றில் புகழ் பெற்ற கம்பார் போர் (Battle of Kampar) நடப்பதற்கான முன்னோட்டம் இடம் பெற்றது.

கம்பார் போர் 1941 டிசம்பர் 30-ஆம் தேதியில் இருந்து 1942 ஜனவரி 2-ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 3000 இந்திய, பிரித்தானிய, கூர்கா கூட்டுப் படை வீரர்களும்; பஞ்சாப் படை வீரர்களும்; 6000 ஜப்பானியப் படை வீரர்களும் ஈடுபட்டனர். போர் இறுதியில் 150 கூட்டுப் படை வீரர்களும் 500 ஜப்பானியப் படை வீரர்களும் பலியாயினர்[2]. இந்தப் போரில்தான் ஜப்பானியர்களுக்குப் பலத்த உயிர் இழப்புகள்.

நிலவியல்[தொகு]

கோப்பேங் நகரைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்புக் குன்றுகள் (Limestone Hills) உள்ளன. அந்தக் குன்றுகளுக்குள் எண்ணற்ற குகைக் கோயில்கள் (Limestone Caves) மறைந்து நின்று மாயஜாலம் காட்டுகின்றன. அவற்றில் மிக முக்கியமான குகை தெம்புரோங் குகை. கோலா டிப்பாங் கிராம நகருக்கு மிக அருகில் உள்ளது.

தீபகற்ப மலேசியாவின் பழைய கூட்டரசு சாலை 1 (மலேசியா) சாலையைப் பயன்படுத்திக் கம்பார் நகரில் இருந்து ஈப்போ மாநகருக்குச் செல்பவர்கள் தெம்புரோங் குகையையும் கோலா டிப்பாங் நகரத்தையும் தாண்டித்தான் செல்ல வேண்டும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The "Great Flood" of 1926". Archived from the original on 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-02.
  2. "கம்பார் போர் பழைய நினைவுகள்". Archived from the original on 2008-06-28. பார்க்கப்பட்ட நாள் 2008-06-28.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலா_டிப்பாங்&oldid=3575185" இலிருந்து மீள்விக்கப்பட்டது