வஜ்ரேசுவரி கோயில்

ஆள்கூறுகள்: 19°29′12″N 73°1′33″E / 19.48667°N 73.02583°E / 19.48667; 73.02583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வஜ்ரேசுவரி கோயில்
வஜ்ரேசுவரி கோயில் is located in மகாராட்டிரம்
வஜ்ரேசுவரி கோயில்
மகாராட்டிராவில் கோயிலின் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மகாராட்டிரம்
மாவட்டம்:தானே
அமைவு:வஜ்ரேசுவரி நகரம்
ஆள்கூறுகள்:19°29′12″N 73°1′33″E / 19.48667°N 73.02583°E / 19.48667; 73.02583
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சிமாஜி அப்பா

வஜ்ரேசுவரி யோகினி தேவி கோயில் (Shree Vajreshwari Yogini Devi Mandir) என்பது இந்துக் கடவுளான வஜ்ரேசுவரிக்கு அர்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும். இது, மகாராட்டிரத் தலைநகரான மும்பையிலிருந்து 75 கி.மீ தொலைவிலுள்ள வஜ்ரேசுவரி நகரத்தில் அமைந்துள்ளது. முன்னர் வத்வாலி என்று அழைக்கப்பட்ட இந்த நகரம் கோயிலின் தலைமை தெய்வத்தின் நினைவாக வஜ்ரேசுவரி என்று பெயர் மாற்றப்பட்டது.

இடம்[தொகு]

தன்சா ஆற்றங்கரையில் உள்ள நகரம், மகாராட்டிராவின் தானே மாவட்டத்தின், பிவாண்டி நகரில் அமைந்துள்ளது. இது மேற்கு இரயில் பாதையிலுள்ள விரார் இரயில் நிலையத்திலிருந்து 27.6 கி.மீ தூரத்திலும், மத்திய ரயில் பாதையிலுள்ள கதவ்லி இரயில் நிலையத்திலிருந்து 31 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்தக் கோயில் நகர அஞ்சல் நிலையத்திற்கு அருகில், மந்தகிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. இது எரிமலை வெடிப்பிலிருந்து உருவானது. மேலும், எல்லா பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

புனைவுகள்[தொகு]

விஷ்ணுவின் அவதாரங்களான இராமனும், பரசுராமனும் இந்த இடத்தைப் பார்வையிட்டதாக புராணம் கூறுகிறது. பரசுராமன் வத்வாலியில் ஒரு வேள்வியை நிகழ்த்தியதாகவும், அதனால் ஏற்பட்ட எரிமலையே இங்குள்ள சாம்பல் மலைகளின் எச்சம் என்றும் புராணம் கூறுகிறது.

கோயிலின் முதன்மை தெய்வம், வஜ்ரேசுவரி என்று அழைக்கப்படுகிறது. இது வஜ்ரபாய் மற்றும் வஜ்ரயோகினி என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமியில் பார்வதி அல்லது ஆதி-மாயையின் அவதாரமாக கருதப்படுகிறது. தேவியின் பெயர் "வஜ்ராவின் பெண்" (இடியின் மகள்) என்று பொருள்படும். தெய்வத்தின் தோற்றம் பற்றி இரண்டு புராணக்கதைகள் உள்ளன. இவை இரண்டும் வஜ்ராவுடன் தொடர்புடையவை.

வரலாறு[தொகு]

அசல் கோயில் வத்வாலிக்கு வடக்கே ஐந்து மைல் (8 கி.மீ) தொலைவில் உள்ள குஞ்சில் இருந்தது. போர்த்துகீசியர்களால் அழிக்கப்பட்ட பின்னர் இது வத்வாலிக்கு மாற்றப்பட்டது. [1]

1739 ஆம் ஆண்டில், மராத்தியப் பேரரசின் மூன்றாம் பேஷ்வா பாலாஜி விஸ்வநாத்தின் மகனும், பேரரசின் நான்காவது பேஷ்வாவின் இளைய சகோதரரும் இராணுவத் தளபதியுமான சிமாஜி அப்பா, போர்த்துகீசியர் வசமிருந்த பசீன் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக வத்வாலி பகுதியில் முகாம் அமைத்திருந்தார். மூன்று வருட முற்றுகைக்குப் பின்னரும் இந்த கோட்டை வெல்ல முடியாததாக இருந்தது. கோட்டையை வென்று போர்த்துகீசியர்களை தோற்கடிக்க முடிந்தால், தேவிக்கு ஒரு கோவிலைக் கட்டுவேன் என்று சிமாஜி அப்பா வஜ்ரேசுவரி தெய்வத்தை வேண்டினார். வஜ்ரேசுவரி தெய்வம் அவரது கனவில் தோன்றி கோட்டையை எவ்வாறு வெல்வது என்று அவரிடம் கூறினார் என்பது ஒரு புனைவு. எவ்வாறாயினும், மே 16 அன்று, போர்த்துகீசியர்கள் தோல்வி அடைந்தனர். தனது வெற்றியைக் கொண்டாடவும், வஜ்ரேசுவரி தெய்வத்தின் முன் எடுக்கப்பட்ட சபதத்தை நிறைவேற்றவும், சிமாஜி அப்பா தனது ஆளுநர் சங்கர் கேசவ் பட்கேவிடம் கோயிலைக் கட்ட உத்தரவிட்டார்.

பிரதான நுழைவாயிலிலுள்ள பிரதான மண்டபம் பரோடாவின் மராத்திய இந்து வம்சமான கெயிக்வாட்களால் கட்டப்பட்டது. கோயிலுக்குச் செல்லும் கல் படிகளும், கோயிலுக்கு முன்னால் உள்ள தீப கோபுரமும்) நாசிக் நகரைச் சேர்ந்த பணக்காரரான நானாசாகேப் சந்தவதக்கர் என்பவரால் கட்டப்பட்டது.

கோயில் திருவிழாக்கள்[தொகு]

இந்து மாதமான சித்திரை மாத (மார்ச்) வளர்பிறையின் பதினைந்து நாட்களிலும், இராம நவமியின் போதும், விஜயதசமியின் போதும் இங்கு முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Gazetteer of the Bombay Presidency by Sir James MacNabb Campbell, Reginald Edward Enthoven. Published 1882, Govt. Central Press, p.105

குறிப்புகள்[தொகு]

  • Website about the Vajreshwari temple
  • Abhilash Gaur (2 November 2003). "River, springs and a green carpet welcome in Vajreshwari". The Tribune.
  • "geocities.com". Archived from the original on 2009-10-25.
  • "VAJRABAI OR VAJRESHVARI". Maharashtra State Gazateer. பார்க்கப்பட்ட நாள் 2009-08-18.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வஜ்ரேசுவரி_கோயில்&oldid=3227766" இலிருந்து மீள்விக்கப்பட்டது