தலகோனம்

ஆள்கூறுகள்: 13°48′42″N 79°12′56″E / 13.81167°N 79.21556°E / 13.81167; 79.21556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலகோனம் அருவி என்பது இந்திய ஒன்றியத்தின், ஆந்திராவின், சித்தூர் மாவட்டம், சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்காவில் உள்ளது. 270 அடிகள் (82 m) உயரமான இந்த அருவியானது ஆந்திர பிரதேசத்தில் மிக உயர்ந்த அருவியாகும். [1] அருவிக்கு அருகில் அமைந்துள்ள சித்தேஸ்வர சுவாமி கோயிலுக்காகவும் தலகோனம் பெயர் பெற்றது.

அமைவிடம்[தொகு]

தலகோனம் அருகே கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சிறீ வெங்கடேசுவரா தேசியப் பூங்காவின் பரந்த காட்சி

ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்தின், யெர்ராவாரிபாலம் மண்டலத்தில் உள்ள நெராபைலு கிராமத்தில் தலகோனம் அமைந்துள்ளது. [2] இது பிலேரிலிருந்து, 49 கிலோமீட்டர்கள் (30 mi) ) தொலைவிலும், சித்தூரிலிருந்து 67.9 கிலோமீட்டர்கள் (42.2 mi) தொலைவிலும், திருப்பதியிலிருந்து 58 கிலோமீட்டர்கள் (36 mi) தொலைவிலும், வேலூரிலிருந்து 127 கிலோமீட்டர்கள் (79 mi) தொலைவிலும், சென்னையிலிருந்து 220 கிலோமீட்டர்கள் (140 mi) தொலைவிலும், பெங்களூரிலிருந்து 250 கிலோமீட்டர்கள் (160 mi) தொலைவிலும் உள்ளது.

தலகோணம் அருவியானது அடர்ந்த காடுகள் மற்றும் வனவிலங்குகளைக் கொண்ட ஒரு பாதுகாக்கபட்ட வனப் பகுதி ஆகும். இங்கு ஏராளமான தாவரங்களும், விலங்கினங்களும் இருப்பதால் 1989 ஆம் ஆண்டில் இப்பகுதி உயிர்க்கோள பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்டது.

சொற்பிறப்பியல்[தொகு]

தலகோனா என்றால் தெலுங்கில் தலை மலை ( தலா - தலை மற்றும் கோனா - மலை). இருப்பினும், தலகோனம் என்பது "சேஷாசலம் மலைகளின் தலை" என்று பொருள்படும். ஏனெனில் இந்த மலைகள் திருமலை மலைத்தொடர்களின் தொடக்க புள்ளியாக நம்பப்படுகிறது. [2]

தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்[தொகு]

தலக்கோனம் காடுகளில் தேவாங்கு, இந்திய மலை அணில், சருகுமான், பொன் மரப்பள்ளி, சிறுத்தை, முள்ளம்பன்றி, புள்ளிமான், கடமான் போன்ற அரிதான மற்றும் அருகிய இன விலங்குகள் வாழ்கின்றன. மேலும் செஞ்சந்தனம், சைகாஸ் பெடோமெய், என்டெடா போன்ற அகணிய உயிரிகளான பெரிய தாவரங்களும் இந்த பிராந்தியத்தில் காணப்படுகின்றன. இந்தக் காடு சில மருத்துவ தாவரங்களைக் கொண்டதாவும் சந்தன மரங்கள் நிறைந்ததாகவும் உள்ளது.

பேருந்து வசதி[தொகு]

ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து இப்பகுதிக்கு நேரடியாக பேருந்து சேவையை அளிக்கிறது.

சுற்றுலா[தொகு]

தலகோனத்தில் உள்ள அருவி

தலகோனம் அருவி நீர் மூலிகைகள் நிறைந்தது என்றும், இது மருத்துவ குணம் கொண்டது என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதை அடைய நீண்டதும், மிகவும் அபாயகரமான மலைப் பாதை மலையில் செல்லவேண்டும். புவியியல் ரீதியாக தலகோன மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.

மலையின் மேல் பகுதியில் உள்ள குன்றிலிருந்து பள்ளத்தாக்கை நோக்கி ஆழமாக விழுவதாக இந்த அழகிய அருவி உள்ளது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இங்கு நிலத்தடி நீரோடைகள் இருப்பதால் நீர் எங்கிருந்து வருகிறது என்று அதன் தோற்றத்தை கண்டுபிடிப்பது கடினம் என்று கூறுகின்றனர்.

இப்பகுதியில் ஒரு பழங்கால சிவன் கோயில் உள்ளது. இது சிவராத்திரி பண்டிகையின் போது பக்தர்களால் நிரம்பி வழிகிறது. மலைகள் மீது ஆங்காங்கே நீண்ட குகைகளும் உள்ளன. அங்கு முனிவர்கள் நித்தியமாக தியானிக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த அடர்ந்த காட்டில் தங்குமிடமும் கிடைக்கிறது. இது பார்வையாளர்கள் இங்கு இரவு நேரத்தை செலவிட்டு மகிழத்தக்கதாக உள்ளது. தலகோனம் விருந்தினர் மாளிகைகளில் தங்குமிடத்தை வனதர்ஷனி.இன் வழியாக முன்பதிவு செய்யலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தலகோனம் மற்றும் பிற சுற்றுலா இடங்களான மாமந்தூர், பழவேற்காடு ஏரி, தும்பலபைலு போன்றவற்றிலுள்ள தங்குமிடங்களுக்கும் பதிவு செய்யலாம்.

தலகோனா கோயிலின் வரலாறு[தொகு]

தலகோனம் அருவி பகுதியில் உள்ள கோயிலானது "சிதேஸ்வர சுவாமி கோயில்" என்று அழைக்கப்படும் ஒரு சிவன் கோயிலாகும். இக்கோயில் இறைவன் 'சித்தேஸ்வரா' என்று அழைக்கப்படுகிறார். உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை, இந்த கோயில் சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. கோயிலில் உள்ள சிவ லிங்கமானது புலிச்செர்லா மண்டலத்தில் உள்ள ராயாவரிபள்ளி என்ற கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. அக்காலத்தில் ஏதேனும் ஒரு புதிய கோயில் கட்டப்பட்டால், புதிய சிவலிங்கத்தை உருவாக்குவதற்கு பதிலாக, பாழடைந்த கோவில்களில் பூசை இல்லாமல் உள்ள பழைய லிங்கத்தைக் கொண்டுவந்து நிறுவும் வழக்கம் இருந்துள்ளது. அந்த வழக்கத்தின் படி இக்கோயிலில் உள்ள சிவ லிங்கமானது ராயவரிபள்ளியின் பாழடைந்த கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டது. இடிந்துபோன கோயிலின் எச்சங்களை இன்றும் ராயவரிபள்ளியின் வயல்வெளிகளில் காணலாம். அந்த புலம் "லிங்காகரம் காதா கயா" என்று அழைக்கப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. AP shifts to Bio tourism
  2. 2.0 2.1 "Talakona-Explore & experience the pristine nature". Archived from the original on 2017-10-11. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலகோனம்&oldid=3778042" இலிருந்து மீள்விக்கப்பட்டது