மண்டைக்காடு கலவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்டைக்காடு கலவரம் என்பது, 1982-இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும் (நாடார்) கிறித்தவர்களுக்கும் (முக்குவர்/பரதவர்) இடையே ஏற்பட்ட மத மோதலைக் குறிக்கும். இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்க நீதியரசர் வேணுகோபால்[1] தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

மண்டைக்காடு[தொகு]

மண்டைக்காடு கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் பகுதியில் அமைந்துள்ள சிற்றூர். இங்கு கிறித்தவர்களும் இந்துக்களும் அருகருகே வாழ்ந்து வருகிறார்கள். மண்டைக்காட்டில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி கொடை விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இக்கோயிலின் அருகில் புனித கண்ணாம்பாள் ஆலயம் மற்றும் அதன் குருசடி அமைந்துள்ளது.

கலவரத்திற்கான சூழல்[2][தொகு]

1980-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாடதட்டுவிளை என்னும் இடத்தில் இரண்டு இளைஞர்களுக்கு இடையே சிறு சண்டை மூண்டது. இதன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவை காணாமல் போனதால் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை உருவானது. 1982-ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், உலக செப வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து கிறித்தவர்களாலும் ஒற்றுமையுடன் கொண்டாடப்பட்டது. அதன் இறுதி நாளன்று கிறித்தவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு திங்கள் நகர் வழியாக ஒர் ஊர்வலம் நடத்தினார்கள். அந்த ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக கிறித்தவ வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றைத் திங்கள் நகரின் மையப்பகுதியில் உள்ள போக்குவரத்து காவலர் நிழற்குடை அமைந்திருக்கும் திடலில் அமைக்கப்பட்டது. அந்த ஊர்வலம் முடிந்த பிறகு அச்சிலுவை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்து விவசாயி ஒருவர் அவ்விடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக விநாயகர் சிலையை அமைத்தார் வழிபாடு நடத்த ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் கழித்து மகா சிவராத்திரி அன்று காவல்துறையினர் கிறித்தவர்களின் எதிர்ப்பின் காரணமாக சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி விநாயகர் சிலையை அகற்றினர். இந்துக்களின் முக்கிய திருவிழாவன்று இச்சிலை அகற்றப்பட்டதால் இந்துக்கள் இடையே கொந்தளிப்பு எற்பட்டது. இந்துக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இந்து கிறித்தவ கலவரம் பக்கத்து ஊர்களிலும் பரவியது.

கலவரம்[தொகு]

1982 ம் ஆண்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா வழக்கம் போல் தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிறித்தவர்கள் இந்து பெண்களை கேலி செய்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. ஏற்கனவே வழிபாட்டுக்கு ஒலிபெருக்கி கட்டுவது தொடர்பாக சர்ச்சை நிலவி வந்தது. இதன் காரணமாக மார்ச் 1, 1982 அன்று மக்கள் மண்டைக்காடு ஆலயத்தின் முன் கூடினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் காவலர்கள் 46 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஆறு பேர் இறந்தனர். கலவரம் கல்லுக்கூட்டம், ஈத்தாமொழி, இராசாக்கமங்கலம், பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் முதலிய இடங்களுக்கும் பரவியது. இரண்டு வாரங்கள் கழித்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். கோவளத்தில் நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்தக் கலவரத்தில் தேவாலயங்கள், கோயில்கள், மருத்துவமனைகள், மற்றும் பொது சொத்துக்கள் அதிகமாக சேதம் அடைந்தன. இக்கலவரத்தால் கடற்கரையிலுள்ள மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன. அவர்கள் பயன்படுத்திய குடிநீர் கிணறுகளில் டீசல் முதலான நஞ்சு கலக்கப்பட்டது. அவர்களுக்கான உணவுப் பொருட்கள் செல்லும் வழிகள் அடைக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.nfch.nic.in/HTM/reports_of_commission_of_inquiry.htm
  2. http://www.ibiblio.org/ahkitj/wscfap/arms1974/Book%20Series/TheImageOfGodIM/IOGIM-hinduchristian.htm இந்து கிறித்தவ மதவாதம்-ஒரு கண்ணோட்டம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டைக்காடு_கலவரம்&oldid=3797525" இலிருந்து மீள்விக்கப்பட்டது