அனந்த சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்த சிங்
பிறப்பு(1903-12-01)1 திசம்பர் 1903
சிட்டகொங், வங்காளம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய வங்காளதேசம்)
இறப்பு25 சனவரி 1979(1979-01-25) (அகவை 75)
தொழில்சுதந்திர ஆர்வலர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சிட்டகொங் ஆயுதக் கிடங்கு தாக்குதல்

அனந்த லால் சிங் (Ananta Singh) (1 திசம்பர் 1903 - 25 சனவரி 1979)இவர் ஓர் இந்திய பெங்காலி புரட்சியாளர் ஆவார். இவர் 1930 இல் சிட்டகொங் ஆயுதக் கிடங்குத் தாக்குதலில் பங்கேற்றார். [1] பின்னர், இவர் ஒரு பொதுவுடைமைக் குழுவான இந்திய புரட்சிகர பொதுவுடைமைக் குழுவை நிறுவினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் 1903 திசம்பர் 1 இல் சிட்டகொங்கில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கோலாப் (குலாப்) சிங் என்பதாகும். இவரது மூதாதையர்கள் ஆக்ராவிலிருந்து குடிபெயர்ந்து சிட்டகாங்கில் குடியேறிய பஞ்சாபி ராஜபுத்திரர்கள் ஆவர். இவர் சிட்டகொங் நகராட்சிப் பள்ளியில் படிக்கும் போது சூர்யா செனைச் சந்தித்து அவரைப் பின்தொடர்ந்தார். [1]

புரட்சிகர இயக்கம்[தொகு]

இந்திய தேசியவாத இயக்கத்தில் இவரது ஈடுபாடு 1921 ல் ஒத்துழையாமை இயக்கத்துடன் தொடங்கியது. இருப்பினும்,இவர் தனது பள்ளி தோழர்களை இயக்கத்தில் சேர ஊக்குவித்த போதிலும், தனிப்பட்ட முறையில் இவருக்கு இயக்கத்தில் அதிக நம்பிக்கை இல்லை. 1923 திசம்பர் 14 ஆம் தேதி, சூர்யா சென் தயாரித்த திட்டத்தின் படி இவரும் நிர்மல் செனும் அசாம் வங்க இரயில்வேயின் கருவூல அலுவலகத்தில் கொள்ளைக்கு தலைமை தாங்கினர். மேலும்,திசம்பர் 24 அன்று கொள்ளை நடந்த பின்னர் காவலர்களுடன் மோதினர். கொள்ளை நடந்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவந்து சாண்ட்விப்பில் சிறிது காலம் தங்கிய பின்னர் கொல்கத்தாவை அடைந்தார். இவர் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் விடுவிக்கப்பட்டார். இவர் மீண்டும் 1924 இல் கைது செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். [1]

விடுதலையான பிறகு, இவர் ஒரு உடற்பயிற்சி கூடத்தை நிறுவி சூர்யா சென் தலைமையிலான புரட்சிகர இயக்கத்திற்கு பல இளைஞர்களை நியமித்தார். ஏப்ரல் 18, 1930 அன்று, இவர் சிட்டகொங் ஆயுதத் தாக்குதலின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இவர் கணேஷ் கோஷ் மற்றும் ஜிபின் கோஷலுடன் சிட்டகொங்கிலிருந்து தப்பிச் செல்ல முடிந்தது. பெனி இரயில் நிலையத்தில் காவலர்களுடன் ஒரு குறுகிய மோதலுக்குப் பிறகு, இவர் பிரெஞ்சு பிரதேசமான சந்தன்நகரில் தஞ்சம் புகுந்தார். ஆனால், ஏற்கனவே சிறையில் இருந்த தனது சக புரட்சியாளர்கள் சந்தித்த சித்திரவதை செய்தியைக் கேட்ட அவர், கொல்கத்தாவில் 1930 சூன் 28 அன்று காவலர்களிடம் சரணடைந்து விசாரணையை எதிர்கொண்டார். விசாரணையில், இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு போர்ட் பிளேரில் உள்ள சிற்றறைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். பின்னர், 1932 இல் அங்கு நீண்ட உண்ணாவிரதம் இருந்த இவர், மகாத்மா காந்தி மற்றும் இரவீந்திரநாத் தாகூர் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியின் காரணமாக இவரது சக அரசியல் கைதிகளுடன் மீண்டும் ஒரு பிரதான சிறைக்கு கொண்டு வரப்பட்டார். 1946 இல் இறுதி விடுதலையின் பின்னர், இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். [1]

1947 க்கு பிந்தைய காலம்[தொகு]

1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இவர் பெரும்பாலும் மோட்டார் வாகனங்களின் உற்பத்தியிலும் அதன் விறபனையிலும் ஈடுபட்டார். 60 களின் பிற்பகுதியில், இவர் மேன்-மணி-கன் (எம்.எம்.ஜி) என்ற ஒரு புதிய தீவிர இடது அரசியல் குழுவை நிறுவினார். [2] பின்னர் கொல்கத்தாவில் இந்திய புரட்சிகர பொதுவுடைமைக் குழு என பெயர் மாற்றப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினர்கள் கொல்கத்தாவில் ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் வாங்குவதற்கான நிதி திரட்டுவதற்காக பல வங்கிக் கொள்ளைகளை நடத்தினர். இவரது வாழ்க்கையின் இந்த காலம் மிகவும் சர்ச்சைக்குரியது. 1960களின் பிற்பகுதியில் கொல்கத்தாவில் பல்வேறு வங்கிகளில் வழக்கமான கொள்ளைகள் நடந்தன. இதில் அனைத்திலும், இவரது பெயர் இடம்பெற்றது. [3] உள்ளூர் பத்திரிகைகளில் இதைப்பற்றிய தொடர் எழுத்துக்கள் இருந்தன. அந்த நாட்களில் புரட்சிகர தேசியவாதிகளை நினைவில் வைத்துக் கொண்ட பத்ரலோக் என்ற பத்திரிக்கை இவரது செயல்களைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டது. இறுதியாக, குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களுடன், 1969 ஆம் ஆண்டில் தற்போதைய ஜார்கண்ட் மாநிலத்தில் ஜாதுகோராவுக்கு அருகிலுள்ள ஒரு காட்டில் இவர்கள் மறைவிடத்திலிருந்து கைது செய்யப்பட்டார். இவர் 1977 வரை சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசத்தின் போது இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட இவர் விடுதலையான பின்னர் சில காலத்திற்குள் இறந்தார். [1]

பிரபல கலாச்சாரத்தில்[தொகு]

இவரது பாத்திரத்தை 2010 ஆம் ஆண்டு வெளியான கெலின் ஹம் ஜீ ஜான் சேவில் இந்தித் திரைப்படத்தில் நடிகர் மனிந்தர் சிங் ஏற்று நடித்திருந்தார். [4] மேலும் நடிகர் ஜெய்தீப் அஹ்லவத் நடித்த 2012 திரைப்படமான சிட்டகொங் என்றத் திரைப்படத்திலும் இவரது பாத்திரம் நடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sengupta, Subodh Chandra (ed.) (1988) Sansad Bangali Charitabhidhan (in Bengali), Kolkata: Sahitya Sansad, p.14
  2. Snigdhendu Bhattacharya. "Top Maoist ideologue Narayan Sanyal passes away in Kolkata". hindustantimes.com. பார்க்கப்பட்ட நாள் September 9, 2017.
  3. "Revealed: Inside story of the 1968-69 Calcutta robberies". timesofindia.indiatimes.com. July 16, 2015. பார்க்கப்பட்ட நாள் September 9, 2017.
  4. Arun Janardhan (3 December 2010). "Film Review: Khelein Hum Jee Jaan Sey". மின்ட். பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்த_சிங்&oldid=3040407" இலிருந்து மீள்விக்கப்பட்டது