வள்ளுவர் கோட்டம்

ஆள்கூறுகள்: 13°3′15.88″N 80°14′30.3″E / 13.0544111°N 80.241750°E / 13.0544111; 80.241750
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு
Map
பொதுவான தகவல்கள்
வகைநினைவாலயம்
நகரம்சென்னை
நாடுஇந்தியா
ஆள்கூற்று13°3′15.88″N 80°14′30.3″E / 13.0544111°N 80.241750°E / 13.0544111; 80.241750
நிறைவுற்றது1976
உயரம்39 மீட்டர்கள் (128 அடி)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)கணபதி (சிற்பி)

வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம், 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27ஆம் நாள் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு[1], 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது.

சிற்பத் தேர்[தொகு]

தேரின் சக்கரங்கள். அவற்றில் அளவை அருகில் நிற்கும் மனிதர்களின் உயரத்துடன் ஒப்பிட்டுக் காண்க.

இங்கு திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் சிற்பத் தேர் அமைப்பு கட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை.

இத்தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத்தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச்சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத்தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப்பட்டுள்ளது.

அரங்கம்[தொகு]

அரங்கத்தின் வாயில். வேயாமாடம் என அழைக்கப்படும் கூரைக்குச் செல்லும் படிக்கட்டுகளின் மேற்பகுதியை வாயிலின் இரு புறமும் காணலாம்

220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன.

வேயாமாடம்[தொகு]

வேயாமாடத்திலிருந்து கருவறை, கோபுரம், கலசம் ஆகியவற்றின் தோற்றம்

அரங்கத்தின் கூரைத்தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத்தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத்தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும்.

சுற்றாடல்[தொகு]

கேட்போர் கூடக் கூரையிலிருந்து பிரதான வாயில் நோக்கிய தோற்றம்

இக்கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Valluvar Kottam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று, கலைஞர் மு. கருணாநிதி பக்.12

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளுவர்_கோட்டம்&oldid=3918222" இலிருந்து மீள்விக்கப்பட்டது