கிரேசு ஒகொட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேசு ஒகொட்
Grace Ogot
பிறப்புகிரேசு எமிலி ஒகொட்
15 மே 1930
அசெம்போ, நையான்சு மாகாணம், கென்யா
இறப்பு18 மார்ச்சு 2015
தேசியம்கென்யா
அறியப்படுவதுஎழுத்தாளர், மருத்துவத் தாதி, ஊடகவியலாளர், அரசியல்வாதி, தானாதிபதி

கிரேசு எமிலி ஒகொட் (Grace Emily Ogot) என்பவர் எழுத்தாளர், மருத்துவத் தாதி, ஊடகவியலாளர், அரசியல்வாதி, தானாதிபதி எனப் பன்முகம் கொண்டவராகத் திகழ்ந்த ஒரு கென்ய ஆளுமையாவார். இவர் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். சாரிட்டி வாசியுமா என்ற எழுத்தாளருடன் சேர்ந்து கென்ய வரலாற்றில் முதன்முறையாக ஆங்கிலத்தில் தொகுப்பை வெளியிட்ட பெண் எழுத்தாளரென்று கிரேசு அறியப்படுகிறார். [1] கென்யாவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான இவர் உதவி அமைச்சராகவும் பணிபுரிந்தார். [2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

கென்யா நாட்டின் நயன்சா மாவட்டத்திலுள்ள அசெம்போ கிராமத்தில் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் கிரேசு எமிலி அகினையாக ஒரு கிறித்துவ குடும்பத்தில் ஒகோட் பிறந்தார். [3] இக்கிராமம் பெரும்பாலும் கிறித்துவ உலூவோ இனக்குழுவினர் அதிகம் வசிக்கின்ற கிராமமாகும். [4] இவரது தந்தை யோசப் நியாந்துகா அசெம்போ கிராமத்தில் மேற்கத்திய கல்வியைப் பெற்ற முதல் மனிதர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆரம்பத்தில் ஆங்கிலிகன் தேவாலயத்திற்கு மாற்றிய இவரது தந்தை தேவாலய சமயப்பரப்பு குழுவுக்குச் சொந்தமான பெண்கள் பள்ளியில் இவருக்கு கல்வி கற்பித்தார். [5] கிரேசின் ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வி காலம் முழுவதும் கென்யாவிலேயே பூர்த்தியடைந்தது. தன்னுடைய தந்தையிடமிருந்து கிரேசு பழைய ஏற்பாட்டிலுள்ள கதைகளைக் கற்றுக்கொண்டார். தனது பாட்டியிடமிருந்துதான் ஒகொட் இப்பகுதியின் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளைக் கற்றுக்கொண்டார். பிற்காலத்தில் இதிலிருந்துதான் கிரேசு இலக்கிய உத்வேகம் பெற்றார். [6] கிரேசு ஒகொட்டின் பின்னணி மிகவும் சுவாரசியமானது.[7]

1949 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் கிரேசு உகாண்டா வைத்தியசாலையில் ஒரு மருத்துவத் தாதியாக பயிற்சி பெற்றார். பின்னர் இங்கிலாந்திலுள்ள புனித தாமசு மருத்துவமனையில் தாய்மார் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத் தாதியாகப் பணியாற்றினார். பின்னர் 1958 ஆம் ஆண்டு தனது தாய்நாட்டிற்குத் திரும்பிய இவர் கென்யாவின் கிசுமு மாகாணத்தில் தேவாலய சமயப்பரப்பு குழு நடத்தி வந்த மாசெனோ மருத்துவமனையில் மருத்துவத் தாதியாகப் பணிபுரிந்தார்.[5]. மேக்கிரெர் பல்கலைக்கழகக் கல்லூரியில் மாணவ சுகாதார சேவையிலும் கிரேசு கடமையாற்றினார். [3] கென்ய வரலாற்றில் முதன்முதலில் ஆங்கிலத்தில் தொகுப்பை வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு.

கூடுதலாக இப்பணிகளுனூடே கிரேசு பிபிசி சர்வதேச சேவையில் ஆவண எழுத்தாளராகவும் கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவை இலண்டன் அழைக்கிறது என்ற நிகழ்ச்சியின் அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தார். [6] உலூவோ மொழியில் ஒரு முக்கிய வானொலி நிகழ்ச்சியையும் நடத்தினார். ஏர் இந்தியா நிறுவனத்திற்குரிய கிழக்கு ஆப்பிரிக்காவின் மக்கள் தொடர்பு அதிகாரியாகவும், கிசுமு மாகாணத்தில் சமுதாய மேம்பாட்டு அலுவலராகவும் கிரேசு பணியாற்றினார். [5] 1975 ஆம் ஆண்டில், ஒகொட் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு கென்ய நாட்டின் பிரதிநிதியாகப் பணியாற்றினார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இவர் யுனெசுக்கோவிற்கான கென்ய தூதுக்குழுவில் ஓர் உறுப்பினரானார். இதே ஆண்டு கென்யாவின் எழுத்தாளர்கள் சங்கத்தை தொடங்க பெரிதும் பாடுபட்டார். [1] 1983 ஆம் ஆண்டு கென்யாவின் பாராளுமன்றத்தில் ஒரேயொரு பெண் உறுப்பினராகவும், அப்போதைய கென்ய குடியரசுத் தலைவர் தானியல் அராப் மோய் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராகவும் பதவி வகித்த பெருமையும் இவரைச் சாரும். [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

வரலாற்றுப் பேராசியர் பெத்வெல் அலான் ஒகொட்டை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

2015 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 18 ஆம் நாள் கிரேசு ஒகொட் தனது 85 ஆம் வயதில் நைரோபியில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mike Kuria, ed. Talking Gender: Conversations with Kenyan Women Writers, 2003. PJ-Kenya, p. 71.
  2. 2.0 2.1 Kenyan Writer Grace Ogor Dies பரணிடப்பட்டது 24 மே 2015 at the வந்தவழி இயந்திரம், 18 March 2015, The Insider.org, Retrieved 14 May 2016
  3. 3.0 3.1 Peter Ngangi Nguli, "Grace Ogot took the African Story to the World", Standard Digital, 10 September 2013.
  4. "Luo". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
  5. 5.0 5.1 5.2 "Grace Ogot". Answers.com. பார்க்கப்பட்ட நாள் 19 March 2015.
  6. 6.0 6.1 Bernth Lindfors, "Interview with Grace Ogot", 1979, in World Literature Written in English 18(1) 57–68.
  7. "Grace Ogot". Archived from the original on 2019-05-07. பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேசு_ஒகொட்&oldid=3549785" இலிருந்து மீள்விக்கப்பட்டது