செங்கிஸ் கானின் வளர்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கிஸ் கானின் வளர்ச்சி என்பது 1162 ஆம் ஆண்டு தெமுசினாகப் பிறந்தது முதல், 1206 ஆம் ஆண்டு அவருக்குச் "செங்கிஸ் கான்" (சில நேரங்களில் "சிங்கிஸ் கான்") என்ற பட்டம் வழங்கப்பட்டது வரை நடந்த நிகழ்வுகளைக் குறிப்பதாகும். இப்பெயருக்குப் "பிரபஞ்ச ஆட்சியாளர்" அல்லது "பெருங்கடல் ஆட்சியாளர்" என்று பொருள்.

செங்கிஸ் கானுக்கு முந்தைய மங்கோலியர்கள்[தொகு]

கிதான் லியாவோ அரசமரபின் (907–1125) காலத்தில் மங்கோலியப் பழங்குடியினங்களின் அமைவிடங்கள்

மங்கோலியர்கள் முதன்முதலில் தாங் அரசமரபின் வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஷிவேயி மக்களின் ஒரு கிளைப் பிரிவினர் என்று அவர்களைப் பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஷிவேயி மக்கள் 553 முதல் 745 ஆம் ஆண்டு வரை கோக்துருக்கியர்களுக்குக் கப்பம் கட்டுவார்களாக இருந்தனர். ஷிவேயி மக்கள் 10 ஆம் நூற்றாண்டுவரை சிறிய கிங்கன் மலைப்பகுதிகளில் வசித்தனர். அந்நேரத்தில் மங்கோலியர்கள் அர்குன் ஆற்றுப்பக்கம் இடம்பெயர்ந்தனர். கிதான்களுக்குக் கப்பம் கட்டுபவர்களாக மாறினர். 11 ஆம் நூற்றாண்டில் ஆனன் ஆறு மற்றும் கெர்லென் ஆறுகளை அடையும்வரை மங்கோலியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர்.[1]

மங்கோலியப் புராணப்படி சொர்க்கத்திலிருந்து வந்த நீல-சாம்பல் வண்ண ஓநாய் மற்றும் ஒரு வெளிர் மஞ்சள்-பழுப்பு வண்ண மான் ஆகியவற்றிலிருந்து மங்கோலியர்கள் தோன்றினர். ஓநாயும் மானும் ஒரு ஏரியைக் கடந்து புர்கான் கல்துன் மலையை அடைந்தன. அங்கே அந்த மானுக்கு ஒரு ஆண் மனிதக் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் பெயர் பாட் திசகன். அவர் தான் அனைத்து மங்கோலியர்களின் முன்னோர் ஆவார். பாட் திசகனின் வழிவந்தவர்களில் 11 ஆம் தலைமுறை ஆணான தோபுன் மெர்கென், கொரிலார் இனத்தை சேர்ந்த ஆலன் கோவா என்ற ஒரு இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். தோபுன் மெர்கென் இறந்தபிறகு ஆலன் கோவாவுக்கு போடோன்சார் முன்ஹாக் என்ற ஒரு குழந்தை பிறந்தது. இந்த போடோன்சார் முன்ஹாக் தான் போர்சிசின் பழங்குடியினப் பிரிவை நிறுவியவர் ஆவார்.[2]

போடோன்சாரின் நான்காம் தலைமுறை வழித்தோன்றலான கய்டு 11 ஆம் நூற்றாண்டின் போது பிறந்தார். "அனைத்து மங்கோலியர்களையும் ஆண்ட" முதல் ககான் கய்டு தான்.[3] அவரது பேரன் காபூல் கான் சின் அவைக்கு ஒரு தடவை அழைக்கப்பட்டார். போதை தலைக்கேறிய காபூல் கான் சின் பேரரசரின் தாடியைப் பிடித்து இழுத்தார். சின் பேரரசர் முதலில் காபூல் கானுக்குத் தண்டனை வழங்காமல் விட்டுவிடலாம் என முடிவு செய்தார். ஆனால் பிறகு மன மாற்றம் காரணமாக காபூல் கானைக் கைது செய்யத் தனது அதிகாரிகளிடம் ஆணையிட்டார். துரத்தி வந்த சின் வீரர்கள், பதுங்கியிருந்து தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். சிறிது காலத்திற்குப் பிறகு கய்டுவும் இறந்துவிட்டார். இதன் காரணமாகப் பழிவாங்கும் வாய்ப்பைச் சின் அரசமரபினர் இழந்தனர். 1135 முதல் 1147 ஆம் ஆண்டுவரை மங்கோலியர்கள் தொடர்ந்து சின் எல்லைகளின் மீது திடீர்ச் சோதனைத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடியாகச் சின் அரசமரபினர் தாதர்களுடன் கூட்டு வைத்தனர். தாதர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்து புதிய மங்கோலியக் கானான தாய்சியுடு இனத்தைச் சேர்ந்த அம்பகையைப் பிடித்தனர். அவரை சின் அவையில் ஒப்படைத்தனர். தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அம்பகை ஒரு தூதுவனைத் தன் உறவினர்களிடம் அனுப்பினார். தன் உறவினர்கள் இறக்கும்வரை தாதர்களுடன் போரிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.[4] ஒரு மரப்பலகையில் அம்பகையை வைத்து ஆணி அடித்தனர். அவர் இறக்கும் வரை அப்படியே விட்டுவிட்டுச் சென்றனர். அம்பகை பிடிக்கப்பட்ட 1150கள் அல்லது 1160களில், காபூலின் பேரன் எசுகெய், மெர்கிடு இனத்தைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கொங்கிராடு இனத்தைச் சேர்ந்த அவரது மணப்பெண்ணை அபகரித்தார். தாதர்களுக்கு எதிராக ஹோடுலா கான் நடத்திய தொடர் சோதனைத் தாக்குதல்களின்போது எசுகெய் அதில் பங்கெடுத்தார். இத்தகைய தாக்குதல்களில், ஒரு தாக்குதலின்போது வீடு திரும்புகையில் அவரது மனைவி தெமுசின் என்ற மகனைப் பெற்றெடுத்தார். இந்தத் தெமுசின் தான் பிற்காலத்தில் செங்கிஸ்கான் ஆனார்.[5]

குழந்தைப் பருவம் (1162-1177)[தொகு]

செங்கிஸ் கான், தெமுசின் என்ற பெயருடன் 1162 ஆம் ஆண்டு போர்சிசின் பழங்குடியினப் பிரிவின் தலைவரான எசுகெய்க்கும், அவருடைய மனைவியான ஒலகோனுடு பழங்குடியினத்தைச் சேர்ந்த ஓவலுனுக்கும் மகனாகப் பிறந்தார். 1171 ஆம் ஆண்டு எசுகெய், தாதர் பகுதிகளின் வழியே தெமுசினைக் கிழக்கு நோக்கி, கொங்கிராடு பழங்குடியினத்தைச் சந்திப்பதற்காக அழைத்துச் சென்றார். கொங்கிராடு இனத்தவர்கள் எசுகெயின் மனைவியின் இனமாகிய ஒலகோனுடுவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் ஆவர். அங்கு தனது மகனுக்கும், போர்ட்டே என்ற பெண்ணுக்கும் நிச்சயம் செய்ய அழைத்துச் சென்றார். இறுதியாகப் போர்ட்டேயின் தம்பி அல்ச்சி நோயனுக்குத் தெமுசினைப் பிடித்துப் போனதால் அவரது பரிந்துரையின் படி போர்ட்டேயின் தந்தை தாய் செச்சென் நிச்சயத்திற்கு ஒத்துக் கொண்டார். போர்ட்டே கொங்கிராடு இனத்தின் போஸ்குர் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். ஆரம்பகாலத் துருக்கிய-மங்கோலிய நாடோடிகளின் பாரம்பரியப் படி மணமகன் மணப்பெண் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

எனினும் திரும்பும்போது தாதர்கள் அவரை உணவு உண்ண வருமாறு அழைத்து விஷம் வைத்துக் கொன்றனர். தெமுசின் தனது தந்தையைப் பார்க்கத் திரும்பினார். ஆனால் அவர் வரும் முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். முன்னோர்களை வழிபடும் ஒரு நிகழ்ச்சியில் ஓவலுன் பங்கேற்பதை அம்பகையின் விதவைகள் தடுத்தனர்.[6] எசுகெயைப் பின்பற்றியவர்கள் ஒருவர் பின் ஒருவராக ஓவலுன் மற்றும் அவரது குழந்தைகளை அப்படியே விட்டு விட்டுப் புறப்பட ஆரம்பித்தனர். இறந்தவர்களின் ஆன்மாவானது குதிரை முடிகளால் செய்யப்பட்ட பதாகையில் வாழ்வதாக மங்கோலியர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு. ஓவலுன் தனது கணவரின் பதாகையை எடுத்துக் கொண்டு குதிரை மீதேறி நடந்து சென்று கொண்டிருந்தவர்களை தடுத்து நிறுத்தினார். புறப்பட்டவர்கள் வெட்கப்பட்டனர். தற்காலிகமாகத் திரும்பினர். இரவு வந்ததும் மீண்டும் ஒருவர் பின் ஒருவராக ஓவலுன் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டுச் செல்ல ஆரம்பித்தனர். தெமுசினின் தந்தையைப் பின்பற்றியவர்கள் ஓவலுனையும் அவரது குழந்தைகளையும் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர். தனது குழந்தைகளை தனியாளாகக் காப்பாற்றும் நிலைக்கு ஓவலுன் தள்ளப்பட்டார்.[7] ஓவலுன் தனது குழந்தைகளைக் கென்டீ மலைகளுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்கள் மீன்களைப் பிடித்து மற்றும் கிழங்குகளை உண்டு பல ஆண்டுகளுக்குக் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தனர்.[8] இந்த ஆண்டுகளில் தெமுசினின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி 3 நிகழ்வுகள் தவிர மிகக் குறைவாகவே தெரிய வருகிறது. தனது தந்தையின் முதல் தார மனைவி சோச்சிகலின் மகனாகிய பெக்தரைத் தெமுசின் மீனைத் திருடியதற்காகக் கொன்றார். இதன் காரணமாகத் தாய்சியுடு இனத்தவர்களால் பிடிக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டார். குற்றவாளிகளுக்கு தண்டனைக்காகக் கழுத்தில் மாட்டப்படும் பலகையுடன் வாழ்ந்தார். பிறகு சோர்கன் சீரா என்ற இரக்க குணமுடைய ஒரு காவலாளியின் உதவியால் தப்பித்தார்.[9] 1173 ஆம் ஆண்டு சதரன் (சசிரட்) இனத்தைச் சேர்ந்த சமுக்காவின் இரத்த சகோதரன் (ஆன்டா) ஆனார். சதரன் இனக் குழுவினர் போர்சிசின் இனக் குழுவில் இருந்து தான் தோன்றியவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் வேறு சிலர் அவர்கள் நெறிதவறிப் பிறந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.[10]

கான் ஆகுதல்[தொகு]

1191 ஆம் ஆண்டு தெமுசின் மற்றும் அவரது கூட்டாளிகள் மெர்கிடுகளைத் தாக்குதல்
1193-1194 ஆம் ஆண்டு தெமுசின் மற்றும் சமுக்கா பிரிதல்

ஆரம்பகாலத் தலைமைப் பதவி (1177-1191)[தொகு]

1177 ஆம் ஆண்டு தெமுசின் கொங்கிராடு பழங்குடியினரிடம் சென்று போர்ட்டேவை திருமணம் செய்து கொண்டார். மெர்கிடுகள் சிறிது காலத்திற்குப் பிறகு நடத்திய தாக்குதலில் போர்ட்டே கடத்தப்படுகிறார். தெமுசின் 20,000 வீரர்களைத் திரட்டுகிறார். தனது இரத்த சகோதரன் சமுக்கா மற்றும் கெரயிடுகளின் கானான தொகுருல் ஆகியவர்களின் ஆதரவைப் பெறுகிறார். அவர்கள் இணைந்து போர்ட்டேவை மீட்கத் தெமுசினுக்கு உதவுகின்றனர். அவர் எவ்வாறு மீட்கப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்றனவா? எனவும் தெரியவில்லை. அவர்கள் இணைந்து மெர்கிடுகளைத் தோற்கடித்தனர் என்று ஒரு நூலில் கூறப்பட்டுள்ளது. போரில் கொள்ளையடித்த ஏராளமான பொருட்களுடன் அவர் மீட்கப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் முன்னர் நடந்த நிகழ்வுடன் பிறகு நடந்த இராணுவ நடவடிக்கைகளை இணைத்து இச்செய்தி உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மீட்கப்பட்ட பிறகு போர்ட்டே ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார். ஆனால் அக்குழந்தையின் தந்தை ஒரு மெர்கிடுவாக இருக்க வாய்ப்பிருந்துள்ளது. எவ்வாறாயினும் அக்குழந்தையை தனது சொந்த மகனாக வளர்க்க தெமுசின் முடிவெடுத்தார். அக்குழந்தைக்குச் சூச்சி என்று பெயரிட்டார்.[11]

1177 முதல் 1191 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், அடிக்கடி தாய்சியுடுகள், சல்ஜியுடுகள், கதாகின் மற்றும் தாதர்கள் ஆகியோருடன் கலவையான முடிவுகளைப் பெற்ற சண்டைகளைத் தெமுசின் செய்தார் என்பதைத் தவிர அவரது வாழ்க்கையைப் பற்றி பெரும்பாலும் எந்தத் தகவலும் தெரியவில்லை. தெமுசினுக்குக் கீழே இருந்த ஒரு பழங்குடியினப் பிரிவு இறுதியாக அவரை விட்டுப் பிரிந்தது. தாய்சியுடுகளால் தோற்கடிக்கப்பட்டது. அப்பழங்குடியினப் பிரிவு பிறகு சமுக்காவுடன் இணைந்தது.[11] 1180களில் மங்கோலியாவில் ஒரு பஞ்சம் ஏற்பட்டது. இதன் காரணமாகப் பழங்குடியினங்களுக்கு நடுவே சண்டைகள் அதிகமாயின. ஆனால் இந்த நிகழ்வுகளில் தெமுசின் சிறிதளவே பங்களிப்பை ஆற்றினார்.[12]

மெர்கிடுகள் மீதான தாக்குதல் (1191)[தொகு]

போர்ட்டேயை மீட்ட மெர்கிடுகளின் மீதான முந்தைய தாக்குதலானது ஒரு தனிப்பட்ட தாக்குதலாக இருந்திருக்கலாம். 1191 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுடன் நூல் ஆதாரங்களில் இது குழப்பிக் கொள்ளப்படுகிறது. 1191 ஆம் ஆண்டு சமுக்கா, தெமுசின், தொகுருல் மற்றும் தொகுருலின் சகோதரர் ஜாகா கம்பு ஆகியோர் மெர்கிடுகளைத் தாக்க முடிவு செய்தனர். எனினும் தெமுசின் மற்றும் தொகுருல் போர் நடக்கும் இடத்திற்கு மூன்று நாட்கள் தாமதமாக வந்தனர். இது சமுக்காவைப் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கியது. 40,000 வீரர்களைக் கொண்ட வலிமையான கூட்டணிப் படைகள் கிழக்கு நோக்கி எதிரி முகாமை வடகிழக்கு பகுதியில் இருந்து தாக்குவதற்காகச் சென்றன. இப்படைகளை ஒரு மீனவன் கண்டான். மெர்கிடுகளிடம் அவர்களுக்கு வரப்போகும் ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்தான். ஆனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மெர்கிடுகள் தவறினர். சிதறடிக்கப்பட்டனர்.[13]

தலன் பல்ஜுட் யுத்தம் (1193)[தொகு]

யுத்தத்திற்குப் பிறகு தெமுசின் மற்றும் சமுக்கா சிறிது காலத்திற்கு இணைந்திருந்தனர். ஒரு கட்டத்தில் தாய்சியுடுகளுக்கு எதிராக கதாகின் மற்றும் சல்ஜியுடுகளுடன் கூட்டணி ஏற்படுத்த அவர்கள் தூதுவர்களை அனுப்பினார். 1193 ஆம் ஆண்டு அவர்களின் முகாமில் இருந்த உறுப்பினர்கள் இடையே ஒரு குதிரை திருடப்பட்ட நிகழ்வின் காரணமாகப் பிரச்சினை ஏற்பட்டதால் தெமுசின் மற்றும் சமுக்கா பிரிந்தனர். சமுக்காவிடமிருந்த 41 பழங்குடியின தலைவர்கள் மற்றும் 10,000 வீரர்களைத் தெமுசின் தன்னுடன் அழைத்துச் சென்றார். பின்வந்த நாட்களில் தன்னைப் பின்பற்றுபவர்களால் தெமுசின் கானாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தெமுசினின் சக்தியைக் கண்டு அஞ்சிய தாய்சியுடுகள் சமுக்காவுடன் இணைந்தனர்.[14]

வளர்ச்சி[தொகு]

தாதர்களுக்கு எதிராகச் சின் அரசமரபினருடன் தெமுசின் கூட்டணி வைத்தார். அதே நேரத்தில் அச்சூழ்நிலையைப் பயன்படுத்தி நைமர்கள் தெமுசினைத் தாக்குதல், 1196.
தெமுசின் மற்றும் தொகுருல் மெர்கிடுகளை மேலும் வடக்கு நோக்கி விரட்டுதல் மற்றும் மேற்கில் இருந்த நைமர்களைத் தாக்குதல், 1199
தெமுசினுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணியை புய்ருக் கான் ஏற்படுத்துதல். ஆனால் அந்தத் தாக்குதல் தோல்வியில் முடிந்தது, 1202-1203

தாதர்களுக்கு எதிரான ஆரம்பகால வெற்றிகள் (1195-1196)[தொகு]

1195 ஆம் ஆண்டு சுரசன்களின் சின் அரசமரபு தாதர்களுடன் கூட்டணி வைத்து கொங்கிராடு பழங்குடியினத்தைத் தாக்கியது. இந்த இராணுவ நடவடிக்கையானது வெற்றியில் முடிந்தது. ஆனால் தாதர் தலைவர் சுக்சு போரில் கொள்ளையடித்த பொருட்களை பிரித்துக் கொள்வதில் சண்டையிட்டார். தகவல்தொடர்பு முறிந்ததன் காரணமாகச் சின் அரசமரபினர் தாதர்கள் மீது அடுத்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். சின் தளபதியான வன்யன் சியாங் கெர்லென் ஆற்றை நோக்கி வன்யன் அங்குவோ தலைமையிலான ஒரு படையை அனுப்பினார். அங்கு தாதர் படைகளை மூன்று நாட்களுக்கு எங்கும் செல்ல விடாமல் அவர்கள் தடுத்து வைத்திருந்தனர். பிறகு சின் இராணுவத்தின் பெரும்பகுதியினர் வந்து அவர்களைத் தோற்கடித்தனர்.[15]

கொங்கிராடு இனத்தவர் தங்களது முந்தைய சண்டைகளை மறக்கவில்லை. 4 பெப்ரவரி 1196 ஆம் ஆண்டு அவர்கள் சின் பகுதிகளுக்குள் நீண்ட தூரத்திற்குச் சென்று தாக்குதல் நடத்தினர். ஒரு சின் பிரிவைத் தோற்கடித்தனர். அதேநேரத்தில் சின் படைகளிடமிருந்து தப்பியோடிய தாதர்களை தொகுருல் மற்றும் தெமுசின் இடைமறித்தனர். சிக்கலான சூழ்நிலையில் இருந்த தாதர்கள் வெட்டவெளியில் போரிடுவதைத் தவிர்த்து தற்காலிக தடுப்புகளை அமைத்துப் போரிட்டனர். அநேகமாக, எதிரிப் படையினரைவிட தாதர்கள் அதிக பலவீனமாக இருந்ததால் அவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வாள் சண்டையில் தாதர்கள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டனர். தொகுருல் மற்றும் தெமுசின் பிறகு சின் அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தினர். தாதர்கள் தோற்கடிக்கப்பட்டதால் சின் அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தொகுருல் மற்றும் தெமுசினுக்குப் பட்டங்களை வழங்கினர். தெமுசினால் ஈர்க்கப்பட்ட சின் அதிகாரிகளில் ஒருவரான கிதான் இனத்தைச் சேர்ந்த எலு அகை அவரது சகோதரர் துகுவாவுடன் பிறகு 1203 ஆம் ஆண்டு தெமுசின் பக்கம் சேர்ந்தார்.[16]

தாதர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு நைமர்களின் இனஞ்ச் பில்கே கானின் உதவியுடன் தொகுருலின் சகோதரர் எர்கே காரா தொகுருலைப் பதவியிலிருந்து தூக்கி எறிந்தார். கெரயிடு பகுதிக்குள் நுழைந்த ஒரு நைமர்களின் படை தெமுசினின் முகாமைத் தாக்கியது. சிறிது சேதம் விளைவித்தது.தொகுருல் காரா கிதைக்குத் தப்பியோடினார்.[16]

தோற்கடிக்கப்பட்ட தாதர்களின் சுக்சு சின் அரசமரபிடம் அடிபணிந்தார். அதே ஆண்டில் சின் அரசமரபினரை எதிர்த்தார். சுக்சு 1198 ஆம் ஆண்டு சின் அரசமரபிடம் மீண்டும் அடிபணிந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிட்டார். வடக்கிலிருந்த நிலையாக வாழ்கிற மக்களைக் காப்பாற்ற வன்யன் சியாங் நீண்ட தற்காப்பு வேலைப்பாடுகளைக் கட்டுவதற்கு ஆணையிட்டார். 1196 ஆம் ஆண்டு பெற்ற வெற்றிகளை போல் மீண்டும் வெற்றிகளைப் புல்வெளி நாடோடிகள் மீது எடுத்த படையெடுப்புகள் மூலம் சின் அரசமரபால் பெற இயலவில்லை.[17]

அதிகாரத்தை நிலைநிறுத்துதல் (1196-1199)[தொகு]

நைமர்களின் அதிகரித்துக் கொண்டிருந்த செல்வாக்கால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதால், தெமுசின் அவர்களுக்கு எதிராக ஒரு கூட்டுப் படையெடுப்புப் பயணத்தை நடத்த சுர்கின்களிடம் உதவி கோரினார். பதிலுக்குச் சுர்கின்கள் தெமுசினின் தூதர்களைக் கொன்றனர். 1196 ஆம் ஆண்டு தெமுசின் சுர்கின்களைத் தாக்கினார். பெரும்பாலான சுர்கின்கள் அடிபணிய வைக்கப்பட்டனர். அவர்களில் முகாலியும் ஒருவர். முகாலி பிற்காலத்தில் மங்கோலியப் பேரரசின் முன்னணித் தளபதிகளில் ஒருவரானார். மெர்கிடுகளைத் துரத்திவிடத் தெமுசினுக்கு உதவி செய்த பிறகு தொகுருலின் சகோதரரான எர்கே காரா தெமுசினுடன் இணைந்தார். 1197 ஆம் ஆண்டு தொகுருல் திரும்பினார். தெமுசினின் உதவியுடன் தொகுருல் கெரயிடுகளின் தலைவராகத் தன்னை மீண்டும் நிறுவினார். 1197-98 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் எஞ்சியிருந்த சுர்கின்களைத் தெமுசின் ஒழித்துக் கட்டினார். சுர்கின்களின் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.[18]

1198 முதல் 1199 ஆம் ஆண்டு வரை தெமுசின் மற்றும் தொகுருல் மெர்கிடுகளை வேட்டையாடினர். அவர்களை மேலும் வடக்கு நோக்கித் துரத்தினர். போரில் கிடைத்த பொருட்களைத் தெமுசினுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனத் தொகுருல் முடிவெடுத்தார். இதனால் தெமுசின் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார்.[19]

நைமர்களை எதிர்கொள்ளுதல் (1199)[தொகு]

இனஞ்ச் பில்கே கான் 1198 ஆம் ஆண்டு இறந்தார். இதன் காரணமாக நைமர்கள் அவரது இரு மகன்களான தயங் மற்றும் புய்ருக் கான் ஆகியோரிடையே பிரிக்கப்பட்டனர். 1199 அம் ஆண்டு தெமுசின், தொகுருல், மற்றும் சமுக்கா ஆகியோர் அல்த்தாய் மலைகளுக்கு மேற்கே புய்ருக்கைத் தாக்கினர். கிழக்கிலிருந்து வந்த படையெடுப்பாளர்களால் எச்சரிக்கை அடைந்த தயங், கோக்சே சப்ரக் தலைமையில் ஒரு படையை அனுப்பினார். அவர் தொகுருலை இடைமறித்து தொகுருலின் மக்களில் பாதிப் பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தார். கெரயிடுகளுக்கு ஆதரவளிக்க முகாலி, போரோகுலா, சிலவுன், மற்றும் பூர்ச்சு ஆகியோரைத் தெமுசின் அனுப்பினார். சரியான நேரத்திற்கு வந்த அவர்கள் யுத்தத்தின் போக்கை மாற்றி நைமர்களைத் தோற்கடித்தனர். இந்த யுத்தத்தில் வெற்றிபெற்ற பொழுதும் கூட்டணிப் படைகள் மேலும் கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். இரண்டு நைமர் பிரிவுகளும் ஒன்றிணைந்து அவர்களுக்கு எதிராக திரும்பலாம் என்ற பயத்தின் காரணமாக அவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[20]

தாதர்கள் மற்றும் நைமர்களைத் தோற்கடித்தல் (1200-1202)[தொகு]

1200 ஆம் ஆண்டு தெமுசின் மற்றும் தொகுருல் ஆனன் ஆற்றின் பக்கமாகக் கிழக்கு நோக்கித் தாய்சியுடு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். யுத்தத்தில் தாய்சியுடைத் தோற்கடித்தனர். தப்பித்து ஓடிய தாய்சியுடுகளைத் தெமுசின் துரத்தினார். ஒரு ஆற்றை கடக்கும் பகுதியின் அருகே தாய்சியுடுகள் திடீரென எதிர்த் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலின் போது தெமுசின் காயமடைந்தார். யுத்தமானது அடுத்தநாள் தாய்சியுடுகள் தோற்கடிக்கப்படும் வரை நீடித்தது. அடுத்து, கதாகின், சல்ஜியுட், தோர்பென், தாதர் மற்றும் கொங்கிராடு இனங்கள் தெமுசினுக்கு எதிராகக் கூட்டணியை ஏற்படுத்தின. இரு பக்கங்களும் கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டன. யுத்தத்தின் இறுதியில் தொகுருல் மற்றும் தெமுசின் பின்வாங்கினர்.[21]

இரண்டு வருடங்களுக்குத் தொகுருல் இயலாமைக்கு உள்ளாக்கப்பட்ட போதிலும், தெமுசின் தனது இழப்புகளில் இருந்து மீண்டு, தாதர்கள் மற்றும் தோர்பென் மீது போர் தொடுக்கத் திரும்பினார். அதே நேரத்தில் தெமுசினின் தம்பி கசர் கொங்கிராடைத் தாக்கினர். தெமுசினின் எதிரிகள், முக்கியமாகக் கொங்கிராடு, ஒன்று கூடி தெமுசினுக்கு எதிராகச் சமுக்காவிற்குக் குர்-கான் என்ற பட்டத்தை வழங்கினார். 1201 ஆம் ஆண்டு தெமுசினிடம் சமுக்காவின் படைகள் தோல்வியடைந்தன. இதன் முடிவாகக் கொங்கிராடு இனத்தவர் குறுகிய காலத்திற்கு அணி மாறினர். எனினும் மீண்டும் அடுத்த வருடம் திரும்பி வந்து தெமுசினுக்கு எதிராகச் சண்டையிட்டனர்.[22]

1202 ஆம் ஆண்டு போரில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைப் பிரிப்பதற்கு தெமுசின் புதிய விதிகளை அறிமுகப்படுத்தினார். இந்தப் புதிய முறைக்கு மறுப்பு தெரிவித்த தெமுசினின் பல உறவினர்கள் 10,000 வீரர்களுடன் பிரிந்து சென்றனர். அதே வருடம் தாதர்களைத் தெமுசின் முழுவதுமாகத் தோற்கடித்தார். அனைத்து தாதர்களையும் கொல்லத் தெமுசின் எண்ணினார். இதற்கு அவரது தந்தையின் இறப்பிற்குப் பழிவாங்குவதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் தெமுசினின் ஒன்றுவிட்ட சகோதரனான பெலகுதை இந்தத் தகவலைக் கைதிகளுக்குக் கசியச் செய்தார். இதன் காரணமாகத் தாதர் கைதிகள் பிரிந்து சென்று ஒரு மலையின் மீது தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்தினர். தாதர் இனத்தைச் சேர்ந்த தெமுசினின் தம்பி கசரின் மனைவியும் கொல்லப்பட வேண்டிய 500 கைதிகளை மறைத்து வைத்தார்.[23]

புய்ருக் கான் ஒரு பெரிய கூட்டணி இராணுவத்தை ஒருங்கிணைத்தார். இந்த இராணுவத்தில் சமுக்கா கூட இருந்தார். மேலும் ஒயிரட்களும் இந்த இராணுவத்தில் இருந்தனர். இந்த இராணுவம் வலிமையானதாக 70,000 வீரர்களைக் கொண்டிருந்தது. இந்த இராணுவமானது புயிர் ஏரியின் அருகே முகாமிட்டு இருந்த தெமுசின் மற்றும் தொகுருலை நோக்கி முன்னேறியது. சின் அரசமரபினரின் கோட்டைப் பாதுகாப்புகளுக்கு பின்னர் தங்களது படைகளைத் தெமுசின் மற்றும் தொகுருல் நகர்த்தினர். இரண்டு பக்கங்களிலும் இருந்த படைகள் சிதறின. அந்த நாளில் காலநிலையும் மோசமடைந்தது. கடுமையான பனி மற்றும் காற்றினால் யுத்தகளமானது மோசமானது. புய்ருக் பின்வாங்க எண்ணினார். ஆனால் ஒரு கட்டத்தில் வெட்டவெளியில் மாட்டிக்கொண்டார். கூட்டணி இராணுவமானது குழப்பத்திற்கு உள்ளானது. தனது கூட்டணியினரின் பொருட்களைக் கொள்ளையடிக்கச் சமுக்கா இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டார். இது கொயிடன் யுத்தம் என்று பின்னாளில் அறியப்பட்டது.[24]

எதிரிகளைத் தோற்கடித்தல்[தொகு]

ஆரம்பத்தில் வெற்றிகரமாகத் தொகுருல் தெமுசினைத் தாக்குதல். ஆனால் தொகுருலின் கூட்டாளிகள் அவருக்குத் துரோகம் செய்ததால் 1203 ஆம் ஆண்டு நிலைமை மாறியது.
தெமுசின் தயங் கானின் நைமர்களைத் தோற்கடித்தல், 1204-1205.
செங்கிஸ் கான் மெர்கிடு மற்றும் நைமர்களுக்கு முடிவு கட்டுதல், 1206-1208.

தொகுருலின் துரோகம் (1203)[தொகு]

செங்கும் தெமுசினுக்கு எதிராகத் திரும்பத் தனது தந்தையைத் தூண்டிவிட்டான். இரு குடும்பங்களுக்கு இடையில் கூட்டணியை ஏற்படுத்த ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அந்த திருமணத்திற்கு வரும் தெமுசினைப் பதுங்கியிருந்து தாக்க அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் கெரயிடு இனத்தைச் சேர்ந்த ஒருவன் முன்னரே தெமுசினை எச்சரித்தான். இதன் மூலமாக அத்திட்டம் தோல்வியில் முடிந்தது. தொகுருல் மற்றும் சமுக்கா கசரைத் தாக்கி ஒரு யுத்தத்தைத் தொடர்ந்தனர். கசரின் இராணுவம் தோற்கடிக்கப்பட்டது. கசர் தப்பித்தார். எனினும் அவரது பெரும்பாலான குடும்பம் கைது செய்யப்பட்டது. அடுத்து அவர்கள் தெமுசினை நோக்கி முன்னேறினர். தெற்குப் பகுதியில் இருந்து தெமுசின் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் தெமுசின் ஒரு சிறிய தடுப்புப் பகுதிக்குள் இடம்பெயர்ந்ததன் மூலம் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த எதிரிகளின் ஆபத்தை முறியடித்தார். இந்த யுத்தத்தில் செங்கும் காயமடைந்தார். இதன்காரணமாகச் செங்குமின் படைகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தித் தெமுசின் பின்வாங்கினார். எனினும் தெமுசினைத் துரத்தாமல் முகாமுக்கு திரும்பத் தொகுருல் முடிவெடுத்தார். இது பின்னாளில் கலகல்ஜித் மணல்களின் யுத்தம் என்று அறியப்பட்டது.[25][26]

தொகுருலிடம் இருந்து பிரிவதெனச் சமுக்கா மற்றும் தொகுருலின் பெரும்பாலான கூட்டாளிகள் முடிவெடுத்தனர். இதைப் பற்றி அறிந்த தொகுருல் அவர்களை தாக்கினார். அவர்களில் சிலர் தெமுசின் பக்கம் அணி மாறினர். 1203 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தின் போது இரண்டு பக்கங்களின் நிலைமையானது மாறியது. தெமுசினின் படைகள் 40,000 வீரர்களுக்கு மேல் கொண்டிருந்த நேரத்தில் தொகுருலின் படை அந்த எண்ணிக்கையில் பாதியைத்தான் கொண்டிருந்தது. கசர் தொகுருல் பக்கம் அணி மாறியதாகக் கூற வைத்து தொகுருலின் முகாமைத் தெமுசின் நோட்டமிட வைத்தார். தொகுருலின் இடம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தெமுசினின் இராணுவம் இரவில் சென்று கெரயிடு முகாமைச் சுற்றி வளைத்தது. மூன்று நாட்களுக்கு சண்டையிட்ட கெரயிடுகள் பிறகு சரணடைந்தனர். யுத்தத்தில் இருந்து தப்பி ஓடிய தொகுருல், அவரைத் தொகுருல் என்று நம்ப மறுத்த நைமர் இனத்தைச் சேர்ந்த கோரி சுபேசி என்பவனால் கொல்லப்பட்டார். செங்கும் மேற்கு சியாவுக்குத் தப்பி ஓடினான்.[27]

தயங் கானின் தோல்வி (1204)[தொகு]

சமுக்கா, மெர்கிடுகள் மற்றும் கெரயிடுகள் தயங் கானின் நைமர்களுடன் தெமுசினை எதிர்க்க இணைந்தனர். அந்த நேரத்தில் தெமுசினிடம் 66,000 போர் வீரர்கள் இருந்தனர். 1204 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களில் பெரும்பாலானவர்களை மேற்கு நோக்கித் தயங்கை எதிர்க்கத் தெமுசின் நகர்த்தினார். தெமுசினின் துருப்புகளின் தரத்தைக் கண்டு நைமர் ஒற்றர்கள் பெரிதாக ஈர்க்கப்படவில்லை. ஆனால் தயங் அல்தாய் மலைகளைத் தாண்டி பின்வாங்கி தெமுசினின் துருப்புகளைச் சோர்வடைய வைக்க எண்ணினார். தயங்கின் மகன் குச்லுக் மற்றும் அவரது மூத்த அதிகாரி ஆகியோர் இத்திட்டத்திற்கு எதிராக வாதிட்டனர். தெமுசினுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துமாறு தயங்கை சமாதானம் செய்தனர். எதிரிக் கூட்டணிப் படைகள் ஓர்கோன் ஆற்றைக் கடந்தன. ஆனால் தெமுசினின் படைகளைக் கண்டபோது பின்வாங்கி ஒரு மலையடிவாரத்தில் ஒதுங்கின. தனது இராணுவத்தை "ஏரி" யுத்த அமைப்பில் நிற்குமாறு மற்றும் "உளி" யுத்தத்தை நடத்துமாறும் தெமுசின் ஆணையிட்டார். தெமுசினின் இராணுவமானது ஒரு நீண்ட வரிசையில் நைமர்களைச் சுற்றி வளைப்பது போன்ற அமைப்பில் நின்றது. நைமர்களும் அதற்குப் பதிலாகத் தங்களது படைகளைச் சிதறச் செய்தனர். நைமர்களைத் தனது இராணுவம் சுற்றி வளைக்கப் போகிறது என்று நம்ப வைத்த தெமுசின், பிறகு நைமர்களின் முன்பகுதியைத் தாக்கச் செய்தார். அதற்குப் பிறகு தனது தம்பி கசரால் தலைமை தாங்கப்பட்ட முதன்மை இராணுவத்தை வைத்துத் தாக்கச் செய்தார். இவ்வாறாக நைமர்கள் மீண்டும் ஒரு மலை அடிவாரத்திற்குத் துரத்தப்பட்டனர். சமுக்காவும் நைமர்களை விட்டுப் பிரிந்தார். சரணடையத் தெமுசின் அளித்த வாய்ப்பை நைமர்கள் நிராகரித்தனர். தொடர்ந்து ஒரு நாளுக்குச் சண்டையிட்ட அவர்கள் பிறகு கொல்லப்பட்டனர். தயங் யுத்தத்தில் மரணமடைந்தார்.[28]

பின் பகுதியில் இருந்த முகாமைப் பாதுகாக்கக் குச்லுக் விடப்பட்டிருந்தார். தெமுசினின் இராணுவம் வந்தபோது தனது சிறிய எண்ணிக்கையிலான பின்பற்றுபவர்களுடன் தப்பித்து ஓடினார். பிறகு சமுக்கா பிடிக்கப்பட்டார். தெமுசினிடம் ஒப்படைக்கப்பட்டார். கொல்லப்பட்டார்.[28]

உசாத்துணை[தொகு]

  1. Twitchett 1994, ப. 329.
  2. Twitchett 1994, ப. 330.
  3. Twitchett 1994, ப. 331.
  4. May 2018, ப. 41.
  5. Twitchett 1994, ப. 333.
  6. ராட்ச்னெவ்சுகி, பால் (1991). செங்கிஸ் கான்: அவரது வாழ்க்கை மற்றும் மரபு. பிளாக்வெல் பதிப்பகம். பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-631-16785-4. https://books.google.co.in/books/about/Genghis_Khan.html?id=eCfVjwEACAAJ&redir_esc=y. 
  7. Mote 2003, ப. 415-416.
  8. Mote 2003, ப. 419.
  9. Twitchett 1994, ப. 335.
  10. Atwood 2004, ப. 259.
  11. 11.0 11.1 Sverdrup 2017, ப. 42.
  12. Sverdrup 2017, ப. 43.
  13. Sverdrup 2017, ப. 46.
  14. Sverdrup 2017, ப. 47.
  15. Sverdrup 2017, ப. 51.
  16. 16.0 16.1 Sverdrup 2017, ப. 52.
  17. Sverdrup 2017, ப. 53.
  18. Sverdrup 2017, ப. 56.
  19. Sverdrup 2017, ப. 57.
  20. Sverdrup 2017, ப. 62.
  21. Sverdrup 2017, ப. 66.
  22. Sverdrup 2017, ப. 68.
  23. Sverdrup 2017, ப. 70.
  24. Sverdrup 2017, ப. 74.
  25. Sverdrup 2017, ப. 78.
  26. May 2018, ப. 56.
  27. Sverdrup 2017, ப. 79.
  28. 28.0 28.1 Sverdrup 2017, ப. 83.