உஸ்கல் கான் தோகுஸ் தெமுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உஸ்கல் கான் அல்லது வடக்கு யுவானின் கடைசிப் பேரரசர் (北元末主)[1] என்பவர் மங்கோலியாவை அடிப்படையாகக்  கொண்டிருந்த வடக்கு யுவான் அரசமரபின் மங்கோலியப் பேரரசர் ஆவார். இவரது இயற்பெயர் தோகுஸ் தெமுர் (ஆட்சி. 1378-1388). தயன் கான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மங்கோலியர்களின் கடைசி சக்தி வாய்ந்த கான் இவர்தான்.[2]

தோகுஸ் தெமுர் பிலிகுது கானின் தம்பியும், சீனாவின் கடைசி யுவான் பேரரசரான தோகோன் தெமுரின் மகனும் ஆவார். வடக்கு யுவனின் அரியணைக்கு வருவதற்கு முன்னர் இவர் இளவரசர் யி (益王) என்ற பட்டத்தைக் கொண்டிருந்தார்.[3] 1378இல் பிலிகுது கான் இறந்த பிறகு இவர் உஸ்கல் கான் என்ற பட்டத்துடன் அரியணைக்கு வந்தார். கடைசி அரசரின் இறுதிச் சடங்கின்போது அதில் கலந்து கொள்ள மிங் அரசானது ஒரு தூதுக்குழுவை அனுப்பியது. மேலும் 1378 ஆம் ஆண்டு நடந்த இங்சாங் யுத்தத்தின்போது தாங்கள் பிடித்து வைத்திருந்த மங்கோலிய இளவரசர் மைதர்பாலை விடுவித்தது.

உஸ்கல் கான் தோகுஸ் தெமுர் இங்சாங் மற்றும் கரகோரத்திற்கு அருகில் தனது படைகளை திரட்டினார்.[4] மஞ்சூரியாவில் இருந்த ஜலயிர் இன  நகசுவின் ஒத்துழைப்புடன் இவர் வடக்குப் பகுதியிலிருந்து மிங் அரசிற்கு அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்குப்  பதிலாக 1380 ஆம் ஆண்டும் மிங் அரசானது மங்கோலியா மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. மங்கோலியர்களின் தலைநகரான கரகோரத்தைச் சூறையாடியது.

சூன் 1380 ஆம் ஆண்டு வடக்கு சீனாவில் இலியசான் தலைமையில் இருந்த மங்கோலியக் கோட்டைப் படையை மிங் இராணுவம் அடித்து நொறுக்கியது. அதே வருடம் உஸ்கல் கானின் தளபதிகளான ஒல்ஜே-புகா மற்றும் நயிர்-புகா ஆகியோர் லுலுன் நகரத்தின் மீது தாக்குதல் நடத்தினர். அதிகாரி லியு குவாங்கைக் கொன்றனர். அடுத்த வருடம் மிங் அரசானது மங்கோலியர்களுக்கு எதிராக ஒரு பெரிய இராணுவத்தை அனுப்பியது.

1387 ஆம் ஆண்டு மஞ்சூரியாவில் இருந்த நகசுவின் படைகளை ஒழிக்கக் கோங்வு பேரரசர் முடிவு செய்தார். சங்சுங் நகரத்திற்கு அருகில் நடந்த யுத்தத்தில் இரு பக்கத்திற்கும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன. 1387 ஆம் ஆண்டு தோகுஸ் தெமுர் திடீரென இக்கட்டான சூழ்நிலையை எதிர்நோக்க வேண்டியிருந்தது. ஒரு கடுமையான பஞ்சம் காரணமாக நகசு மிங் அரசிடம் சரணடைந்தார். தற்போது மிங் அரசானது இங்சாங்கில் வாழ்ந்து கொண்டிருந்த உஸ்கல் கான் தோகுஸ் தெமுர் மீது தங்களது கவனத்தைத் திருப்பியது. 1388 ஆம் ஆண்டு புயிர் ஏரிக்கு அருகில் இவர் மிங் அரசமரபால் சோதனைத் தாக்குதலுக்கு உள்ளானார். கரகோரத்திற்குத் தப்பி ஓடும் வழியில் தூல் ஆற்றின் அருகில் திடீரென ஒயிரட்களுடன் இணைந்திருந்த அரிக் போகேயின் வாரிசான எசுதரால் தாக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டார்.[5] எசுதரின் தளபதி அரசனையும், அவரது மகனையும் கொன்றார். மேற்கு நோக்கித் தப்பி ஓடி தனது தளபதி  மர்காசுடன் இணைவதற்கு உஸ்கல் கான் முடிவெடுத்திருந்தார். இவ்வாறாக மங்கோலியாவில் குப்லாயின் வழித்தோன்றல்களின் சக்தி குறைய ஆரம்பித்து ஒயிரட்களின் வளர்ச்சி ஆரம்பமானது.

உசாத்துணை[தொகு]

  1. 郑天挺 [Zheng Tianting], 吴泽 [Wu Ze], 杨志玖 [Yang Zhijiu] (2007). 中國歷史大辞典: A-J [Comprehensive Dictionary of Chinese History: A-J] (in Chinese). 上海辞书出版社 [Shanghai Lexicographical Publishing House]. p. 589.
  2. Ed.Denis Crispin Twitchett, John King Fairbank-The Cambridge history of China, Volume 2; Volume 8, p. 227.
  3. 王世貞. 《北虏始末志》. 
  4. L. Jamsran-Mongol ulsyin tuuh, vol. III, p. 28.
  5. Reuven Amitai-Preiss, Reuven Amitai, David Morgan-The Mongol empire and its legacy, p. 293.