அந்தாட்டிக்காவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அந்தாட்டிக்காவின் வரலாறு (தமிழக வழக்கு: அண்டார்டிக்காவின் வரலாறு) என்பது புவியின் தொலைதூர தென்பகுதியில் இருப்பதாக நம்பப்பட்ட தெரா ஆத்திரேலியசு என்ற ஒரு பெரிய கண்டத்தை பற்றிய ஆரம்பகால மேற்கத்திய  கோட்பாடுகளிலிருந்து உருவாகிறது. அந்தாட்டிக்கா என்ற சொல் ஆர்க்டிக் வட்டத்திற்கு எதிரானது என்பதை உணர்த்துகிறது.[1] இச்சொல் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் டைரின் மரினசால் உருவாக்கப்பட்டது.

நன்னம்பிக்கை முனை மற்றும் ஹார்ன் முனை ஆகியவற்றை 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் சுற்றிக் கடந்த நிகழ்வுகள் தெரா ஆத்திரேலியசு இன்கோகினிடோ ("தெரியாத தெற்கு நிலம்"), ஒருவேளை இருக்குமாயின், அது கண்டமாகத்தான் இருக்கும் என நிரூபித்தன. 1773ம் ஆண்டு ஜேம்ஸ் குக் மற்றும் அவரது குழு அந்தாட்டிக்க வட்டத்துக்குள் முதன்முறையாக சென்றனர். அவர்கள் அருகில் இருந்த தீவுகளை கண்டறிந்த போதும் அந்தாட்டிக்காவைக் காணவில்லை. அவர்கள் அந்தாட்டிக்கா கண்டத்திலிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

27 ஜனவரி 1820 ஆம் ஆண்டு பேபியன் கோட்லியேப் வான் பெல்லிங்சவுசென் மற்றும் மிக்கைல் லசரேவ் ஆகியோர் தலைமையிலான உருசிய பயணக் குழு இளவரசி மார்த்தா கடற்கரையில் ஒரு பனிக்கட்டிப் பகுதியை கண்டது. இவ்விடமே பிற்காலத்தில் பிம்புல் பனிக்கட்டி பகுதி என்று அழைக்கப்பட்டது. பெல்லிங்சவுசென் மற்றும் லசரேவ் ஆகிய இருவரும் அந்தாட்டிக்கா கண்டத்தின் நிலப்பகுதியை அதிகாரபூர்வமாகப் பார்த்துக் கண்டறிந்த முதல் ஆய்வுப் பயணம் செய்பவர்கள் ஆயினர். மூன்று நாட்களுக்குப் பிறகு 30 ஜனவரி 1820 ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த எட்வர்ட் பிரான்ஸ்பீல்டு தலைமையிலான ஒரு பிரித்தானிய பயணக்குழு டிரினிட்டி தீபகற்பத்தை கண்டது. பத்து மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவை சேர்ந்த நீர்நாய் வேட்டையாடுபவர் நாதனியல் பால்மர் 17 நவம்பர் 1820 அன்று அந்தாட்டிக்காவைக் கண்டார். அந்தாட்டிக்காவில் முதன்முதலில் கால் வைத்தவர் அநேகமாக அதற்கு ஒரு வருடம் கழித்து அங்கு இறங்கிய  நீர் நாய் வேட்டையாளர் மற்றும் அமெரிக்க கப்பல் தலைவரான யோவான் டேவிஸ் என்று கருதப்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் தென் துருவத்தை அடைய பல்வேறு ஆய்வுப் பயணங்கள் "அந்தாட்டிக்கா ஆய்வுப் பயணக் காலம்" என்ற நேரத்தின் போது நடைபெற்றன. அதில் பல, காயங்கள் மற்றும் இறப்பில் முடிந்தன. தென் துருவத்தை அடைவதில் நோர்வேயைச் சேர்ந்த ருவால் அமுன்செனுக்கும், பிரித்தானியரான ராபர்ட் பால்கன் பால்கன் ஸ்காட்டுக்கும் இடையே போட்டி இருந்தது. இறுதியாக ருவால் அமுன்சென் 13 டிசம்பர் 1911 ஆம் ஆண்டு தென் துருவத்தை அடைந்தார்.

உசாத்துணை[தொகு]

  1. "Meteorologica Book II 5". Archived from the original on 2015-06-27. பார்க்கப்பட்ட நாள் 2020-05-01.