சாந்திதேவ் கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்திதேவ் கோஷ்

சாந்திதேவ் கோஷ் (Santidev Ghose) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். பாடகர், நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இரவீந்திர சங்கீதத்தின் புகழ்வாய்ந்த இசைப்பாடல் ஆசிரியர் போன்ற பல சிறப்புகள் இவருக்கு உண்டு[1] இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலுள்ள சாந்திநிகேதன் என்ற ஊரில் 1910 ஆண்டு மே மாதம் ஏழாம் நாள் இவர் பிறந்தார்.

தேசம் என்ற வங்காள இலக்கிய இதழின் புகழ்பெற்ற தொகுப்பாசிரியர் சாகர்மோய் கோஷ் இவரின் இளைய சகோதரர் ஆவார் [1].

இளைஞனாக இருந்தபோது சாந்தி நிகேதனில் ஓர் ஆசிரியராக பணிபுரிய இரவீந்திரநாத் தாகூரால் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இசைக் கல்விக்காக இந்தியா முழுவதும் மட்டுமின்றி இலங்கை, சாவா மற்றும் பாலி ஆகிய நாடுகளுக்கும் இவர் அனுப்பப்பட்டார். கவிஞரின் பரிசு பெற்ற நடன நாடகங்களில் கோஷை நடிக்கவும் நடனமாடவும் தாகூர் ஊக்குவித்தார். ஊக்கம்பெற்ற கோஷ் பாட்டு, நடனம் மற்றும் நடிப்பில் அசாதாரண திறமையைக் வெளிப்படுத்தினார். சாந்திநிகேதனில் வாழ்ந்த நீண்ட மற்றும் உற்பத்தி சார் வாழ்க்கையில் கோஷ் ஏராளமான மாணவர்களுக்கு கற்பித்தார். அவர்களில் பலர் பின்னர் புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க பாடகர்களாக மாறினர். சுசித்ரா மித்ரா மற்றும் பிரமிதா மாலிக் போன்றவர்கள் சில உதாரணங்களாகும் [2]. கிருஷ்ணகாளி போன்ற தாகூரின் சில கவிதைகளை புதிய கவிதை-பாடல்களாக கோஷ் மாற்றினார். ஒவ்வொரு சரணத்திற்கும் பின்னர் முதல் இரண்டு வரிகளை மீண்டும் மீண்டும் பாடாமல் தொடர்ச்சியாக பாடும் ஒரு புதிய வழிமுறையை கோஷ் உருவாக்கினார். பொதுமக்கள் முன்னிலையில் கோஷ் இதை பாடியும் காட்டினார். ஆசிய இசைக்கு குறிப்பாக இரவீந்திரநாத் தாகூரின் பாடல்களுக்கு எழுத்தாளராகவும் உரிமையாளராகவும் கோஷ் புகழ் பெற்றார். கோஷ் தனது வாழ்நாளில் இசைக் கல்விக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்திடமிருந்து குறிப்பிடத்தக்க விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றார், இந்திய அரசால் ஒரு தேசிய அறிஞராகவும் அறிவிக்கப்பட்டார். கோஷ் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் 2002 ஆம் ஆண்டில் இந்தியா ஓர் அஞ்சல் தலையை வெளியிட்டது. காலங்காலமாக இசையின் தனித்துவமான படைப்பாற்றலை முன்னெடுக்கும் இசைக் கலைஞர் வகையைச் சேர்ந்தவர் கோஷ் என்று இந்தியத் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் குறிப்பிட்டார் [3].

இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமியான சங்கீத நாடக அகாடமி வழங்கும் உயரிய விருதான சங்கீத நாடக அகாடமியின் கவுரவ உறுப்பினர் விருதை 1976 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பித்தது[4]

வாழ்க்கை வரலாறு[தொகு]

சாந்திதேவ் கோஷ் 1910ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி சந்த்பூர் அருகிலுள்ள பஜாப்தி என்னும் கிராமத்தில் பிறந்தார். அப்போது இந்த கிராமம் பிரித்தானிய கட்டுப்பாட்டு இந்தியத் தளங்களில் ஒன்றாக திகழ்ந்தது. தற்போது இக்கிராமம் வங்காள தேசத்தில் உள்ளது.

தந்தை காளிமோகன் கோஷ் இவர் பிறப்பதற்கு முன்னதாகவே இரவீந்திரநாத் தாகூருடன் வேலை செய்தார். களி மோகன் கோஷ் விசுவபாரதியில் கிராமப்புற புணரமைப்பு அலகு ஒன்றை கட்டமைப்பதற்கு உறுதுணையாக இருந்தார். சாந்திதேவின் தாயின் பெயர் மனோரமா தேவி ஆகும். உண்மையில் காளிமோகன் கோஷ் இன்றைய வங்காள தேசத்திலுள்ள சிலைதா என்ற ஊரில் தாகூரின் தோட்டத்தில் கிராமப் புணரமைப்பு பணிக்காகவே அனுப்பப்பட்டார். பின்னர் சாந்திநிகேதனுக்கு அருகில் இதே பணிக்காக காளிமோகன் கோஷ் மீண்டும் அழைக்கப்பட்டார். காளிமோகன் தனது ஆறு மாத மகனை, பின்னர் சாந்திமோய் (அமைதியான பொருள்) கோஷ் என்ற பெயருடன் தாகூரிடம் அழைத்து வந்தார். தாகூர் அவரது பெயரின் நடுத்தர பகுதியை மாற்றினார், எனவே அவரது முதல் பெயர் சாந்திதேவ் (சமாதானத்தின் இறைவன் என்று பொருள்) கோஷின் பொதுவான முதல் பெயராக மாறியது.

1901 ஆம் ஆண்டு தாகூர் நிறுவிய சாந்திநிகேதன் ஆசிரம வித்யாலயத்தில் சாந்திதேவ் தனது பள்ளிக் கல்வியைப் பெற்றார். தாகூர் மற்றும் தினேந்திரநாத் ஆகியோரின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் இசை, நடனம் மற்றும் நடிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். தாகூரின் தூதராக இன்றைய இந்தோனேசியா, இலங்கை, பர்மா, ஜாவா மற்றும் பாலி ஆகிய நாடுகளுக்குச் சென்று அண்டை நாடுகளின் இசை மற்றும் நடனம் முதலியவற்றை கற்றுக் கொண்டார்.

1930 ஆம் ஆண்டு தனது இருபதாம் அகவையில் விசுவபாரதி பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக கோஷ் தமது பணியைத் தொடங்கினார். இவர் 1946 ஆம் ஆண்டில் இல கோஷ் என்பவரை மணமுடித்தார். பின்னர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தின் இசைத் துறையான சங்கீத் பவானாவில் இரவீந்திர இசை மற்றும் நடனத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் பணியாற்றினார். 1964 மற்றும் 1968 ஆண்டுகளுக்கு இடையிலும் 1971 மற்றும் 1973 ஆண்டுகளுக்கு இடையில் இந்த நிறுவனத்தின் முதல்வராகவும் இவர் பணியாற்றினார்.

சாந்திதேவ் 1948 ஆம் ஆண்டு கல்கத்தாவின் அகில இந்திய வானொலியின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1956-60 ஆ ஆண்டுகளில் புது தில்லியிலுள்ள சங்கீத்-நாடக அகாடமியின் வெளியீட்டுக் குழுவின் உறுப்பினராக பணியாற்றினார். பிரபாசி பாங்கோ சாகித்ய சம்மேளனம் என்ற வெளிநாட்டவர் பெங்காலி கலாச்சார அமைப்பு மற்றும் அசாம் சாகித்ய சம்மேளனம் (1964) ஆகியவற்றின் இசைப் பிரிவின் தலைவராகவும் இருந்தார். செழுமையான இப்பாடகர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பரவலாகப் பயணம் செய்தார். ஐக்கிய இராச்சியம், ஜப்பான், வங்காள தேசம், இலங்கை மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் போன்ற பல நாடுகளுக்கு பயணம் செய்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Tribune (2 December 1999) Spotlight tribuneindia.com Retrieved 17 March 2008.
  2. Calcutta Yellow Pages Retrieved on 17 March 2008.
  3. Times of India. (1 December 2002) Stamp on Rabindra Sangeet maestro Santidev Ghosh released பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம். indiatimes.com Retrieved 17 March 2008.
  4. "SNA: List of Sangeet Natak Akademi Ratna Puraskarwinners (Akademi Fellows)". Official website. Archived from the original on 4 மார்ச்சு 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்திதேவ்_கோஷ்&oldid=3924949" இலிருந்து மீள்விக்கப்பட்டது