காத்யாயனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்யாயனி
காத்யாயனர் என்ற முனிவரின் மகளாக அவதரித்ததால் காத்யாயனி என்ற பெயர் பெற்றார்
அதிபதிவெற்றியின் தெய்வம்
வகைசக்தி, ஆதிசக்தி, துர்க்கை, பார்வதி, சண்டி ஆகியோரின் அவதாரம்
கிரகம்வியாழன்
மந்திரம்चंद्रहासोज्जवलकरा शार्दूलवरवाहना। कात्यायनी शुभं दध्यादेवी दानवघातिनि।।
ஆயுதம்நீண்ட கத்தி
தாமரை, அபயமுத்ரா, வரதமுத்ரா
துணைசிவன்(நேத்ரேஸ்வரர் வடிவில்)
சகோதரன்/சகோதரிவிஷ்ணு

காத்யாயனி (Katyayani) என்பது இந்து மதத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களில் துர்கா வழிபாட்டின் போது ஆறாவது நாளில் வழிபடப்படும் சக்தியின் வடிவமாகும். [1] காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படலாம். இது அமரகோசம் என்ற சமசுகிருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயர் ஆகும். இந்த அகராதியில் தேவி பார்வதியின் மற்ற பெயர்களாக உமா, காத்யாயனி, கவுரி, காளி, ஹைமாவதி, ஈஸ்வரி போன்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புராணங்களில் சீதா தேவியார் மற்றும் ருக்மணி ஆகியோரால் தங்களின் கணவரின் நலனுக்காக வேண்டப்பட்ட பெண் தெய்வமாக காத்யாயனி இருக்கிறார்.

சாக்தம் என்ற வழிபாட்டு முறையில் அவர் கடுமையான வடிவங்களைக் கொண்ட சக்தி, துர்கா ஆகியோருடன் தொடர்புடைய தெய்வமாக கருதப்படுகிறார். இவர் தீயனவற்றை அழிக்க வந்த ஒரு போர்க்குணம் கொண்ட தெய்வங்களான பத்ரகாளி மற்றும் சண்டி[2] போன்ற தெய்வ வடிவங்களுடன் தொடர்புடைய தெய்வ வடிவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக, பாணினியை என்பாரின் சமசுகிருத இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்ட பதஞ்சலி முனியின் மகாபாஷ்யா என்ற நூலில், காத்யாயனி காளி மற்றும் துர்கை போன்ற தெய்வங்களைப் போன்று சிவப்பு நிறத்திலான சிலைகளாக உருவகப் படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. [3]

இந்த தேவி முதலில் யஜுர்வேதத்தின் தைத்திரிய ஆரண்யகப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளார். கடவுளின் தன்னிச்சையான கோபத்திலிருந்து உருவாக்கப்பட்ட தெய்வ வடிவமாகவும், சிங்கத்தின் மீதமர்ந்து வந்து மஹிஷாசுரா என்ற அரக்கனைக் கொல்லும் நோக்கத்தை உடைய தெய்வமாகவும் கந்த புராணம் கூறுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வருடாந்திர துர்கா பூஜை பண்டிகையின் போது கொண்டாடப்படுகிறது. [4]

இந்த தேவியின் மகிமைகள் தேவி-பகவத புராணம் மற்றும் தேவி மகாத்மியம் ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியிலும் இந்த தேவியின் வடிவம் பற்றி மார்க்கண்டேய முனிவரால் கூறப்பட்டுள்ளது.

இந்து மத மரபில் இத்தேவி வடிவம் யோகம் மற்றும் தாந்த்ரீகம் சார்ந்த நூல்களில் ஆக்கினை சக்கரம் அல்லது மூன்றாவது கண் எனப்படும் மையத்தை ஆசி வழங்கித் தூண்டியெழச் செய்யும் சக்தி வடிவமாகப் போற்றப்படுகிறது.

சக்தியின் வரலாறு[தொகு]

வாமன புராணத்தில் மகிசாசூரன் என்ற அரக்கனை அழிக்கும் பொருட்டு பல்வேறு கடவுள்களின் சக்திகளின் ஒருங்கிணைப்பின் காரணமாக உருவான தெய்வமாக கூறப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பல்வேறு கடவுளர்களின் சக்திகளின் ஒருங்கிணைப்பினால் வெளிப்பட்ட ஆற்றலின் கதிர்களானது காத்யாயனர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் குவிக்கப்பட்டு காத்யாயனரால் சரியான வடிவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவராக இத்தேவி அறியப்படுகிறார். இதன் காரணமாகவே இத்தேவியானவருக்கு காத்யாயனி என்ற பெயரும் தோன்றியதாக புராணம் கூறுகிறது. [5] காளிகா புராணத்தில், காத்யாயனாரால் முதலில் வழிபடப்பட்டதால் காத்யாயனி என்ற பெயர் வரப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு புராணங்களுமே இத்தேவியின் வடிவத்தை துர்க்கையின் பூத வடிவமாகவும், நவராத்திரி நோன்பு விழாவின் ஆறாம் நாளில் வழிபடப்படும் தெய்வ வடிவமாகவுமே குறிப்பிடப்பட்டுள்ளது.[6]

மகிசாசுரன் என்ற அரக்கனால் தேவலோகத்தில் இந்திரன் முதலியவர்களை துன்புறுத்தப்பட்டதாகவும், அவனை எதிர்க்க முடியாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டதாகவும், பிரம்மனின் வழிகாட்டுதலின்படி எல்லோரும் சென்று திருமாலிடம் முறையிடச் சென்றதாகவும், அந்த நேரத்தில் அங்கு சிவனும் இருந்ததாகவும், இதைக் கேட்ட திருமாலும், சிவனும் பெருங்கோபம் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சிவன், திருமால், பிரம்மன் முதலியவர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களை எல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல் களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவமாக உருவானதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தேவி வடிவமே சிங்க வாகனத்தில் ஏறி மகிசாசுரனை அழித்ததாகவும் வாமன புராணம் கூறிச் செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Sixth form of Durga". Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2009-06-14.
  2. Religious beliefs and practices of North India during the early medieval period, by Vibhuti Bhushan Mishra. Published by BRILL, 1973. ISBN 90-04-03610-5. Page 22.
  3. Devī-māhātmya: the crystallization of the goddess tradition, by Thomas B. Coburn. Published by Motilal Banarsidass Publ., 1988. ISBN 81-208-0557-7. Page 240.
  4. CHAPTER VII. UMĀ. Hindu Mythology, Vedic and Puranic, by W.J. Wilkins. 1900. page 306
  5. [1]
  6. Forms of Durga
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்யாயனி&oldid=3022458" இலிருந்து மீள்விக்கப்பட்டது