ஹாப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹாப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாப்பூர் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். புது தில்லிக்கு கிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் (37 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் தில்லி தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (என்.சி.ஆர்) ஒரு பகுதியாகும். தேசிய நெடுஞ்சாலை 9 இந்நகரம் வழியாக தில்லியுடன் இணைகிறது.

வரலாறு[தொகு]

ஹாப்பூர் 10 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தனது பிரெஞ்சு தளபதி பியர் குலியர்-பெரோனுக்கு தவ்லத் சிந்தியாவால் வழங்கப்பட்டது. ஹாப்பூர் பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் மீரட் மாவட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டது. இந்த நகரம் பல சிறந்த தோப்புகளால் சூழப்பட்டிருந்தது. மேலும் ஹாப்பூரில் சர்க்கரை, தானியங்கள், பருத்தி, மரம், மூங்கில் மற்றும் பித்தளை பாத்திரங்கள் என்பனவற்றின் வர்த்தகம் கணிசமான அளவில் நடைப்பெற்றது.[1]

புவியியல்[தொகு]

ஹாப்பூர் (ஹரிபூர்) 28.72 ° வடக்கு 77.78 ° கிழக்கு என்ற புவியியல் அமைவிடத்தில் அமைந்துள்ளது.[2] இது சராசரியாக 213 மீட்டர் (699 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. அதன் அண்டை நகரங்களை விட அதிகமான உயரத்தில் அமையப் பெற்றுள்ளது.

காலநிலை[தொகு]

ஹாப்பூர் ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. இது மிகவும் வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலங்களால் வகைப்படுத்தப்படுகிறது. கோடைக்காலம் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து சூன் பிற்பகுதி வரை நீடிக்கும். கோடைக்காலம் மிகவும் வெப்பமாக காணப்படும். கோடைக் கால அதிகபட்ச வெப்பநிலை 43 °C (109 °F) ஐ எட்டும். பருவமழை சூன் மாத ஆரம்பித்து வந்து செப்டம்பர் நடுப்பகுதி வரை தொடர்கிறது. இக் காலத்தில் வெப்பநிலை சற்று குறைகிறது. அத்துடன் அதிக ஈரப்பதமான காலநிலையை கொண்டிருக்கும். அக்டோபரில் வெப்பநிலை மீண்டும் உயர்கிறது. பின்னர் அக்டோபர் பிற்பகுதியிலிருந்து மார்ச் நடுப்பகுதி வரை லேசான, வறண்ட குளிர்காலம் நீடிக்கும்.[3]

இங்கு மழைவீழ்ச்சி ஆண்டுக்கு 90 செ.மீ முதல் 100 செ.மீ வரை பதிவாகும். இது பயிர்களை வளர்ப்பதற்கு ஏற்றது. மழைக்காலத்தில் பெரும்பாலான மழை பெய்யும். ஈரப்பதம் 30 முதல் 100% வரை மாறுபடும்.[3]

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி ஹாப்பூரில் 262,801 மக்கள் வசிக்கின்றனர். இதில் 139,694 ஆண்கள் மற்றும் 123,107 பெண்கள் உள்ளனர். ஹாப்பூர் மக்களின் கல்வியறிவு விகிதம் 75.34% ஆகும்.[4]

ஹாப்பூர் நகரில் இந்து மதம் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மதம் ஆகும். ஏறத்தாழ 174,278 (66.27%) மக்கள் இந்து மதத்தை பின்பற்றுகிறார்கள். ஹாப்பூரில் இஸ்லாம் இரண்டாவது மிகவும் பிரபலமான மதமாகும். 84,477 (32.12%) மக்களால் பின்பற்றப்படுகின்றது.

சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்கள் 2,163 (0.82%) ஆகவும், சமண மதத்தை பின்பற்றுபவர்கள் 981 (0.37%) ஆகவும், கிறிஸ்துவ மதத்தை பின்தொடர்பவர்கள் 765 (0.29%) ஆகவும், பௌத்த மதத்தை சார்ந்தவர்கள் 162 (0.06%) ஆகவும் உள்ளனர். ஏறக்குறைய 156 (0.06%) பேர் "குறிப்பிட்ட மதம் இல்லை" கூறியுள்ளனர். மேலும் ஒருவர் (0.00%) "பிற மதம்" என்றும் கூறியுள்ளார்.

ஹாப்பூர்-பில்குவா மேம்பாட்டு ஆணையம்[தொகு]

ஹப்பூர்-பில்குவா மேம்பாட்டு ஆணையத்தினால் இந்த பிராந்தியத்தில் பல உயர்தர கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன.[5]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Hapur". Encyclopædia Britannica. 11(14th ed.). Chicago: Encyclopædia Britannica, Inc. 1956. p. 167.
  2. "Maps, Weather, and Airports for Hapur, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
  3. 3.0 3.1 "Chapter 3 – Findings: Metro Cities of India" (PDF). Archived from the original (PDF) on 2015-09-23.
  4. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Profile". hpdaonline.com. Archived from the original on 2019-11-20. பார்க்கப்பட்ட நாள் 2019-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாப்பூர்&oldid=3778490" இலிருந்து மீள்விக்கப்பட்டது