அட்லாண்டிக் பெருங்கடல் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அட்லாண்டிக் பெருங்கடல் சாலை அல்லது அட்லாண்டிக் சாலை (Atlantic Ocean Road or Atlantic Road) என்பது நோர்வேயின் எய்டே மற்றும் ஆவெரேயில் உள்ள தீவுக்கூட்டத்தின் வழியாகச் செல்லும் 8.3 கிலோமீட்டர் அல்லது 5.2 மைல் தொலைவுள்ள நோர்வேயின் சாலை 64 இன் ஒரு பகுதியாகும். இது நோர்வீயக் கடலின் ஒரு பகுதியான உஜ்டாட்விகாவின் வழியாகச் சென்று ஆவெரோய் தீவு மற்றும் ரோம்டால்சால்வோயா தீபகற்பம் ஆகியவற்றை இணைக்கிறது. இது ஆவெராயின் கார்வாக் மற்றும் எய்டாவின் வேவாங் ஆகிய கிராமங்களுக்கிடையில் உள்ளது. இந்த சாலை தரைப்பாலங்கள் மற்றும் ஏதண்டங்கள் மற்றும் பாலங்களால் இணைக்கப்பட்ட பல்வேறு சிறிய தீவுகள் மற்றும் பாறைத்தீவுகளின் மீது அமைந்துள்ளது. இவற்றுள் இசுடோர்செய்சுடெட் பாலம் என்பது மிகவும் முதன்மையானதாகும்.

இந்த சாலையானது முதலில் ஒரு தொடருந்து பாதையாகத் தான் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முன்மொழியப்பட்டது. ஆனால், இந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்த சாலைக்கான தீவிரமான திட்டமிடல் 1970 களில் தொடங்கியது. இதற்கான கட்டுமானப் பணி 1983 ஆம் ஆண்டு ஆகத்து 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்த சாலையின் கட்டுமானப் பணியின் போது இந்தப் பகுதியானது 12 ஐரோப்பிய வளிப்புயல்களால் தாக்கப்பட்டது. இந்த சாலையானது, 1989 ஆம் ஆண்டு சூலை 7 ஆம் நாள் திறக்கப்பட்டது. இந்த சாலை கட்டுமானப் பணிக்கான செலவினம் நார்வே குரோனா மதிப்பில் 122 மில்லியன் ஆகும். இந்தத் தொகையில் சாலைக்கான சுங்கத்தீர்வை மூலம் 25 விழுக்காடும், மீதமுள்ள தொகை பொது நிதியிலிருந்தும் செலவழிக்கப்பட்டது. இந்த சாலை கட்டுமானத்திற்கான தொகையை வசூல் செய்வதற்காக சுங்கத்தீர்வை 15 ஆண்டுகளுக்கு வசூல் செய்து கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால், சூன் 1999 இலேயே சாலையின் செலவிற்கான தொகை வசூல் செய்யப்பட்டு விட்டதன் காரணமாக சுங்கச்சாவடியானது நீக்கிக்கொள்ளப்பட்டது. இந்த சாலையானது பண்பாட்டு மரபுவளத் தலமாக வகைப்படுத்தப்பட்டதோடு நோர்வேயின் தேசிய சுற்றுலா வழித்தடமாகவும் வகைப்படுத்தப்பட்டது.

இது தானியங்கி வாகனங்களின் விளம்பரங்கள் ஒளிப்பதிவு செய்வதற்கு பிரபலமான தளமாகும். மேலும், இச்சாலையின் பயணம் உலகின் சிறந்த சாலைப் பயணமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதோடு,[1] இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த நோர்வீயக் கட்டுமானம் எனவும் விருது வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஆவெராயிலிருந்து கிரிஷ்டியான்சன்ட்டை இணைக்கும் அட்லாண்டிக் பெருங்கடல் சுரங்கப்பாதையானது திறக்கப்பட்டது.

வழித்தடக் குறிப்பு[தொகு]

இந்தச் சாலையானது கவுண்டி சாலை 65 இன் மிக நீண்ட பகுதியும் ஆவெராய் தீவில் உள்ள ஆவெராய் நகராட்சிப் பகுதியை எய்டேவில் உள்ள முதன்மை நிலப்பகுதியுடன் இணைக்கிறது. இதன் நீளம் 8.274 கிலோமீட்டர் (5.141 மைல்) ஆகும். இந்த சாலையானது பகுதியளவு குடியேற்றம் நடந்துள்ள ஈஜியக்கடல் தீவுகள் மற்றும் பாறைத்தீவுகள் வழியாக செல்கிறது.[2] வடக்கே நோர்வே கடலின் பாதுகாக்கப்படாத ஒரு பகுதியான ஹஸ்டாத்விகாவும் தெற்கே லாவிஃப்ஜோர்டனும் அமைந்துள்ளது.[3] சாலையின் அகலம் 6.5 மீ (21 அடி) அளவாகவும் அதிகபட்ச சாய்வு விகிதம் எட்டு விழுக்காடாகவும் உள்ளது.[4] இச்சாலையானது எட்டு பாலங்கள் மற்றும் நான்கு ஓய்வு இடங்கள் மற்றும் நோக்கு முனைகளைக் கொண்டுள்ளது. இச்சாலை கடந்து செல்லும் தீவுகளில் உணவு, மீன்பிடித்தல் மற்றும் பாதுகாப்பான ஏற்பாடுகளுடன் நீரில் மூழ்கி விளையாடுவதற்கான வசதிகள் உள்ள உல்லாச தங்குமிடங்கள் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் நிறுவப்பட்டுள்ளன.[5] வேவாங்கிலிருந்து பட் வரையிலான பகுதியுடன், இந்த சாலை 18 தேசிய சுற்றுலா வழிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Road Trips". The Guardian. April 1, 2006. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03."Road Trips". The Guardian. April 1, 2006.
  2. Nekstad and Pedersen (2006): 11
  3. Nekstad and Pedersen (2006): 71
  4. "Facts about the Atlantic Road". Visit Molde. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  5. "Atlanterhavsveien". Innovation Norway. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.
  6. "Atlanterhavsveien". Norwegian Public Roads Administration. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 4 October 2011.