குத்து, கிடைநிலை அமுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிடைநிலை அமுக்கி
குத்துநிலை அமுக்கி

குத்து, கிடைநிலை அமுக்கிகள் (vertical and horizontal Compressor) ஒற்றை உருளையையோ பல உருளைகளையோ கொண்டு அமையலாம். கோண நிலை அமுக்கிகள் பல உருளைகளை உடையவை. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிடை அல்லது குத்து அமுக்க உறுப்புகள் அமையலாம்.

அமுக்கி[தொகு]

வளிமம் (gas), ஆவி (vapour) அல்லது இவ்விரண்டின் கலவையின் அழுத்தத்தை உயர்த்தும் எந்திரம் அமுக்க எந்திரம் அல்லது அமுக்கி அல்லது அழுத்தி எனப்படுகிறது. அமுக்கியில் வளிமம் செல்லும்போது அது வளிமத்தின் தன்-பருமனைக் (specific volume) குறைத்து அதற்கு அழுத்தத்தை ஊட்டுகிறது. மைய விலகு விசிறி, அச்சுவழிப் பாய்வு விசிறிகளோடு (fans) ஒப்பிடும்போது அமுக்கிகள் உயர்அழுத்த எந்திரங்களாகும். எந்திர விசிறிகள் குறைந்த அழுத்த எந்திரங்களாகும்.

பல தேவைகளுக்காக வளிமம், ஆவி ஆகியவற்றின் அழுத்தத்தை அதிகரிக்க அமுக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. காற்றமுக்கிகள் பல இடங்களில் மிகப் பரவலாகப் பயன்படுகின்றன. இவை பொருள்களைச் சுமந்து செல்லவும், வண்ணப் பூச்சைத் தெளிக்கவும், வட்டைக்குக் (tyre) காற்றடிக்கவும், தூய்மை செய்யவும். அமுக்கிக் காற்றுக்கருவிகளை இயக்கிப் பாறைகளைத் துளைக்கவும் தேவையான உயரழுத்தக் காற்றைத் தருகின்றன. ஆவியாக்கக் கலனில் (evaporator) உருவாக்கப்பட்ட வளிமத்தைக் குளிர்பதனாக்க அமுக்கி அமுக்குகிறது. அமுக்கிகள் வேதியியல் செயல்முறைகள், வளிமச் செலுத்தம், வளிமச்சுழலிகள் ஆகியவற்றிலும் பிற கட்டுமானப் பணிகளிலும் பயன்படுகின்றன.

அமுக்கத்தை ஏற்படுத்தும் இயக்க முறைகளைப் பொறுத்து அமுக்கிகள் ஊடாட்ட, சுழல் தாரை, மையவிலகு, அச்சுப்பாய்வு அமுக்கிகள் (reciprocal, rotary, jet, centrifugal, axial compressors) என வகைப்படுத்தப்படுகின்றன. அமுக்கப்படும் வளிமத்தின்மேல் எந்திர உறுப்புகள் செயல்படும் முறையைப் பொறுத்து அமுக்கிகள் நேரிடப்பெயர்ச்சி (positive displacement) அல்லது இயங்குநிலை (dynamic) அமுக்கிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. நேரிடப்பெயர்ச்சி அமுக்கிகளில் தொடர்ந்து பாயும் வளிமப்பருமன் ஒரு மூடிய கலனில் கட்டுப்படுத்தப்படுகின்றது. மூடிய கலனில் பருமன் குறையக் குறைய வளிமத்தின் அழுத்தம் உயர்ந்து கொண்டே போகும் இயங்குநிலை அமுக்கிகளில் சுழலும் இதழ்கள் (vanes) அல்லது வாளிகள் (buckets) பாய்மத்துக்கு அழுத்தத்தையும் விரைவையும் (velocity) ஊட்டுகின்றன.

அமுக்கி வகைகள்[தொகு]

அமுக்கி வகைகளில் பல வகைகள் உண்டு. எடுத்துக்காட்டக, பின்வரும் அமுக்கிகள் அதிகம் அன்றாட வாழ்வில் பயனாகின்றன.

  1. ஊடாட்ட அமுக்கிகள்
  2. ஒற்றைக்கட்ட அமுக்கிகள் (Single stage Compressors)
  3. இருகட்ட அமுக்கிகள் (Double stage Compressors)
  4. குத்து, கிடைநிலை அமுக்கிகள் (vertical and horizontal Compressors)

குத்து, கிடைநிலை அமுக்கிகளின் செயற்பாடு[தொகு]

ஒற்றை வணரி அணிகள், கிடை அல்லது குத்துநிலையில் இரட்டைச் செயல்பாட்டு முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உருளைகளுடன் ஒரே சட்டத்தில் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்படுகின்றன.[1] இதில் ஒரே ஒரு வணரித்தண்டும், இணைப்புத் தண்டும் குறுக்குத் தலையும் (cross head) அமைந்திருக்கும். v அல்லது Y வகை கோண அணிகள் குத்துக்கோட்டுடன் 45° கோணத்தில் அமைந்த இரண்டு உருளைகளைக் கொண்ட அமுக்கிகள் ஆகும். இதில் ஒரே ஒரு வணரித்தண்டு பயன்படுகிறது. பகுதி ஆர (semi radial) அமுக்கிகள் Y அல்லது V வகை அமுக்கியைப் போன்றனவே. ஆனால் இவற்றில் கிடைநிலையில் அமைந்த இரட்டைச் செயல்பாட்டு உருளைகள் ஒவ்வொரு புறமும் அமைந்திருக்கும். இருமை அமுக்கிகள் (duplex compressors) என்பன இரண்டு இணையான வட்டங்களில் உருளைகள் இணைக்கப்பட்டு ஒரு பொது வணரி அச்சுத்தண்டில் இயங்குகின்றன. நீராவிபால் ஓட்டப்படும் இருமைத் தன்செயல்பாட்டு அணிகளில் நீராவி உருளைகள் காற்று உருளைகளின் கோட்டில் அமைந்திருக்கும். நீராவியால் ஒட்டப்படும் இருமை நான்கு முனை அமுக்கிகளில் ஒன்று அல்லது இரண்டு அமுக்கும் உருளைகள் சட்டத்தின் ஒவ்வோர் ஓரத்திலும் இருக்கும். அதற்கு எதிர்ப்புறமாக நீராவி உருளைகள் அமைந்திருக்கும். நான்கு முனை மின்னோடியால் (motor) ஓட்டப்படும் அமுக்கி அணிகளில் அமுக்கிச் சட்டகங்களுக்கும் அச்சுத்தண்டுக்கும் நடுவில் மின்னோடி அமைந்திருக்கும். ஊடாட்ட அமுக்கிகள் ஒரு நிமிடத்துக்கு 100 ஆயிரம் பருமன் அடிகள் வெளியேற்றும். இதன் அழுத்தம் சதுர அங்குலத்துக்கு 35 ஆயிரம் பவுண்டுகளாகும். இதைவிட உயர்ந்த அழுத்தமும் அதிக வெளியேற்றக் கொள்ளளவும் உடைய சிறப்பு அமுக்கிகளையும் செய்யலாம். உருளைகளையும் அகக் குளிர்கலன்களையும் குளிர்விக்கக் குளிர் பொருளாகத் தண்ணீர் பயன்படுகிறது. வேறு நீர்மங்களோ குளிர்பதனப் பொருள்களோ கூட இதற்காகப் பயன்படுத்தப்படலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்து,_கிடைநிலை_அமுக்கி&oldid=2866436" இலிருந்து மீள்விக்கப்பட்டது