கருவறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிபண்டா குகையிலுள்ள கர்ப்பக்கிருகத்தின் நுழைவாயில்
பத்ரிநாத் கோயில் கருவறை

கருவறை (ஒலிப்பு, ஆங்கிலம்: Garbhagriha, சமசுகிருதம்: கர்ப்பக்கிரகம், தேவநாகரி: गर्भगॄह) என்பது இந்து சமயக் கோவில்களில் அக்கோவிலுக்குரிய முதன்மைக் கடவுளின் உருவச் சிலை அமைந்துள்ள முக்கியமான இடமாகும். கருவறை இந்துக் கோவில்களின் பிரதான பகுதியாக விளங்குகின்றது. மூலவராகிய இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமே கர்ப்பக்கிருகம். சமசுகிருதத்தில் கர்ப்பகிருகம் என்றால் கரு அறை என்று பொருள்படும். தாயின் கருவறை இருளாக இருப்பதைப் போலவே ஆலயத்தில் கர்ப்பக்கிருகமும் இருள் சூழ்ந்ததாகவே அமைந்திருக்கும். மனித உடலோடு இந்துக் கோயிலை உருவகிக்கும் ஆகமங்கள் இதனை மனிதனின் சிரசிற்கு உவமிக்கின்றன. கோவில் அர்ச்சகர்கள் மட்டுமே கர்ப்பக்கிருகத்துள் செல்ல முடியும்.[1][2] பக்தர்கள் கர்ப்பக்கிருகத்துள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவல்லை. கருவறை என்ற சொல் முக்கியமாக இந்து சமயக் கோவில்களோடு தொடர்புள்ளதாகக் கருதப்பட்டாலும் புத்தம் மற்றும் சமண மதக் கோவில்களிலும் கர்ப்பக்கிருகங்கள் காணப்படுகின்றன.

கட்டிட அமைப்பு[தொகு]

விமான அமைப்பு கொண்ட கோவில்களில் விமானங்களுக்கு நேர் கீழாக கர்ப்பக்கிருகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானமும் கர்ப்பக்கிருகமும் சேர்ந்து ஒரு கோவிலின் முக்கிய நிலைக்குத்து அச்சாக அமைகின்றன. இந்த அச்சு மேருமலை வழியே அமையும் உலக அச்சைக் குறிப்பதாகக் கருத்துள்ளது. கர்ப்பக்கிருகம் கோவிலின் கிழ மேற்காக அமையும் கிடை அச்சாகவும் கருதப்படுகிறது. குறுக்காகவும் அமையும் அச்சுக்கள் கொண்ட கோவில்களில் அந்த அச்சுக்கள் சந்த்திக்கும் இடத்தில் கர்ப்பக்கிருகங்கள் உள்ளன.

பொதுவாக, கர்ப்பக்கிருங்கள் சன்னல்கள் இல்லாத மெல்லிய வெளிச்சமுடைய சிறிய அறைகளாக உள்ளன. பக்தர்களின் உள்ளம் கடவுளின் நினைவில் ஒருமுகமாக ஒன்றுபடுவதற்கு ஏதுவாக இவ்வறைகள் இவ்வாறு அமைக்கப்படுகின்றன. கடவுளுக்குரிய கைங்கரியங்களைச் செய்யும் அர்ச்சகர்கள் மட்டுமே கர்ப்பக்கிருகங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வடிவம்[தொகு]

வேத காலத்தில் 'கருவறை'யானது சமசதுரம், வட்டம், முக்கோணம் எனும் மூன்று விதமான வடிவமைப்புகளில் அமைக்கப்பட்டன. இதில் சமசதுரம் தேவலோகத்துடனும், வட்டம் இறந்தவர்களுடனும், முக்கோணம் அக்னி அல்லது மண்ணுலகத்துடனும் தொடர்புப்படுத்தப்பட்டன. சதுரமும் வட்டமும் இந்தியக் கோயில்களுக்கு அடிப்படையாக அமைந்தன. இதில் வட்ட வடிவம் இறந்தவர்களோடு தொடர்பு படுத்தப்பட்டதால் புத்த ஸ்தூபிகளுக்கும், பள்ளிப்படைக் கோயில்களுக்கும் அடிப்படையாய் அமைந்தன. ஒரு சில கோயில்களில் வட்டவடிவத் தரையமைப்பு உண்டு. குறிப்பாக மதுரை, அழகர்கோயிலுள்ள அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமுடையது. தமிழ்நாட்டில் காணப்படும் மாடக் கோவில்கள்களில் உள்ள கருவறைக்கு மேலே மாடியில் ஒன்றன்மேல் ஒன்றாக சில கருவறைகள் கூடுதலாக இருக்கும்.

இந்து சமயம்[தொகு]

பாதாமி குகைக்கோவிலின் கர்ப்பக்கிருகம்

திராவிட பாணியில், கோவில் விமானங்களை ஒத்த சிறுவடிவமாக கர்ப்பக்கிருகங்கள் அமைந்துள்ளன. மேலும் உட்சுவருக்கும் வெளிச்சுவருக்கும் இடையே கர்ப்பக்கிருகத்தைச் சுற்றி ஒரு பிரகாரம் அமைந்திருப்பது போன்ற பிற தென்னிந்திய கட்டிக்கலைக்கே உரித்தான அமைப்புகளையும் கொண்டுள்ளன. கர்ப்பக்கிருககங்களின் நுழைவாயில் சிறப்பான அலங்காரத்துடன் காணப்படுகின்றன. உட்புறங்களும் காலங்காலமாக செய்யப்பட்டுவரும் அலங்கரங்களுடன் விளங்குகின்றன.[3]

கர்ப்பக்கிருகங்கள் வழக்கமாக சதுர வடிவிலேயே அமைந்துள்ளன. இவை ஒரு அடித்தளத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளன. கோவிலை முழுமையாகத் தாங்கும் சமநிலைப் புள்ளியில் அமையுமாறு கணக்கிடப்பட்டுக் கட்டப்பட்டுள்ளன. கர்ப்பக்கிருகத்தின் மையத்தில் கோவிலின் மூலக் கடவுளின் உருவம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.[4]

கேரளா[தொகு]

தற்போதய, பெரும்பாலான கேரள கோவில்கள் இரண்டடுக்கு விமான அமைப்பு, சதுர வடிவிலான கர்ப்பக்கிருகம், அதைச்சுற்றி அமையும் பிரகாரம், ஓர் அர்த்த மண்டபம் மற்றும் ஒரு குறுகிய மகா மண்டபம் ஆகியவற்றுடன் அமைந்துள்ளன.[3]

குறிப்புகள்[தொகு]

  1. "Architecture of the Indian Subcontinent - Glossary". Archived from the original on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
  2. "Templenet - Glossary". பார்க்கப்பட்ட நாள் 2007-01-29.
  3. 3.0 3.1 "Temple Architecture". பார்க்கப்பட்ட நாள் 2007-01-24.
  4. Thapar, Binda (2004). Introduction to Indian Architecture. Singapore: Periplus Editions. பக். 43. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7946-0011-5. 

மேற்கோள்கள்[தொகு]

  • George Michell; Monuments of India (Penguin Guides, Vol. 1, 1989)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவறை&oldid=3850569" இலிருந்து மீள்விக்கப்பட்டது