தோரின் ஓக்கன்ஷீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரின் ஓக்கன்ஷீல்டு
டோல்கீன் கதை மாந்தர்
தகவல்
நூல்கள் த காபிட்டு (1937)
அன்பினிஷெட் டலேசு (1980)

தோரின் ஓக்கன்ஷீல்டு அல்லது மலையடி மன்னன், திரோரின் மகன் திராய்னின் மகன் இரண்டாம் தோரின் ஓக்கன்ஷீல்ட்' (ஆங்கில மொழி: Thorin Oakenshield) என்பவர் 1937 ஆம் ஆண்டு வெளியான ஜே. ஆர். ஆர். டோல்கீன் த காபிட்டு எனும் புனைகதையில் முதன்முதலில் தோன்றிய ஒரு கற்பனையான கதாபாத்திரம் ஆகும். சிமாக்கு எனும் டிராகனிடமிருந்து தனது பிறப்பிடமான எரபார் எனப்படும் தனிமலையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டு தேடற்பயணம் சென்ற குள்ளர் குழாமின் தலைவர். இரண்டாம் திராய்னின் மகனும் திரோரின் பேரனுமான தோரின் நாடு கடத்தப்பட்டிருந்த நிலையில் டூரின் மக்களின் தலைவனார். தோரினின் பின்புலம் 1955 ஆம் ஆண்டு வெளியான த ரிட்டன் ஆப் த கிங் என்ற புனைகதையின் பின்னிணைப்பில் விளக்கப்பட்டுள்ளது.

இயல்பு[தொகு]

நீண்ட தாடியைக் கொண்ட தோரின் எல்வகளையும் மனிதர்களையும் விட உயரம் குறைந்திருந்தாலும், மற்ற குள்ளர்களைக் காட்டிலும் மிகவும் உயரமானவராக அறியப்படுகிறார். நீளமான வெள்ளிக்குஞ்சம் கொண்ட தனித்துவமான ஒரூ வான்நீலநிற மேலங்கியை அணிந்தவராக விவரிக்கப்படுகிறார். தங்கச் சங்கிலி அணிந்தவராகவும் யாழிசைக்கும் திறமை கொண்டவருமான அவர் தனது முக்கியத்துவத்தையும் மேன்மையான பிறப்பையும் பற்றிய உயர்ந்த எண்ணங்கொண்டவர்.

ஊக்கமுள்ள அல்லது மதிநுட்பமான தலைவர் அல்லர் எனினும் அவர் ஒரு திறமையான, தந்திரமிகுந்த போர்வீரர். தோரின் புத்திசாலி, பெருமை, தைரியம் மற்றும் பழிவாங்கும் தன்மைகளைக் கொண்டவர். தோரின் செருக்குடையவராகவும் கடுமையானவராகவும் எரிச்சல் தரும் விதத்தில் குறுக்கிடுபவராகவும் விவரிக்கப்படுகிறார்.

எரெட் லூயின் எனப்படும் நீலமலைகளில் உள்ள தனது வீட்டை அவர் நாடுகடத்தப்பட்டோருக்கான மோசமான தங்குமிடம் என்று குறிப்பிடுகிறார். தனது குடும்பத்திற்கு உரித்தான பேராசைக் குணத்தைக் கொண்டிருப்பினும் தனது செல்வத்திற்கும் மேலாக மற்றவர்களின் நலனை மதிப்பிடுபவராக சித்தரிக்கப்படுகிறார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

மூன்றாம் ஊழியாண்டு 2746 இல், எரபாரில் இரண்டாம் தோரின் பிறந்தார். 2770 இல் தோரின் மிகவும் இளமையாக இருந்தபோது தனி மலையின் குள்ளர்கள் டிராகன் ஸ்மாக்கின் தாக்குதலால் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நாடுகடத்தப்பட்டபோது, திறமையான போர்வீரரான அவர் தம் இளம் வயதில், ஊழியாண்டு 2799 இல், நிகழ்ந்த அசானுல்பிசார் போரில் பங்கெடுத்தார். சண்டையின்போது உடைந்த அவரது கவசத்துக்கு மாற்றாக ஒரு ஓக்மரக் கிளையைக் கேடயமாகப் பற்றித் தற்காத்துக்கொண்டார். இதனால் அவருக்கு ஓகென்ஷீல்ட் என்ற பட்டப்பெயர் கிட்டியது. டோல் குல்டூர் நிலவறைகளில் அவரது தந்தை இறந்துவிட்டதால், நாடுகடத்தப்பட்ட நிலையில் தோரின், டூரின் மக்களின் தலைவனானார். ஸ்மாகிடமிருந்து தனிமலையை மீட்டெடுப்பதற்காக தி ஹாபிட்டில் விவரிக்கப்பட்ட தேடற்பயணத்தை அவர் வழிநடத்தினார். அந்த புத்தகத்தின் முடிவில் விவரிக்கப்பட்ட ஐந்து படைகளின் போரில் கொல்லப்பட்டார். அவரது இறப்பின் விளைவாக தோரினின் டூரின் பரம்பரை முடிவுக்கு வந்தது.

தோற்றங்கள்[தொகு]

த காபிட்டு[தொகு]

த காபிட்டில் தோரின் மற்றும் குள்ளர்கள், சிமாக்கிடமிருந்து புதையலைத் திரும்பப்பெற, மந்திரவாதி காண்டால்ப்பின் அறிவுரையின் பேரில் பில்போவை ஒரு கன்னமிடு திருடனாகப் பணியமர்த்த எண்ணி பில்போ பேக்கின்ஸின் வீட்டிற்குச் சென்றனர். ஸ்மாக் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எரபாரைத் தாக்கி குள்ளர்களின் மலையையும் அவர்களின் புதையலையும் பறித்துக்கொண்டது. புதையலை, குறிப்பாகத் தனது பரம்பரைச் சொத்தான மலையின் நெஞ்சு எனப்படும் ஆர்கன்ஸ்டோனைத் திரும்பப் பெறுவதில் தோரின் உறுதியாக இருந்தார்.

தேடற்பயணத்தில், குள்ளர் குழாம் துறோல்களை எதிர்கொண்டது. தோரின் ஆர்கிறிஸ்ட் எனும் எல்வு (த லார்ட் ஆப் த ரிங்ஸ்)களால் உருவாக்கப்பட்ட வாளைத் துறோல்களின் ஒளிவிடத்திலிருந்து கண்டெடுத்துப் போரிட்டார். பின்னர் அவர் மர-எல்வுகளால் பிடிக்கப்படும்வரை அவ்வாளைப் பயன்படுத்தினார். அவரும் கேண்டால்ஃபும் மூடுபனிமலைகளின் சுரங்கப்பாதைகளில் கோப்லின்களுக்கெதிராகத் தீரமுடன் சண்டையிட்டனர். மறைகாட்டின் காட்டு-எல்வுகளால் குள்ளர்கள் சிறைபிடிக்கப்பட்டபோது, மற்றவர்களிடம் தங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கள் பயணத்தின் நோக்கத்தைத் தெரிவிக்க வேண்டாம் என்று தோரின் வலியுறுத்தினார். ஏரியூரில் பீப்பாய்களிலிருந்து முதன்முதலில் வெளிவந்தவர் அவர், நகரத்தின் தலைவர்களிடம் அணிவகுத்துச் சென்று, தானே மலையடி மன்னன் என்பதை வெளிப்படுத்தினார்.

ஏரியூரில் இருந்து தேவையான பொருட்களுடன் குழாமை எரபாருக்குத் தோரின் வழிநடத்திச் சென்றார். ஸ்மாக் அழிக்கப்பட்ட பின்னர், குள்ளர்கள் புதையலை மீட்டெடுத்தனர். பில்போவின் பணியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த தோரின், மித்ரிலால் செய்யப்பட்ட ஒரு சங்கிலி அங்கியைத் தனது கட்டணத்தின் முதல் தவணையாகக் கொடுத்தார்.

மர-எல்வுகளுக்கும் ஏரியூர் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய புதையலின் நியாயமான பங்கை வேண்டிய எல்வுகளின் மன்னர் திரண்டுயில் மற்றும் வில்லாளர் பார்ட் ஆகியோரின் கோரிக்கைகளைக் கேட்ட தோரின், பேராசையின் காரணமாக புதையலில் அவர்களுக்கான உரிமையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். அவர் தனது புதிய போட்டியாளர்களுக்கு எதிராக மலையை பலப்படுத்தினார் மேலும் படையின் வலுவூட்டலுக்காகத் தனது உறவினர் இரும்புக்கால் டாய்னுக்குத் தூது அனுப்பினார். எல்வுகள், ஏரியூர் மக்கள் மற்றும் குள்ளர்களுக்கிடையேயான பிணக்கைத் தீர்க்கும் பொருட்டு ஒரு பேரப்பொருளாகப் பயன்படுத்த எண்ணி ஆர்கன்ஸ்டோனை பில்போ திருடிச் சென்றதை அறிந்து கோபம் கொண்டு அவரை மலையிலிருந்து விரட்டிவிட்டார்.

எல்வுகள், ஏரியூர் மக்கள் மற்றும் குள்ளர்களுக்கிடையே வளர்ந்து வந்த மோதல் கோப்லின்கள், ஓர்க் மற்றும் வார்க்குகளின் படையெடுப்பால் தவிர்க்கப்பட்டது, அதன்பிறகு குள்ளர்கள் மர-எல்வுகள், ஏரி-நகரத்தின் மக்கள் மற்றும் பெருங்கழுகுகள் அனைவரும் ஒன்றுபட்டுப் போர் புரிந்தனர். இது ஐந்து படைகளின் போர் என அறியப்பட்டது. போரின் போது தோரின் படுகாயமடைந்தார், ஆனால் அவர் இறக்கும் தருவாயில் பில்போவுடனான பிணக்கை நீக்கி அமைதி ஏற்படுத்திக்கொண்டார். 'நம்மில் பலர் பதுக்கிவைக்கும் தங்கத்திற்கு மேலாக உணவையும் உற்சாகத்தையும் பாடலையும் மதிப்பிட்டால், இது ஒரு மகிழ்ச்சியான உலகமாக இருக்கும். ஆனால், இன்னலோ இனிமையோ, இப்போது இதை நான் விட்டாக வேண்டும். விடைபெறுவோம்' என்று கூறி பில்போவின் கரங்களில் உயிரிழந்தார்.

தோரின் இறந்தபின் ஆர்கென்ஸ்டோனுடன் அடக்கம் செய்யப்பட்டார், மேலும் ஆர்கிறிஸ்ட் வாளும் அவரது கல்லறையில் வைக்கப்பட்டது. ஓர்க்குகள் அணுகினால் அந்தவாள் நீல நிறத்தில் ஒளிரும், எனவே திடீரென எதிர்பாராத் தாக்குதல் மூலம் தனிமலையைக் கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தோரினுக்குப்பின் அவரது பாட்டனார் வழி உடன்பிறப்பான டாய்ன், டூரின் மக்களின் தலைவரானார்.

லாட் ஆஃப் த ரிங்க்ஸ்[தொகு]

த ரிட்டன் ஆஃப் த கிங்கில் உள்ள பின்னிணைப்பின் மூன்றாம் பகுதி டூரின் மக்களின் வரலாற்றையும் தோரினின் பின்னணியையும் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கிறது. தோரின் மூன்றாம் ஊழியாண்டு 2746 இல் பிறந்தார், ஸ்மாக் 2770 இல் எரபாரைத் தாக்கியபோது, எஞ்சியிருந்த மற்ற குள்ளர்களுடன் நாடுகடத்தப்பட்டார். 2799 ஆம் ஆண்டில், அவர் 53 வயதாக இருந்தபோது (குள்ளர்களைப் பொருத்தவரை இது இளம் வயது), மோரியாவின் ஓர்க்குகளுக்கு எதிராக அவர் ஒரு வலிமையான குள்ளர்படையை அணிவகுத்துப் போரிட்டார். மோரியாவின் கிழக்கு வாயிலுக்கு அடியில் நந்துஹிரியானில் நிகழ்ந்த அசானுல்பிசார் போரில், தோரினின் கவசம் உடைந்தது, எனவே அவர் தனது கோடரியைப் பயன்படுத்தி ஒரு ஓக்மரத்தின் ஒரு கிளையை வெட்டித் தன்னைத் தற்காத்துக் கொண்டார், இதனால் ஓக்கன்ஷீல்ட என்ற பட்டபபெயரைப் பெற்றார். போருக்குப் பிறகு தோரின் தனது மக்களை ஷைருக்கு மேற்கேயுள்ள நீலமலைகளில் குடியேற வழிவகுத்தார்.

முற்றுபெறாக் கதைகள்[தொகு]

கி. பி. 1980 ஆம் ஆண்டில் டோல்கீனின் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்ட கட்டுரைகள் மற்றும் இடைநிலத்தைப் பற்றிய கதைகளின் புத்தகம் முற்றுபெறாக் கதைகள் எனப்பெயரிடப்பட்டு வெளிவந்தது. இது பில்போவைத் தனது குழுவில் ஏற்றுக்கொள்வதற்கான தோரினின் காரணங்களை விவரிக்கிறது. 'த குவெஸ்ட் ஆஃப் எரபார்' கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, தேடலைத் தொடங்குவதற்கு சற்று முன்பு தோரின் கேண்டால்ஃபை மதுவிடுதியில் சந்தித்தார். எரபாரில் ஊடுருவுவதற்கு வேகத்தைக் காட்டிலும் விவேகம் சிறந்தது என்றுரைத்து, அதனால் அவர்களுக்கு ஒரு கன்னமிடும் திருடன் தேவை என்று அவருக்கு கேண்டால்ஃப் விளக்கினார்.

மாயாவி சாரோன் ஸ்மாகை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று கேண்டால்ஃப் அஞ்சினார், மேலும் தோரினின் செருக்கும் விரைவாகக் கோபம் கொள்ளும் பண்பும் ஸ்மாகை அழிக்கும் பணியைச் சீர்குலைக்கும் என்று கவலைப்பட்டார். பில்போ தோரினின் கோபத்தை ஆற்றுப்படுத்தும் பாங்குடையவராகவும், குழுமத்திற்கு உண்மையிலேயே மதிப்புமிக்க இணைப்பாகவும் இருப்பார் என்று அவர் நினைத்தார். ஹாபிட்டுகளைப் பற்றி பெரிதாக எண்ணாத தோரின், கேண்டால்ஃபின் உதவிக்கு பில்போவின் இருப்பு ஒரு சிறிய விலையாக இருக்கும் என்பதை உணர்ந்து தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார்.

பெயர்களும் தலைப்புகளும்[தொகு]

பழைய நோர்சு எட்டா கவிதையின் ஒரு பகுதியான 'வோலூஸ்பா' கவிதையிலிருந்து தோரினின் பெயரை டோல்கியன் தருவித்துக் கொண்டார்.[1] தோரின் என்பது நோர்சு குள்ளரின் பெயராகச் சரணம் 12 இலும், ஓக்கன்ஷீல்ட் (ஐக்கின்ஷால்டி) என்பது சரணம் 13 இலும் தோன்றுகிறது.[2] தோரிண் மற்றும் ஐக்கின்ஷால்டி எனத் தோன்றும். இந்த பெயர் நோர்ஸ் கடவுள் தோர் என்பதிலிருந்து உருவானது. நோர்சில் தோரிண் என்றால் துணிந்தவர் அல்லது தைரியமானவர் எனப்பொருள்படும். இது எரபாரை மீட்கத் தேடற்பயணத்தைத் தொடங்கிய குள்ளருக்குப் பொருத்தமானது.

அவரது தந்தை திராய்னின் மரணத்தைத் தொடர்ந்து மலையடி மன்னன் என்ற பட்டம் தோரினின் பிறப்புரிமையாக அவர் நாடுகடத்தப்பட்டிருக்கையில் கிடைத்தது. தோரின் இறந்தவுடன், அப்பட்டம் அவரது உறவினரும் நெருங்கிய வாரிசுமான இரும்புக்கால் டாய்னுக்கு வழங்கப்பட்டது.

தழுவல்கள்[தொகு]

  • 1977 இல் வெளியான அனிமேஷன் பதிப்பில், ஹான்ஸ் கான்ரிட் தோரினாகக் குரல் கொடுத்தார்.
  • 1982 விடியோ விளையாட்டில் தோரின் ஒரு செயற்கை நுண்ணறிவால் கட்டுப்படுத்தப்பட்ட கதாபாத்திரமாகத் தோன்றுகிறார். அவரது சீரற்ற செயல்களில் ஒன்றான, உட்கார்ந்து தங்கத்தைப் பற்றி பாடுவது மிகவும் புகழ்பெற்றது. இது விளையாட்டில் வீரர் சிறிது நேரம் எதுவுமே செய்யாதபோது நிகழ்கிறது.
  • த ஹாபிட் (2003 வீடியோ விளையாட்டு) இல், கிளைவ் ரெவில் தோரினாகக் குரல் கொடுத்தார். தோரின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆன்லைனில் தி குவெஸ்ட் ஃபார் எரபாருக்குச் சற்று முன்பு அமைக்கப்பட்ட குள்ள கதாபாத்திரங்களுக்கான முன்னுரையின் போது சுருக்கமாகத் தோன்றுவார். விளையாட்டில் எரபாரைச் சேர்ந்த அகதிகளின் நீலமலைக் கோட்டையில் அவரது நினைவாக ஒரு அறை தோரின் அறை எனப்பெயரிடப்பட்டுள்ளது.
  • த லாட் ஆஃப் த ரிங்க்ஸ்: த ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் (2001) விரிவாக்கப்பட்ட பதிப்பில், பில்போவுக்கு மித்ரில் அங்கியைப் பரிசாகக் கொடுத்தவர் என்று தோரினைக் காண்டால்ஃப் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்.
  • த ஹாபிட் திரைப்படத்தொடரின் (2012-2014)மூன்று படத்தழுவல்களிலும், தோரினாக ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் நடித்துள்ளார்.[3] திரைப்படத் தழுவலில் தோரினின் தேடல் பயணத்திற்கு ஓர்க் அசோக்கிற்கு எதிரான ஒரு தனிப்பட்ட வஞ்சத்தையும் ஒரு காரணமாகச் சேர்க்கப்பட்டுள்ளது, அசோக் தோரினின் தாத்தா திரோரைக் கொலை செய்தார். கோப்ளின் நகரில் இருந்து குள்ளர்கள் தப்பித்ததைத் தொடர்ந்து தோரினும் அசோக்கும் மீண்டும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கின்றனர், மேலும் ஐந்து படைகளின் போரின்போது அசோக்கைக் கொல்ல தோரின் புறப்படுகிறார். ஒரு நீண்ட சண்டைக்குப் பிறகு, தோரின் மற்றும் அசோக் ஒருவருக்கொருவர் படுகாயமேற்படுத்தி மரணமடைகின்றனர், தோரின் பில்போவின் கரங்களில் உயிரைவிடுகிறார், அவரது தமக்கையின் பிள்ளைகளும் முன்பே இறந்திருந்ததால், டூரின் பரம்பரை முடிவுக்கு வந்தது.

சான்றுகள்[தொகு]

  1. "Poetic Edda". Translated by Henry Adams Bellows. 1936. பார்க்கப்பட்ட நாள் September 27, 2007.
  2. Sturluson, Snorri. "Prose Edda". Archived from the original on 27 செப்டெம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டெம்பர் 2007.
  3. Winning, Josh (July 18, 2011). "See Richard Armitage as Thorin Oakenshield in The Hobbit". Total Film. London, England: Future Publishing. பார்க்கப்பட்ட நாள் September 4, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரின்_ஓக்கன்ஷீல்ட்&oldid=3587296" இலிருந்து மீள்விக்கப்பட்டது