யோனாகுனி நினைவுச்சின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆமை வடிவ இடிபாடுகள்

யோனாகுனி நினைவுச்சின்னம் (Yonaguni Monument) என்பது யப்பான் நாட்டின் தென்மேற்குப் பகுதியிலுள்ள இரியூக்கியூ தீவுகளில் ஒன்றான[1][2] யோனாகுனி தீவின் தென் கடற் பகுதியில், கடலுக்கடியில் மூழ்கிய நிலையில் காணப்படும் சிதைந்த பாறையாலான ஒரு அமைப்பாகும்.[3] இது யப்பானின் மேற்கு முனையில் அமைந்திருப்பதுடன், தாய்வானிலிருந்து கிட்டத்தட்ட 100 கிலோ மீற்றர் தொலைவிலேயே காணப்படுகின்றது.[4] இது யோனாகுனி பிரமிடு என்றும் அழைக்கப்படுகின்றது.[2] இது முற்றிலும் இயற்கையானதா அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டு, தற்போது நீருக்கடியில் மூழ்கிய நிலையிலுள்ளதா என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.[3]

வரலாறு[தொகு]

நீர்மூழ்கி ஒருவரால் பார்வையிடப்படும் யோனாகுனி நினைவுச் சின்னம்

1980 களின் நடுப்பகுதியில், கிஹாஷிரோ அரடேக் என்னும் நீர்மூழ்கி ஒருவரால், கடலுக்கடியில் இந்தப் படிகள் போன்ற பாறையாலான அமைப்புக் கண்டறியப்பட்டது. இது மனிதனால் உருவாக்கப்பட்டதுபோல் படிகளாலான அமைப்பாக இருந்ததனால், மூழ்கிய ஒரு நகரத்தின் சிதைந்த பகுதியென நம்பி, அதனை அறிவித்தார்.[2] அதன் பின்னர் அந்தப் பகுதியானது பல்வேறு தரப்பினரின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

அமைப்பு[தொகு]

இந்த அமைப்பானது மணற்பாறை அல்லது களிமண் பாறையாலான அமைப்பாகக் காணப்படுகின்றது.[5] இந்த அமைப்பு கிட்டத்தட்ட 165 அடி (50 மீற்றர்) நீளமும், 65 அடி (20 மீற்றர்) அகலமும் கொண்ட அமைப்பு என பிரிற்றானிக்காவில் கூறப்பட்டுள்ளது.[3] இது கடலில் 27 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது எனவும், 150 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்ட அமைப்பெனவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.[6] இது படிகளையும், சமமான உச்சி பகுதியையும், சுவர்களையும் கொண்டுள்ளது. தொங்கும் பாறை போன்ற அமைப்பானது இதன் அடித்தளத்தைச் சுற்றி மூன்று பகுதிகளில் காணப்படுகிறது. ஒரு முக்கோணப் பள்ளத்தின் விளிம்புகளில் இரு பெரும் துளைகள் உள்ளது. மனிதனின் முகம் போன்ற 7 மீட்டர் உயரம் உள்ள பாறையும், இரண்டு பெரிய தூண்களும் உள்ளன.

"இரட்டை பாரக்கற்கள்" என அழைக்கப்படும் இரண்டு கல் அடுக்குகள்

செயற்கை கட்டமைப்பு[தொகு]

சமதள இணை முகங்கள், கூர்மையான விளிம்புகள், நேரான சுவர், மற்றும் தூண்கள் போன்ற அமைப்புக்கள் செதுக்கப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருவதனால், அவை மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இவற்றின் தோற்றம் 5000[3] - 10,000[5] ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என்றும், இலெமூரியா கண்டத்தின் இழப்புகளில் ஒன்றாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.[3]

வெளி இணைப்புக்கள்[தொகு]

  1. யோனாகுனி பற்றிய தகவல்கள்
  2. யோனாகுனி பற்றிய புகைப்படங்களும் விளக்கங்களும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ryukyu-Islands". Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2019.
  2. 2.0 2.1 2.2 "YONAGUNI PYRAMID". A Geoglyphic Study of The Yonaguni Monolith, Japan. The Faram Research Foundation. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Yonaguni Monument, underwater rock structure, near Yonaguni Island, Japan". Encyclopædia Britannica, Inc. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2019.
  4. "Yonaguni Island". Okinawa Convention & Visitors Bureau. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2019.
  5. 5.0 5.1 "Yonaguni-jima Kaitei Chikei (Yonaguni Monument)". Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2019.
  6. "10 Facts About the Yonaguni Monument". Ancient Code. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2019.