திருச்செங்கோடு காந்தி ஆசிரமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, புதுப்பாளையத்தில் உள்ள ஒரு காந்திய அமைப்பாகும். மதுவிலக்கு பரப்புரை செய்வது, கிராமத் தொழில்களுக்கு ஆதரவு அளிப்பது, கிராமங்களில் உள்ள வழக்குகளை செலவின்றித் தீர்ப்பது, கதர் உற்பத்தி, காந்தியடிகளின் திட்டங்களைப் பரப்புதல் ஆகிய பணிகளை நோக்கமாகக் கொண்டு இந்த ஆசிரமம் துவக்கப்பட்டது. [1]

வரலாறு[தொகு]

இராசகோபாலாச்சாரியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆசிரமமானது, 1925 பெப்ரவரி 6 அன்று ஈ. வெ. ராவால் தொடங்கி வைக்கப்பட்டது.[2] இந்த ஆசிரமமானது புதுப்பாளையம் சமீன்தாரான பி. கே. இரத்தினசபாபதி கவுண்டர் கொடையாக அளித்த தோட்டத்தில் துவக்கப்பட்டது.[3] இந்த ஆசிரமம் துவக்கப்பட்டதில் இருந்து ஆசிரமதில் இருந்த குடிசைகளில் ஒன்றில் இராசாசி தன் இளைய மகனுடனும், மகளுடனும் பல ஆண்டுகள் வசித்தார். இந்த ஆசிரமத்தில் பிற்காலத்தில் ஆளுநராக இருந்த க. சந்தானம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சில ஆண்டுகள் தங்கி இருந்தனர். மேலும் இந்த ஆசிரமத்துக்கு காந்தி, சவகர்லால் நேரு, பாபு ராஜேந்திர பிரசாத் போன்றோர் வந்து தங்கிச் சென்றுள்ளனர்.

இந்த ஆசிரமத்தினால் கதர் ஆடை, பட்டுப்புடவை, மெத்தை, போன்ற ஆடைசார்ந்த பொருட்களும், குளியல் சோப்பு, ஊதுபத்தி, ஜவ்வாது போன்ற வாசனைப் பொருட்களும், வேப்பம்புண்ணாக்கு, வேப்ப எண்ணெய், மரச்செக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், சீயக்காய்துாள் போன்ற வேளாண் சார்ந்த பொருட்களும், இரும்பு பீரோ, கட்டில் உள்ளிட்ட கைத்தொழில் சார்ந்த பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் இந்த ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பல கிராம மக்கள் இதன் மூலமாக வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. காந்தி ஆசிரமம், புதுப்பாளையம், திருச்செங்கோடு வட்டம் (1961). சேலம் மாவட்டம்,. சென்னை: பாரி நிலையம். பக். 155-156. 
  2. கி. பார்த்திபன் (14 ஆகத்து 2016). "மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை". செய்திக் கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 மே 2019.
  3. "கிராமிய பொருளாதாரத்திற்கு உயிரூட்டிய மையம் நலிவின் பிடியில் மகாத்மா தங்கிய திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் : கண்டுகொள்ளுமா அரசு?". செய்திக் கட்டுரை. தினகரன். 5 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 13 மே 2019.
  4. கி.பார்த்திபன். (15 மே 2019). "கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் காந்தி ஆசிரமம்: இங்கு தயாரிக்கும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க கோரிக்கை". கட்டுரை. காமதேனு. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2019.