பதேபூரி பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழைய தில்லியில் உள்ள பதேபூர் பள்ளிவாசல்
1863 ஆம் ஆண்டு பழைய தில்லியின் வரலாற்று வரைபடம்

பதேபூரி பள்ளிவாசல் (Fatehpuri Masjid) 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பள்ளிவாசல் ஆகும். தில்லி நகரின் மிகப் பழைய தெருவில் உள்ள சாந்தினி சவுக் என்ற வணிக மையத்திற்கு மேற்கு முனைக்கு அருகில் செங்கோட்டைக்கு எதிரில் இம்மசூதி கட்டப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

சாச்சகானின் மனைவியருள் ஒருவரான பதேபூர் சிக்ரியைச் [1] சேர்ந்த பதேபூரி பேகம் 1650 ஆண்டு இப்பள்ளிவாசலை கட்டினார். இவர் நினைவாகவேதான் தாச்சு மகாலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டது [2]

ஆங்கிலேயர்கள் இந்த பள்ளிவாசலை 1857 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் ராய் லாலா சுன்னமாலுக்கு 19,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்றனர் [3]. இவருடைய சந்த்தியினர் இன்னமும் கூட சாந்தினி சவுக் வணிக வளாகத்தின் சுன்னமால் அவேலியில் வாழ்கின்றனர் [4]). இவர்களே பள்ளிவாசலை இன்னமும் பாதுகாத்துவருகின்றனர். பின்னர் 1877 ஆம் ஆண்டு நான்கு கிராமங்களுக்கு மாற்றாக அரசாங்கத்தால் இப்பள்ளிவாசல் கையகப்படுத்தப்பட்டது. தில்லி தர்பார் எனப்படும் தில்லி அரசவையில் இசுலாமியர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்டபோது இது திரும்பப் பெறப்பட்டது. இதேபோல அக்பராபாதி பேகத்தால் கட்டப்பட்ட அக்பராபாதி மசூதி என்ற பள்ளிவாசல் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது [5]. ஆசியாவிலேயே மிகப்பெரிய வாசனைப்பொருள் சந்தையாக அறியப்படும் காரி பாவ்லி’ சந்தை இந்த பள்ளிவாசலுக்கு அருகில் படிப்படியாக உருவாக்கப்பட்டது.

தியாகத் திருநாள், ஈகைத் திருநாள் போன்ற இசுலாமியத் பண்டிகைகள் இப்பள்ளிவாசலில் கொண்டாடப்படுகின்றன. முப்தி முகாரம் அகமது பள்ளிவாசலின் முதன்மை முப்தியாகவும் இமாமாகவும் செயற்படுகிறார். கிட்டத்தட்ட 42 ஆண்டுகளாக இவர் இப்பணியில் உள்ளார். இவருக்கு முன்பு இவருடைய தந்தை மவுலானா முப்தி முகமது இப்பணியில் ஈடுபட்டார்.

கட்டடக் கலை[தொகு]

சிவப்பு மணற்பாறைகளால் எழுப்பப்பட்டுள்ள இந்த மசூதியானது டெல்லி நகரத்தில் உள்ள ஒரே ஒரு ‘ஒற்றை குமிழ்கோபுர தொழுகை மசூதி’யாக விளங்குகிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது சிறிய மசூதி போன்று காட்சியளித்தாலும், உள்ளே நுழைந்து பார்க்கும்போது இதன் உள் கட்டமைப்பு பிரம்மாண்டமானதாக காட்சியளிக்கிறது.

பாரம்பரிய கலையம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மசூதியின் தொழுகைக்கூடத்திற்குள் நுழைவதற்கு விதான வளைவுகளைக்கொண்ட ஏழு வாசல்கள் உள்ளன. நடுவிலுள்ள விதான வளைவு அளவில் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மசூதிக்கு இருபுறமும் ஒற்றை மற்றும் இரட்டை அடுக்குகளைக்கொண்ட கட்டிட அமைப்புகளும் காணப்படுகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. History of Mughal Architecture, By R. Nath, Published by Abhinav Publications, 2006
  2. The History of the Taj and the Buildings in Its Vicinity: With 3 Illustrations from Photographs and 2 Plans, By Muḣammad Muʻīn al-Dīn, Akbarābādī Muḣammad Muʻīn al-Dīn Published by Moon press, 1905
  3. Fatehpuri Shahi Masjid: A mute witness to the travails of Dillee milligazette. 1 May 2000.
  4. "Beyond the WALL". தி இந்து. 25 September 2003 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031107011100/http://www.thehindu.com/thehindu/mp/2003/09/25/stories/2003092500260100.htm. பார்த்த நாள்: 19 December 2018. 
  5. In memory of a pious Begum பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 3 October 2005.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதேபூரி_பள்ளிவாசல்&oldid=3370506" இலிருந்து மீள்விக்கப்பட்டது