கருங்கழுகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங்கழுகு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இக்டினேட்டசு

இனம்:
இ. மலேயன்சிசு
இருசொற் பெயரீடு
இக்டினேட்டசு மலேயன்சிசு
([தெம்னிக், 1822)

கருங்கழுகு (Black eagle) என்பது ஒரு வகைக் கழுகு இனப் பறவை ஆகும். எல்லா கழுகுகளையும் போலவே, இது பாறுக் குடும்பத்தில் உள்ளது. மேலும் இது இக்டினேட்டசு பேரினத்தின் ஒரே ஒரு சிற்றினம் ஆகும். இப்பறவை வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல தெற்கு மற்றும் தென்கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு சீனாவின் மலைப்பாங்கான பகுதிகளின் காடுகளில் காணப்படுகிறது. இவை பாலூட்டிகளையும் பறவைகளையும், குறிப்பாக அவற்றின் கூடுகளில் வேட்டையாடுகின்றது. பெரும்பாலும் மலைப்பாங்கான இடங்களில் குச்சியால் கூடு கட்டி ஓரிரு முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. இப்பறவையின் உடல் பார்க்க கறுப்பாகவும், அலகு மஞ்சளாகவும் இருக்கும். இவை எப்போதும் அடர்ந்த பசுமையான காடுகளிலேயே சார்ந்து வாழும். சிலசமயங்களில் காட்டின் விளிம்புகளில் பறந்து திரிவதைக் காண முடியும்.

துணையினங்கள்[தொகு]

  • இக்டினேட்டசு இக்டினேட்டசு மலேயன்சிசு(தெம்மினிக், 1822) - மியான்மர் முதல் தென் சீனம், தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேசியா
  • இக்டினேட்டசு மலேயன்சிசு பெர்னிசெர் (கோட்சன், 1836) - வட இந்தியா மற்றும் நேபாளம்; தென்னிந்தியா மற்றும் இலங்கை

விளக்கம்[தொகு]

பறக்கும்போது கருங்கழுகின் தோற்றம்

கருங்கழுகு ஒரு பெரிய ஆனால் மெல்லிய கழுகு ஆகும். இது சுமார் 75 செமீ (30 அங்குலம்) நீளமும், 148 முதல் 182 செமீ (4 அடி 10 அங்குலம் 6 அடி 0 அங்குலம்) இறக்கைகள் விரிந்த நிலையில் அகலமும் இருக்கும். இது பெரிய தோற்றம் (இதன் வாழிடப் பகுதியில் உள்ள மிகப்பெரிய கழுகுகளில் ஒன்றாகும்) கொண்டது. ஆனால் இப்பறவையின் அறியப்பட்ட எடையானது ஒப்பீட்டளவில் மிதமானதே. அதாவது 1,000 மற்றும் 1,600 கிராம் (2.2 மற்றும் 3.5 பவுண்டுகள்) எடை ஆகும். மலைப் பருந்து-கழுகுகளின் எடையில் பாதியே உள்ளது. ஆனால் இரண்டின் நீளமும் ஏறக்குறைய ஒன்றே. வளர்ந்த கருங்கழுகுகளின் உடல் முழுவதும் கருப்பாக இருக்கும். மேல் பகுதியைவிட அடிப்பகுதி சற்று மங்கிய கருப்பாக இருக்கும். கால்கள் நல்ல மஞ்சள் நிறத்திலிருக்கும். உட்காரும்போது இறக்கைகள் வால் நுனியைத் தொடும். பறக்கும்போது சாம்பல் நிறப் பட்டைகளுடன் கூடிய நீண்ட வாலும், மஞ்சள் நிறக் கால்களும் இதை அடையாளம் காண உதவும். இதன் அலகு பசுமை கலந்த கொம்பு நிறமாக முனை கருத்து காணப்படும். விழிப்படலம் ஆழ்ந்த கருப்பு நிறம். அப்போது விரிந்து காட்சி தரும் இறக்கைகள் நீண்டு அகன்று வட்டமான முனையுடன் காட்சிதரும். அப்போது இறக்கைகள் முதுகின் மேல் நோக்கி சற்று வளைந்து V வடிவில் அமைந்திருகக காணலாம். தலைக்கு நேர் மேலே பறக்கும்போது இறக்கைகளின் அடிப் பகுதியில் ஒரு நிறங் குன்றிய வெளிரிய பகுதி புலனாக‍க் காணலாம்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

கருங்கழுகு வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆசியாவில் இனப்பெருக்கம் செய்கிறது. இபபறவைகள் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திலிருந்து இந்திய மாநிலங்களான இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மற்றும் தீபகற்ப இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் காடுகள் மற்றும் இலங்கையில் காணப்படுகிறது.[3][4][5] இப்பறவைகள் இந்தியாவின் மேற்குப் பகுதியில் குசராத்திலும் காணப்படுகிறது. குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கு குசராத்தில் உள்ள வனப்பகுதிகளில் காணபபடுகிறது.[6] இந்த இனம் வடமேற்கு இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடரிலும் பரவியுள்ளது.[7]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

இனப்பெருக்கம்[தொகு]

ஆணும் பெண்ணும் காதலூட்டத்தின்போது உயரமாகப் பறந்து சென்று ஒன்றைச் சுற்றி ஒன்று பறந்து திரிந்து இறக்கைகளை மடித்து கீழே விழுவதுபோல் வானில் விளையாட்டடுகளில் ஈடுபடும். இக்கழுகுகள் ஆணும் பெண்ணும் இணை பிரியாது தொடர்ந்து வாழக்கூடியவை. ஆனால் இணைகளில் ஒன்று இறந்துவிட்டால் மட்டுமே பிரிதொரு துணையைத் தேடிக்கொள்ளும்.[8]

செங்குத்தான பள்ளத்தாக்கில் இலைகள் அடர்ந்த உயரமான மரங்களில் 3 முதல் 4 அடி அகலத்தில் மேடைபோல கூடுகளைக் கட்டுகிறன. ஒன்று அல்லது இரண்டு வெள்ளை நிற முட்டைகள் இடும். முட்டைகள் பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறம் தோய்ந்தவையாக இருக்கும். சனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் கூடு கட்டும் பருவத்தில் முட்டை இடும்.[9][10][11] கூடு கட்டப்பட்ட தளம் ஆண்டுதோறும் மீண்டும் பயன்படுத்தக்கூடும்.

உணவு[தொகு]

கருங்கழுகுகள் பாலூட்டிகளை (வௌவால்கள்,[12] அணில் மற்றும் பிற சிறிய பாலூட்டிகள் உட்பட), பறவைகள் மற்றும் முட்டைகளை உண்ணும். கருங்கழுகுகள் உயரமான மரங்களின் கிளைகளிடையே நுழைந்து நுழைந்து பறக்கும் ஆற்றல் கொண்டவை.[2] மரங்களை நெருங்கி பறக்கும்போது மரங்களில் பிற பறவைகள் கட்டியுள்ள கூடுகளையும், கூடுகளில் உள்ள முட்டைகளையும், குஞ்சுகளையும் நோட்டம் விடும். வாய்ப்பாக அமைந்துள்ள பறவைகளின் கூடுகளை அவற்றில் உள்ள முட்டைகளோடும் குஞ்சுகளோடும் கால்களால் இடுக்கி அப்படியே தூக்கிச் செல்லும் வகையில் இக்கழுகின் கால் விரல்கள் நீண்டு அமைந்துள்ளன.[13][12] கூட்டினை கால்களில் இடுக்கிப் பறக்கும் போதே அந்தக் கூடுகளில் உள்ள முட்டைகளை ஆராய்ந்தெடுத்து விழுங்கும். கூடுகளை முழுவதும் அப்படியே தூக்கிச்செல்ல ஏற்ற வகையில் இக்கழுகின் கால் விரல்கள் நீண்டு அமைந்திருப்பது இவற்றின் சிறப்பு அம்சமாகும்.[8] மற்ற கழுகுகளின் கால் விரல்கள் பாய்ந்து பற்றவும் இரையை இறுக்கிப் பிடிக்கவும் ஏற்ற வகையில் குட்டையாக அமைந்திருக்கும் என்பது கவனிக்கதக்கது. இக்கழுகு எப்போதும் முட்டைகளையும், குஞ்சுகளையுமே உணவாக கொண்டு வாழ்வது என்று சொல்வதற்கில்லை. பிற கழுகுகளைப் போல பள்ளத்தாக்குகளில் பறந்து திரிந்து வேட்டையாடக்கூடியது. இதனால் காட்டின் உச்சியில் கழுங்கழுகுகள் பறப்பதைக் காண்டால் அணில்கள், மக்காக்கா குரங்குகள் மற்றும் பல வகையான பறவைகள் எச்சரிக்கை குரல் எழுப்புகின்றன. இந்திய மலை அணில் இந்த இனத்தின் இரையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது[14] மேலும் குல்லாய் குரங்கு குட்டிகளும் இவற்றிற்கு இரையாகலாம்.[15]

அச்சுறுத்தல்கள்[தொகு]

இவற்றிற்கு பெரியதாக அச்சுறுத்தல்கள் இல்லை. ஆனால் இவை பரவியுள்ள பெரிய அளவிலான வனப்பகுதிகள் சுருங்குவது இதன் முந்தைய வாழிடப் பரப்பின் எல்லை குறைய காரணமாகியுளது.

மனிதர்களுடனான உறவு[தொகு]

இந்த கழுகு மிகச் சாதாரணமாக நீண்ட நேரம் உயரப் பறக்கும் திறன் காரணமாக, இந்தியாவின் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்த லெப்சா மக்கள் இதை ஒருபோதும் உட்காராத பறவை என்று வர்ணித்தனர், அதே நேரத்தில் சோளகர் மக்களால் அழைக்கபடும் பெயர் (கானா கட்டாலே) இதன் கருப்பு நிறத்தையும் ஒப்பீட்டளவில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதிகளில் இருப்பதையும் நினைவுபடுத்துகிறது.[16][17]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ictinaetus malaiensis
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
  1. "Ictinaetus malayensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. 2.0 2.1 Rasmussen, P.C.; J.C. Anderton (2005). Birds of South Asia: The Ripley Guide. Vol. 2.. Smithsonian Institution & Lynx Edicions. பக். 104. 
  3. Prater, S.H. (1940). "The Indian Black Eagle (Ictinaetus malayanus perniger Hodgs.) in Salsette". J. Bombay Nat. Hist. Soc. 41 (4): 899. https://biodiversitylibrary.org/page/47819479. 
  4. Rao, VUS (1968). "The Black Eagle Ictinaetus malayensis perniger within Bombay limits". Newsletter for Birdwatchers 8 (12): 6–7. 
  5. Burgess, H.E. (1937). "Eagles on the Nilgiris". J. Bombay Nat. Hist. Soc. 39 (2): 399–403. https://biodiversitylibrary.org/page/47602147. 
  6. Parasharya, B. M. (27 February 2010). "Black Eagle Ictinaetus malayensis at Narmada Dam, Gujarat". Indian Birds 6: 95–96. https://www.researchgate.net/publication/302927984. 
  7. Raol Shri Dharmakumarsinhji (1985). "The Black Eagle Ictinaetus malayensis Temm. at Sawai Madhopur, (Rajasthan)". J. Bombay Nat. Hist. Soc. 82 (3): 655. https://biodiversitylibrary.org/page/50395355. 
  8. 8.0 8.1 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 66-67. 
  9. Buchanan, Kenneth (1899). "Nesting of the Black Eagle". J. Bombay Nat. Hist. Soc. 12 (4): 776–777. https://biodiversitylibrary.org/page/7148525. 
  10. Daly, W Mahon (1899). "Nesting of the Black Eagle". J. Bombay Nat. Hist. Soc. 12 (3): 589. https://biodiversitylibrary.org/page/7148314. 
  11. Baker, ECS (1918). "Notes on the nidification of some Indian Falconidae. III. the genera Ictinaetus and Microhierax". Ibis 60 (1): 51–68. doi:10.1111/j.1474-919X.1918.tb00770.x. https://zenodo.org/record/2090205. BHL
  12. 12.0 12.1 Smythies, Bertram (1968). The Birds of Borneo (2nd edn).. Oliver and Boyd: Edinburgh.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-05-001530-8. 
  13. Nijman, V (2004). "Seasonal variation in naturally occurring mobbing behavior of drongos (Dicruridae) towards two avian predators" (PDF). Ethology Ecology & Evolution 16: 25–32. doi:10.1080/08927014.2004.9522651. http://ejour-fup.unifi.it/index.php/eee/article/view/981/927. பார்த்த நாள்: 2009-04-10. 
  14. Borges, Renee (1986). "Predation attempt by Black Eagle (Ictinaetus malayensis perniger) on Indian Giant Squirrel (Ratufa indica elphinstonii)". J. Bombay Nat. Hist. Soc. 83: 203. https://biodiversitylibrary.org/page/48772393. 
  15. Ali, Rauf (1986). "Feeding ecology of the Bonnet Macaque at the Mundanthurai Sanctuary, Tamil Nadu". J. Bombay Nat. Hist. Soc. 83 (1): 98–110. https://biodiversitylibrary.org/page/48761050. 
  16. Swann, H. Kirke (1924–1945). Alexander Wetmore. ed. A Monograph of the Birds of Prey (Order Accipitres), Part XI.. Wheldon & Wesley, London. பக். 93. 
  17. Srinivas, Prashanth. "Soligas: the people of the forest". JLRExplore. பார்க்கப்பட்ட நாள் 23 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருங்கழுகு&oldid=3931839" இலிருந்து மீள்விக்கப்பட்டது