இவானின் காணாமல்போன நூலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசியாவின் மூன்றாம் இவான்

மாஸ்கோவின் காலாணமல்போன நூலகம் அல்லது தங்க நூலகம் (The Lost Library of the Moscow Tsars also known as the "Golden Library,") என்பது பதினாறாம் நூற்றாண்டில் உருசியாவின் மன்னரான மூன்றாம் இவனால் உருவாக்கப்பட்ட ஒரு நூலகம் ஆகும்.[1] இது நான்கானம் இவான் நூலகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிய நூலகமானது கான்ஸ்டன்டிநோபிள் மற்றும் அலெக்சாந்திரியாவின் நூலகங்களில் இருந்த அரிய கிரேக்க, இலத்தீன், மற்றும் எகிப்திய படைப்புகளையும், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நூல்கள் மற்றும் நான்காம் இவானின் கையெழுத்துப்பிரதிகள் போன்றவற்றைக் கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. இந்த நூலகமானது வரலாற்று சிறப்புமிக்க கிரெம்லின் அரண்மனையின் நிலவறையில் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்தது. இதை புதையல் வேட்டைக்காரர்கள், உருசியாவின் முதலாம் பேதுரு , பிரான்சின் முதலாம் நெப்போலியன். போன்றவர்கள் ஆர்வமாக தேடியதற்கு சான்றுகள் உள்ளன. உருசிய மன்னர் நான்காம் இவான் காலத்தில் இந்த நூலகம் குறித்த செவிவழிக் கதைகள் வளர்ந்தன. மறைவிடத்தில் இருந்த இந்த நூலகத்தைக் எதிரிகள் யாராவது கண்டுபிடித்து நெருங்கினால் அவர்களது கண் பார்வை பறிபோய்விடும்படி நான்காம் இவான் ஏற்பாடு செய்திருந்தார் என்றும், நூலகத்தில் இருந்த பழங்காலத்தைய பல்வேறு மொழி நூல்களை, அதில் உள்ளதாக கருதப்பட்ட கண்கட்டு வித்தைகளை அறிவதற்காக அறிஞர்களைக் கொண்டு உருசிய மொழியில் மொழிமாற்றம் செய்யும் பணியையும் இவான் மேற்கொண்டார் என்பது போன்ற கதைகள் நிலவின.[1]

வரலாறு[தொகு]

இந்த நூலகம் குறித்த பழைய குறிப்பானது 1518 ஆண்டைச் சேர்ந்த "The Tale of Maxim the Philosopher" என்ற நூலில் உள்ள குறிப்பு ஆகும். மாக்சிமஸ் தி கிரீக் என்று பரவலாக அறியப்பட்ட கிரேக்கத் துறவியான மைக்கேல் திரிப்பொலிஸ் மிக்கிமஸ் என்பவர் உருசியாவுக்கு அனுப்பப்பட்டார். திரிப்போலிஸ் ஒரு நற்பெயருள்ள, அறிஞர் மற்றும் மொழிபெயர்பாளர் ஆவார். இவர் தாவீதின் தோத்திரப்பாடல் திரட்டு ( Psalter) போன்றவற்றை உருசிய மொழியில் மொழிபெயர்த்தவர். இவர் அப்போது உருசிய மன்னரான மூன்றாம் இவானின் மகனான் இளவரசன் மூன்றாம் வாசிலியை சந்தித்தார்.[2]   இவர்களின் சந்திப்பின்போது "எண்ணற்ற பல கிரேக்க புத்தகங்களை" மூன்றாம் வாசிலி திரிப்போலிசுக்கு காட்டினார். திருப்போலிசின் சமகாலத்தவரான உருசியர் மைக்கேல் என்பவர் திருப்போலிஸ் வரலாறு குறித்து "The Tale of Maxim the Philosopher" என்ற நூலை எழுதினார். இந்த நூலில் மூன்றாம் வாசிலி மற்றும் திருப்போலிசுக்கு இடையில் நடந்த சந்திப்பு குறித்து விவரித்துள்ளார். அச்சந்திப்பின்போது கிரேக்கத்தில் காணாத அளவு கிரேக்க நூல்களை திருப்போலிசுக்கு அங்கு கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.[3]:304

திருப்போலிஸ் வாழ்கை வரலாற்று நூல் எழுதப்பட்டு என்பது ஆண்டுகள் கழித்து இந்த நூலகம் குறித்த அடுத்த குறிப்பு கிடைக்கிறது. ஜெர்மானிய சீர்திருத்தத் திருச்சபை அமைச்சரான ஜொஹான்னெஸ் வெட்டர்மனைப் பற்றி லிவோனிய எழுத்தாளர் ஃப்ரான்ஸ் நியூன்ஸ்டாட் என்பவர் எழுதியுள்ளார். அதில் உருசியாவில் ஒரு தேவாலயத்தை நிறுவி, உருசிய மன்னரான நான்காம் இவானை வெட்டர்மன் சந்தித்ததைப்பற்றி எழுதியுள்ளார். கிரெம்ளின் மாளிகையின் அடியில் நான்காம் இவன் பலவேறு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. 1978 ஆம் ஆண்டில் சோவியத் கட்டுமான தொழிலாளர்கள் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டபோது இவற்றில் சில ஆயுதங்களைக் கண்டறிந்தனர்.[4] நான்காம் இவானை சந்திக்க வெட்டர்மன் அழைக்கப்பட்டார். அச்சந்திப்பிப்போது அங்கு வெட்டர்மன் அங்கு எந்த ஆயுதக் குவியலையும் பார்க்கவில்லை. ஆனால் நூறு ஆண்டுக்கு மேலாக கிரெம்ளின் அரண்மனையின் உள்ளே எங்கோ ஒரு இடத்தில் உள்ள அறையில் பூட்டி பாதுகாக்கப்பட்ட பண்டைய நூல்களைப் பார்த்தார். அப்போது வெட்டர்மனுக்கு ஒரு நூலை ஆய்வுசெய்து மொழிபெயர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்தப்பணியானது மாஸ்கோவில் நீண்டகாலம் தங்கி, கடுமையாக பணியாற்ற வேண்டிவரும் என அதை ஏற்கத் தயங்கினார். இதன்பிறகு இந்த நூல்களை தீயில் இருந்து பாதுகாக்க மீண்டும் பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்து பூட்டினர்.

நூலகத்தைத் தேடுதல்[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் எஸ்டோனியாவின் டோர்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டேப்லோவ் என்பவர், பார்னு நகரத்தின் ஆவணக் காப்பகத்தில் ‘Manuscripts Held by the Tsar’ என்ற ஆவணத்தைக் கண்டெடுத்தார். அதாவது உருசிய மன்னர்கள் அந்த நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்களின் பட்டியலைச் சொல்லும் ஆவணம் அது. அதை அங்கேயே பத்திரமாக வைத்த டேப்லோவ், வெளியே சென்று வேறு சில ஆய்வாளர்களை அழைத்து வந்தார். மீண்டும் வந்து பார்த்தபோது அந்த ஆவணம் மர்மமாகக் காணாமல் போயிருந்தது. திரும்பக் கிடைக்கவே இல்லை. முதல் முறை அந்த ஆவணத்தைப் பார்த்தபோது, டேப்லோவ் அதிலிருந்து எடுத்த சில குறிப்புகள் மட்டுமே அந்த நூலகம் இருந்ததற்கான ஒரே சான்று. இந்த குறிப்புகளின்படி அங்கு இருந்த சுமார் 800 கையெழுத்துப் பிரதிகளைப் பற்றிய தகவலைக் கொண்டிருந்தது என்பதோடு இவற்றில் சிலவானது அறியப்படாத பைசாந்திய பேரரசரால் உருசியாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது என அறியப்பட்டது.

1834 ஆம் ஆண்டில், நிக்கோலாய் கரம்சினின் படைப்பான "உருசிய அரசின் வரலாறு" ஆகியவை உட்பட உருசிய வரலாறு குறித்த ஒரு தொகுப்பொன்றை பேராசிரியர் கொல்சியஸ் எழுதினார். அதில் உள்ள கரம்சினியின் கட்டுரையில் நான்காம் இவான் மற்றும் சீர்திருத்த திருச்சபை அமைச்சர் ஜொஹான்னெஸ் வெட்டர்மன் இடையிலான சந்திப்பை குறிப்பிடுகிறார்.   பேராசிரியர் கொல்சியஸ் தன் கட்டுரையில், இந்த நூலகமானது பதினேழாம் நூற்றாண்டில் போலந்தின் படையெடுப்பின் போது தீயினால் அழிந்ததாக கருதுவதாக குறிப்பிட்டார்.

1890களில், ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக் கழகப் பேராசிரியரான திரேமர் ஹோமரின் பாடல்கள் கொண்ட கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கண்டுபிடித்தார். இது உருசிய மன்னர் மூன்றாம் இவனை பைசாந்திய இளவரசி சோபிஃயா பாலோயோலினா திருமணம் செய்துகொண்டபிறகு அவர் மாஸ்கோவுக்கு கொண்டு வந்த கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பகுதியாக இது இருக்கலாம் எனக் கருதினார். சோஃபியாவை, ரஷ்யப் பேரரசரான மூன்றாம் இவான் 1472இல் திருமணம் செய்துகொண்டார். அவரது திருமணச் சீர் பொருட்களில் கான்சாண்டின்நோபில் நூலகம் மற்றும் அலெக்சாந்திரியா நூலகம் போன்றவற்றின் அரிய நூல்களும் இருந்தன.[1] 1891 இல் பேராசிரியர் திரமோர் மாஸ்கோவில் பல மாதங்கள் தங்கி இருந்து இந்த நூலகத்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். கிரெம்ளின் மாளிகைக்கு அடியில் உள்ள நிலவறைகளில் இந்த நூலகம் இருக்கலாம் என்று இவர் கருதினார். 1893 இல் பேராசிரியர் ஐ. இ. ஜாபிலின் "மாஸ்கோ கிரெம்ளின்" இன் த அண்டர்கிரவுண்டு சேம்பர்ஸ் ஆஃப் த மாஸ்கோ கிரெம்ளின்" என்ற ஒரு கட்டுரையை எழுதினார், அதில் நூலகம் இருந்ததாகவும், அது பதினேழாம் நூற்றாண்டில் அழிக்கப்பட்டது என்று முடிவு செய்தார். இந்தக் காலகட்டத்தில் கிரெம்ளின் மாளிகையின் அடியில் சில அகழ்வாய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.   அகழ்வாய்வில் மாளிகைக்கு அடியில் பல நிலவறைகளும், சுரங்கங்களும் இருந்தன. என்றாலும் அவை அனைத்தும் காலியாகவே இருந்தன. இதே காலத்தைச் சேர்ந்த பல உருசிய அறிஞர்கள் இப்படி ஒரு நிலவறை நூலகம் இருந்ததற்கு சான்று இல்லை என்று மறுத்தனர். [3]:310–311

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The Search for the Lost Library of Ivan the Terrible". Ancient Origins. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.
  2. Golubinskii, E.E. (1900). Istoriia Russkoi Tserkvi (Volume 2, Part 1). Moscow, Russia: Universitetskaia Tipografiia. 
  3. 3.0 3.1 Arans, David (1983). A Note on the Lost Library of the Moscow Tsars. 
  4. Hamilton, Masha (June 28, 1989). "Kremlin Tunnels: The Secret of Moscow's Underworld". Los Angeles Times. http://articles.latimes.com/1989-06-28/news/mn-4159_1_kremlin-tunnels-underground-passageways-dirt. பார்த்த நாள்: 27 November 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]