ஆறுகால நித்தியப் பூசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆறுகால நித்திய பூசை அல்லது ஆறுகால பூசை என்பது சைவ சமயக் கோவில்களில் ஆகம முறைப்படி தினம் நடைபெறுகின்ற ஆறு பூசைகளாகும். [1] இந்த நித்தியப் பூசை நடைபெற சில கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறையானது நித்ய ஆராதனைக் கட்டளைத் திட்டம் என்பதை செயல்படுத்துகிறது.

ஆறு கால பூசைகளாவன,.

  1. உசத்கால பூசை
  2. காலசந்தி பூசை
  3. உச்சிக்கால பூசை
  4. சாயரட்சை பூசை
  5. சாயரட்சை இரண்டாம் கால பூசை
  6. அர்த்தசாம பூசை

உசத் கால பூசை[தொகு]

முதல் பூசையான இது, சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தப்படுகிறது. ஆகமத்தின் படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும்.

இந்த பூசையின் போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறை சென்று திருப்பள்ளி எழுச்சி ஓதுவார்.

பின்பு பெருமான் சிலையை மட்டும் மேள வாத்தியத்துடன் கோயிலை வலம் வந்து மூலவரான லிங்கத்தின் முன்பு வைத்து பூசை நடைபெறும். உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்கு செல்வதாக நம்பிக்கை.

இந்தப் பூசை அபிசேக ஆராதனையோடு முடிவடைகிறது.

காலசந்தி[தொகு]

ஆகமத்தின் படி காலசந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெற வேண்டும். பூசையின் போது சூரியன், விநாயகருக்கு, துவாரத்திற்கு பூசை நடைபெறுகிறது.

பின்பு மூலவர், பரிவாத தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூசை முடிவடைகிறது.

உச்சிகால பூசை[தொகு]

இப்பூசை நண்பகலில் நடத்தப்படுகிறது. விநாயகர் பூசை முடிந்ததும், துவாரபாலகரை வழிபட்டு மூலவரான இலிங்கத்திற்கு அலங்காரம், ஆவரணம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்த பூசைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டேசரிடம் வைத்து வழிபடப்படுகிறது.

சாயரட்சை பூசை[தொகு]

இந்த பூசையானது சூரியனின் மறைக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூசை, மூலவரான இலிங்கத்திற்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

இரண்டாம் கால பூசை[தொகு]

வினாயகர் பூசை, மூலவருக்கு அபிசேக, ஆராதனை, தீபம், நைவேத்திய படையல் பூசை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூசை நடைபெற்று சண்டேசுவர பூசையுடன் இரண்டாம் கால பூசை முடிவடைகிறது.

அர்த்த சாம பூசை[தொகு]

மூலவருக்கு அபிசேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் சென்று அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதனை பள்ளியறை பூசை என்பர்.

பள்ளிறைப் பூசை முடிந்ததும் சண்டேசுவரர் பூசை நடைபெறுகிறது. பின்பு பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூசை நடைபெற்று அர்த்தசாம பூசை முடிவடைகிறது.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தினமணி ஆலயங்களில் சிவ வழிபாடு! 03 ஆகஸ்ட் 2018". Archived from the original on 2018-08-13. பார்க்கப்பட்ட நாள் 2019-01-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுகால_நித்தியப்_பூசை&oldid=3625959" இலிருந்து மீள்விக்கப்பட்டது