இறால் பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த கட்டுரை உப்புநீர் இறால் வளர்ப்பு குறித்ததாகும். நன்னீர் வகைகள் குறித்த விவரங்களுக்கு நன்னீர் இறால் விவசாயம் என்பதைக் காணவும்.
தென்கொரிய பண்ணை ஒன்றில் இருக்கும் ஒரு முதிர்வளர்ச்சிக் குட்டை

இறால் பண்ணை என்பது வர்த்தகரீதியான மீன்வளர்ப்பு முறையில் மனித உணவுக்குப் பயன்படும் கடல் இறால்[1] அல்லது கூனிறால்களை வளர்க்கும் பண்ணை ஆகும். வர்த்தகரீதியான இறால் விவசாயம் 1970களில் தொடங்கியது. அதன்பின் உற்பத்தி மிக அதிக வளர்ச்சி கண்டது. குறிப்பாக அமெரிக்கா, சப்பான் மற்றும் மேற்கு ஐரோப்பாவின் தேவைகளுக்கே இவை அதிகமாய் சேவை புரிகின்றன. வளர்ப்பு இறால்களின் உலகளாவிய உற்பத்தி 2003 ஆம் ஆண்டில் 1.6 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவை எட்டியது. வளர்ப்பு இறால்களில் சுமார் 75% ஆசியாவில் விவசாயம் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சீனா மற்றும் தாய்லாந்தில் தான் அதிகமாய் விவசாயம் செய்யப்படுகின்றன. எஞ்சிய 25% முக்கியமாக இலத்தீன் அமெரிக்காவில் இருந்து வருகிறது. பிரேசில் தான் இதில் மிகப் பெரும் உற்பத்தியாளராய் உள்ளது. தாய்லாந்து தான் மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு ஆகும்.

தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரியமான குறுந்தொழிலாக இருந்த இறால் பண்ணை விவசாயம் இன்று ஓர் உலகளாவிய தொழிலாக வளர்ச்சி கண்டிருக்கிறது. மிக உயர்ந்த செறிவடர்த்தியில் இறால்களை வளர்க்கும் அளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனப்பெருக்க மீன்கள் உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயம் செய்யப்படும் இறால்கள் அனைத்துமே ஏறக்குறைய பெனெய்டு இறால்களே (அதாவது பெனெய்டே குடும்பத்தைச் சேர்ந்தவை). பசிபிக் வெள்ளை இறால் (Penaeus vannamei ) மற்றும் பெரும் புலி இறால் (Penaeus monodon ) ஆகிய இரு இனவகைகள் தான் ஒட்டுமொத்தமாய் விவசாயம் செய்யப்படும் இறால்களில் சுமார் 80 சதவீதத்தைப் பங்களிக்கின்றன. இந்த ஓரின வளர்ப்புமுறை நோய்களுக்கு எளிதில் ஆளாகத்தக்கதாய் இருக்கிறது. இதனால் பல பிராந்தியங்களில் பண்ணை இறால்கள் விவசாயம் பெரும் அழிவைச் சந்தித்திருக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் அதிகரிப்பு, மீண்டும் மீண்டும் நோய்கள் பிறப்பது, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் நுகர்வோரிடமிருந்தான நெருக்குதல் மற்றும் விமர்சனம் ஆகிய காரணங்களால் இத்துறையில் 1990களின் பின்பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டன. பொதுவாக அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை வலிமைப்படுத்தியிருக்கின்றன. 1999 ஆம் ஆண்டில் அரசாங்க அமைப்புகள், தொழிற்துறை பிரதிநிதிகள், மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவற்றின் பங்கேற்புடன் பராமரிக்கத்தக்க இறால் விவசாய நடைமுறைகளை உருவாக்குவது மற்றும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டம் துவக்கப்பட்டது. உலகசந்தைகளில் இரால் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

வரலாறு மற்றும் புவியியல்[தொகு]

இந்தோனேசியர்களும் மற்றவர்களும் பாரம்பரிய குறை அடர்த்தி வழிமுறைகளில் பல நூற்றாண்டுகளாக இறால் விவசாயம் செய்து வந்திருக்கின்றனர். டம்பக்குகள் எனப்படும் இந்தோனேசிய வளர்ப்பு நீர்க் குட்டைகள் ஏறக்குறைய 15 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கின்றன. சிறு நீர்க்குட்டைகளை ஓரின வளர்ப்புக்கோ அல்லது பால்மீன் போன்ற வகைகளுடன் சேர்த்து பல்லின வளர்ப்புக்கோ பயன்படுத்தினர். வறண்ட கால சமயங்களில், நெல் வளர்க்க முடியாத போது, நெல் வயல்களிலும் சுழற்சி முறையில் இறால் விவசாயத்தை அவர்கள் செய்தனர்.[1] இத்தகைய விவசாயங்கள் பெரும்பாலும் கடலோர அல்லது நதிக்கரைப் பகுதிகளில் தான் இருக்கும். சதுப்புநிலக் காட்டுப் பகுதிகள் மிகவும் சாதகமானவை. ஏனென்றால் அவை ஏராளமான இயற்கை இறால்களை[2] கொண்டிருக்கும். குட்டி கடல் இறால்கள் தேக்கங்களில் மாட்டிக் கொள்கின்றன. நீரில் இயற்கையாக இருக்கும் உயிரினங்களை உண்டு வாழும் அவை போதுமான உருவஅளவை எட்டியதும் அறுவடை செய்யப்படுகின்றன.

தொழிற்சாலை இறால் விவசாயம் என்பது 1930களில் தோன்றியிருக்க வேண்டும். சப்பானிய மீன்வளர்ப்பாளர்கள் குருமா இறால் (பெனெயஸ் சப்போனிகஸ் ) இனத்தை முதன்முறையாக விவசாயம் செய்தனர். 1960களுக்குள்ளாக ஒரு சிறிய தொழிற்பிரிவே சப்பானில் உருவாகி விட்டிருந்தது.[3] 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் ஆரம்பகாலத்திலும் வணிகரீதியான இறால் விவசாயம் துவங்கியது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மிகத் தீவிரமான விவசாய முறைகளுக்கு இட்டுச் சென்றது. அதிகரித்த சந்தைத் தேவையும் உலகளவில் இறால் பண்ணைகளின் பெருக்கத்திற்கு கொண்டு சென்றது. 1980களின் ஆரம்பத்தில் நுகர்வோர் தேவை பெருகி இந்த தொழில்துறை பெரும் வளர்ச்சிப் பாதைக்குச் சென்றது. 1980களில் தைவான் ஒரு முக்கிய உற்பத்தி நாடாக இருந்தது. ஆயினும் மோசமான மேலாண்மை நடைமுறைகள் மற்றும் நோய் ஆகிய காரணங்களால்[4] 1988 ஆம் ஆண்டில் அதன் உற்பத்தி வீழ்ச்சியுறத் துவங்கியது. தாய்லாந்தில் பெருமளவு உற்பத்தி 1985[5] ஆம் ஆண்டில் இருந்து துரிதமாய் விரிவுற்றது. தென் அமெரிக்காவில், ஈக்வடார் இறால் விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்ந்தது. இந்நாட்டில் இறால் விவசாயம் 1978[6] ஆம் ஆண்டு முதல் பெரும் வளர்ச்சி கண்டது. பிரேசில் 1974 ஆம் ஆண்டு முதலே இறால் விவசாயத்தில் செயலூக்கத்துடன் இயங்கி வருகிறது என்றாலும் அங்கு 1990களில் தான் வர்த்தகம் பெரும் வளர்ச்சி கண்டது. அதன்பின் ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே அந்நாடு ஒரு முக்கிய பெரும் உற்பத்தியாளராய் ஆனது.[7] இன்று ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் கடல் இறால் பண்ணைகள் அமைந்துள்ளன.

விவசாய வழிமுறைகள்[தொகு]

தேவை பெருகி கடல் இறால் பிடிப்பு போதாநிலை எழுந்தபோது இறால் விவசாயம் வளர்ச்சியுற்றது. அச்சமயத்தில் பழைய விவசாய முறைகள் எல்லாம் மாறி உலகத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதல் உற்பத்தித்திறனுடனான புதிய முறைகள் அறிமுகமாயின. தொழில்ரீதியான விவசாயத்தில் முதலில் பாரம்பரிய வழிமுறைகளே பின்பற்றப்பட்டன. “விரிவாக்கம்” செய்யப்பட்ட பண்ணைகள் தோன்றின. இதில் குறைந்த அடர்த்தியே இருந்தாலும் நீர்வயலின் அளவு பெரிதாக இருக்கும். சில பகுதிகளில் சதுப்புநிலக்காடுகளின் பெரும்பகுதிகள் இதற்காய் அகற்றப்பட்டன. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறைந்த இடத்தில் உற்பத்தியை அதிகரித்து கூடுதலான நிலங்கள் இதற்கென மாற்றப்படுவதைத் தவிர்க்க உதவியுள்ளன. பகுதி செறிவான மற்றும் முழுச் செறிவான பண்ணைகள் தோன்றின. இவற்றில் இறால்களுக்கு செயற்கை உணவுகள் வழங்கப்பட்டன. இந்த நீர்க் குட்டைகள் திறம்பட மேலாண்மை செய்யப்பட்டன. விரிவாக்கம் செய்யப்பட்ட பல பண்ணைகள் இன்னும் இருக்கிறது என்றாலும் புதிய பண்ணைகள் பொதுவாக பகுதி செறிந்தவையாக இருக்கும்.

1980களின் மத்திய காலம் வரை, அநேக பண்ணைகள் கடல் இறால் குட்டிகளைக் கொண்டே செயல்பட்டன. இந்த விவசாயம் பல நாடுகளிலும் முக்கியமான பொருளாதாரத் துறையாக இருந்தது. இறால்பிடிப்புப் பகுதிகள் குறைந்ததனாலும், இறால் குட்டிகள் சீராய் வழங்கப்பட வேண்டியிருந்ததாலும் இத்தொழிலில் இறால்கள் குஞ்சுபொரிப்பகத்தில் வளர்க்கப்படலாயின.

வாழ்க்கைச் சக்கரம்[தொகு]

நபுலி

கடல் வாழிடத்தில் தான் இறால்கள் வளர்ச்சியடைகின்றன. பெண் இறால்கள் 50,000 முதல் 1 மில்லியன் முட்டைகள் வரை இடுகின்றன. இவை சுமார் 24 மணி நேரத்திற்குப் பின் நபிலிகளைப் (nauplii) பொரிக்கின்றன. இவை அடுத்த கட்டமாக தங்களது உடல்களில் இருக்கும் கருவை உண்டு சோவோக்களாக (zoeae) உருமாற்றமடைகின்றன. ஆழ்கடல் பகுதிகளில் இந்த இரண்டாம் கட்ட லார்வாக்கள் கடல்புற்களை உண்டு சில நாட்கள் கழித்து மைசஸ்களாக (myses) உருமாற்றம் காண்கின்றன. இந்த மைசஸ்கள் சின்னஞ்சிறிய இறால் குஞ்சுகளாகக் காட்சியளிக்கும். இவை கடற்புற்களையும் பாசிகளையும் உணவாய்க் கொள்ளும். இன்னுமொரு நான்கைந்து நாட்களுக்குப் பின், முதிர்ச்சி கண்ட இறாலின் குணநலன்களைக் கொண்ட ஒரு குட்டி இறாலாக உருமாற்றம் நிகழ்கிறது. குஞ்சுபொரிப்பதில் இருந்து இந்த மொத்த நிகழ்முறைக்கும் சுமார் 12 நாட்கள் எடுக்கும். இந்த பருவத்திலிருக்கும் குஞ்சுகள் ஆழ்கடல் பகுதிகளில் இருந்து சத்துகள் செறிந்தும் உவர்தன்மை குறைந்தும் காணப்படும் முகத்துவாரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. முதிர்ச்சியடைந்தவுடன் அவை மீண்டும் ஆழ்ந்த நீர்ப்பகுதிகளுக்கு சென்று விடும். முதிர்ந்த இறால்கள் பிரதானமாக கடலடியில் வசிப்பவை ஆகும்.[8]

விநியோகச் சங்கிலி[தொகு]

இறால் விவசாயத்தில், இந்த வாழ்க்கைச் சக்கரம் கட்டுப்படுத்தபட்ட நிலைமைகளின் கீழ் நிகழ்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் செறிந்த அறுவடை, திட்டமிட்ட உருவ அளவுகள் ஆகியவற்றைப் பெற முடிகிறது. அத்துடன் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் துரிதப்படுத்தவும் முடிகிறது. இவற்றில் மூன்று கட்டங்கள் உள்ளன:

  • குஞ்சுபொரிப்பகங்கள் நபிலிகள் அல்லது அதற்குப் பிந்தைய லார்வாக் கட்டங்களில் பண்ணைகளுக்கு விற்கின்றன. பெரிய இறால் பண்ணைகள் தங்களது சொந்த குஞ்சுபொரிப்பகங்களை வைத்திருக்கின்றன. இவை அருகிலிருக்கும் சிறிய பண்ணைகளுக்கு இறால் குஞ்சுகளை விநியோகிக்கின்றன.
  • வளர்ப்பகங்கள் பெருலார்வாக்களை வளர்த்து அவற்றை முதிர்வளர்ச்சிக் குட்டைகளில் கடல் நிலைமைகளுக்கு பழக்குகின்றன.
  • மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை முதிர்வளர்ச்சிக் குட்டைகளில் வளரும் அவை சின்னஞ்சிறிய குஞ்சுகளாக இருந்ததில் இருந்து சந்தைப்படுத்தத்தக்க அளவுக்கு வளர்ச்சியடைகின்றன.

அநேக பண்ணைகள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு அறுவடைகள் செய்கின்றன. வெப்பமண்டல காலநிலைகளில் மூன்று அறுவடையும் கூட சாத்தியமே. உவர்நீரின் அவசியத்தால், இறால் பண்ணைகள் கடற்கரையின் மீது அல்லது அருகில் அமைகின்றன. உள்ளமைந்த பகுதிகளிலும் இவை முயற்சிக்கப்பட்டிருக்கின்றன. உவர்நீரைக் கொண்டு செல்வதற்கான வசதியும் நிலம் கிடைப்பதில் சந்திக்கும் சவால்களுமே அதில் சந்திக்கும் சிக்கல்களாகும். உள்நிலப் பகுதிகளில் அமைக்கப்படும் இறால் பண்ணைகளை தாய்லாந்து 1999 ஆம் ஆண்டில் தடை செய்தது.[9]

குஞ்சுபொரிப்பகங்கள்[தொகு]

இறால் குஞ்சுபொரிப்பக குட்டைகள்

சிறு அளவிலான குஞ்சுபொரிப்பகங்கள் தென்கிழக்கு ஆசியாவில் மிகச் சாதாரணமாய் காணத்தக்கவை. பெரும்பாலும் குடும்ப வணிகமாகவும் அதிகம் தொழில்நுட்பம் கலக்காத அணுகுமுறையுடனும் இருக்கும். இவர்கள் சிறிய குட்டைகளை (பத்து டன்களை விடக் குறைவானது) பயன்படுத்துகின்றனர். அடர்த்தியும் குறைவாய் இருக்கும். நோய் தாக்கத்தக்கவை என்றாலும், சிறிய அளவினதாய் இருப்பதால், அந்த நோய்க் கூறுகளை அகற்றிய பின் மீண்டும் உற்பத்தியைத் துவங்கி விட முடியும். நோய், காலநிலை, மற்றும் சாதன இயக்குநரின் அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்து முட்டையில் இருந்து வரும் உயிர்களின் எண்ணிக்கை பூச்சியத்தில் இருந்து 90 சதவீதம் வரை இருக்கலாம்.

பச்சைத் தண்ணீர் குஞ்சு பொரிப்பகங்கள் நடுத்தர அளவினதாய் இருக்கும். இவை பெரிய தொட்டிகளைப் பயன்படுத்துகின்றன. அடர்த்தி குறைவாகவே இருக்கும். இறால் லார்வாக்களுக்கு உணவாகும் பொருட்டு கடற்பாசி தொட்டிகளில் நன்கு வளரும்படி செய்யப்படுகிறது. பிழைப்பு விகிதம் சுமார் 40 சதவீதமாய் இருக்கும்.

கால்வெஸ்டன் குஞ்சுபொரிப்பகங்கள் (இவை டெக்சாசின் கால்வெஸ்டான் என்கிற இடத்தில் உருவாக்கப்பட்டவை என்பதால் இப்பெயர் பெற்றன) மிகப் பெரிய தொழிற்சாலை குஞ்சுபொரிப்பகங்கள் ஆகும். இவை ஒரு மூடிய கட்டுப்படுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்துகின்றன. இவை பெரிய தொட்டிகளில் (15 முதல் 30 டன்கள்) அதிகமான அடர்த்திகளில் இறால்களை வளர்க்கின்றன. பிழைப்பு வீதம் 0 முதல் 80 சதவீதம் வரை இருக்கலாம் என்றாலும் பொதுவாக 50 சதவீத பிழைப்பு வீதத்தை எட்டுகின்றன.

குஞ்சுபொரிப்பகங்களில், வளரும் இறால்களுக்கு கடற்பாசிகளும் பிந்தைய கட்டங்களில் உவர்நீர் இறால் நபிலிகளும் கூட உணவாய் அளிக்கப்படுகின்றன. பிந்தைய கட்ட உணவுகளில் உலர்ந்த மிருகப் புரதமும் கூட இடம்பெறுவதுண்டு. உவர்நீர் இறால் நபிலிக்கு வழங்கப்படும் சத்துகளும் எதிர் உயிரி போன்ற மருந்துகளும் அவற்றை சாப்பிடும் பெரிய இறால்களுக்குச் சென்று சேர்கின்றன.[3]

குஞ்சு வளர்ப்பகங்கள்[தொகு]

விவசாயிகள் தொட்டிகளில் இருந்து முதிர்வளர்ச்சி குட்டைகளுக்கு லார்வாவுக்கு பிந்தைய குஞ்சுகளை மாற்றுகின்றனர்.

பல பண்ணைகளில் குஞ்சு வளர்ப்பகங்கள் இருக்கின்றன. இவை வளர்ந்த இறால் லார்வாக்களை இன்னுமொரு மூன்று வாரங்கள் தனித்தனி தொட்டிகளில், குளங்களில் அல்லது நீர்ப்பாதை குட்டைகளில் வளர்த்து இளம் குஞ்சுகள் ஆக்குகின்றன. நீர்ப்பாதைக் குட்டை என்பது செவ்வகமாகவும் நீளமாகவும் இருக்கும். இதில் நீர் தொடர்ந்து பாய்ந்து கொண்டும் வெளியேறிக் கொண்டும் இருக்கும்.[10]

சாதாரணமான ஒரு வளர்ப்பகத்தில், சதுர மீட்டருக்கு 150 முதல் 200 இறால்கள் வரை இருக்கும். அங்கு அவற்றுக்கு அதிகப்பட்சம் மூன்று வாரங்கள் வரை உயர்ந்த புரதத்துடனான உணவு வழங்கப்படும். பின் அவை முதிர்வளர்ச்சித் தொட்டிகளுக்கு மாற்றப்படும். இந்த சமயத்தில் அவை ஒரு கிராமுக்கும் இரண்டு கிராம்களுக்கும் இடையிலான எடையளவினைக் கொண்டிருக்கும். நீரின் உப்புத்தன்மை முதிர்வளர்ச்சித் தொட்டிகளில் இருக்கும் அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டுவரப்படும்.

குஞ்சு வளர்ப்பகம் என்பது அத்தியாவசியமானது என்று சொல்ல முடியா விட்டாலும், மேம்பட்ட உணவு விநியோகம், சீரான உருவ அளவு ஆகியவற்றை மனதில் கொண்டு பல பண்ணைகளும் இதனை ஆதரிக்கின்றன. அத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட காலநிலையால் அறுவடையும் அதிகரிக்கிறது. முதிர்வளர்ச்சித் தொட்டிகளுக்கு[3] மாற்றும் போது வளர்ந்த லார்வாக்களில் சில இறந்து போய் விடும் என்பது தான் குஞ்சு வளர்ப்பகங்களில் காணும் முக்கியக் குறைபாடு ஆகும்.

சில பண்ணைகள் குஞ்சு வளர்ப்பகங்களைப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, வளர்ந்த லார்வாக்களை ஒரு பழக்கு தொட்டியில் பொருத்தமான வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையின் அளவுகளுக்கு பழக்கி விட்டு பின் நேரடியாக அவற்றை முதிர்வளர்ச்சித் தொட்டிகளுக்கு மாற்றி விடுகின்றன. இந்த பழக்கு தொட்டிகளில் இருக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாய் முதிர்வளர்ச்சித் தொட்டிகளின் சூழலுக்குக் கொண்டுவரப்படும். அடர்த்தியானது சின்னஞ்சிறு குஞ்சுகளுக்கு லிட்டருக்கு ஐநூறைத் தாண்டாமலும் 15 நாள் குஞ்சுகள்[11] போன்ற பெரிய அளவு இறால்களுக்கு லிட்டருக்கு ஐம்பதைத் தாண்டாமலும் இருக்க வேண்டும்.

முதிர்வளர்ச்சி[தொகு]

இந்தோனேசியாவில் காற்றுவழி வசதியுடனான இறால் நீர்க் குட்டை என்பது விவசாயத்தின் ஆரம்ப கட்டம் ஆகும்.
ஒரு குதிரைசக்தி திறனுடைய காற்றுவழி சாதனம்.இவ்வாறு விசிறுவது நீரின் ஆவியாகும் வீதத்தை அதிகப்படுத்தி குட்டையின் உவர் அளவை அதிகரிக்கும்.
இரண்டு குதிரைசக்தி கொண்ட “டர்போ ஏரேட்டர்” சாதனம். குட்டை வீழ்படிவுகளை கிளறி விடாமல் இருப்பதற்காக, நீரின் ஆழம் குறைந்தபட்சம் 1.5 மீட்டராவது இருக்கும்வகையில் பராமரிக்க வேண்டும்.

இக்கட்டத்தில், இறால்கள் முதிர்வளர்ச்சி நிலைக்கு வளர்கின்றன. வளர்ந்த இறால் குஞ்சுகள் தொட்டிகளுக்கு மாற்றப்பட்டு அங்கே அவை விற்பனை அளவுக்கு வளரும் வரை உணவளிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இதற்கு இன்னுமொரு மூன்று முதல் ஆறு மாத காலங்கள் ஆகும். இறால் அறுவடையை மீன்வலைகள் மூலமாகவோ அல்லது தொட்டி நீரை வெளியேற்றுவதன் மூலமாகவோ செய்யலாம். தொட்டி அளவுகளும் தொழில்நுட்ப கட்டமைப்பின் அளவுகளும் மாறுபடுகின்றன.

பாரம்பரியமான குறைந்த அடர்த்தி வழிமுறைகளைப் பயன்படுத்தும் நீட்டிக்கப்பட்ட இறால் பண்ணைகள் கடற்கரைகளிலும் சதுப்புநிலக் காட்டுப் பகுதிகளிலும் நிறையக் காணப்படுகின்றன. தொட்டிகளின் பரப்பு ஒரு சில எக்டேர்கள் துவங்கி 100 எக்டேர்களுக்கும் அதிகமானது வரை இருக்கலாம். இறால்களின் அடர்த்தி சதுர மீட்டருக்கு 2-3 முதல் 25000/எக்டேர் வரை இருக்கலாம்.[2] அலைகள் சற்று புதிய நீரை எப்போதும் கொண்டு வருவதால் இறால்கள் இயற்கையாகவே கிடைக்கும் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. சில பகுதிகளில் கடல் இறால்களையும் கூட விவசாயிகள் வளர்க்கின்றனர். நிலத்தின் விலை குறைவாக இருக்கிற ஏழை நாடுகள் அல்லது வளர்ச்சி குன்றிய நாடுகளில், நீட்சிப் பண்ணைகள் வருடத்திற்கு 50 முதல் 500 கிலோ வரை வருடாந்திர விளைச்சலை அளிக்கின்றன. இவற்றின் உற்பத்திச் செலவும் குறைவு (1 கிலோ இறாலுக்கு 1 முதல் 3 அமெரிக்க டாலர் வரை ஆகும்). அத்துடன் அதிகமாகத் தொழிலாளர்களும் அவசியப்படுவதில்லை. முன்னேறிய தொழில்நுட்பத் திறன்களும் அவசியம் இல்லை.[12]

பாதிசெறிந்த பண்ணைகள் நீர்ப் பரிமாற்றத்திற்கு அலைகளை நம்பியிருப்பதில்லை. மாறாக இவை நீர் இறைப்பான்களைப் பயன்படுத்துகின்றன. அத்துடன் அவை உயர்ந்த அலை மட்டத்தில் அமைக்கப்படுகின்றன. தொட்டி அளவுகள் 2 முதல் 30 எக்டேர்கள் வரை இருக்கலாம். இறால்களின் அடர்த்தி சதுர மீட்டருக்கு 10 முதல் 30 வரை இருக்கலாம் (எக்டேருக்கு 100,000–300,000). இத்தகைய அடர்த்திகளில், உணவு அளிப்பதற்காக தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை அளிப்பதும் இயற்கையாக நீரில் வாழும் உயிரினங்கள் வளர்வதற்கு வழிசெய்வதும் அவசியமாகும். வருட விளைச்சல் எக்டேருக்கு 500 முதல் 5,000 கிலோ வரை இருக்கும். உற்பத்திச் செலவுகள் ஒரு கிலோ இறாலுக்கு 2 முதல் 6 அமெரிக்க டாலர் வரை இருக்கும். சதுரமீட்டருக்கு 15க்கும் அதிகமாக அடர்த்தி இருக்கும் சமயத்தில், பிராணவாயுப் பற்றாக்குறையைத் தவிர்க்க காற்றுவழிக்கு ஏற்பாடு செய்வது அவசியமாகும். நீரின் வெப்பநிலையைப் பொருத்து உற்பத்தி மாறும் என்பதால், சில பருவங்களில் மற்ற பருவங்களைக் காட்டிலும் பெரிய அளவிலான இறால்களைக் காண முடியும்.

செறிந்த அடர்த்திப் பண்ணைகள் 0.1 முதல் 0.15 எக்டேர் வரையிலான இன்னும் சிறிய தொட்டிகளைப் பயன்படுத்துகின்றன. இந்த தொட்டிகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன. நல்ல காற்றுவழிகள் அமைக்கப்படுகின்றன; நீரின் தரத்தைப் பராமரிக்க தொடர்ந்து நீர்ப் பரிமாற்றம் இருக்கும்; அத்துடன் இறால்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்படும். இத்தகைய பண்ணைகள் வருடத்திற்கு எக்டேருக்கு 5,000 முதல் 20,000 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். சில மிகச் செறிந்த பண்ணைகள் எக்டேருக்கு 100,000 கிலோவும் கூட உற்பத்தி செய்ய முடியும். நீரின் தரம் மற்றும் தொட்டியின் பிற சூழல்களைத் தொடர்ந்து பராமரித்து வருவதற்கு மேம்பட்ட தொழில்நுட்ப உள்கட்டமைப்பும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நிபுணர்களும் அவசியமாகும். இதில் உற்பத்திச் செலவு ஒரு கிலோ இறாலுக்கு 4-8 அமெரிக்க டாலர்கள் வரை ஆகின்றன.

உலகில் இருக்கும் இறால் பண்ணைகளின் வகைகள் குறித்த திட்டவட்டமான மதிப்பீடுகள் இல்லை. ஆயினும் 55-60% பண்ணைகள் நீட்சிப் பண்ணைகளாக இருக்கலாம் என்றும், இன்னுமொரு 25-30% வரையான பண்ணைகள் பாதி செறிந்தவையாக இருக்கலாம் என்பதும், எஞ்சியவை செறிந்த அடர்த்திப் பண்ணைகள் என்றும் அநேக ஆய்வுகள் உடன்படுகின்றன. பிராந்திய அளவிலும் இந்த வேறுபாடுகள் காணப்படும்.[12]


இறால்களுக்கு உணவளித்தல்[தொகு]

நீட்சிப் பண்ணைகள் பிரதானமாக இயற்கை உணவை அளிக்கின்றன. அதே சமயத்தில் செறிந்த அடர்த்திப் பண்ணைகள் செயற்கை உணவுகளை மட்டுமோ அல்லது அவற்றை இயற்கை உணவுக்கு துணையளிப்பாகவோ அளிக்கின்றன. மிதவைத் தாவர உயிரிகளின் வளர்ச்சியின் அடிப்படையில் தொட்டிகளில் ஒரு உணவுச் சங்கிலி உருவாகிறது. இறால்களின் வளர்ச்சியைத் தூண்ட இந்த மிதவைத் தாவர உயிரிகளின் வளர்ச்சிக்கான உரங்களும் சத்துகளும் இடப்படுகின்றன. இந்த செயற்கை உணவுக் கழிவுகள் மற்றும் இறால் கழிவுகள் ஆகியவற்றால் நீர்வாழ் உயிரிகள் பெருகி தொட்டிகளில் பிராணவாயுப் பற்றாக்குறை நிலை ஏற்பட இட்டுச் செல்லலாம்.

பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தானிய உருண்டைகள் செயற்கை உணவுகளாக வழங்கப்படுகின்றன. இறால்கள் அவற்றை உண்ணும் முன்பே இவற்றில் பாதி சிதறிக் கரைந்து விடும் என்பதால் இந்த உணவில் 70% வரை வீணாகி விடும்.[3] இந்த உணவு ஒரு நாளில் இரண்டு முதல் ஐந்து தடவை வரை அளிக்கப்படலாம். இந்த உணவளிப்பு கரையில் இருந்து செய்யப்படலாம், அல்லது படகுகளில் இருந்து வீசப்படலாம், அல்லது எந்திரங்களையும் பயன்படுத்தலாம். ஒரு அலகு (உதாரணமாக ஒரு கிலோ) இறாலை உற்பத்தி செய்வதற்கு அவசியப்படும் உணவின் அளவு உணவு உருமாற்ற விகிதம் என்று அழைக்கப்படுகிறது. நவீனப் பண்ணைகளில் இது 1.2 முதல் 2.0 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் இந்த அளவு எப்போதும் சாத்தியமாவதில்லை. இலாபகரமான பண்ணைகள் இந்த விகிதத்தை 2.5க்கு கீழே பராமரிக்க வேண்டும். பழைய பண்ணைகளில் இந்த விகிதம் 4 வரை கூட அதிகமாய் இருக்கலாம்.[13] உணவு உருமாற்ற விகிதம் எவ்வளவு குறைவாய் உள்ளதோ அந்த அளவு பண்ணைக்கு அதிக இலாபம் கிடைக்கும்.

விவசாய வளர்ப்பு இனங்கள்[தொகு]

பல வகை சென்னாக்குனி மற்றும் இறால் வகைகள் வளர்க்கப்பட்டாலும் கூட, அளவில் பெரிய ஒரு சில இனங்களே இறால் விவசாயத்தில் வளர்க்கப்படுகின்றன. இவை அனைத்துமே பெனெய்டே[14] என்கிற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவையே. இந்த உயிரியல் குடும்பத்தில் பெனெஸ் [3] என்கிற இனவகையைச் சார்ந்தவை. பல இனவகைகள் இறால் விவசாயத்திற்கு ஒத்துவராதவை. சில ரொம்பவும் சிறியதாய் இருப்பதால் இலாபம் ஈட்டித் தராதவையாக இருக்கும். இன்னும் சில கூட்டமாய் வளரும்போது வளர்ச்சி காணா வகைகளாகவோ அல்லது எளிதில் நோய்க்கு இலக்காகும் வகைகளாகவோ இருக்கும். சந்தையில் கோலோச்சும் இரண்டு வகைகள் பின்வருமாறு:

  • பசிபிக் வெள்ளை இறால் (வெள்ளைக்கால் இறால் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது தான் மேற்கு நாடுகளில் வளர்க்கப்படும் பிரதான இறால் இனமாகும். மெக்சிகோ முதல் பெரு வரை பசிபிக் கடலோரப் பகுதியில் வளரும் இது 23 செமீ வரை வளரும். லத்தீன் அமெரிக்காவில் இந்த இனம் தான் 95% வளர்க்கப்படுகிறது. இது வளர்ப்பதற்கு எளிதானது என்பதோடு தவுரா நோய்க்கு இலக்காகத்தக்கதாயும் உள்ளது.
  • பெரும் புலி இறால் (கரும் புலி இறால் என்றும் அழைக்கப்படும்) சப்பான் முதல் ஆஸ்திரேலியா வரையான பகுதிகளில் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் கிடைக்கின்றன. செயற்கை வளர்ப்பில் மிகப் பெரியதாய் வளரக் கூடியது இந்த இனமே. இது 36 செமீ நீளம் வரை வளர முடியும். ஆசியாவில் இது விவசாயம் செய்யப்படுகிறது. வெள்ளைப்புள்ளி நோய் தாக்கியதன் பின், 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதற்குப் பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக பசிபிக் வெள்ளை இறால் இனம் விவசாயம் செய்யப்படுகிறது.

இந்த இரண்டு வகைகளும் சேர்ந்து மொத்த இறால் உற்பத்தியில் சுமார் 80 சதவீதத்திற்குப் பங்களிப்பு செய்கின்றன.[15] வளர்க்கப்படும் பிற இன வகைகள்:

தைவானில் ஒரு மீன்வளர்ப்பு குட்டையில் இருக்கும் குருமா இறால்.
  • மேற்குக் கோளப் பகுதியில் மேற்கு நீல இறால் பிரபலமான வகையாக இருந்தது. 1980களில் IHHN வைரஸ் கிருமி தாக்குதலால் மொத்த இனமும் ஏறக்குறைய அழியும் நிலையை எட்டியது. அதில் கொஞ்சம் தப்பிப் பிழைத்தன. அவை இந்த நோய்க்கிருமிக்கு எதிராக எதிர்ப்புசக்தியை வெளிப்படுத்தின. இந்த இனங்களில் கொஞ்சம் தவுரா வைரசுக்கு எதிராகவும் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த மேற்கு நீல இறால் வகை 1997 ஆம் ஆண்டு தொடங்கி மீண்டும் பிரபலமடையத் துவங்கியது.
  • சீன வெள்ளை இறால் (சதை இறால் என்றும் அழைக்கப்படுகிறது) சீனக் கடலோரப் பகுதியிலும், கொரியாவின் மேற்குக் கடலோரப் பகுதியிலும் காணப்படுகிறது. இந்த வகை சீனாவில் விவசாயம் செய்யப்படுகிறது. இது அதிகப்பட்சம் 18 செமீ வரை மட்டுமே வளர முடியும் என்றாலும் இது 16° செல்சியஸ் வரையான குளிர்ந்த நீருக்கு தாக்குப் பிடித்து வாழத்தக்கது. ஒரு காலத்தில் உலகச் சந்தைக்கான முக்கிய மீன் வகையாக இருந்த இது, இன்று ஏறக்குறைய சீன உள்ளூர் சந்தைக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது.
  • குருமா இறால் பிரதானமாக சப்பான் மற்றும் தைவானில் விவசாயம் செய்யப்படுகிறது. ஆஸ்திரேலியாவிலும் ஓரளவுக்கு விவசாயம் செய்யப்படுகிறது. இதற்கான ஒரே சந்தை சப்பான் மட்டுமே. இங்கு இந்த இறாலின் விலை கிலோவுக்கு 220 அமெரிக்க டாலர் (ஒரு பவுண்டு எடைக்கு 100௦௦ டாலர்) என்கிற அளவில் விலைபோகிறது.
  • இந்திய வெள்ளை இறால் என்பது இந்தியப் பெருங்கடலின் கடலோரங்களில் வாழ்வதாகும். இது இந்தியா, ஈரான், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கரையோரங்களில் விவசாயம் செய்யப்படுகிறது.
  • இந்தியப் பெருங்கடலின் கடலோரப் பகுதிகளில் வளர்க்கப்படும் இன்னொரு வகை வாழை இறால் ஆகும். இது ஓமனில் துவங்கி இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா வரை வளர்க்கப்படுகிறது. இது மிகுந்த செறிவடர்த்திகளில் வளர்க்கப்பட முடியும்.

பெனெஸ் இனத்தின் மற்ற பல வகைகள் வெகு குறைந்த அளவிலேயே விவசாயம் செய்யப்படுகின்றன. இவற்றின் மொத்த உற்பத்தி வருடத்திற்கு சுமார் 25,000 டன்கள் என்கிற அளவுக்குள் தான் இருக்கிறது. பெனெய்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது மிகக் குறைவு.

நோய்கள்[தொகு]

கிருமிகளால் ஏற்படும் பல்வேறு நோய்களும் இறால்களைத்[16] தாக்கக் கூடும். செறிந்த அடர்த்திப் பண்ணைகள் மற்றும் ஓரின வளர்ப்புப் பண்ணைகளில் இத்தகைய நோய்த் தொற்றுகள் துரிதமாய்ப் பரவி ஒட்டுமொத்த இறால்களையும் அழித்து விடும். பெரும்பாலும் இந்த கிருமிகளில் பலவும் நீர்வழியாகப் பரவுவனவாக இருப்பதால், கிருமித் தொற்றானாது கடல் இறால் உயிரினத்தையே அழிக்கும் அபாயத்தையும் தாங்கியே உள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பகுதி[17]யில் பெரும் புலி இறாலைத் தாக்கும் மஞ்சள்தலை நோய் காணப்படுகிறது. இது முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் கண்டறியப்பட்டது. இந்த நோய் துரிதமாய் தொற்றக் கூடியது. 2 முதல் 4 நாட்களுக்குள் ஒரு கூட்டத்தையே தாக்கி அழித்து விடும். தொற்றிய இறாலின் தலைநெஞ்சு சற்று காலத்திற்குப் பின் மஞ்சளாக மாறும். இறக்கும் தறுவாயில் இருக்கும் இறால்கள் மேற்பரப்பின் அருகே கூடும்.[18]

வெள்ளைப் புள்ளி நோய் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு கிருமிகளால் உருவாகும் நோய் ஆகும். முதன்முதலில் சப்பானிய இறால் [19] வகையில் 1993 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த நோய் ஆசியா முழுவதும் பரவி பின் அமெரிக்க கண்டத்திற்கும் பரவியது. சில நாட்களுக்குள் அத்தனை இறால்களையும் கொல்லும் அளவிற்கு இக்கிருமி திறன்படைத்தது. மேலோட்டில் வெள்ளைப் புள்ளிகள் காணப்படுவதை இதன் அறிகுறியாய்க் கூறலாம். நோய் தொற்றிய இறால் இறக்கும்[20] முன் மந்தமாய் காணப்படும்.

தவுரா நோய் ஈக்வடார் நாட்டின் தவுரா நதி மீதிருக்கும் இறால் பண்ணைகளில் தான் முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. வெள்ளைக் கால் இறால் வகைகளை இந்நோய் தாக்கியது. நோய்தொற்றிய மீன்கள் மற்றும் இனவளர்ப்பு மீன்களிடம் இருந்து இந்த நோய் துரிதமாய் பரவியது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்க பண்ணைகளில் மட்டுமே காணக்கூடியதாய் இருந்த இந்த நோய், பின் ஆசியப் பண்ணைகளில் வெள்ளைக் கால் இறால் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் அங்கும் பரவியது. பறவைகளும் கூட இந்நோயை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[21]

IHHN என்பது மேற்கு நீல இறால் வகைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நோய் ஆகும். அத்துடன் வெள்ளைக் கால் இறால் களிலும் இது சேதாரத்தை ஏற்படுத்தும். இது பசிபிக் கடலோர விவசாய இறால்களில் காணப்படுகிறது. என்றாலும் அமெரிக்காவின் அட்லாண்டிக் கரையோரப் பகுதிகளில் காணப்படுவதில்லை.[22]

ஏராளமான பாக்டீரியா தொற்றுகளும் உள்ளன. வைப்ரியோசிஸ் எனப்படும் தொற்று பெருவாரியாய்க் காணப்படும் ஒன்றாகும். இது வைப்ரியோ என்னும் வகை பாக்டீரியாவால் உருவாகிறது. இத்தொற்றினால் இறால் பலவீனமடைவதோடு நிலைதவறி அலையும். அத்துடன் ஓட்டின் மீது கருப்பு காயங்கள் தோன்றும். இறப்பு விகிதம் 70 சதவீதத்துக்கு அதிகமாகவும் இருக்கலாம். NHP என்பது இன்னுமொரு பாக்டீரியா தொற்று ஆகும். மேலோடு மெலிவது உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். இத்தகைய அநேக பாக்டீரியா தொற்றுகளுக்கு செறிவடர்த்தி மிகுந்திருப்பதே காரணமாய் அமைகிறது. எதிர் உயிரிகள் மூலம் குணப்படுத்தப்படுகிறது.[23] பல்வேறு எதிருயிரிகள் கொண்ட இறால்களை இறக்குமதி செய்ய பல நாடுகள் தடை விதித்துள்ளன. குளோரோம்பெனிகால் என்பது இத்தகையதொரு எதிருயிரி ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது.[24]

நோய்களால் இறப்பு வீதம் பெருமளவு இருக்கக் கூடும் என்பதால் இறால் பண்ணை விவசாயிகளுக்கு இது கவலையளிக்கக் கூடியதாகும். அவர்களின் தொட்டிகளில் நோய் தொற்றுமாயின் அந்த மொத்த வருடத்திற்குமான வருவாயையும் கூட அவர்கள் இழக்க நேரலாம். நோய் பரவிய பின் அவற்றைக் குணப்படுத்துவது சிரமம் என்பதால் இத்துறையில் நோய் தோன்றுவதைத் தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நோய்களை பரப்புவதற்கு ஆதரவான மோசமான தொட்டி சூழல்களை தவிர்க்க நீர்த் தர மேலாண்மை உதவுகிறது. அத்துடன் கடலில் பிடித்து வரப்படும் லார்வாக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாய், நோய்க்கிருமி இல்லாத வண்ணம் வளர்த்தெடுக்கப்பட்ட சான்றிதழ் பெற்ற இனப்பெருக்க இறால்கள் அதிகமாய்ப் பயன்படுத்தப்படுகிறது.[25] அத்துடன் ஒரு பண்ணையில் நோய் அறிமுகம் ஆகாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மண்ணுடன் தொடா வண்ணம் நெகிழியால் பூச்சு செய்யப்படலாம். தொட்டிகளின் நீர்ப் பரிமாற்றத்தைக் குறைந்த அளவாகப் பராமரிக்கலாம்.[6]

பொருளாதாரம்[தொகு]

2005 ஆம் ஆண்டில் இறால் விவசாயத்தின் மொத்த உலகளாவிய உற்பத்தி 2.5 மில்லியன் டன்களாய் இருந்தது.[26] இது அந்த வருடத்தின் மொத்த இறால் உற்பத்தியில் (இறால் விவசாயம் மற்றும் கடல் இறால் பிடிப்பு) 42 சதவீதம் ஆகும். இறாலுக்கான மிகப்பெரிய இறக்குமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. 2003 முதல் 2009 வரையான ஆண்டுகளில் வருடந்தோறும் 500 முதல் 600,000 டன்கள் வரையான இறால் தயாரிப்புப் பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளது.[27] சப்பான்[28][29] 200,000 டன் தயாரிப்புப் பொருட்களை ஆண்டுதோறும் இறக்குமதி செய்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் இன்னொரு 500,000 டன் தயாரிப்புப் பொருட்களை இறக்குமதி செய்தது. ஐரோப்பாவில் ஸ்பெயினும் பிரான்சும் தான் மிகப்பெரும் இறக்குமதியாளர்களாய் இருக்கின்றன.[30] ஐரோப்பிய ஒன்றியம் குளிர்நீர் இறால்களையும் அதிகமாய் இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதியின் அளவு 2006 ஆம் ஆண்டில் சுமார் 200,000 டன்களாய் இருந்தது.[31]

இறால்களுக்கான இறக்குமதி விலைகள் பெருமளவில் ஏறி இறங்கத்தக்கவை. 2003 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு கிலோ இறாலின் இறக்குமதி விலை 8.80 அமெரிக்க டாலர்களாய் இருந்தது. சப்பானில் 8.00 அமெரிக்க டாலர்களாய் இருந்தது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி இறக்குமதி விலை கிலோவுக்கு வெறும் 5.00 அமெரிக்க டாலர்களாய் இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் குளிர்நீர் இறால்களையே அதிகம் இறக்குமதி செய்ததே இதன் காரணம் என்று கூறப்பட்டது. ஏனென்றால் அவை விவசாயம் செய்யப்படும் வெப்ப நீர் வகைகளைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் என்பதால் அவற்றின் விலையும் குறைவாக இருக்கும். இது தவிர, மத்திய ஐரோப்பாவில் தலை பெருத்த இறால்களே விரும்பப்படுகின்றன. இவை 30 சதவீத எடை கூடுதலாய் இருக்கும். ஆனால் இறால் ஒன்றின் விலை குறைவாய் இருக்கும்.[32]

உலகில் விவசாயம் செய்யப்படும் இறால்களில் சுமார் 75 சதவீதம் ஆசிய நாடுகளில் இருந்து வருகின்றன. சீனாவும் தாய்லாந்தும் முன்னணியில் உள்ளன. வியட்நாம், இந்தோனேசியா, மற்றும் இந்தியா ஆகியவை நெருக்கமாய் பின்தொடர்ந்து வருகின்றன. எஞ்சிய 25% மேற்குக் கோளப் பகுதியில் உற்பத்தியாகின்றன. இதில் பிரேசில், ஈக்வடார், மெக்சிகோ ஆகிய தென்னமெரிக்க நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.[33] ஏற்றுமதியைப் பொறுத்தவரை, தாய்லாந்து தான் இப்போது முதலிடத்தில் இருக்கிறது. இது 30 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து வரும் சீனா, இந்தோனேசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஒவ்வொன்றும் சுமார் 10 சதவீத அளவுக்கு பங்களிப்பு செய்கின்றன. வியட்நாம், பங்களாதேசம் மற்றும் ஈக்வடார் ஆகியவை மற்ற முக்கிய ஏற்றுமதி நாடுகளாகும்.[34] தாய்லாந்து தனது உற்பத்தியில் ஏறக்குறைய அனைத்தையுமே ஏற்றுமதி செய்து விடுகிறது. சீனா தனது இறால்களில் பெருமளவை உள்நாட்டுச் சந்தைக்குப் பயன்படுத்துகிறது. இதேபோல் உள்ளூர் சந்தையிலும் பெரும் தேவை கொண்ட இன்னுமொரு ஏற்றுமதி நாடு மெக்சிகோ ஆகும்.[6]

முக்கிய உற்பத்தி நாடுகளால் செய்யப்படும் இறால் உற்பத்தி அளவுகள்
[33]
பிராந்தியம் நாடு ஆண்டுக்கான உற்பத்தி (1,000 டன்களில்) [முழுமையாக்கப்பட்டது]
1985 86 87 88 89 1990 91 92 93 94 95 96 97 98 99 2000 01 02 03 04 05 06 07
ஆசியா சீனா 40 83 153 199 186 185 220 207 88 64 78 89 96 130 152 192 267 337 687 814 892 1.6 1.6
தாய்லாந்து 10 12 19 50 90 115 161 185 223 264 259 238 225 250 274 309 279 264 330 [360]. 401 501 501
வியட்னாம் 8 13 19 27 28. 32 36. 37 39 45 55 46 45 52 55 90 150 181 232 276 327 [349]. 377
இந்தோனேசியா 25 29 42 62 82 84 116]; 120 117 107 121 125 127 97 121 118 129 137 168 218 266 326 [315].
இந்தியா 13 14 15 15 20 28. 35 40 47 62 83 70 70 67 83 79 97 103 115 113 118 131 132 108
வங்க தேசம் 11 15 15 15 15 17 18 19 20 21 28. 29 32 42 48 56 style="text-align:right" 58 59 55 56 56 style="text-align:right" 58 63 65 64
பிலிப்பைன்ஸ் 29 30 35 44 47 48 47 77 86 91 89 77 41 38 39 41 42 37 37 37 39 40 42
மியான்மர் 0 0 0 0 0 0 0 0 0 0 1 2 2 2 5 5 6 7 19 30 49 49 48
தைவான் 17 45 80 34 இருபத்திரண்டு 15 15 இருபத்திரண்டு 16 10 8 11 13 6 5 5 6 8 10 13 13 13 11 11
அமெரிக்க கண்டம் பிரேசில் <1 <1 <1 <1 1 2 2 2 2 2 2 3 4 7 16 25 40 60 90 76 63 65 65
ஈக்வடார் 30 44 69 74 70 76 105!! 113 83 89 106 108 133 144 120 50 45 63 77 90 119 150 150
மெக்சிகோ <1 <1 <1 <1 3 4 5 8 12 13 16 13 17 24 29 33. 48 46 46 62 90 112 114
அமெரிக்கா <1 <1 1 1 <1 <1 2 2 3 2 1 1 1 2 2 2 3 4 5 5 4 3 2
மத்திய கிழக்கு சவுதி அரேபியா 0 0 0 0 <1 <1 <1 <1 <1 <1 <1 <1 1 2 2 2 4 5 9 9 11 12 15 15
ஈரான் 0 0 0 0 0 0 0 <1 <1 <1 <1 <1 <1 1 2 4 8 6 7 9 4 6 3
ஓசியானியா ஆஸ்திரேலியா 0 <1 <1 <1 <1 <1 <1 <1 1 2 2 2 1 1 2 3 3 4 3 4 3 4 3
Entries in italics indicate gross estimates in the FAO databases.[4] Bolded numbers indicate some recognizable disease events.
மேலிருந்து கீழாய்: வெள்ளைக் கால் இறாலின் மேலோட்டுத் துண்டுகள்; அறுவடை செய்யப்பட்ட ஆரோக்கியமான ஒரு வெள்ளைக் கால் இறால்; தவுரா நோயால் பாதிக்கப்பட்டு இறந்த வெள்ளைக் கால் இறால். ஆரோக்கியமான இறாலின் நிறம் கடலுயிரின நிறத்தாலும், குட்டையின் கீழிருக்கும் மண்ணின் வகையாலும், பயன்படுத்தப்படும் கூடுதல் ஊட்டச்சத்துக்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. தவுரா தொற்றால் கீழிருக்கும் இறாலின் வெள்ளை நிறம் தோன்றியுள்ளது.

நோய்ப் பிரச்சினைகள் இறால் உற்பத்தியை தொடர்ந்து பாதித்து வந்துள்ளன. 1993 ஆம் ஆண்டில் சீன வெள்ளை இறால் இனமே அழியும் நிலைக்கு வந்து விட்டது. 1996 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில் தாய்லாந்திலும் ஈக்வடாரில்[35] பலமுறையும் இந்த கிருமியால் பரவும் நோய்களால் இறால் உற்பத்தி பெருமளவு வீழ்ச்சி கண்டது. ஈக்வடாரில் மட்டும், 1989 ஆம் ஆண்டில் வெப்பக்காய்ச்சல் நோயினாலும், 1993 ஆம் ஆண்டு தவுரா நோயினாலும், 1999 ஆம் ஆண்டில் வெள்ளைப் புள்ளி நோயினாலும் உற்பத்தி பாதிக்கப்பட்டது.[36] சில சமயங்களில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளாலும் பாதிப்பு நேர்வதுண்டு. சில நாடுகள் இரசாயனங்கள் அல்லது எதிர் உயிரி மருந்துகளின் அளவுகள் அதிகம் கொண்ட இறால்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதில்லை.

1980களிலும் மற்றும் 1990களின் பெருமளவு காலத்திலும் இறால் விவசாயம் என்பது உயர்ந்த இலாபங்களுக்கு உத்தரவாதமளிக்கக் கூடியதாய் இருந்தது. நிலத்தின் விலையும் கூலியும் குறைவாக இருந்த இடங்களில் நீட்சிப் பண்ணைகளுக்கான முதலீடு குறைவானதாய் இருந்தது. பல வெப்பமண்டல நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக ஏழை நாடுகளுக்கு, இறால் விவசாயம் ஒரு கவர்ச்சிகரமான வணிக வாய்ப்பாக அமைந்திருந்தது. கடலோரத்தில் வாழும் ஏழை மக்களுக்கு இது வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் வழங்கியது. அத்துடன் இறால்களின் உயர்ந்த சந்தை விலைகளின் காரணமாக பல வளரும் நாடுகள் கணிசமான அந்நியச் செலாவணியையும் ஈட்டின. பல இறால் பண்ணைகளுக்கு ஆரம்பத்தில் உலக வங்கி மூலமாக நிதியாதாரம் அளிக்கப்பட்டது. அந்தந்த அரசாங்கங்களும் மானியங்கள் வழங்கின.[2]

1990களின் பிற்பகுதியில் பொருளாதார சூழ்நிலை மாறியது. அரசாங்கங்கள் மற்றும் விவசாயிகள் இரு தரப்பிலும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளின் நெருக்குதலை சம்பாதிக்க வேண்டியதானது. இவர்கள் இத்துறையின் நடைமுறைகளை கண்டித்தனர். அத்துடன் சர்வதேச வர்த்தக மோதல்களும் வெடித்தன. நுகர்வு நாடுகள் எதிர் உயிரிகளின் அளவு மிகுந்த இறால்களை இறக்குமதி செய்ய தடைவிதித்தன. 2004 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் இருந்து இறால் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.[37] [38] அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா இறக்குமதி இறால்கள் மீது சுமார் 10% அளவுக்கு தீர்வை விதித்தது.[39] நோய்கள் கணிசமான பொருளாதார இழப்புகளுக்குக் காரணமாயின. ஈக்வடாரில் ஏற்றுமதித் துறையில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததான இறால் விவசாயம் (வாழையும் எண்ணெயும் பிற முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்) 1999 ஆம் ஆண்டில் தோன்றிய வெள்ளைப்புள்ளி நோயால் கடும் பாதிப்புக்குள்ளானதை அடுத்து அங்கு 130,000 தொழிலாளர்களுக்கு வேலை போனதாக மதிப்பிடப்பட்டது.[6] மேலும், 2000 ஆம் ஆண்டில் இறால் விலைகள் கடுமையாய் வீழ்ச்சி கண்டன.[40] இதன்பின் மேம்பட்ட விவசாய முறைகளின் அவசியத்தை இறால் விவசாயிகள் அறிந்து கொண்டனர். அரசாங்கமும் வரன்முறைகளை கடுமையாக்கியது. [2][6]

சமூகப் பொருளாதார அம்சங்கள்[தொகு]

முறையாக மேலாண்மை செய்தால் இறால் விவசாயம் கடலோரப் பகுதி மக்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், அப்பகுதிகளில் வறுமையை ஒழிக்கவும் உதவும்.[41] இதற்கென ஏராளமான தகவல்விவரங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்றன.[42] நெல் விவசாயத்துடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்கிலிருந்து [43] துவங்கி மூன்று மடங்கு [44] வரை தொழிலாளர்கள் இறால் பண்ணைகளுக்கு அவசியமாய் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பொதுவாக செறிந்த அடர்த்திப் பண்ணைகளுக்கு அதிகமான தொழிலாளர்கள் அவசியமாக இருக்கின்றனர். இறால் நீட்சிப் பண்ணைகள் பொதுவாக விவசாயத்திற்குப் பயன்படாத நிலங்கள் உள்ள இடங்களில் அமைந்துள்ளன.[45] உணவு உற்பத்தி, இறால் கையாளுகை, மற்றும் வர்த்தகம் ஆகிய துணைத் துறைகளும் உண்டு.

பொதுவாக, இறால் பண்ணைத் தொழிலாளர்கள் மற்ற வேலைகளில் பெறுவதை விடவும் மேம்பட்ட ஊதியங்களைப் பெற முடிகிறது. [46][44] [47]

இலாபங்களில் பெரும்பகுதி பெரும் நிறுவனங்களுக்கு போய் சேர்கிறதே அன்றி உள்ளூர் மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்று அரசு சாரா நிறுவனங்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றன. இறால் பண்ணைகள் பெரும் நிறுவனங்களால் நடத்தப்படுகிற ஈக்வடார் போன்ற நாடுகளில் இது உண்மையாக இருந்தாலும் கூட எல்லா இடங்களிலும் இவ்வாறு நடப்பதாய் கூற முடியாது. உதாரணமாக, தாய்லாந்தில் சிறு உள்ளூர் தொழில்முனைவோர்கள் தான் அநேக பண்ணைகளை நடத்துகின்றனர். தாய்லாந்து விவசாயி நெல் பயிரிடுவதை இறால் வளர்ப்புக்கு மாற்றினால் தனது இலாபத்தை பத்து மடங்காய் உயர்த்த முடியும் என்று 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஆய்வு தெரிவித்தது.[48] ஆந்திரப் பிரதேசத்தின்[49] கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இறால் வளர்ப்பதற்கும் இதேபோன்றதொரு புள்ளிவிவரத்தை 2003 ஆம் ஆண்டில் இந்திய ஆய்வு ஒன்று கூறியது.

இறால் பண்ணையால் உள்ளூர் மக்களுக்குப் பயனிருக்கிறதா என்பது போதுமான பயிற்சி பெற்ற நபர்கள் கிடைக்கின்றனரா என்பதைப் பொறுத்தும் உள்ளது.[50] நீட்சிப் பண்ணைகள் முக்கியமாக அறுவடை காலத்தில் மட்டுமே வேலைகளை வழங்கும். அதிகமாய் பயிற்சிகள் அவசியப்படாது. ஈக்வடாரில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தான் இதில் பெருமளவில் வேலை செய்கின்றனர்.[51] செறிந்த அடர்த்திப் பண்ணைகளில் வருடம் முழுவதும் தொழிலாளர்களுக்கு வேலை இருக்கும்.

சந்தைப்படுத்தல்[தொகு]

விற்பனைக்கு வருகையில் இறால்கள் பல்வேறு வகைகளாய் தரம்பிரிக்கப்படுகின்றன. உரிக்காத இறால் முதல் உரித்து பிரித்த இறால் வரை பல்வகையிலும் கடைகளில் கிடைக்கிறது. அளவுகளை வைத்துப் பெரும்பாலும் தரம்பிரிக்கப்படும். எடையளவைப் பொறுத்தும் விலை மாறும்.

சுற்றுச்சூழல் பாதிப்புகள்[தொகு]

சதுப்பு நிலக் காட்டு முகத்துவாரங்கள் பல விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு ஒரு வாழ்விடத்தை வழங்குகிறது.
1987 முதல் 1999 வரையான ஆண்டுகளில் ஹோண்டுராஸ் நாட்டின் பசிபிக் கடலோரக் கரைகளில் இயற்கையான சதுப்பு நிலப் பகுதிகள் இறால் பண்ணைகளாய் மாறியதைக் காட்டும் சித்திரங்கள். இறால் பண்ணைகள் செவ்வக வரிசைகளாய்த் தோன்றுகின்றன. பழைய படத்தில் (கீழே இருப்பது) பல நதிகளின் முகத்துவாரங்களில் சதுப்புநிலப் பகுதிகள் விரிந்து பரவியுள்ளன. மேல் இடது பக்கத்தில் ஒரு இறால் பண்ணை ஏற்கனவே தோற்றமளிப்பதைக் காணலாம். 1999 ஆம் ஆண்டிற்குள்ளாக, இப்பிராந்தியத்தின் பெரும்பகுதி இறால் குட்டைகளின் தொகுப்புகளாக மாற்றப்பட்டிருந்தன.
ஒரு இந்தோனேசியப் பண்ணையில் இறால் குட்டையின் அடியில் இருந்து நச்சுச் சகதி வெளியேறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய அசுத்தத்தால் இறால் இறப்பு வீதம் அதிகரிப்பதோடு கடல்தாவர வளர்ச்சியும் பெருமளவு குறையும்..[52] சதுப்பு நிலக் காடுகளில் இருப்பது போன்ற [53] மண்ணில் அமிலமயமாக்கத்தை தடுப்பதற்கு ஓரளவுக்கு சுண்ணக்கலப்பு முறையைப் பயன்படுத்தலாம்.[54]

எல்லா வகை இறால் பண்ணைகளுமே கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தத்தக்கவையே. நீட்சிப் பண்ணைகளுக்கு சதுப்புநிலக் காடுகளின் பெரும்பகுதி அழிக்கப்படுகின்றன. இதனால் உயிரியல்ரீதியான பன்முகத்தன்மை குறைகிறது. 1980கள் மற்றும் 1990களில் உலகின் சதுப்பு நிலக் காடுகளில் சுமார் 35% காணாமல் போய் விட்டன. இதற்கு முக்கிய காரணம் இறால் பண்ணை விவசாயமே என்றும், மூன்றில் ஒரு பங்கு சதுப்புநிலக் காடுகள் இதனால் தான் அழிந்தன என்றும் ஒரு ஆய்வு[55] கூறுகிறது. மக்கள்தொகைப் பெருக்கமும் சதுப்புநிலக் காடுகளின் அழிவுக்குக் காரணமாய் அமைந்தது.[2] சதுப்புநிலக் காடுகளின் வேர்களால் கடலோரப் பகுதிகளில் மண் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவை அழிக்கப்பட்டதும் மண் அரிப்பு அதிகரித்து வெள்ளங்களுக்கு எதிரான பாதுகாப்பு குறைந்துள்ளது. சதுப்பு நிலக் காடுகள் உற்பத்தித் திறன் செறிந்த சூழலமைப்புகளாகத் திகழ்கின்றன. பல வகை மீன்களுக்கும் பெரும் வாழ்விடமாகவும் விளங்குகின்றன.[4] பல நாடுகள் தங்களது சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாப்பதற்காக அலைபாயும் பகுதிகள் அல்லது சதுப்புநிலக் காட்டுப் பகுதிகளில் புதிய இறால் பண்ணைகளை அமைக்கத் தடை விதித்துள்ளன. ஆயினும் வங்காளதேசம், மியான்மர், அல்லது வியட்நாம் போன்ற நாடுகளில் இந்த சட்டங்களின் அமலாக்கம் பல பிரச்சினைகளைச் சந்திப்பதால் சதுப்பு நிலக் காடுகள் இறால் பண்ணைகளாய் மாறுவதென்பது தொடர்ந்து பிரச்சினைக்குரியதாகவே இருந்து வருகிறது.[2]

செறிந்த அடர்த்திப் பண்ணைகள் சதுப்பு நிலக் காடுகளின் மீதான நேரடியான பாதிப்பைக் குறைத்தாலும் அவை வேறு பிரச்சினைகளைக் கொண்டுவருகின்றன. அப்பண்ணைகளின் ஊட்டங்கள் செறிந்த கழிவுகள்[3] வெளியேறி சுற்றுசூழல் சமநிலைக்கு சேதாரத்தை ஏற்படுத்துகின்றன. கணிசமான அளவு இரசாயன உரங்களும், பூச்சிமருந்துகளும் எதிருயிரிகளும் கலந்திருக்கும் இந்த கழிவுநீர் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றது. மேலும், இத்தகைய வகையில் வெளியேறும் எதிருயிரிகள் உணவுச் சங்கிலியில் கலந்து பாக்டீரியாக்கள் அதிகமான எதிர்ப்பு சக்தியைப் பெறும் அபாயத்தை உருவாக்குகிறது.[56] ஆயினும், அநேக நீர் பாக்டீரியாக்கள் விலங்கினங்களில் இருந்து மனிதருக்குப் பரவத்தக்கவை அல்ல. அத்தகைய ஒரு சில நோய்களே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.[57]

ஒரு குட்டையை நெடுங்காலம் பயன்படுத்தி வரும்போது குட்டையின் கீழே கொஞ்சம் கொஞ்சமாய் கழிவுப் பொருட்கள் தேங்கிப் பெருகும்.[58] இந்த சகதியை எடுத்து அகற்றலாம், அல்லது உலரச் செய்து உயிரியல் சிதைவுற செய்யலாம். ஒரு குட்டையைக் கழுவி விடுவதென்பது இந்த சகதியை முழுமையாய் அகற்றி விடாது. இறுதியில் இந்த குட்டை கைவிடப்பட்டு அந்த நிலமும் மிகுந்த உவர்தன்மை, அமிலத் தன்மை, மற்றும் நச்சு இரசாயனங்களால் வேறு எந்த பயன்பாட்டுக்கும் உதவாது போய்விடும். பொதுவாக ஒரு நீட்சிப் பண்ணையில் இருக்கும் நீர்க் குட்டை சில ஆண்டுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இத்தகைய நிலங்களை மீண்டும் வளப்படுத்துவதற்கு சுமார் 30 வருடங்கள் பிடிப்பதாய் ஒரு இந்திய ஆய்வு தெரிவிக்கிறது.[4] இறால் பண்ணைகள் விவசாய நிலங்களை உவர் நிலங்களாக்கி விடுவதால் உள்நிலப் பகுதிகளுக்குள் இறால் பண்ணைகள் அமைக்க தாய்லாந்து 1999 ஆம் ஆண்டு முதல் தடை விதித்திருக்கிறது.[9] தாய்லாந்தில் 1989-1996 வரையான காலத்தில் இறால் விவசாயப் பரப்பில் சுமார் 60% கைவிடப்பட்டதாய் அந்நாட்டு ஆய்வு ஒன்று கூறுகிறது.[5]

இறால் விவசாயத் துறையில், இனப்பெருக்க மீன்கள் மற்றும் குஞ்சுபொரிப்பு தயாரிப்புகள் எல்லாம் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பரிமாறத்தக்கதாய் இருப்பதால், பல்வேறு இறால் வகைகள் அறிமுகம் பெறுகின்றன. அத்துடன் அவை உலகமெங்கும் கொண்டு செல்லும் நோய்களும் பரவுகின்றன. இதனால் பல இனப்பெருக்க மீன்களின் பெட்டிகள் சுகாதாரச் சான்றும், குறிப்பிட்ட நோயற்ற சான்றும் பெற வேண்டிய அவசியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல அமைப்புகள் விவசாயம் செய்யப்படும் இறால்களை வாங்குவதற்கு எதிராக நுகர்வோரிடம் பிரச்சாரம் செய்கின்றன. சில அமைப்புகள் மேம்பட்ட விவசாய முறைகளை உருவாக்க அறிவுறுத்துகின்றன.[59] இறால் விவசாயத்திற்கான மேம்பட்ட நடைமுறைகளை ஆய்வு செய்யவும் பரிந்துரைக்கவும் 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் உலக வங்கி, ஆசிய பசிபிக் நீர்விவசாய மையங்களின் வலைப்பின்னல் உள்ளிட்ட அமைப்புகளின் ஒரு கூட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டது.[60] இப்போது சில இறால்களை ”சுற்றுச்சூழல் கவனத்துடன் உருவாக்கப்பட்டவை” என்பதான அடைமொழியுடன் சிலர் விற்பனை செய்வதை அரசு சாரா அமைப்புகள் கடுமையாக விமர்சிக்கின்றன.[61]

ஆயினும், 1999 ஆம் ஆண்டு முதலே இத்துறை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் கண்டு வருகிறது. உதாரணமாக, அதற்குப் பின் உலக வங்கி மற்றும் மற்றவர்கள்[62] உருவாக்கித் தந்திருக்கும் “சிறந்த நிர்வாக நடைமுறைகள்”[63] பின்பற்றப்பட்டு வருகின்றன.[64] பல நாடுகளில் செயல்படுத்தப்படும் சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பு சட்டங்களின் காரணமாக, புதிய பண்ணைகள் பெரும்பாலும் சதுப்புநிலக் காட்டுப் பகுதிகளுக்கு வெளியில் அமைகின்ற பாதி செறிவடர்த்தி வகைகளாக இருக்கின்றன. இந்த பண்ணைகளில் சூழலை இன்னும் கட்டுப்படுத்தி நோய்களைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.[6] கழிவு நீர் சுத்திகரிப்பு கணிசமான கவனத்தைப் பெற்றுள்ளது. சதுப்பு நிலக் காடுகள் கழிவுநீரை வடிகட்டுவதிலும் உயர்ந்த நைட்ரேட் அளவுகளைத் தாங்குவதிலும் திறம்பட்டவையாய் திகழ்வதால் சதுப்பு நிலக் காடுகளின் மறுவளர்ப்பிலும் ஆர்வம் இருந்து வருகிறது.[2] ஆயினும் இந்த வகையிலான துறையின் திட்டவட்டமான முயற்சிகள் எதுவும் இதுவரை மதிப்பிடப்பட்டிருக்கவில்லை.

சமூக மாற்றங்கள்[தொகு]

இறால் விவசாயம் என்பது பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டின் கடலோர சமுதாயங்கள் மீது பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 1980கள் மற்றும் 1990களில் பல நாடுகளில் இந்த துறைக்கான கட்டுப்பாடுகள் முழுமையாக உருவாகியிருக்காத நிலையில் இத்துறை மிகவும் துரிதமாக விரிவடைந்ததால் உள்நாட்டு மக்கள் பல சமயங்களில் பாதிக்கப்பட்டனர். நிலம், நீர் போன்ற பொதுவான ஆதாரவளங்களுக்கான மோதல் உருவாகியது.

உதாரணமாக வங்கதேசம் போன்ற சில பிராந்தியங்களில் நிலப் பயன்பாட்டு உரிமைகளில் பெரும் மோதலைக் காண முடிகிறது. இறால் விவசாயத்தால், ஒரு புதிய துறை கடலோரப் பகுதிகளில் விரிவு பெற்று, முன்னர் பொது ஆதாரவளங்களாய் இருந்தவை பிரத்யேக பயன்பாட்டுக்காய் மாற்றம் பெற்றன. சில பகுதிகளில் கடலோரப் பிராந்தியத்தின் மக்களே அப்பகுதிக்கான அணுகலின்றி சிரமத்தை சந்தித்தனர். இதனால் உள்ளூர் மீனவர்கள் கடும் பாதிப்படைந்தனர். நன்னீரை மிகுதியாய் பயன்படுத்துவது, நீர்ப் பலகையை மூழ்கும்படி விட்டு நன்னீர் சுத்திகரிப்பு வசதியை உவர்தன்மையுடையதாய் ஆக்குவது ஆகிய மோசமான சூழலியல் நடைமுறைகளால் இந்த பிரச்சினைகள் மேலும் சிக்கலாகின.[65] அனுபவ முதிர்ச்சி பெற்ற பிறகு பல அரசாங்கங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டன. நில மண்டலமாக்கல் சட்டங்களை இதற்கு உதாரணமாய்க் கூறலாம். மெக்சிகோ போன்ற நாடுகளில் தாமதமானாலும் கூட உகந்த சில சட்டங்களை இயற்றி இதுசார்ந்த சில பிரச்சினைகள் தீர்வு காணப்பட்டுள்ளன.[6] மெக்சிகோவில் அரசாங்க கட்டுப்பாட்டில் இருக்கும் சந்தை தான் வலிமையானது என்பதால் அத்தகைய சூழ்நிலை தனித்துவம் வாய்ந்தது. 1990களின் ஆரம்பத்தில் தாரளமயமாக்கத்திற்குப் பின்னும் கூட அங்கு அநேக இறால் பண்ணைகள் இன்னும் உள்நாட்டினராலும் பிராந்திய கூட்டுறவு அமைப்புகளாலுமே நடத்தப்பட்டு வருகின்றன.[66]

மக்களுக்குள் வசதிவாய்ப்புகளின் நிலை மாறுவதாலும் சமூகப் பதட்டங்கள் தோன்றுகின்றன. என்றாலும் இதன் விளைவுகள் கலவையானவை என்பதோடு இந்த பிரச்சினைகள் இறால் விவசாயத்திற்கு மட்டுமே சொந்தமான பிரச்சினைகள் அல்ல. செல்வ விநியோகத்திலான மாற்றங்கள் ஒரு சமுதாயத்திற்குள் அதிகாரக் கட்டமைப்பில் மாற்றங்களுக்குத் தூண்டுகிறது. சில சந்தர்ப்பங்களில், சாதாரண மக்களுக்கும் உள்ளூர் பெரும்புள்ளிகளுக்கும் இடையிலான இடைவெளி விரிவடைகிறது. அந்த புள்ளிகளுக்கு கடன், மானியம், உரிமங்கள் எல்லாமே எளிதில் கிடைத்து விடுகின்றன.[67] இன்னொரு பக்கத்தில், வங்கதேசத்தில் உள்ளூர் புள்ளிகள் நகரத்தின் பெரும்புள்ளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த இறால் விவசாயத்தை எதிர்க்கின்றனர்.[68] நிலத்திற்குச் சொந்தமானவர்கள் உள்ளூர்காரர்களாய் இல்லாத சமயத்தில், அத்தகைய ஒரு சிலரின் கரங்களில் நிலங்கள் குவிவது சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு விதைபோட்டு விடுகிறது.[67]

பொதுவாக, உள்ளூர் மக்களாலேயே இறால் விவசாயம் நடத்தப்படும் இடங்களில் அங்கு இத்தொழில் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது.[69]

மேலும் காணவும்[தொகு]

  • நன்னீர் இறால் வளர்ப்பிலும் கடல் இறால் விவசாயத்தில் காண்கின்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முக்கியமான வகைகளின் (பெருநதி இறால் ) வளர்ச்சி சக்கரத்தால் புதுப்புது பிரச்சினைகள் தோன்றுகின்றன.[70] உலகளாவிய அளவில் நன்னீர் இறால்களின் (ஆற்று நண்டு மற்றும் சாதாரண நண்டு தவிர) வருடாந்திர உற்பத்தி 2003 ஆம் ஆண்டில் சுமார் 280,000 டன்களாய் இருந்தது. இதில் சீனா சுமார் 180,000 டன்களை உற்பத்தி செய்தது. இதற்கடுத்தபடியாக இந்தியாவும் தாய்லாந்தும் சுமார் 35,000 டன்களை தலா உற்பத்தி செய்தன. சீனா 370,000 டன்கள் நீள் நண்டு களையும் உற்பத்தி செய்தது.[71]
  • இறால் பிடித் துறை
  • கூனிப்பொடி பிடித் துறை

அடிக்குறிப்புகள்[தொகு]

^a பல சமயங்களில் கூனிறால் மற்றும் இறாலுக்கு இடையிலான வார்த்தை வித்தியாசம் குழப்பமானதாய் அமைந்திருக்கிறது. சமீபத்திய மீன்வளர்ப்பு கட்டுரைகள் சில நன்னீர் வளர்ப்புக்கு மட்டுமே இறால் என்றும் கடல்நீர் வளர்ப்புகளுக்கு கூனிறால் என்றும் பயன்படுத்துகின்றன.[8]

^b முதிர்ச்சியுற்ற இறால் ஆழத்தில் தான் வாழும் என்பதால், செறிவடர்த்திகள் பொதுவாக பரப்பளவுக்கு எவ்வளவு என்கிற அடிப்படையிலேயே குறிப்பிடப்படுகின்றன. நீரின் கன அளவுக்கு எவ்வளவு என குறிப்பிடப்படுவதில்லை.

^c பெனெஸ் இனவகையின் இனவகையின் கீழ்வரும் பல வகைகளை ஒரு புதிய இனவகையாக வகைப்பாடு செய்யவேண்டும் என்று பெரெஸ் ஃபர்ஃபாண்டே மற்றும் கென்ஸ்லி[72] ஆலோசனையளித்துள்ளனர்.

^d இறால் விவசாயம் குறித்த மிகத்துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை.[73]

குறிப்புகள்[தொகு]

  1. Rönnbäck, 2001.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Lewis et al.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 ரோசன்பெரி, About Shrimp Farming .
  4. 4.0 4.1 4.2 International Shrimp Action Network, 2000.
  5. 5.0 5.1 Hossain & Lin, 2001.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 McClennan, 2004.
  7. Novelli, 2003.
  8. 8.0 8.1 Indian Aquaculture Authority, Environment Report , ch. 2.
  9. 9.0 9.1 FAO, உவர்பாதிப்பு நிலங்களின் தாக்கங்கள் .
  10. van Wyk et al. , HBOI Manual , ch. 4.
  11. van Wyk et al. , HBOI Manual , ch. 6.
  12. 12.0 12.1 Tacon, 2002.
  13. Chautard et al. , p. 39.
  14. ரோசன்பெரி, Species of Farm-raised Shrimp .
  15. Josueit, p. 8.
  16. Bondad-Reantaso et al.
  17. Gulf States Marine Fisheries Commission: Non-Native Species Summaries: Yellowhead Virus (YHV) , 2003. இணைப்பு கடைசியாக அணுகப்பட்ட தேதி 2005-06-23. Data temporarily withdrawn pending review. Archived link with the data.
  18. OIE: Aquatic Manual , sect. [தொடர்பிழந்த இணைப்பு]2.2.7[தொடர்பிழந்த இணைப்பு]. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  19. OIE: Aquatic Manual , sect. [தொடர்பிழந்த இணைப்பு]2.2.5[தொடர்பிழந்த இணைப்பு]. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  20. Gulf States Marine Fisheries Commission: Non-Native Species Summaries: White Spot Syndrome Baculovirus Complex (WSBV) , 2003. இணைப்பு கடைசியாக அணுகப்பட்ட தேதி 2005-06-23. Data temporarily withdrawn pending review. Archived link with the data.
  21. OIE: Aquatic Manual , sect. [தொடர்பிழந்த இணைப்பு]2.2.4[தொடர்பிழந்த இணைப்பு]. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  22. OIE: Aquatic Manual , sect. [தொடர்பிழந்த இணைப்பு]2.2.2[தொடர்பிழந்த இணைப்பு].
  23. van Wyk et al. , HBOI Manual , ch. 9.
  24. ரோசன்பெரி, Chloramphenicol , 2005.
  25. Ceatech USA, Inc.: The Rationale to use SPF broodstock . Retrieved 2005-08-23.
  26. FAO, The State of World Fisheries and Aquaculture, p. 124.
  27. U.S. Department of Agriculture: U.S. Shrimp Imports by Volume பரணிடப்பட்டது 2015-03-31 at the வந்தவழி இயந்திரம் (Aquaculture Data பரணிடப்பட்டது 2010-02-20 at the வந்தவழி இயந்திரம்), February 2010. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  28. PIC: Market information: shrimps and crabs பரணிடப்பட்டது 2010-05-05 at the வந்தவழி இயந்திரம். Data for 1994-98. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  29. NOAA, National Marine Fisheries Service, Southwest Regional Office: Japanese Shrimp Imports பரணிடப்பட்டது 2013-02-16 at the வந்தவழி இயந்திரம், monthly data from 1997 on. இணைப்பு கடைசியாக அணுகப்பட்ட தேதி 2010-02-23.
  30. FAO: FIGIS Commodities 1976-2006, query for imports into all EU countries, all shrimps and prawns entries except those giving species other than Penaeus spp. (also excluding "nei" entries; "nei" means "not elsewhere included"). For comparison, the U.S. was also included, and the numbers reported by that selection were found to correspond well with the U.S. DOA numbers பரணிடப்பட்டது 2015-03-31 at the வந்தவழி இயந்திரம் after conversion from tonnes to 1,000 pounds. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  31. FAO: FIGIS Commodities 1976-2006, same query also including Cangon and Pandalidae . 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  32. Josueit, p. 16.
  33. 33.0 33.1 FIGIS; FAO databases, 2007.
  34. FoodMarket: Shrimp Production ; data from GlobeFish, 2001. Retrieved 2005-06-23.
  35. Josueit p. 7f.
  36. Funge-Smith & Briggs, 2003.
  37. Thai Farmers Research Center, 2004.
  38. ரோசன்பெரி, Shrimpnews , 2005.
  39. U.S. Department of Commerce: Amended Final Determinations and Issuance of Antidumping Duty Orders பரணிடப்பட்டது 2017-05-14 at the வந்தவழி இயந்திரம் , January 26, 2005. 2009-02-04 திரும்ப எடுக்கப்பட்டது.
  40. ரோசன்பெரி, B.: Annual Reports on World Shrimp Farming பரணிடப்பட்டது 2005-08-16 at the வந்தவழி இயந்திரம் ; Comments on shrimp prices in the on-line excerpts 2000–2004. Retrieved 2005-08-18.
  41. Lewis et al. ,  p. 22.
  42. Consortium Draft Report , p. 43.
  43. Barraclough & Finger-Stich, p. 14.
  44. 44.0 44.1 Indian Aquaculture Authority: Environment Report , ch. 6, p. 76.
  45. Hempel et al. , p. 42f
  46. Consortium Draft Report , p. 45.
  47. Lewis et al. , p. 1.
  48. Barraclough & Finger-Stich, p. 17.
  49. Kumaran et al. , 2003.
  50. Barraclough & Finger-Stich, p. 15.
  51. McClennan, p. 55.
  52. Tanavud et al., p. 330.
  53. Fitzpatrick et al.
  54. Wilkinson
  55. Valiela et al. , 2001.
  56. Owen, 2004.
  57. National Aquaculture Association (NAA): Antibiotic Use in Aquaculture: Center for Disease Control Rebuttal , NAA, U.S., December 20, 1999. இணைப்பு கடைசியாக அணுகப்பட்ட தேதி 2007-11-26.web archive link Archived ஆகத்து 13, 2007 at the Wayback Machine.
  58. NACA/MPEDA: Health Manual , 2003.
  59. World Rainforest Movement: Unsustainable versus sustainable shrimp production பரணிடப்பட்டது 2005-11-11 at the வந்தவழி இயந்திரம் , WRM Bulletin 51, October 2001. பெறப்பட்டது 2007-09-02.
  60. Consortium, Draft Report .
  61. Rönnbäck, 2003.
  62. Boyd et al. , 2002.
  63. NACA: Codes and Certification ; Network of Aquaculture Centres in Asia-Pacific (NACA). Retrieved 2005-08-19.
  64. Global Aquaculture Alliance: Responsible Aquaculture Program . இணைப்பு கடைசியாக அணுகப்பட்ட தேதி 2005-08-19. web archive link Archived ஆகத்து 29, 2005 at the Wayback Machine.
  65. Barraclough & Finger-Stich, p. 23ff.
  66. DeWalt, 2000.
  67. 67.0 67.1 Hempel et al. , p. 44.
  68. Barraclough & Finger-Stich, p. 37.
  69. Consortium: Draft Report , p. 47.
  70. New, M. B.: Farming Freshwater Prawns ; FAO Fisheries Technical Paper 428, 2002. ISSN 0429-9345.
  71. Data extracted from the FAO Fisheries Global Aquaculture Production Database பரணிடப்பட்டது 2005-09-27 at the வந்தவழி இயந்திரம் for freshwater crustaceans. The most recent data sets are for 2003 and sometimes contain estimates. Retrieved 2005-06-28.
  72. Pérez Farfante & Kensley, 1997.
  73. ரோசன்பெரி, B.: Annual Reports on World Shrimp Farming பரணிடப்பட்டது 2005-08-16 at the வந்தவழி இயந்திரம் ; Comments on the quality of aquaculture statistics in the on-line excerpts 2000–2004. Retrieved 2005-08-18.



வார்ப்புரு:Fishing industry topics வார்ப்புரு:Fisheries and fishing

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறால்_பண்ணை&oldid=3723499" இலிருந்து மீள்விக்கப்பட்டது