வோனொபாயோ புதையல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோனொபாயோ புதையல்
Wonoboyo Hoard
வோனொபாயோ புதையல் பொருட்கள் ஜகார்த்தாவின் இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரம்பானான் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்தப் பொருட்களின் மாதிரிகள்.
செய்பொருள்தங்கம் மற்றும் வெள்ளி
உருவாக்கம்சுமார் 9 ஆம் நூற்றாண்டு
கண்டுபிடிப்புமத்திய ஜாவா மாகாணத்தின், கிளாடென் பிரதேசத்தின், வோனொபாயோ கிராமம், பிரம்பானான் கோயில் அருகில் (1990)
தற்போதைய இடம்ஜகார்த்தா இந்தோனேசிய தேசிய அருங்காட்சியகம்

வோனொபாயோ புதையல் (Wonoboyo hoard) என்பது இந்தோனேசியாவின் நடு ஜாவாவில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த மேடங் இராச்சியத்தைச் சேர்ந்த தங்கம் மற்றும் வெள்ளி கலைப்பொருட்கள் அடங்கிய ஒரு முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்பு ஆகும். இது 1990 அக்டோபர் மாதத்தில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்திலிருக்கும் கிளாடென் பிரதேசத்தைச் சேர்ந்த வோனொபாயோ என்ற சிறிய கிராமத்தில், பிரம்பானான் கோயில் அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2]

கண்டுபிடிப்பு[தொகு]

இந்தோனேஷியாவின் மத்திய ஜாவா மாகாணத்திலிருக்கும் கிளாடென் பிரதேசத்துக்கு உட்பட்ட வோனொபாயோ கிராமத்தில், சிப்டோ என்ற பெண் சொந்தமாக நிலத்தைக் கொண்டிருந்தார். இந்த நிலமானது சற்று மேடாக இருந்தது இந்த வயலுக்கு கால்வாய் வழியே நீர் பாய்ச்ச வசதியாக நெல் வயலின் உயரத்தைக் குறைக்க விட்டோமொஹர்ஜோ என்ற தொழிலாளி உள்ளிட்ட ஐந்து தொழிலாளர்களைக் கொண்டு 1990 அக்டோபர் மாதத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.[1][2] சுமார் 2.5 மீட்டர் அளவுக்கு வயலைத் தோண்டியபோது விட்டோமொஹர்ஜோவுக்கு நிலத்தில் ஒரு பாறை பரப்பு உள்ளது போலத் தோன்றியது. இதனால் கையை வைத்து மண்ணை அகற்றி கவனமாகத் தோண்டினார். இதையடுத்து மூன்று பெரிய பீங்கான் ஜாடிகளும், அதில் ஏராளமான தங்க நாணயங்களும், தங்கத்தாலான கலைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்படன.

உடனே ஊர்த் தலைவருக்கும், பிற அதிகாரிகளுக்குத் தகவல் சொல்லப்பட்டது.

புதையல்[தொகு]

மொத்தம் 16.9 கிலோ எடையுள்ள புதையல் கண்டறியப்பட்டது. அதில் 14.9 கிலோ தங்கம், மீதி வெள்ளி. இதில் 1000 க்கும் மேற்பட்ட சடங்கு பொருட்கள் இருந்தன:

  • இராமாயணக் காட்சிகளை வேலைப்பாடுகளாக கொண்ட தங்கத்தினாலான கைகழுவும் பெரிய பாத்திரம் ஒன்று.
  • இராமாயணக் காட்சிகளை வேலைப்பாடுகளாக கொண்ட தங்கத்தினாலான பாத்திரம் ஒன்று
  • தங்கத்தாலான ஆறு மூடிகள்
  • தங்கத்தினாலான தண்ணீர் குடிக்கும் பாத்திரங்கள் மூன்று
  • ஒரு தட்டு
  • தங்கத்தினாலான 97 கைக்காப்புகள்
  • 22 சிறிய பாத்திரங்கள்
  • ஒரு குழாய்
  • கொள்கலனாக பயன்பட்ட தாங் அரசமரபு காலத்திய ஒரு பெரிய பீங்கான் ஜாடி [1]
  • இரண்டு சிறிய ஜாடிகள்
  • 11 தங்க மோதிரங்கள்
  • 7 தட்டுகள்
  • 8 தங்க காதணிகள்
  • ஒரு தங்க கைப்பையை
  • ஒரு தங்க கிரிஸ் கத்தி கைப்பிடி அல்லது ஒரு குடையின் தங்க முனை ஆபரணம்
  • சில மணிகள்
  • சில தங்க நாணயங்கள் போன்ற பொருட்கள் [1]

மேலே குறிப்பிட்ட கலைப் பொருட்கள் அல்லாமல் மேலும் 6,000 நாணயங்கள். பெரும்பாலும் தங்கத்தாலும், சில வெள்ளியாலும் ஆனவை.

வோனொபாயோ புதையலில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தற்போது இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.[2] அந்தப் பொருட்களின் மாதிரிகள், பிரம்பானான் கோயிலின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சேகரிப்புகளானது ஆஸ்திரேலியாவிலும் காட்சிக்கு வைக்கப்பட்டன.[2]

இந்தோனேசியாவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மிக முக்கியமான, பழமையான பொக்கிசங்களில் ஒன்றாக வோனொபாயோ புதையல் உள்ளது. இவை கி.பி. 9வது நூற்றாண்டில் இருந்த மாதாராம் இராச்யத்தின் செல்வம், பொருளாதாரம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் காட்டுவதாக உள்ளது. இங்கே கண்டெடுக்கப்பட்ட தங்க நாணயங்களில் "ta" என்று பொறிக்கப்பட்டிருந்தது. அது அன்றைக்குப் பண்டைய ஜாவாவில் புழக்கத்திலிருந்த "tahil" என்ற நாணய முறையைக் குறிப்பதாகும். ஒரு நாணத்தில் கவியி என்ற பண்டைய ஜாவா மொழியில், "சரகி தியா பங்கா" (Saragi Diah Bunga) என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நபர், இந்த செல்வங்களுக்கு உரியவராக இருந்திருக்கலாம்.[1] இவை மாதாராம் மன்னர் பாலிடங் ஸ்ரீ தர்மோதய மஹாசம்பு (கி.பி. 899 - 911) காலத்தைச் சேர்ந்ததவை என்று கணிக்கப்பட்டுள்ளது.[1] இந்த புதையலுக்கு உரிய நபர், அன்றைக்கு அங்கே வாழ்ந்த செல்வந்தராகவோ அல்லது ராஜ குடும்பத்தைச் சார்ந்தவராகவோ இருந்திருக்கலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Warisan Saragi Diah Bunga". Majalah Tempo. 3 November 1990. Archived from the original on 2017-05-29. பார்க்கப்பட்ட நாள் 2010-07-21.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Indonesian Gold" Treasures from the National Museum Jakarta, grafico-qld.com, accessed July 2010

மேலும் வாசிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோனொபாயோ_புதையல்&oldid=3646995" இலிருந்து மீள்விக்கப்பட்டது