சிங்கப்பூர் போர்

ஆள்கூறுகள்: 1°22′N 103°49′E / 1.367°N 103.817°E / 1.367; 103.817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கப்பூர் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி

15 பிப்ரவரி 1942-இல் ஜப்பானியப் படைகளிடம் சரண் அடையும் பிரித்தானிய தளபதிகளும், 80,000 போர் வீரர்களும்
நாள் 8–15 பிப்ரவரி 1942
இடம் சிங்கப்பூர்
ஜப்பானுக்கு வெற்றி
சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றினர்
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்

 ஆத்திரேலியா

 சப்பான்
தளபதிகள், தலைவர்கள்
ஆர்தர் பெர்சிவல் சரண் (கைதி)
கோர்டன் பென்னட்
லெவிஸ் ஹீத் (கைதி)
மெர்டன் ஸ்மித்  (கைதி)
சப்பானியப் பேரரசு தோமோயுகி யமாசிதா
சப்பானியப் பேரரசு தகுமா நிசிமுரா
சப்பானியப் பேரரசு தகூரா மட்சு
சப்பானியப் பேரரசுரென்யா முதாகுச்சி
படைப் பிரிவுகள்
மலேசியா படைத் தலைவர்
  • பிரித்தானிய இந்தியாவின் மூன்றாம் போர் அணி
    • 9-ஆவது தரைப்படைப் பிரிவு
    • 11-ஆவது தரைப்படைப் பிரிவு
  • 8-ஆவது போர்ப்படைப் பிரிவு
  • ஐக்கிய இராச்சியத்தின் 18வது போர்ப்படை பிரிவு
  • மலாய் அரசப் படைகள்
சப்பானியப் பேரரசு ஜப்பானிய 25-ஆவது படையணி
  • ஜப்பானிய அரசப் படைகள்
  • 5-ஆவது தரைப்படை பிரிவு
  • 18-ஆவது தரைப்படை பிரிவு
  • 3-ஆவது விமானப்படைப் பிரிவு

ஜப்பானிய கப்பற்படை

பலம்
85,000 troops
300 பீரங்கிகள்
1,800+ கவச வாகனங்கள்
200 AFVs
208 பீரங்கி மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகள்
54 கோட்டையை தகர்க்கும் பீரங்கிகள்
36,000
440 பீரங்கிகள் [1]
3,000 இராணுவ வாகனங்கள்
இழப்புகள்
~5,000 பேர் கொல்லப் பட்டனர் அல்லது காயம் அடைந்தனர்.
80,000 போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1,714 கொல்லப் பட்டனர்
3,378 காயம் அடைந்தனர்

சிங்கப்பூர் போர் அல்லது சிங்கப்பூரின் வீழ்ச்சி (ஆங்கிலம்: Battle of Singapore அல்லது Fall of Singapore), என்பது இரண்டாம் உலகப் போரின் போது, தென்கிழக்காசியாவில் நடைபெற்ற ஒரு போர் ஆகும். பசிபிக் போரின் ஒரு பகுதியாக, சிங்கப்பூரை கைப்பற்ற வந்த ஜப்பானியர்களுக்கும், பிரித்தானியர்களுக்கும் இடையே 1942 பிப்ரவரி 8-ஆம் தேதியில் இருந்து 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிக்கின்றது.[2]

சிங்கப்பூர் போரின் முடிவில், பிரித்தானியர்களிடமிருந்து சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றினர். சிங்கப்பூர் போரில் 80,000 பிரித்தானிய வீரர்கள் போர்க் கைதிகளாக ஜப்பானியரிடம் பிடிபட்டனர்.

பொது[தொகு]

போருக்கு முன்பு, ஜப்பானிய தளபதி தோமோயுகி யமாசிதா (General Tomoyuki Yamashita) சுமார் 30,000 வீரர்களுடன் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரைப் பகுதிகளில் தரை இறங்கினார். மலாயா காடுகளின் ஈரத் தன்மை, ஜப்பானியர்களுக்கு எதிராகக் கடும் சோதனைகளை வழங்கும் என ஆங்கிலேயர்கள் தவறாகக் கணித்து விட்டார்கள்.

ஜப்பானியர்களின் வேகமான முன்னேற்றத்தினால் பிரித்தானிய நேச நாட்டுப் படைகள் விரைவாகப் பின்வாங்கின. ஜப்பானியர்கள் மிக வேகமாக முன்னேறி, மலாயாவில் ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றினார்கள். இறுதியில் மலாயா முழுவதையும் ஒரே மாதத்தில் கைப்பற்றினார்கள்.

பசிபிக் போரின் தொடக்கம்[தொகு]

1941 டிசம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு மலாயா, கிளாந்தான், பாத்தாங் பாக் அமாட் கடற்கரையில் (Pantai Padang Pak Amat) ஜப்பானியர்கள் கரை இறங்கினர். பிரித்தானிய இந்திய இராணுவத்துக்கும் (British Indian Army) ஜப்பானிய இராணுவத்துக்கும் இடையே பெரும் போர் மூண்டது.[3]

பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்கு (Attack on Pearl Harbor) முன்னர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தான் இந்த கோத்தா பாரு மோதல் நடந்தது. இந்த கோத்தா பாரு மோதல் தான், பசிபிக் போரின் தொடக்கத்தையும்; மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் தொடக்கத்தையும் குறிக்கின்றது.[4]

பிரித்தானியத் தளபதி ஆர்தர் பெர்சிவல்[தொகு]

பிரித்தானியத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல், ஆர்தர் பெர்சிவல் (Lieutenant-General, Arthur Percival), சிங்கப்பூரில் 85,000 நேச நாட்டுப் படைகளுக்குத் தலைமை தாங்கினார். இருப்பினும் அவரின் படைப் பிரிவுகளுக்குப் பலம் சற்றே குறைவாக இருந்தன.

பெரும்பாலான பிரிவுகளுக்கு, வெப்பமண்டலக் காடுகளில் போர் புரியும் அனுபவம் குறைவு. அதே சமயத்தில் எண்ணிக்கையில் நேச நாட்டுப் படையினர் ஜப்பானியர்களை விட அதிகமாக இருந்தனர்.

மலேசியா-சிங்கப்பூர் தரைப்பாலம் தகர்ப்பு[தொகு]

அந்தக் காலக்கட்டத்தில், தீபகற்ப மலேசியாவின் பெரும் நிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து தான் சிங்கப்பூருக்கு நீர் பெறப்பட்டது. அந்த வகையில் ஜப்பானியர்கள் முன்னேறி வரும் தரைப் பாதைகளைப் பிரித்தானிய படையினர் அழித்தார்கள். மலேசியா-சிங்கப்பூர் தரைப் பாலத்தையும் தர்த்து விட்டார்கள்.

அதனால் ஜொகூர் நீரிணையில் ஜப்பானியர்கள் ஒரு புதிய குறுக்குப் பாலத்தைக் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதைய நிலையில் சிங்கப்பூர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. அதனால் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், கடைசிவரை போராடும்படி தளபதி பெர்சிவாலுக்கு உத்தரவிட்டார்.

தவறான கணிப்பு[தொகு]

ஜப்பானியர்கள் சிங்கப்பூர் தீவில் பிரித்தானியர்களின் பலவீனமான பாதுகாப்புப் பகுதியைத் தாக்கினார்கள். பிப்ரவரி 8-ஆம் தேதி சிங்கப்பூர் கடற்கரையில் தரை இறங்கினார்கள். பிரித்தானியத் தளபதி ஆர்தர் பெர்சிவல், ஜப்பானியர்கள் சிங்கப்பூரின் வடக்குப் பகுதியில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்த்தார்.

சரியான நேரத்தில் பாதுகாப்பை வலுப்படுத்த ஆர்தர் பெர்சிவல் தவறிவிட்டார். மற்ற நேசப் படைகளின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகில் சில தற்காப்பு நிலைகள் மட்டுமே இருந்தன.

பிப்ரவரி 15-ஆம் தேதி[தொகு]

ஜப்பானிய முன்னேற்றம் தொடர்ந்தது. மற்றும் நேச நாடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் போயின. பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள், நகரத்தில் உள்ள ஒரு மில்லியன் பொதுமக்கள், நேச நாட்டுப் படைகளால் தக்க வைக்கப்பட்டு இருந்த தீவின் 1 விழுக்காட்டுப் பகுதிக்குள் அடைபட்டுக் கிடந்தடனர்.

ஜப்பானிய விமானங்கள் நீர் விநியோகக் கட்டமைப்புகளின் மீது தொடர்ந்து குண்டுகளை வீசின. ஜப்பானியர்களும் கிட்டத்தட்ட சிங்கப்பூரைக் கைப்பற்றிய நிலைக்கு வந்து விட்டனர்.

ஜப்பானிய தளபதி தோமோயுகி யமாசிதா[தொகு]

போர் தொடங்கியதில் இருந்து இரண்டாவது முறையாக, ஜப்பானிய தளபதி தோமோயுகி யமாசிதா நிபந்தனையற்ற சரணடைதலைக் கோரினார். 1942 பிப்ரவரி 15-ஆம் தேதி பிற்பகலில், பெர்சிவல் சரண் அடைந்தார். சுமார் 80,000 பிரித்தானிய, இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் உள்ளூர் துருப்புக்கள் போர்க் கைதிகளாக ஆனார்கள்.

மலாயாவில் கைது செய்யப் பட்டவர்களுடன் சேர்த்து அவர்கள் மீதான துஷ்பிரயோகம் அல்லது கட்டாய உழைப்பினால் 50,000 போர் வீரர்கள் இறந்தனர். பிரித்தானியத் துருப்புகள் சரண் அடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகு, ஜப்பானியர்கள் சூக் சிங் தூய்மைப் படுத்துதல் (Sook Ching Purge) எனும் இனக் களையெடுப்பைத் தொடங்கினார்கள்.

இந்திய தேசிய இராணுவம்[தொகு]

ஆயிரக் கணக்கான பொதுமக்களை ஜப்பானியர்கள் கொன்றனர். சுமார் 40,000 இந்திய வீரர்கள், இந்திய தேசிய இராணுவத்தில் (Indian National Army) சேர்ந்து பர்மா எல்லையில் ஜப்பானியர்களுடன் போரிட்டனர். இந்த வீரர்கள் பெரும்பாலும், கட்டாயப் படுத்தப்பட்ட நிலையில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்க்கப் பட்டதாகவும் சொல்லப் படுகிறது.

சிங்கப்பூர் போர் அல்லது சிங்கப்பூரின் வீழ்ச்சியை, பிரித்தானிய இராணுவ வரலாற்றில் மிக மோசமான பேரழிவு என்று சர்ச்சில் கூறினார்.

இரு போர்க் கப்பல்கள் இழப்பு[தொகு]

1941 டிசம்பர் 9-ஆம் தேதி, எச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் (HMS Prince of Wales); மற்றும் எச்.எம்.எஸ். ரிபல்ஸ் (HMS Repulse) ஆகிய இரு போர்க் கப்பல்கள் மலாயாவின் கிழக்கு கடற்கரை வழியாகக் குவாந்தான் துறைமுகத்திற்குச் சென்றன. இரண்டு கப்பல்களுக்கும் வான் பாதுகாப்பு இல்லாததால், இரண்டு கப்பல்களும் ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சுகளுக்கு இலக்காகி தென்சீனக் கடலில் மூழ்கின.[5]

இந்த இரு போர்க் கப்பல்களின் இழப்பு; சிங்கப்பூரின் வீழ்ச்சி; மலாயாவை ஜப்பானியர்களிடம் பறிகொடுத்தது; மற்றும் 1942-இல் ஏற்பட்ட பிற தோல்விகள்; தென்கிழக்கு ஆசியாவில் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நிலைக்கு உட்படுத்தின.

மேலும் காண்க[தொகு]

நூல்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Allen 2013, ப. 169.
  2. FALL OF SINGAPORE
  3. "The Japanese attack on Malaya started on December 8th 1941 and ended with the surrender of British forces at Singapore". History Learning Site. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.
  4. New Perspectives on the Japanese Occupation in Malaya and Singapore 1941–1945. NUS Press. 2008. பக். 31. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:ISBN 9971692996. 
  5. "On December 10, 1941, the battlecruiser HMS Repulse and battleship HMS Prince of Wales sank off the east coast of Malaysia". History Of Diving Museum. பார்க்கப்பட்ட நாள் 31 May 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Battle of Singapore
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_போர்&oldid=3924970" இலிருந்து மீள்விக்கப்பட்டது