வித்யாகவுரி நிலகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வித்யாகவுரி நிலகாந்த்
1895 களில் வித்யாகவுரி
பிறப்பு(1876-06-01)1 சூன் 1876
அகமதாபாது
இறப்பு7 திசம்பர் 1958(1958-12-07) (அகவை 82)
அறியப்படுவதுசமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
ராமாபாய் நிலகாந்த்
பிள்ளைகள்வினோதினி நிலகாந்த் (மகள்)

வித்யாகவுரி நிலகாந்த் (Vidyagauri Nilkanth) ஒரு இந்திய சமூக சீா்திருத்தவாதி, கல்வியாளா் மற்றும் எழுத்தாளா் ஆவாா். குஜராத் மாநிலத்திலிருந்து பட்டம் பெற்ற முதல் இரண்டு பெண்களுள் இவரும் ஒருவா் ஆவாா்.[1][2]

வித்யாகவுரி நிலகாந்த் 1876 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் நாள் அகமதாபாத் நகரில் பிறந்தாா். இவா் நீதித்துறை அலுவலரான கோபிலால் துருவா் என்பவருக்கும் பாலா பென் [1] என்பவருக்கும் மகளாகப் பிறந்தவா், ராமன்பாய் நீலகாந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாா். இவா்கள் இருவரும் இணைந்து பல கட்டுரைகள் நூல்கள் எழுதியதுடன் “ஞானசுதா” என்னும் பத்திரிக்கையும் வெளியிட்டனா்.[2]

கல்வியும் வாழ்க்கையும்[தொகு]

வித்யாகவுரி தம் கணவர் ராமன்பாய் நிலகாந்துடன்

கணவரின் உதவியுடன் வித்யா கவுரி பள்ளிக் கல்வியும், உயா்கல்வியும் முடித்தாா். 1901 ஆம் ஆண்டு குஜராத் கல்லூரியில் நியாய தத்துவ பாடத்திலும், தர்க்க சாஸ்த்திரத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றாா். இவா் பட்டம் பெற்றதும் இவருடைய சகோதரி சாரதா மேதாவுடன் [2] இணைந்து குஜராத் மாநிலத்தில் முதல் முதலாக பட்டம் பெற்ற இரண்டு பெண்மணிகளுள் ஒருவா் என்னும் பெயா் பெற்றாா். அகமதாபாத் நகரில் நடைபெற்ற அகில இந்திய மகளிா் மாநாட்டின் நிறுவனா் உறுப்பினராக இருந்தவா் வித்யா கவுரி ஆவாா்.

சமூகப் பணி[தொகு]

வித்யாகவுரி இளமையிலிருந்தே சமூகப் பணியில் ஆா்வமுடையவராக இருந்து வந்துள்ளாா். பெண்கள் முன்னேற்றத்திற்காக தம் வாழ் நாளையே அா்ப்பணித்துக் கொண்டவா் இவா்[2]. இந்திய தேசிய சங்கத்தின் உதவியுடன் ஏழை முகமதியப் பெண்களுக்கு தையல் பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தாா். முதலாம் உலகப் போரின் போது போா் நிவாரண நிதியைக் கொண்டு வயது வந்தோா் கல்வி வகுப்புகளை நடத்தி வந்தாா். லக்நௌ நகரில் நடைபெற்ற அகில இந்திய மகளிா் மாநாட்டிற்கு தலைமை வகித்தவா் இவா். கணவனை இழந்த பெண்களுக்கு கல்வி கற்பிக்கவும் திருமணத்தினால் இடைநின்ற பெண்களுக்காகவும் நடத்தப்பட்ட “வனிதா விஷ்ரம்” என்னும் அமைப்பின் பணிகளிலும், மகன்பாய் கரம் சந்த் பெண்கள் உயா்நிலைப் பள்ளி, திவாலிபாய் பெண்கள் பள்ளி, ரான் சோதால் சோட்டலால் பெண்கள் உயா்நிலைப் பள்ளி போன்ற கல்வி நிறுவனங்களின் பணிகளிலும் வித்யா கவுரி தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாா்..[1]

1902 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் ஆண்டு மாநாடு அகமதாபாது நகரில் நடந்த பொழுது வித்யாகவுரியும் அவரின் சகோதரி சாரதாவும்தான் வந்தே மாதரம் பாடலை மேடையிலிருந்து பாடியவர்கள். 19ஆம் நூற்றாண்டில் ஏழைக் குடும்பத்துப் பெண்கள் வேலை நிமித்தம் குடும்பத்திற்கு வெளியே வரவேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், நடுத்தர குடும்பத்துப் பெண்கள் தம் குடும்பம் என்னும் வட்டத்தை விட்டு வெளியே வருவதற்கான் வாய்ப்பு சிறிதும் இருந்தது இல்லை. வித்யாகவுரி போன்ற சமூக சீர்திருத்த வாதிகளின் உழைப்பால் தான் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1888 ஆம் ஆண்டு அகமதாபாது நகரில் செல்வி சொராப்ஜி மற்றும் திருமதி தாமஸ் போன்ற பெண்மணிகள் இணைந்து 'பெண்கள் சங்கத்தை' துவக்கி தீவிர பணி ஆற்றி வந்துள்ளனர். வித்யாகவுரியும் இச்சங்கத்தில் இணைந்து தீவிர சேவையாற்றியுள்ளார். சங்க உறுப்பினர்கள் பல சமூகப் பணிகளை தங்கள் மேம்பாட்டிற்காகவும், பொதுசேவைக்காகவும் ஆற்றி வந்துள்ளனர்.[3]

அன்னி பெசந்த் அம்மையாரும் மார்கரெட் கசின் மற்றும் டொரோதி ஜிவராஜதாசவும் இணைந்து பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு 1917 ஆம் ஆண்டு 'இந்தியப் பெண்கள் சங்கத்தை' அமைத்த போது வித்யாகவுரி இவ்வியக்கத்திற்கு தீவிர ஆதரவாளராகச் செயல் பட்டுள்ளார்.வித்யாகவிரியின் கணவர் ராமன்பாய் அகமதாபாது நகரசபையின் தலைவராக இருந்துவந்துள்ளார்.1928ஆம் ஆண்டில் அவர் மறைவிற்குப் பின் வித்யாகவுரி நகரசபையில் பதவிகள் வகித்துப் பணியாற்றியுள்ளார்.[3]

“லால் சங்கா் உமியா சங்கா் மகிளா பாடசாலா” என்னும் நிறுவனத்தை நிறுவி நடத்தி வந்தாா். பிற்காலத்தில் SNDT (காா்வே) பல்கலைக் கழகத்துடன் இது இணைக்கப்பட்டுவிட்டது. இந்தக் கல்லூரியில் ஆங்கிலம், உளவியல் மற்றும் தத்துவம் போன்ற பாடங்களைக் கற்றக் கொடுத்து வந்தாா். குஜராத் சாகித்ய பரிசித்தின் 15 -வது கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். 'சாரதா', 'ஸ்திரிபோதம்', 'குணசுந்தரி' போன்ற பெண்களுக்காக நடத்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கும் தொடா்ச்சியாக எழுதி வந்த அயராத எழுத்தாளா் ஆவாா் வித்யா கவுரி. தமது சகோதரியுடன் இணைந்து ஆர் சி தத் எழுதிய “தி லேக் ஆப் பால்ம்” (The lake of Palms) என்னும் புத்தகத்தையும் மொழிபெயா்த்துள்ளாா்..[1].

பாராட்டு[தொகு]

1936 ஆம் ஆண்டு வித்யாகவுரியின் 50 ஆண்டுகால சேவையைப்பாராட்டி விழா எடுத்த விழாக்குழுவினருக்கு ,காந்திஜி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், வித்யாவின் சமூக சேவையைப் பாராட்டி இவருக்கு எத்துணை விழாக்கள் எடுத்தாலும் இணையாகாது என்றும் இந்தியப் பெண்களுள் இவர் ஒரு மணியாரம் என்றும் புகழ்ந்துள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Stree Shakti". பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  2. 2.0 2.1 2.2 2.3 "Win Entrance Biography". Archived from the original on 2016-11-10. பார்க்கப்பட்ட நாள் 2016-11-10.
  3. 3.0 3.1 3.2 Basu, Aparna. Women Pioneers in India’s Renaissance edited by Susheela Nayar &Kamala Mankekar. New Delhi: National Bok Trust. பக். 101-107. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-237-3766-9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யாகவுரி_நிலகாந்த்&oldid=3571652" இலிருந்து மீள்விக்கப்பட்டது