தேசிங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜா தேசிங்கு அல்லது இராஜா தேஜசிங் என்பவர் சொருப்சிங்கின் வீரமகன் ஆவார். பொந்தில் ராஜ்புத் வம்சாவளியான இவர் கி.பி. 1714 ஆம் ஆண்டில் செஞ்சியை ஆட்சி செய்தார்.[1]

கி.பி. 1677 முதல் மராத்தியர் வசம் இருந்த செஞ்சிக் கோட்டையை முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் சுல்பிகர் அலி கான் தலைமையில், ஆற்காடு நவாப், மதுரையின் ராணி மங்கம்மாள் ஆகியோர் இணைந்து, 1690 செப்டம்பரில் செஞ்சியை முற்றுகையிட்டனர்.[2] எட்டாண்டுகள் நீடித்த முற்றுகையின் முடிவில் 1698 இல் கோட்டை முகலாயர் வசம் வந்தது. கோட்டை முகலாயர் வசம் வந்த பிறகு கோட்டையின் தலைவராக புத்தோல்கண்ட் ராஜ்புத் இனத்தவரான சரூப் சிங்கை நியமித்தார். இவரது மகன்தான் தேசிங்கு ஆவார்.

போர்[தொகு]

தேசிங்கு ஆற்காடு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான்-I கி.பி. 1714 ஆம் ஆண்டு செஞ்சி மீது படையெடுத்தார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாக அவருடைய "நீலவேணி" என்னும் குதிரையுடன் போரிட்டார். அவருக்கு முகமது கான் என்ற நண்பர் தன்னுடைய "பஞ்ச கல்யாணி" என்ற குதிரையுடன் உதவினார். நவாப்பின் 85,000 குதிரைவீரர்களை கொண்ட படையை எதிர்த்து தேசிங்கின் 350 குதிரைவீரர்கள் கொண்ட படை போரிட்டது.

மரணம்[தொகு]

அப்போது பீரங்கி குண்டுகள் பொழிய, நடந்த போரில் நீலவேணிக்குதிரை கால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டது. தன்னை எப்படியும் கொன்றுவிடுவார்கள், முதுகில் குண்டு பாய்ந்து இறந்தால் புறமுதுகுகாட்டி ஓடிய மன்னன் என வரலாறு சொல்லும் என கருதிய ராஜா தேசிங்கு, தன் வாளை வானத்தில் எறிந்து மார்பைக்காட்டி வீரமரணம் அடைந்தார். 18 வயதேயான தேசிங்குராஜன் போரில் மரணமடைந்து அவரது குறுகிய கால ஆட்சி வீழ்ந்தது.[3] ஆற்காடு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் புதிதாய் திருமணமான மனைவி ராணிபாய் உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆற்காடு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆற்காட்டுக்கு அருகில் உண்டாக்கினார்.

உடல் நல்லடக்கம்[தொகு]

வீரமரணம் அடைந்த ராஜா தேசிங்குவின் உடலை அப்படியே விட்டுவிட்டு செல்லாத ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான், செஞ்சிக்கு கொண்டு வந்து அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். தேசிங்கு மற்றும் அவரது படைதளபதி முகமது கான் ஆகியோரின் சமாதிகள் நீலாம்பூண்டி என்ற சிற்றூரில் உள்ளன.

திரைப்படம்[தொகு]

இம்மன்னனின் கதையை மையமாகக் கொண்டு 1936 ஆம் ஆண்டு ராஜா தேசிங்கு என்னும் தமிழ்த் திரைப்படம் வெளியானது. ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சுந்தரப்பர், வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராஜா தேசிங்கு நினைவு தினம் கடைப்பிடிப்பு".தினமணி (அக்டோபர் 04, 2018)
  2. https://books.google.co.in/books?id=KOk6mmMssHoC&pg=PA65&lpg=PA65&dq=Siege+of+Jinji&source=bl&ots=_1zS23sqtD&sig=zG9FauCA0BiFcyeQ3Pp0cL1AZUI&hl=ta&sa=X&ved=0ahUKEwi2pIrmt6PaAhVKN48KHUbTA5IQ6AEIZjAI#v=onepage&q=Siege%20of%20Jinji&f=false
  3. "செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு சிலை நிறுவப்படுமா?". இந்து தமிழ் ஓசை (அக்டோபர் 03, 2013)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிங்கு&oldid=3565169" இலிருந்து மீள்விக்கப்பட்டது